ஆற்றூர்

attoor

 

சுந்தர ராமசாமியின் வீட்டிற்குச் சென்றபோது ராமசாமி ஒரு சிறு பரவசநிலையில் இருந்தார். ”என்ன சார்?” என்றேன். ”ஆற்றூர் ரவி வர்மா வந்திருக்கார்…”என்று சொன்னார். அவரது ‘ஜே.ஜே.சிலகுறிப்புக’ளை மலையாளத்துக்கு மொழியாக்கம்செய்ய ஆற்றூர் முனைந்திருப்பதைப்பற்றி நான் அறிவேன். ஆற்றூர் ரவிவர்மா மலையாளத்தில் முக்கியமான கவிஞர் என்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். முன் அறைக்குள் மேஜையில் அமர்ந்து பெரிய ஊற்றுப்பேனாவால் கைப்பிரதியை திருத்திக் கொண்டிருந்தவரை நான் எட்டிப்பார்த்தேன்.கரிய நிறம், உயரமில்லை. மெல்லிய உடல்வாகு. கரிய பட்டையான சதுரக் சட்டம் கொண்ட மூக்குக் கண்ணாடிக்கு வெளியே சிறிதே மூக்கு மிஞ்சியிருக்கும். பிரெஞ்சுதாடிதான் அவரது அடையாளம்.

”உள்ள வாங்க”என்று அழைத்த சுந்தர ராமசாமி ”…இவர்தான் ஜெயமோகன், சொன்னேனே”. ஆற்றூர் ரவிவர்மா ‘ஹ-ஹ-ஹ-ஹ!’ என்று சிரித்தார். அப்படி என்ன சொல்லியிருந்தார் என நான் பீதியுடன் சுந்தர ராமசாமியைப்பார்த்தேன். ஒருவரை வரவேற்பதற்கு ஆற்றூர் ரவிவர்மா எழுப்பும் ஒலி என்பதை பிறகுதான் புரிந்துகொண்டேன். அவ்வளவாக நெருக்கமில்லாதவர் என்றால் ‘அ-அ-‘ என்ற ஒலி. ”… ஜெயமோகன் தமிழிலே நல்ல பிடி உள்ளவர். சங்க இலக்கியம்லாம் நல்லா படிப்பார்….”என்றார் சுந்தர ராமசாமி.

”இரிக்யா” என்று திரிச்சூர் மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா என்னை அமரச்சொன்னார். நான் பிருஷ்டத்தை நாற்காலியில் வைத்ததுமே வேலையைத் தொடங்கிவிட்டார்.”கற்பழிப்பு எந்நால் எந்தாணு?”. நான் சங்கடமாக சுந்தர ராமசாமியைப்பார்க்க அவர் புன்னகையுடன் ”பேசிண்டிருங்கோ”என்று நகர்ந்தார் நான் என்னால் முடிந்தவரை விளக்க முற்பட்டேன். பத்துநிமிடம் கழிந்துதான் ஆற்றூர் ரவிவர்மா மனதில் கற்பு — கறுப்பு இரண்டும் ஒன்றாக பதிந்திருப்பதை புரிந்துகொண்டேன். ”ஆட்டே, ஈ கற்பு எவிடயா உண்டாவுக?” என்ற கேள்விமூலம்.

இதன்பின் சுந்தர ராமசாமியின் விசேஷமான சொல்லாட்சியின் பொருளை புரிந்துகொள்ள நாங்களிருவரும் சேர்ந்து முயன்றோம். ‘உழைப்பு இல்லாமல் கற்பழிப்பு இல்லை’. கற்பழிப்பது என்பது கடுமையான உடலுழைப்பு உடைய செயல் என்றே சினிமாக்களில் மட்டும் அதைக் கண்டுவந்த நான் புரிந்துகொண்டிருந்தேன். வில்லனும் கடுமையாக மூச்சு வாங்குவாரே. இங்கே சுந்தர ராமசாமி இயற்கையைப்பற்றி ஏதோ சொல்கிறார் என்ற பொதுப்புரிதலை இருவரும் அடைந்தபோது ஆற்றூர் ரவிவர்மா களைத்து ”இனி ஒரு இடவேள”என்றார்.

