அன்புள்ள ஜெயமோகன்,
அண்ணா ஹசாரேவிற்கு வீட்டு இருக்கையிலிருந்து நகராமல் ஆதரவு கொடுத்த பல்லாயிரக்கணக்கான நடுத்தர வர்க்கத்தாரில் நானும் ஒருவன். இந்தப் போராட்டம், என் மனதின் அடி ஆழத்தில் இருந்த, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆசைகளைப் புதுப்பித்தது. அதிகார வர்க்கத்தின் அநியாயங்களை எதிர்க்க இயலாத கையாலாகாத்தனத்திற்கு முடிவு கட்ட முடியும் என்று நம்பிக்கை வந்தது.
என் தம்பி காந்தி குறித்த தங்களது கருத்துக்களைப் படித்து முன்பே பரிந்துரை செய்திருந்தான். அப்போது செய்தி நிலையங்களிலேயே மூழ்கியிருந்ததால், உங்கள் வலைப்பூக்களை கவனிக்கவில்லை.
அதே நேரம் ஓஷோவின் எச்சரிக்கையும் ஞாபகம் வந்தது. அண்ணாவை ஒரு அரசியல்வாதியாகப் பார்க்காமல் இருக்க முடியாது. ஓஷோ ‘அரசியல்வாதிகளின் பலமே மக்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்குவதுதான்’ என்றார். காந்தியைக் கடுமையாக (திறமையாக) விமரிசிப்பார். அகிம்சை, ஆழத்தில் ஒரு வன்முறைதான் என்ற கருத்தை முதன் முதலில் ஓஷோவிடம் இருந்துதான் கேட்டேன். அதனால் அகிம்சை முறை குறித்து எனக்கு அதிக மரியாதை இல்லாமல் இருந்தது.
அண்ணாவின் டிசம்பர் போராட்டம் நீர்த்துப் போனவுடன் மிகுந்த சோர்வில் இருந்தேன். அரசியல் வர்க்கம் ஆரம்பத்தில் தடுமாறினாலும், இறுதிக் கட்டத்தில் அற்புதமாகக் காய்களை நகர்த்தி வென்று விட்டது தெரிந்தது.
இந்த சமயத்தில் இந்த மன நிலைகளுடன் தங்கள் புத்தகத்தை அணுகினேன். வழக்கமாக ‘உத்தமர் காந்தி’ போன்ற புத்தகங்கள் தமிழில் ஏராளம். பள்ளி நூலகங்களுக்காகவே எழுதப்படுகிறது என்று தோன்றும். புதிதான சிந்தனை சுத்தமாக இருக்காது.
உங்களது கட்டுரைகள் எனக்குப் பரிச்சயம் உண்டு. முக்கியமாக நம் சூழ்நிலைகளை ஆழ்ந்து கவனித்த பார்வைகள் எனக்குப் பிடித்தம். உங்களது ஆன்மீகமும் (தியானம்) இந்த ஆழ்ந்த சிந்தனைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. இதனாலேயே பொத்தாம் பொதுவாகத் தலைப்பிலிருந்தாலும் நம்பி வாங்கினேன். (உடுமலை.காம்)
வேறு வேலைகள் இருந்தாலும் (நாளைக்கு அலுவலகத்தில் ட்ரெய்னிங் தர வேண்டும்), ஒரே மூச்சில் படிக்க வைத்து விட்டது. அண்ணாவின் பின்வாங்குதலின் அர்த்தம் விளங்குகிறது. அவர் திரும்பவும் போராட்டத்தைப் புதிய புரிதலுடன் தொடருவார் என்று புரிகிறது.
ஆனாலும் இது குறித்து உங்கள் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறீர்களா? உங்கள் வலைமனையில் கண்டு பிடிக்க முடியவில்லை.
