குரு:கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

குரு என்னும் உறவு எனும் கடிதமும் அதன் பதிலும் படித்தேன். எனது புரிதல்களாக நான் படித்தறிந்த சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.இதிலுள்ளவை எல்லாமே பெரும்பாலும் நீங்கள் ஏற்கனவே சொன்னவை.  சும்மா நானும் எழுதுகிறேன். நீங்கள் இதுகுறித்து மேலும் ஏதும் விளக்குவீர்கள் என்ற நம்பிக்கையிலும் ஆசையிலும்.

உலகத்திற்கும் சந்யாஸத்திற்கும் எந்த ப்ரச்சனையும் இல்லை. ஸந்யாஸத்தால் துறக்கவேண்டியது உலகத்தை அல்ல, நம் அறியாமையைத்தான். உலகத்தைத் துறத்தல் ஸந்யாஸமல்ல. ஞானத்தை உணர்தல் ஸந்யாஸம். இந்த ஞானம் துறவறத்திற்கு இட்டுச்செல்லும். துறவறம் என்பது இங்கு உலகத்தை துறத்தலன்று. அதன் மீதான பற்றைத்துறத்தல். உலகம் எப்போதும் போல அங்கேயே இருக்கும், ஆனால் அதன் மீதான நமது பார்வை மாறிவிடும். ஞானத்தை அடைந்தவன் எதையும் துறக்கவேண்டியதில்லை. அவசியமில்லாததும், மிகுதியானவையும் தானாகவே அறுந்துவிடும். துறவறம் என்பதற்கும் உலகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அது அகம் சம்பந்தப்பட்டது. அகத்தூய்மை அடைவது. நானென்பது இந்த உடல்மட்டுமல்ல, ஆத்மாவும் சார்ந்தது என்றுணர்வதனால், நமது அறியாமையும் பற்றும் அகல்கிறது.

பற்றிலிருந்தும், வெறுப்பிலிருந்தும் விடுபடுவது ஞானத்தின் மூலமாக அடையமுடியும். பற்று என்பது ஒருவிதமான அறியாமை. பற்றின்பால் ஒருவன் விருப்பமற்றுப்போவதால் விளைவது வெறுப்பு. இதுவும் ஒரு அறியாமைதான். பற்றுள்ளவன் உலகை நோக்கி ஓடுகிறான். வெறுப்புள்ளவன் உலகை விட்டு ஓடுகிறான். இரண்டிலும் ஓடுதல் ஒன்றே சாத்தியமாகிறது. உண்மையான சந்தோஷம் என்பது ஓடுவதில் இல்லை. நிலையாக தன்னுணர்வோடு இருப்பது அகமகிழ்ச்சி தருவது. நமது அகத்திற்குள்ளேயே ஒருவனால் ஓடி எது பற்று, எது வெறுப்பு என வெறும் சாட்சியாக மட்டும் இருந்து உணரமுடிந்தால் அவன் பற்றுகளிலிருந்தும், வெறுப்பிலிருந்தும் விடுபடுகிறான்.

நமது அறியாமையால் நாம் உலகாயுதமான பொருள்களோடு பற்றுகொண்டுள்ளோம். நாம் உள்ளே வறுமையாக இருப்பதனால், வெளியிலிருந்து பொருள்களை கொண்டு நம்மை நிரப்பிக்கொண்டு, நம்மை மிக முக்கியமானவர்களாக காட்டிக்கொண்டு அலைகிறோம். இந்நிலையில், ஒருவன் பற்றறுப்பதாக இருந்தால், உண்மையில் அவன் அந்தப்பொருள்களை மட்டுமே துறக்கிறான். அதன் மீதான பற்றை அல்ல. பற்று அங்கேயே இருக்கிறது.

