சுயசிந்தனை

ஜெ,

நீங்கள் எழுதிய ‘இன்றைய காந்தி’ , சத்தியாக்கிரகத்தைப் பற்றிய புரிதல் குறித்து எனக்குள் முதன் முதலாய்க் கேள்வி எழுப்பிய ஓஷோவின் கருத்திற்கு அடுத்த படிக்கு (அதற்கு எதிரான முடிவிற்கு) என்னைக் கொண்டு சேர்த்துவிட்டது. அந்த பாதிப்பில், என் அரைகுறை தமிழ்’99 layoutல் தட்டுத் தடுமாறித் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். நான் கேட்க விரும்புவது இதுதான்.

சொந்தமாக, எந்தக் கருத்துகளின்…எந்த ஊடகங்களின் பாதிப்பும் இல்லாமல் யோசிப்பது எப்படி?

எந்தப் புதுமையான கருத்துக்களையும் (ஓஷோவின், உங்களது) மனது உடனடியாக ஏற்றுக் கொண்டு விடுகிறதே! எல்லாக் கருத்துக்களையும் சந்தேகத்தோடு அணுகுவது சற்று கடினமாக இருக்கிறது. ஏற்கனவே கேட்கப்பட்ட, நான் யோசித்து தெளிவுக்கு வந்த விஷயமாக இருந்தால் இது இயலும். எனது முடிவுகளைப் புரட்டிப் போடும் கருத்துக்கள் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கின்றன. உண்மைக்குப் பல்வேறு layers (தமிழில் தெரியவில்லை) இருப்பது புரிகிறது. முடிவுகளைத் திரும்பவும் புரட்டிப் போடும் கருத்து யாராவது சொல்லும் வரை, இதற்கும் அடுத்த layer குறித்து யோசனை வருவதில்லை.

சொந்தமாக யோசிப்பது எப்படி என்று கேட்பதன் நகைச்சுவை உங்களுக்குப் புரிந்தாலும், சற்றுத் தீவிரமாக பதிலளித்தால் தேவலை. ;–)

அன்புடன்,
ரகுநாதன் பட்டாபிராமன்

அன்புள்ள ரகு,

இந்த வினாவை உண்மையில் வெவ்வேறு தருணங்களில் என்னிடம் கேட்டிருக்கிறார்கள்.

இரு பகுதிகளாக இதற்கான பதிலை அமைக்க விரும்புகிறேன். எந்தக்கருத்துக்களின் பாதிப்பும் இல்லாமல், ஊடகங்களின் பாதிப்பும் இல்லாமல் எவராலும் யோசிக்க முடியாது. எதையுமே கவனிக்காமல் குகைக்குள் சென்று அமர்ந்தாலும் கூட அந்தப்பாதிப்பு இருக்கும். ஏனென்றால் நம் சூழலில் சிந்தனை நிறைந்துள்ளது. நாம் வெளியே காணும் எல்லாமே குறியீடுகளாகவே நமக்கு அறிமுகமாகியிருக்கின்றன. சிந்தனைகள்தான் குறியீடுகளாகியுள்ளன. நாம் அறிந்த மொழி நம் சூழலின், நம் மரபின் சிந்தனைகளால் ஆனதுதான். நாம் அவற்றுக்குள்தான் இருக்கிறோம், மீன் நீரில் இருப்பது போல.

சாதாரணமாக மொழியில் இருந்தும் குறியீடுகளில் இருந்தும் நம்மால் வெளியேற முடியாது. முடியும், ஆனால் அது யோகிகளின் உச்சநிலையில்தான் சாத்தியம். அந்நிலையில் சிந்தனை இருப்பதில்லை. ஆகவே சிந்தனை என்பது ஒரு தொடர்ச்சியே.

நாம் சிந்திக்கும்போது நம்மிடம் வந்து சேர்ந்துள்ள சிந்தனையில் நம் சிந்தனையின் கூறுகளையும் சேர்த்துக்கொள்கிறோம். நம் சூழலில் திகழும் சிந்தனைகளில் நம் பங்கை சேர்க்கிறோம். அவ்வளவுதான். ஐன்ஸ்டீனோ,தல்ஸ்தோயோ,காந்தியோ யாராக இருந்தாலும் அந்தப் பங்களிப்பு என்பது மானுட சிந்தனையின் அளவையும் காலத்தையும் வைத்துப்பார்த்தால் மிகமிகச்சிறியதே. இவ்வாறு நாம் சேர்க்கும் சிந்தனைத்துளியையே சொந்தச்சிந்தனை என்கிறோம்.

அந்த சொந்தச்சிந்தனை எப்படி உருவாகும்? பிறரிடம் இல்லாத, நம்மிடம் மட்டுமே இருக்கும் கூறு எது? நம்முடைய சொந்த வாழ்க்கையே. நாம் நம் அறிவாலும் நம் நுண்ணுணர்வாலும் எதிர்கொண்ட வாழ்க்கையின் அனுபவங்கள்தான். ஆகவே சுயசிந்தனை என்பது அப்படி சிந்திப்பவனின் சொந்த வாழ்க்கையில் இருந்து பெற்றுக்கொண்டதாகவே இருக்கும்.