ரகுநாதன் பட்டாபிராமன்
அன்புள்ள ரகு,
நான் அண்ணா ஹசாரேவின் போராட்டம் பற்றி விரிவாகவே எழுதவேண்டுமென நினைத்திருந்தேன். அண்ணா ஹசாரே அவரது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்ட அன்று நண்பர் ஒருவர் தொலைபேசியில் கூப்பிட்டு என்னிடம் ‘போராட்டம் தோல்விதானே?’ என ஆறுதலுடனும் உவகையுடனும் கேட்டார். நான், ‘சந்தேகமே இல்லாமல்’ என்றேன். ‘இது அண்ணா ஹசாரேயின் தோல்விதானே?’ என்றார் அவர். நான் ‘அவர் அவருக்காகப் போராடவில்லை. ஆகவே அவருக்குத் தோல்வி என்பதுமில்லை’ என்றேன்.
அண்ணா ஹசாரேவின் போராட்டம் மக்களால் கைவிடப்பட்டிருக்கிறது என்பதே உண்மை. சுதந்திரத்துக்குப்பின்னர் இந்தியாவில் நிகழ்ந்த தன்னெழுச்சியான பல மக்கள் போராட்டங்கள் மக்களால் விரைவிலேயே கைவிடப்பட்டிருக்கின்றன. நான் நெருக்கமாக கவனித்த போராட்டம் என்றால் ஒரிஸாவில் பலியபாலில் நிகழ்ந்த போராட்டம். அதைப் பற்றி பலியபாலின் பாடங்கள் என்ற நூலை மொழியாக்கம் செய்திருக்கிறேன். [நிகழ் வெளியீடு]
அறம் சார்ந்த ஒரு போராட்டத்தில் மக்கள் எப்போதும் ஐயத்துடனேயே இருப்பார்கள், ஏனென்றால் பெரும்பாலானவர்கள் அறம்சார்ந்த வாழ்க்கை வாழ்பவர்களல்ல. அந்த ஐயத்தை மிக எளிதில் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் வளர்த்தெடுக்க முடியும். இந்திய ஊடகங்களின் அறிவுஜீவிகள் ஐயங்களை உருவாக்கி எழுப்பி இந்தியாவில் அறம்சார்ந்த கோரிக்கையுடன் உருவாகிவந்த ஒரு முக்கியமான மக்களியக்கத்தை அழித்துவிட்டார்கள். அதற்குப்பதிலாக அவர்கள் சுட்டிக்காட்ட ஏதுமில்லை, தங்கள் கட்டுரைகளைப் படியுங்கள் என்று சொல்வதையல்லாமல்.
அண்ணா தோற்றுவிட்டார். ஆனால் ஒரு காந்தியப்போராட்டம் நிகழ்ந்தவரை வெற்றியையே கொடுக்கும். இந்திய சாமானியனின் மனதில் ஊழலுக்கு எதிரான ஒரு எழுச்சியையும் உறுதிப்பாட்டையும் உருவாக்கியவரையில் அது வெற்றியே. அதற்குமே இந்த தேசத்துக்கு அதிருஷ்டமில்லை. நமக்கு அருந்ததி ராய்களும் ராஜ்தீப் சர்தேசாய்களும் ஞாநிகளும் மாலன்களுமே கதி…
ஜெ
அன்புள்ள ஜெ ,
வெகுநாட்களாகவே நான் எனது நண்பர்களிடம், மற்றும் உறவினர்களிடம் அண்ணா ஹசாரே பற்றிய விவாதங்களில் எதிர் கொள்வது, அவர் ஒரு அரைகுறை காந்தியவாதி , அவர் மது அருந்துபவர்களைக் கட்டிப் போட்டு அடித்தமையால் என்று குற்றச்சாட்டு வந்து கொண்டே இருக்கிறது . நான் ஊர் ஊராக சுற்றி அலைபவன், அதுவும் கிராமங்களில் சுற்றுபவன். நானும் மது அருந்தியிருக்கிறேன், ஆனால் மது அருந்துவது எவ்வளவு கேடு என்று எனக்குக் கணினித் துறையில் வேலை பார்க்கும்பொழுது தெரியவில்லை. அதைக் கண்கூடாக கிராமங்களில் பார்த்த பிறகுதான் தெரிய வந்தது.