ஆற்றூர் ரவிவர்மாக்கு ஒரு ரேசர் வாங்கவேண்டியிருந்தது. பிரெஞ்சுதாடியை பராமரிப்பதென்பது ஓர் அன்றாடவேலை. தினமும் வடிவம் மாறுவது அது. நாங்கள் இருவரும் சேர்ந்து நாகர்கோயில்–ஆசாரிப்பள்ளம் தெருவில் நடந்தோம். ”சார், ஒரு நிமிஷம்!” என்றேன். ”என்ன?” என்று பதறினார். சாலையோரம் ஒரு பெரிய பெண்பன்றியின் பெரிய காதுகள் மட்டும் சாக்கடைக்கு வெளியே தெரிவதை காட்டினேன். தலைவி சாலையை வேவு பார்க்கிறது.இதோ படை சாலையைக் கடக்கப்போகிறது. ஆற்றூர் ரவிவர்மா சுவாரசியத்துடன் நின்றுவிட்டார்.

முலைகள் அலைபாய ஓடும் சாக்குமூட்டை போலப் பாட்டிப்பன்றி ஒன்று ‘ம்றக்’ என்ற ஒலி எழுப்பி சாலையைக் கடக்க கரிய சேறு தடம் போட பத்துப்பதினைந்து பன்றிகள் ஆடியாடி வால் சுழற்றி மறுபக்கம் பாய்ந்தன. ”ஒரே ஒரு பண்ணிக்குட்டி மட்டும் வித்தியாசமா ஏதாவது பண்ணும் சார்” என்று நான் சொல்லி முடிப்பதற்குள் ஒரு குழவி ஆற்றூரை நோக்கி வந்து மூக்கை நிமிர்த்தி ‘ம்ம்ம்றே?” [மலையாளத்தானா ஓய்?] என்று கேட்டது. அதன் தாயார் ‘ம்ம்ரீஈ…றக்!” [ கழிச்சலிலே போறவனே, வாலே இந்தால] என்று அதட்ட துள்ளி திரும்பி ஓடியது. ”கொள்ளாமல்லோ…இது எங்ஙினெ அறியும்?” என்றார் ஆற்றூர் ரவிவர்மா பிரமிப்புடன். ”பண்ணிக்கூட்டத்திலே எப்பவும் ஒரு ரிபல் உண்டு சார்!” என்று சொல்லி பன்றிகளைப்பற்றிய என் ஞானத்தை பகிர்ந்துகொண்டேன்.

திரும்பும் வழியில் ஆற்றூர் ரவிவர்மா ”எழுதாறுண்டோ?” என்றார் .அப்போது நிகழ் இதழில் ‘படுகை’ வந்திருந்தது. ”ஒண்ணு ரெண்டு கதை…”என்று தயங்கியபடி சொன்னேன். ”எழுதணும். தான் எழுத்துகாரனாணு….”என்றார் ஆற்றூர் ரவிவர்மா — என் ஒரு வரியைக்கூட படித்திராமல். அது என் குருநாதனின் ஆசி. இன்றுவரை என் பேனா வற்றியதில்லை. எதை எழுதவும் ஒரு கணம்கூட தயங்கியதில்லை. அமர்ந்தால் எழுதவேண்டியதுதான். கைமட்டுமே களைக்கும். ஆம், ‘உப்புக்கும் பாடி புளிக்கும் ஒருகவிதை ஒப்பிப்பவ’ளைவிட நான் ஒருபடி மேல்தான். அவ்வருடமே ‘ரப்பர்’ எழுதி அதை ஆற்றூர் ரவி வர்மாவுக்கும் ஸ்ரீதேவி வர்மாவுக்கும் சமர்ப்பணம்செய்தேன். என் முதல் நூல்.