வீட்டை விட்டு காட்டுக்குப்போனால், அல்லது ஒரு துறவி சமூகத்திற்குபோனால், அவனது வீட்டின் மீதான பற்று, துறவின், துறவிகளின் மீதான பற்றாக மறுகிறது. அவ்வளவே. அவனுள் உள்ள பற்று பல ரூபங்களின் வெளிப்படுகிறது. எனவே பற்றறுத்தல் என்பது பொருள்களை விடுதல் அன்று. பொருள்களின் மீதான ஆசையையும், வெறுப்பையும், அறியாமையையும் விடுவதே.வெறுப்பும், விருப்பும் ஒன்றுதான். ஆனால் இரண்டும் ஒரு நூலின் இரு முனைகளைப்போன்றது. பற்று என்பது எவ்வளவு தவறானது என்று சொல்கிறோமோ, அதே அளவு வெறுப்பு என்பதும் தவறானதுதான். ஏனெனில், அந்தப்பொருள் அவனுக்கு இன்னமும் ஈடாகிறது என்பதுதானே உண்மை. அந்தப்பொருள் அவனுக்கு இன்னமும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்புடையதாக இருப்பதுதானே உண்மை.

ஒன்றை அனுபவித்தவன் அதை துறப்பது அதன்மீதான பற்றறுப்பது என்பது சரியான ஒரு வழியாக தோன்றும். ஆனால் அதை அனுமதிக்காமலேயே, அதை அனுபவிக்காதவன், அதன் மீதான பற்றறுக்கிறேன் என்று சொல்வது, முற்றிலும் தவறாகத்தோன்றுகிறது. ஏனெனில், அதை அனுபவிக்காதவன் அந்த அனுபவத்தை அடையாதவன், அதை துறப்பது என்பது எங்ஙனம் சாத்தியம்? அது அந்த ஒன்றின்மீது பற்று ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற ஒரு பயத்தினால், அந்த பொருளுக்கு நாம் அடிமையாகிவிடுவோமோ என்ற பயத்தினால், வெறுப்பாக வெளிப்படுகிறது. வெறுப்பு என்பது கூட இருவிதத்தில் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஒன்று பயத்தினால் வருவது. மற்றது வாய்ப்பற்றதினால் வருவது. சீ..ச்..சீ இந்தப்பழம் புளிக்கும் என்பதுபோல. பற்றுள்ளவன், பற்றின் உச்சத்தை அடைந்தவனால்தான் அதை எளிதில் அறுக்கமுடியும் என்பது தெளிவு. ஏனெனில் அவனது பற்றின் சுயஅனுபவம் அங்கே முழுமையடைகிறது. பற்றறுத்த பின்னும் அவனது அனுபவம் நிறைந்திருக்கிறது. அனுபவிக்காதவன், பற்றறுப்பது என்பது, மலடு பிள்ளைகளை கரிப்பது போலத்தான்.

சுயஅனுபவம் என்று நான் இங்கே குறிப்பிடுவது எனெனில், சத்தியத்தை ஒருவன் சுயஅனுபவம் மூலமாக மட்டுமே அறிய முடியும். சத்தியத்தைப் பற்றி அறிவதற்கும், சத்தியத்தை அறிவதற்கும் வித்யாசம் உள்ளதல்லவா? சாத்திரங்களின் மூலம் சத்தியத்தைப்பற்றி அறியலாமே ஒழிய சத்தியத்தை அறிய இயலாது. சாத்திரங்கள் சத்தியத்தை உணர்ந்தவர்களால், சொல்லப்பட்டது. அவ்வளவே. உண்மையில் சாத்திரங்களுக்கு மதிப்பேதும் கிடையாது. சாத்திரங்கள் பேசும் “சத்தியம்” என்பதற்கான மதிப்பே அது. சாத்திரங்கள் நம்மை பண்டிதராகவும், அறிஞராகவும் ஆக்குமே ஒழிய, ஞானத்தை வழங்காது. சாத்திரங்கள் நமது உள்ளுணர்வை சற்றே வ்ருத்திசெய்கிறது. அவ்வளவே அதன் செயல். சாத்திரங்கள் மேலும் சாத்திரங்களை பெற்றெடுக்கும். சாத்திரங்களும் வெளியுலகத்தவையே, சத்தியம் என்பது உள்ளிருப்பது என்பதை மனதில் நிறுத்தவேண்டும். சுயஅனுபவம் என்பது சிறந்த சாத்திரம் என்று சொல்லலாம்.