மேட்டுக்குடி குடிப்பழக்கம் என்பது எல்லாப் புறவயமான பாதுகாப்பில் இருந்துகொண்டு குடிப்பது. எந்தவிதப் பாதுகாப்பும் இல்லாமல், குடித்து ரோடில் விழுந்து ஒரு நாள் வீடு வராமல் வீட்டில் இருப்பவர் துடிக்கும் பொழுது எப்படி இருக்கும் என்பது பாரில் இருந்து குடிப்பவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை. தெரிந்தாலும் குடிக்கும் பழக்கம் இருப்பவர் அதை ஒரு “addiction”/danger என்று ஒப்புக் கொள்ள வாய்ப்பில்லை. அதுவும் கிராமத்தில் குடிபோதைக்கு அடிமை ஆகும் பலர் விவசாய தினக்கூலித் தொழிலாளர்கள். இதையெல்லாம் மனதில் வைத்துக்கொள்ளாமல், அண்ணா ஹசாரே கட்டிப்போட்டு அடித்துவிட்டார் என்கிறார்கள். அப்படிப் பார்த்தால் “mental asylum” -இல் ஒரு மன நோயாளிக்குக் கொடுக்கும் ஷாக், மனித உரிமை மீறல்களில் பிரதானமான ஒன்று. சட்டை பேண்ட்டு போட்டால் அவர்கள் சொல்வது சரி என்ற மனநிலை நமக்கு யார் தந்தது?
நகர வாசிகள் socialising என்ற பெயரில் மது குடிப்பது வேறு. கிராமத்தில் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி குடிப்பது என்பது இவர்களால் கற்பனை கூட செய்ய முடியாது. கண்கூடாகக் கண்ட பிறகுதான் அண்ணா ஒரு மன நோயை, அடித்து விரட்டினார் என்று பட்டது. எனக்கு அடி உதையில் நம்பிக்கை இல்லைதான். அதே போல் ஷாக் treatment இலும் நம்பிக்கை இல்லை. கீழ்க்கண்ட Ramachandra Guha வின் ஒரு பதிவில் அவர் அண்ணா ஒரு Authoritarian village reformer என்று கூறும் பொழுது, நமது அறிவு ஜீவிகள் எவ்வளவு தொடர்பே இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
நான் நமது கிராமத்தில் சூதே இல்லை, அப்பழுக்கற்ற மனிதர்கள் என்றெல்லாம் வாதாட வரவில்லை. அங்கு ஜாதி இருக்கிறது, பேய் போல் வெற்று அரசியல் இருக்கிறது, மது ஒரு அசுரன் போல் இருக்கிறது. இதை எல்லாம் எதிர் கொண்டு ஒரு சாதாரண மனிதர் தனது வாழ்க்கையைத் தனது சொந்த ஊருக்காக அர்ப்பணித்தார் என்பதை நமது அறிவு ஜீவிகளால் ஒத்துக்கொள்ள முடியவில்லை. இந்த மூன்றையும் ஏதோ ஒருவகையில் நமது கிராமங்களில் ஒழிப்பது என்பது மிகப் பெரிய சவால்தான். அதை அண்ணா செய்து காட்டினார். இதை ஒரு பத்திரிகை ஆசிரியரால்,அல்லது ஒரு வரலாற்று ஆசிரியரால் கொண்டு வரமுடியுமா?
நமது புத்தகத்தில் வரும் காந்தி ஒரு idealistic காந்தி. அதை நடைமுறை வாழ்வில் கிராமத்தில் எதிர்கொள்வது சிறிய மாற்றங்கள் இல்லாமல் முடியாது என்று இவர்களுக்குப் புரிய வாய்ப்பு இல்லை. இதை அறியாமல் நாம் நமது நகரச் சூழலைவைத்து கிராமங்களுக்கு “egalitarian’’ solutions கொடுப்பது என்பது ஒரு முட்டாள்தனம். அதையே மீண்டும் மீண்டும் அண்ணா ஹசாரே ஒரு அத்து மீறும் மனிதர் என்றெல்லாம் கூறுகிறார்கள் .
http://www.telegraphindia.com/1111231/jsp/opinion/story_14929109.jsp
நன்றி
மது லச்சின்
அன்புள்ள மது,
ஜெ