தமிழ் ஆற்றூர் ரவிவர்மாவை போட்டுப் பாடாய்ப்படுத்தியது. அவரது முதல் சிக்கலே தமிழில் முதலெழுத்தைப் போடும் பழக்கம்தான். அது கேரளத்தில் இல்லை. ”ஆராணு சிசு செல்லப்பா?” ”சார்!” என்று அலறிவிட்டேன் ”அவரு சிசு இல்லை. வயசு எழுபதுக்கும் மேலே. கேள்விப்பட்டா கொலையே செஞ்சிருவார்…” ஆற்றூர் ரவிவர்மா சுந்தரராமசாமியையே சொல்லக் கஷ்டப்படுவார். அதிலுள்ள ரரா அவருக்கு வராது. ஆனால் அஞ்சி பின்வாங்குபவரல்ல. மூச்சுபிடித்து சுந்த-ரரா-மசாமி என்று சற்றே ஜப்பானியச் சாயலுடன் சொல்லி விடுவார். தமிழ் எழுத்தாளர்களை அவரது பேச்சில் அடையாளம் காண்பது கொஞ்சம் கஷ்டம். கூலிங் கிளாஸ் மாட்டி, தொப்பி வைத்து, கன்னத்தில் மரு ஒட்டி கருப்புப் பல்லுடன் தென்படுவார்கள். ‘வவே’ சுப்ரமணிய அய்யர், ‘குப’ ராஜகோபாலன், ‘தீ’ ஜானகிராமன் ‘நீலா’ பத்மநாபன்….

எத்தனை தடைகள்! நள்ளிரவில் ·போன் போட்டு தெரியாத வார்த்தைகளை எழுதி வைத்து கேட்பார். திறன்? ”ஓ, திறக்குந்நவன் அல்ல அல்லே? சரி, அடுத்தது, ‘ஒட்டிக்’ எந்நால் எந்து அர்த்தம்?” எனக்கு ஒன்றும்புரியவில்லை. ”சார் ‘பத்திக்’ தானே? மெழுகுவச்சு சேலைகளிலே படம் வரைவாங்களே அது? ”அது எனிக்கு அறியும். இது ஒட்டிக்.” அப்படி ஒரு சொல்லே தமிழில் இல்லை என்றேன். இருக்கிறதே என்றார். சரி அந்த வரியை முழுதாகப் படியுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ”கையில் – ஒட்டிக் – கொண்டது” என்று வாசித்தார். நான் விளக்கியதும் ”அதுசரி இதினே ஞான் நாலு மணிக்கூர் நேரமாய் டிக்ஷனரியில் தேடியல்லோ” என்றார். ஒற்றெழுத்து மிகுதலை அவருக்குப் புரியவைக்க என் எளிய மொழித்திறனால் இயலவேயில்லை–கடைசிவரை. ‘நல்லக்க்க் குழந்தை!’ ‘அடித்துக்க்க்க் கொலை!’ தான்.

அதைவிடச் சிக்கல் உச்சரிப்புக்கும் எழுத்துக்குமான உறவு. அவர் மூச்சுப்பிடித்து உரக்கப் படிப்பார், ‘ச்சூரியன்!’. நான் திருத்துவேன் ‘சார் அதை ஸ¥ரியன்னு சொல்லணும்’ உடனே ”ஸற்றே ஸாய்வான ஸ¥ரல் நாற்காலியில்…” நான் ”சார்! சார்!” என்றேன். மூக்குக் கண்ணாடியை தூக்கி விட்டு ”எந்தா?” என்றார். அப்படியில்லை. ஏன் அப்படி இல்லை என்று சொல்ல முடியாமல் நான் ஸற்றே ஸாய்ந்து கறுப்பு டீ குடிக்கத் தலைப்பட்டேன். இதிலே நக்குலன் என்று ஸொல்லக்கூடாது நஹ¤லன் என்று சொல்ல வேண்டும் என்றெல்லாம் ஜொள்ளி எனக்கே மொத்தமாகக் குழப்பமாகிப்போய்விட்டது.

