கோபுலுவும் மன்னர்களும்

தூக்கம்பிடிக்காத இரவில் சென்னை தங்கும்விடுதி ஒன்றில் தொலைக்காட்சியில் பழங்காலத்துப் படம் ஒன்றைப்பார்த்துக்கொண்டிருந்தேன். ராஜாராணி படம். அரச சபை. ராஜாவின் சிம்மாசனம் ஆறடி உயரத்தில் பிரம்மாண்டமாக இருக்க கீழே இருபக்கமும் வரிசையாக அமைச்சர் பெருமக்கள்  அமர்ந்திருக்கிறார்கள். ராஜா கவிழ்த்த செம்பு போல  பெரிய உலோகக் கிரீடம் ஒன்றை தலையில் அணிந்திருக்கிறார். ஏராளமான சரிகை வைத்த நீளமான அங்கி. அதற்கு கீழே பைஜாமா போல ஒன்று. இடுப்பில் ஒட்டியாணம் போல ஏதோ ஒன்று. ஏராளமான பளபளா நகைகள்

அமைச்சர்களும் பலவகையான கிரீடங்களை அணிந்து சரிகைச் சட்டைகளை போட்டிருக்கிறார்கள். படைவீரர்களுக்குக் கூட சடையும் கிரீடமும் உண்டு. நடனக்காரி ஜாக்கெட் போட்டு சேலைகட்டி ஆடிக்கொண்டிருக்கிறாள். அப்போது புரட்சிவீரனை இழுத்து வருகிறார்கள். அவன் எல்கேஜி குழந்தை போடக்கூடிய கவுன் போல ஒன்றை அணிந்திருக்கிறான். நிர்வாணமான தொடைகள்.

கோபுலு

மன்னர் எழுந்து ”என்ன தைரியம்? சோழ மன்னனிடமே எதிர்த்துப்பேசுகிறாயா?” என்றபோதுதான் அது சோழன் என்று அறிந்தேன். ஆ என்றலறிவிட்டேன். என்ன தைரியம்! ஆனால் சினிமாக்காரர்களுக்கு தைரியம் எப்போதுமே அதிகம். சிலமாதங்கள் முன்பு வெளிவந்த உளியின் ஓசை என்ற படத்தில் சோழனின் அவையில் பிளாஸ்டிக் ஆசனங்கள் இருந்தன. பிளாஸ்டிக் தோரணங்கள் சிறகடித்தன.

இந்த அரசசபைக்காட்சி நம் கண்களுக்கு மிகமிகப் பழகியது. நம்முடைய பக்தி, வரலாற்றுப் படங்களிலும் இப்போது தொலைக்காட்சிகளிலும் இதை மீண்டும் மீண்டும் காண்கிறோம். மன்னர் என்றாலே பளபளப்பான அங்கி அணிந்த ஒருவர் நம் கண்களுக்குள் வந்துவிடுகிறார். ஆனால் நம் மன்னர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள்?  அவர்களின் சபைகளும் அரண்மனைகளும் எப்படி இருந்தன?

அதற்கு முன்பு இந்த அரசபைக்காட்சி எப்படி உருவானது என்று நாம் பார்க்கலாம். நம் சினிமாக்களில் உள்ள இந்தக் காட்சியானது வணிக நாடகமேடையில் இருந்து வந்தது. தர்பார்சீன் என்பது அக்கால நாடகங்களின் முக்கியமான கவர்ச்சி. குறிப்பாக நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை நாடகங்களில் பிரம்மாண்டமான தர்பார்சீன்கள் இருக்கும்.

வணிகநாடகமேடைக்கு அந்தக் காட்சி பார்ஸி நாடகங்களில் இருந்து கிடைத்தது. பார்ஸி நாடகக்குழுக்கள் அதிகமும் மும்பையை மையமாகக் கொண்ட நாடோடிகள். அவர்களுக்கு நாடக அமைப்புக்கான முன்னுதாரணம் கோவா பகுதியில் இருந்து கிடைத்தது. ஐரோப்பிய ஓபராக்களின் வடிவில் கிறித்தவ கதைகளை இசைநாடகமாகப் போடுவது போர்ச்சுகீஸியர்களால் இந்தியாவுக்குக் கொண்டுவரப்பட்டது. கேரளத்தில் இந்தவகை நாடகம் சவிட்டுநாடகம் என பதினேழாம் நூற்றாண்டுமுதலே பிரபலமாக இருந்தது — தேவாலய வளைவுக்குள்