ஒரு அசல்சிந்தனையாளன் தன்வரை வந்துசேரும் எல்லா சிந்தனைகளையும் தன் சொந்த வாழ்க்கையறிதல்களைக்கொண்டு பரிசீலிப்பதைக் காணலாம். மிகச்சிறந்த உதாரணம் காந்திதான். சொல்லப்பட்ட எதையுமே அவர் தன் வாழ்க்கையைக்கொண்டு பரிசீலிக்காமல் ஏற்றுக்கொண்டதில்லை. உதாரணமாக இந்தியாவில் ஆங்கிலேயர் அளித்த நவீனக்கல்வி பொதுமேடையில் சாதியை ஒரு தீயவழக்கமாக முன்வைக்கக்கூடியதாகவே இருந்தது. அக்கல்வி கற்ற அனைவருமே அதை அப்படியே ஏற்று சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் காந்தி அதை ஏற்றுக்கொள்ளவில்லை. சாதி தேவையான ஒன்றுதான் என்றே அவர் நினைத்தார். அவருடைய சொந்த அனுபவங்கள் அதற்குக் காரணம். அது சமகாலத்துக்குப் பொருந்துவதா, பிறர் என்ன நினைப்பார்கள் என எதைப்பற்றியும் அவர் கவலைப்படவில்லை.

ஆனால் தொடர்ந்து சொந்த அனுபவங்கள் மூலம் சாதிகள் பற்றிய தன் கருத்தை மேலும் பரிசீலித்த காந்தி மெல்லமெல்ல அந்த நிலைப்பாட்டிலிருந்து வெளியே சென்றார். சாதியை முழுமையாக நிராகரிக்கும் இடத்துக்குச் சென்று சேர்ந்தார். சாதியை ஏற்றுக்கொண்டபோதும் அவர் தன் அனுபவத்துக்கு நேர்மையாக இருந்தார். நிராகரித்தபோதும் அப்படித்தான் இருந்தார். ஏற்றுக்கொண்டபோது அவர் பழைமைவாதி எனக் கருதப்பட்டார். நிராகரித்தபோது கிறுக்கு எனக் கருதப்பட்டார்.

சிந்தனையின் அடிப்படை விதி இதுவே. சிந்தனைகளை வெறும் தர்க்கங்களாகக் கொள்ளாமல் நம் சொந்த அனுபவங்களைப் பகுத்து அறிந்துகொள்ள உதவக்கூடிய கருவிகளாக மட்டுமே கருதுதல். ‘கற்றபின் நிற்க அதற்குத்தக’ என குறள் சொல்வது இதையே.

சிந்தனைகளை வெறும் தர்க்கமாக மட்டுமே காணும் நிலையில்தான் நம் தர்க்கபுத்தியை நிறைவுசெய்யும் ஒரு வாதத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் விரிவான தர்க்கத்துடன் இன்னொரு தரப்பு முன்வைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்கிறோம். அந்த சிந்தனை நம் சொந்த வாழ்க்கையையும் பார்வையையும் எப்படி விளக்குகிறது என்று மட்டுமே பார்த்தோமென்றால் தர்க்கத்துக்கு முக்கியத்துவமளிக்க மாட்டோம். உண்மையை நாடுவோம்.

சிந்தனைகளை வாசிக்க ஆரம்பிக்கும்போது உள்ள மூன்று மாயைகளைக் காலப்போக்கில் களையவேண்டும். அந்த மாயைகளை இப்படி வகுத்துக்கொள்ளலாம்.

1. தர்க்கபூர்வமாக இருப்பது உண்மை என்ற நம்பிக்கை. உண்மை என்பதைத் தர்க்கபூர்வமாக நிறுவவும் முயலவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. பலசமயம் பொய் அது பொய் என அறிந்திருப்பதனாலேயே விரிவான தர்க்கத்துடன் முன்வைக்கப்படலாம். உண்மை எளிமையான வெறும் தரிசனமாக வெளிப்படலாம்.

2. புதிய ஒரு கருத்து பழைய கருத்துக்களைத் தாண்டி வந்த ஒன்று என்ற பிரமை. புதிய ஒரு சிந்தனையைக் கண்டதும் அது புதியது என்பதனாலேயே அதன் மேல் பற்றும் பரபரப்பும் கொள்வது இதனால்தான். ஆனால் பலசமயம் புதிய கருத்துக்கள் பழைய கருத்துக்களை விடப் பிற்பட்டவையாக,சாதாரணமானவையாக, பயனற்றவையாக இருக்கலாம். அவை ஒருவகை சிந்தனை சாத்தியங்களாக மட்டுமேகூட இருக்கலாம்.

3. வசீகரமான மொழியில் அல்லது உணர்ச்சிகரமான தொனியில் சொல்லப்படும் கருத்துக்களை அந்த மொழிக்காகவோ உணர்ச்சிக்காகவோ நம்மையறியாமலேயே ஏற்றுக்கொள்ளுதல் பெரிய மாயை. ஒரு கருத்தை அதன் மொழியாட்சி, உணர்ச்சி ஆகியவற்றில் இருந்து பிரித்து வெறும் கருத்தாக மட்டுமே பார்க்கும் பயிற்சி மூலமே அதைத் தாண்டிச்செல்லவேண்டும்.

இந்த மூன்று மாயைகளும் சிந்தனைகளைச் சந்திக்கும்போது இளமையில் எவருக்கும் உருவாகக்கூடியவை. இவற்றைத் தாண்டிச்சென்றே ஒருவர் சுயசிந்தனையை அடைய முடியும். சுயசிந்தனை என்பது ‘home made cake’ போன்றது. அதன் மூலப்பொருட்கள் எல்லாமே கடையில் வாங்கியவை. அதன் சுவை என்பது நம்முடைய கைப்பக்குவம்.

ஜெ

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 14 – சூரத், தாபோய்
அடுத்த கட்டுரைஅண்ணா ஹசாரேவின் தோல்வி