தமிழாய்வாளர்களை அவரால் நெருங்கவே முடியவில்லை. இவ்வளவுக்கும் அவர் ஒரு தூய்மைவாதி, கச்சிதவாதி. அவ்வகை தீவிரங்கள் மேல் அவருக்கு மோகம் உண்டு. தீவிரங்களுக்கு வாழ்க்கையில் பொருளே இல்லை, ஆனால் தீ£விரம் இல்லையேல் வாழ்க்கையே இல்லை என்பது அவரது கோட்பாடு. ஞானி சாதிப்பெயர் எழுதமாட்டார். ஆகவே அவரை ஆற்றூர் ரவி என்றுதான் சொல்வார். ”அதெப்டி நம்ம வீட்டு நாய் வாலை பக்கத்துவீட்டுக்காரன் கட் பண்ணலாம்? ”என்று சுந்தர ராமசாமி சினந்தார். ” இரிக்கட்டே…”என்று ஆற்றூர் ரவிவர்மா சமாதானமடைந்தார். தமிழர்கள் சாதிகளைப்பற்றியும் பாலுறவு பற்றியும் பேசமாட்டார்கள், ராப்பகலாக நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்று நான் அவருக்கு விளக்கினேன். ஞானியிடம் பொற்றேக்காட் என்பது சாதிப்பெயர் என்று சொல்லி அவர் ‘எஸ்.கெ.’ என்று மட்டுமே சொல்லலானார்.

வட்டார வழக்கு ஆற்றுரை விழி பிதுங்க வைத்தது. கேரளத்தில் உரைமொழிக்கும் வரைமொழிக்கும் இடையே இவவ்ளவு பெரிய அகழி இல்லை. உரைமொழிகளுக்கு இடையேயும் இத்தனை பெரிய பிளவுகள் கிடையாது. ”ன்னா நன்சுக்னு கீறே நைனா? பட்டா, உட்டு ஆட்டிருவேன். ஒத துண்ணப்போற அக்காங். ஏய், ஸொம்மா டின்னு கட்ருவேன்..ன்னா மொறக்றே? நம்ம கைல வச்சுக்காதே…ன்னா ?” போன்ற வசனங்களை பொறுமையாக வாசித்து ஒருமுறை மலையாள எழுத்தில் எழுதி மந்திரம் போல சொல்லிப்படிக்கும் ஆற்றூரைக் காண பரிதாபமாக இருக்கும்

ஆனால் சளைக்காமல் எல்லாரையும் வாசித்துவிடுவார். மலையாளப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்ற பிறகுதான் ஆற்றூர் ரவிவர்மா தமிழ் ஆனா ஆவன்னா [எதுக்கு தமிழ் எழுத்துக்களை ஆனையில் தொடங்கணும்? ஆனை கணபதியானதினாலேயா?] சிலேட்டில் எழுதிக் கற்றுக் கொண்டார். பதினைந்துவருடங்களுக்குள் மொழிபெயர்ப்புக்கு கேந்திர சாகித்ய அகாதமி விருது பெற்றார். பக்தி காலகட்ட கவிதைகளையும் புதுக்கவிதைகளையும் இருபெரும் தொகைகளாகக் கொண்டுவந்து தமிழைப்பற்றிய மலையாளக் கண்ணோட்டத்தையே மாற்றியமைத்தார்.

ஆற்றூர் ரவிவர்மாவின் வாழ்க்கையில் இருபது சதவீதம் நேரம் பிரம்மனால் கண்ணாடியை தேடுவதற்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. எங்கும் இருக்க வாய்ப்புள்ளது அது. ஒருமுறை நான் அவர் வீட்டை நெருங்கும்போது முன்முற்றத்து மாமரத்துக் கிளைமேல் இருந்தது. அதை கையில் எடுத்தபடி கதவை தட்டினேன். திறந்து கண்ணாடியை கொடுத்ததும் ‘ஹ-ஹ-ஹ’ என்று சாதாரணமாக அதை வாங்கிக் கொண்டார். கைமறதியாக எனக்கு தபாலில் அனுப்பிவிட்டதாக நினைத்துக் கொண்டாரோ என்னவோ.