சந்யாஸியாவதற்கு பணம் பொருள் ஆகியவற்றை உதறத்தேவையில்லை. ஆனால், உண்மையான சந்யாஸியானவரிடம் இருந்து அவை தானாகவே விடை பெற்றுவிடும். ஒருவன் சமமான மனம்பெறும்போது உலகவிஷயங்கள் அவனை விட்டு விலகியே இருக்கும். அப்படி விலகவில்லையென்றால் அது அவனது மனதின் குறையே.குருலேக எடுவந்டி குநிகி என்று சொல்வார்கள். குரு என்பது ஒரு ஸம்ஸ்க்ருத பதம். கு என்ற வேர்ச்சொல்லின் பொருள் இருள் என்பதாகும். இது அகத்திருளைக் குறிக்கிறது. ரு என்ற வேர்ச்சொல்லின் பொருள் அழிப்பவர், விரட்டுபவர் என்பதாகும். எனவே குரு என்பதன் முழுப்பொருளானது அகத்திருளை அழிப்பவர் என்பது. குரு என்பவர் ஒரு சந்நிதானம். குருவின் மூலமாக ஒருவன் தெய்வீகத்தின் முதல் துளியைப் பருகமுடிகிறது. குரு, உருவாக்கி, மாற்றி, புதியதோர் ஆன்மாவாக விதைக்கி றார். குரு என்பவர் ஒரு ஈர்ப்பு சக்தி. குருவின் ஆகர்ஷணம் நம்மை அனைத்துக்கொள்கிறது ஒரு மிகப்பெரிய காந்தம் போல. உலக பந்தங்களிலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டிவரும் ஒரு மனிதர்கூட ஒரு குருவைத்தேடியே செல்கிறார். ஏனெனில் குரு, நமக்கான பாதையை வகுத்துக்கொடுக்கிறார். நாம் நடக்கப்போகும் பாதையில் விளக்காய் இருக்கிறார்.

ஸத் என்றால் சத்தியம், உண்மை என்று பொருள். ஸத்குரு என்றால், உண்மையான, உண்மையை உணர்ந்த குரு என்பது பொருள். ஸத்குருவை நோக்கி நாம் ஈர்க்கப்படுகிறோம். இது ஒரு வெளிப்புற ஈர்ப்புமட்டும் அல்ல. அவர்களை நோக்கி ஆகர்ஷிக்கப்படும்போதே நாம் உள்நோக்கியும் இழுக்கப்படுகிறோம். உள்நோக்கியும் என்பது நமது மனதின், ஆன்மாவின் உள் என்பதன் வெளிப்பாடே. குருவிற்கு மிக அருகாமையில் இருக்கும்போது நாம் நமக்கு மிக அருகாமையில் விழைகிறோம். குருவிடம் நாம் ஈர்க்கப்படும்போது நாம் கட்டுப்படவில்லை, சுதந்திரம் அடைகிறோம். குருவிடம் சரணடையும்போது, உண்மையான சுதந்திரத்தை உணர்கிறோம். படகில்லாமல் மாபெரும் கடலைக் கடப்பது எப்படி இயலாதோ அதுபோல குரு இல்லாமல் ஞானக்கடலை அளப்பதும் கடினமே. குரு இல்லாத எந்தவொன்றும் கெடும்.கறுத்த அடர்ந்த இருள் கவிந்த மனக்காட்டை அழித்தொழிக்க ஸத்குரு தேவை.(பார்த்தினீயம் குறித்த உங்கள் கதை நினைவுக்கு வருகிறது)