ஆற்றூர் ரவிவர்மாவை எல்லாரும் சிரித்த முகத்துடன்தான் அறிந்திருக்கிறார்கள். எப்போதும் அச்சிரிப்பு அவர் வீட்டுக்குள் கேட்டுக் கொண்டிருக்கும். எல்லா புகைப்படங்களிலும் வெடிச்சிரிப்புடனேயே பதிவாகியிருக்கிறார். சிந்திப்பதுபோன்ற ஒரு படத்துக்காக மாத்ருபூமி புகைப்படக்காரர் அவரிடம் பலவகையான சோகச்செய்திகளை சொல்லிப்பார்த்ததாகவும் அவற்றில் உள்ள வேடிக்கைகளை கண்டெடுத்து அவர் ‘பொட்டிச் சிரித்ததாகவும்’ சொல்லப்படுகிறது. கடைசியில் சோகமாக ஆற்றூர் இருக்கும் அந்தப் புகைப்படம் ஏதோ கம்ப்யூட்டர் மோசடி என்று அவரை அறிந்தவர்கள் நினைக்க நேர்ந்தது. அதை எடுத்தபோது நிருபர் அவரே எழுதிய ஒரு கவிதையை வாசித்தாராம்

ஆனால் இளம் வயதில் ஆற்றூர் ரவிவர்மா ஒரு அனல் பறக்கும் புரட்சியாளராக இருந்திருக்கிறார். பிளவுபடாத கம்யூனிஸ்டுக் கட்சியின் வெடிகுண்டு அணி. அவரது தலைக்கு திருவிதாங்கூர் அரசு விலை வைத்திருக்கிறது. சென்னை ராஜதானிக்குத் தப்பி அங்கேதான் மலையாளம் ஆனர்ஸ் முடித்தார்.நக்சலைட் புரட்சியாளர்களுடன் உறவு கொண்டு பணியாற்றியிருக்கிறார். எல்லாம் முடிந்து பிறகு வந்தது அந்த வெடிச்சிரிப்பு. அப்போதுதான் காதல் கல்யாணம். புரட்சிவாதி காதலித்துக் கல்யாணம் செய்யவேண்டுமென்றுதானே வங்க நாவல்கள் அறைகூவுகின்றன. காதல் கடிதத்தை கவிதைமயமாக எழுதியாகிவிட்டது. பார்த்தால் ‘சாய்ஸே’ இல்லை. ஊரில் ஒரே ஒரு பெண்ணுக்குத்தான் எழுதப்படிக்கத்தெரியும். அதிருஷ்டவசமாக அவளுக்குக் கல்யாணம் ஆகியிருமிருக்கவில்லை. கோவிலுக்கு வந்த ஸ்ரீதேவி வாரியஸ்யரை நிறுத்தி கடிதம் கொடுக்க காதல் கைகூடி திருமணம்

ஆனால் அம்மையார் கடிதத்தை படிக்கவேயில்லை. ஆற்றூரின் கையெழுத்து அப்படிப்பட்டது. அப்படியானால் காதல் எப்படி தெரியவந்தது? இதென்ன அசட்டுச் சந்தேகம்? ஊரிலே ஒரு பையன் பெண்ணுக்கு கடிதத்தை வேறு எதற்காகக் கொடுப்பான்? பின்னர் அம்மணி ஆற்றூரின் பிரதம வாசகியாக விளங்கினார் என்பது கையெழுத்து பழகியதனால் அல்ல, அவர் வாசித்துக் கேட்கவைத்ததனால்தான்.