Detachment. இது ஒரு பலபரிமாண வார்த்தை. இதை பற்றறுத்தல் என்று சொல்லலாம். பற்று என்பது எதன்மீதும் ஏற்படும். உடல், பிள்ளைகள், சொத்து, மனைவி, பங்காளிகள், சொந்தங்கள் என எதன்மீதும் இருக்கும். பற்று ஆசையினால் விளைவது. பற்று ஆக்கிரமிக்கும் ஆளுமையால் விளைவது. பற்று எல்லாவற்றையும் தான், தனது என்ற நோக்கிலேயேபார்க்கும் ஒரு வியாதி. ஆசைகளை ஒன்று நாம் தள்ளிவைத்துவிட முயல்கிறோம் அல்லது அதற்குள் ஆழ்ந்துவிட முயல்கிறோம். பற்றறுத்தல் என்பது கடும் முயற்சியால் விளைவதன்று. இயல்பாயிருத்தலின் விளைவு. இயல்பாயிருத்தல் என்றால், ஒரு பார்வையாளனாக மட்டுமே இருந்து நமது எண்ண ஓட்டங்களை கவனித்துக்கொண்டிருந்தால் போதுமானது. நமது எண்ணத்தை நாம் கவனித்தல் என்றால் நாம் அதற்கு வெளியே நின்றுதான் செய்யவேண்டியிருக்கும். அப்படி மனதை விட்டு “நாம்” வெளியேற முடிந்தால் அதுவே பற்றறுத்தலின் முதல்படி. பற்றறுத்தலின் குறியீடாக இருப்பவை உடல், பிள்ளைகள், சொத்து, மனைவி, பங்காளிகள், சொந்தங்கள். எனவே அவற்றை நாம் துறக்கமுற்படுகிறோம். ஏனெனில் சுயத்தை தவிர பெரும்பாலான பற்று அதன்மீதுதான் இருக்கிறது. பற்றறுத்தவன் இவைகளை இயல்பாகத் துறந்துவிடுவான். குறியீடுகளைத் துறந்துவிட்டு பற்றுடன் திரிபவர் பலருண்டு. (இப்போது ஏனோ விஷ்ணுபுரத்தின் பல கதாபாத்திரங்கள் என் நினைவில் வந்து மோதுகிறது)

குருவினிடம் ஒருவனுக்கு இருப்பது பற்றல்ல. சுதந்திரம். துறவரம் என்பது ஒரு வித தப்பித்தல் மட்டுமே. துறவரம் என்பது பற்றறுத்தல் அல்ல அல்லவா? மேலிருப்பதெல்லாமே என் படிப்பறிவினால் சேமித்தது மட்டுமே.

ஒரு அடிப்படைப்பிரச்சினை சார்ந்து குறுக்குக் கேள்வி ஒன்றை கேட்டுவிடும்போது இளமையில் நாம் சிந்திப்பதாக பிரமை ஏற்பட்டு விடுகிறது. இதுதான் இளமையில் நாம் சிக்கும் சேறு. – என் கைகள் மட்டுமே வெளியே உள்ளது. 
 
-ராம்
அன்புள்ள ராம்
குரு சீட உறவின் பல தளங்களை கீழை மெய்யியலில் நாம் காணலாம். சங்கரர், ராமானுஜர், ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்றவர்களின் வாழ்க்கையில் அவர்கள் தங்கள் குருவிடன் கொண்ட முரண்பாடுகள் முக்கியமானவை. அவர்களை அடுத்த கடத்துக்குக் கொண்டுசென்றது அம்முரண்பாடுதான். ஒருவன் அடையும் குரு வெளியே இருந்து வ்ருவதில்லை, அவனுள் உறையும் அவன் தேடலே ஒருவரை அவனது குருவாக அமர்த்துகிறது என்று படுகிறது. குருவை ஒருவன் ஏற்றுக்கொள்வதில் உள்ள முக்கியமான அம்சமே ‘இவர் அல்ல’ என்று அவன் நிராகரித்தபடிச் செல்லும் நீண்ட பயணம்தான்.
ஜெ
முந்தைய கட்டுரைகுயில். கடிதங்கள்
அடுத்த கட்டுரைஊர்திரும்புதல்