ஆற்றூர் வேகமாக எழுதுபவரல்ல. ஒருநாள் இரண்டுவரி எழுதினால் அபூர்வம். அதை மீண்டும் மீண்டும் சொல்லியபடி கைகை ஆட்டிக் கொண்டு வீட்டுக்குள் நடப்பார். சேப்பக்கிழங்கு வறுவல் தின்றவரைப்போல அவஸ்தைப்படுவார். எழுதி முடித்ததும் வனமிருகங்கள் எலும்பை புதைத்துபோடுவதுபோல புத்தகங்களில் எங்காவது குழிதோண்டி புதைப்பார். ஆறுமாதம் வரை ஆகும் பதம் வருவதற்கு. பத்திரிகைகளில் இருந்து கட்டாயப்படுத்தி கேட்டால் புத்தகங்களை திறந்து தேடினால் கவிதை அகப்படும். அது அனேகமாக ஓண மலர்களில். ஆகவே அவருக்கு ‘சீசன்’ கவிஞர் என்று பெயருண்டு. கவிதை சீசனில் அவரது முகம்சிவந்து காதருகே மதஜலம் வடியும் என்ற கூற்று பொய், நான் பார்த்தது இல்லை.

மேடைகளில் ஆறரைவரிக்குமேல் பேசமாட்டார். ஆனால் அந்தக்கூட்டத்திலேயே நினைவில் நிற்கும் வரி அவர் சொன்னதாகவே இருக்கும். வகுப்புகளில் ரத்தினச்சுருக்கமாக பேசுவார் என்கிறார்கள். ஒரு சிறு குரல் பிரச்சினை நாற்பதுவயதில் வந்ததனால் குரல் உடைந்திருக்கும். பையன்கள் செல்லமாக கிளிவர்மா என்பார்கள். ஆனால் அவரது வகுப்புகள் எப்போதும் மாணவர்களாலும் ஆர்வலர்களாலும் நிறைந்து வழியும். ஓய்வுபெற்ற பின்னும் இன்றுவரை தனியார் கல்லூரிகளின் நட்சத்திர ஆசிரியராக இருக்கிறார். கற்பிக்காமல் அவராலும் இருக்க முடியாது.

”பாடம் படிப்பிக்க ஆயிரம்பேர் உண்டு. சார் மட்டும்தான் புதிதாக ஏதாவது சொல்ல முடியும்”என்றான் அவரது இளம் மாணவன். ஒவ்வொரு வகுப்புக்கும் விரிவாகப் படித்து குறிப்புகள் எடுப்பார் ஆற்றூர் ரவிவர்மா. கச்சிதமான சிறு சொற்றொடர்களை மாணவர் மனதில் விதைத்து சிந்தனை பாரத்துடன் எழுந்துசெல்ல வைப்பார். இன்று அவரது மாணவர்களில் மூன்றாம்தலைமுறை மலையாள சிந்தனைத்தளத்தில் வேர் பரப்பி எழுந்திருக்கிறது. அவர் கேரள இலக்கியத்தில் ஒரு வலுவான, நுட்பமான மையம்.

எவரையும் விமரிசனம்செய்வதில்லை ஆற்றூர். யாரையுமே வெறுப்பதில்லை. எல்லா மனிதர்களுக்கும் பிரியமானவர். அவர் நடை சென்றால் ஆயிரம் வணக்கங்கள். லௌகீக உசாவல்கள். ஆனால் அவர் வாழ்வது வேறு ஓர் உலகில். அவரைப்பற்றி ஒரு புகழ்பெற்ற கதை உண்டு. அவரது புகழ்பெற்ற மாணவர் கல்பற்றா நாராயணன் சொன்னது. ஆற்றூர் ரவிவர்மா தலைசேரி கல்லூரியில் வேலைபார்த்த காலம். கையில் ஒரு பையுடன் மறுகையால் பஸ்ஸின் மேல்க்கம்பியை பிடித்தபடி ஆடியாடி நிற்கிறார். மனதில் கவிதைச் சிந்தனை. கண்டக்டர் வந்து ”டிக்கெட் டிக்கெட்” என்றபோது மேலே கம்பியை மோவாயால் சுட்டி ”இதைக் கொஞ்சம் பிடி… பையிலிருந்து பணமெடுத்து தருகிறேன்”என்று சொன்னாராம் 

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம்Apr 2, 2010

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 66
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 67