பார்ஸி நாடகக்குழுக்கள் ஐரோப்பிய அரசபைகளின் பாணியில் இந்திரன் அவையையும் ராமனின் அவையையும் அமைத்தார்கள். அந்த உடைகளை அவர்களுக்கு அளித்தார்கள். பார்ஸி நாடகங்களின் இந்த மூலவேரை நாம் உடனடியாக அடையாளம் காண்பது மாபெரும் திரைச்சீலைகளில்தான். ஐரோப்பாவில் கதவுகள் மற்றும் சாளரங்களுக்கு பெரும் திரைசீலைகளைப் போடுவது வழக்கம். அது போர்ச்சுகல் நாடகங்களில் வந்து பார்ஸிநாடகங்களுக்கு பரவியது. இந்திர சபையில் ஜன்னல்களில் திரைச்சீலைகள் ஆடின. பாண்டவர் அவையில்  மூன்றாளுயர திரைச்சீலைகள் மடிந்து நின்றன.

உண்மையில் சாளரங்களுக்கும் கதவுகளுக்கும் திரையிடும் வழக்கமே இந்தியாவில் இல்லை. கம்பிகள் வைத்த பெரிய ஜன்னல்கள் ஐரோப்பியரின் கண்டுபிடிப்பு. அதிகமான வெளிச்சத்தை உள்ளே விடும் சன்னல்கள் அவர்களுக்குத்தான் தேவை. அவற்றின் ஒளியை தேவைப்படுபோது கட்டுப்படுத்த திரைச்சீலைகளை உருவாக்கினார்கள்.

திருவிதாங்கூரின் பத்மநாபபுரம் அரண்மனையை வைத்துப்பார்க்கும்போது ஒளியை குறைப்பது மட்டுமே நம் அரண்மனைகளின் இயல்பாக இருந்திருக்கிறது. பத்மநாபபுரம் அரண்மனை குளுமையான அரை இருள் கொண்டது. அதற்கு மரத்தில் அலங்காரத்துளைகள் கொண்ட சாளரங்கள் வைக்கப்பட்டன. சங்கப்பாடல்களில் மான்கண் சாளரம் என அவை குறிக்கப்படுகின்றன. அவற்றை நாம் இப்போதும் பத்மநாபபுரம் அரண்மனையில் காணலாம்.

பார்ஸி நாடகங்களின் தர்பார்காட்சிகள் அக்காலத்தில் இந்திய ஓவியத்தின் மையக்கவற்சியாக விளங்கிய ராஜா ரவிவர்மாவை மிகவும் பாதித்தன. ரவிவர்மா வரைந்த புராணக்காட்சிகள் அனைத்துமே பார்ஸி நாடகங்களில் வரும் காட்சிகள் போல இருக்கின்றன. சீதை பெரிய சாக்ஸன் பாணித் தூண்கள் கொண்ட மண்டபத்தில் இருக்கிறாள். மாபெரும் திரைகள் தமயந்திக்கு மேல் மடிந்து நிற்கின்றன.

நம் மன்னர்கள், சபைகள் ஆகியவற்றை ஊகிக்க மிகச்சிறந்த ஆதாரங்கள் நம்மிடம் உள்ளன. நம் கோயில் சிற்பங்கள், சுவரோவியங்கள். அவற்றை நாம் பரிசீலிக்கவில்லை. ராஜா ரவிவர்மா கேரளத்துச் சுவரோவியங்களைப் பார்த்ததற்கான குறைந்தபட்ச பாதிப்புகூட அவர் ஓவியங்களில் இல்லை.இவ்வாறாக நம் மனப்பிம்பங்கள் உருவாகி இன்றும் நீடிக்கின்றன.

தமிழில் ஓவியக்கலை ரசனையை மரபு சார்ந்து ஆழமாக பாதித்தவர்கள் பலரை நாம் பேசுவதே இல்லை. சிவகாசி சுவரோவியங்கள் வழியாக நம் ரசனையை வடிவமைத்த கொண்டைய ராஜூ ஓர் உதாரணம். பிரபல ஊடகங்கள் வழியாக விரிவான பாதிப்பை உருவாக்கிய முக்கியமான ஓவியர்கள் என நான் நினைப்பவர்கள் இருவர், சில்பி மற்றும் கோபுலு.

1968 ல் கோபுலு அவரது கலைத்திறனின் உச்சியில் இருந்தார்.அப்போது அவர் குமுதம் இதழில் வெளிவந்த ‘கலங்கரைத்தெய்வம்’ என்னும் தொடர்நாடகத்துக்கு வரைந்த கோட்டோவியங்கள் தமிழ் ஓவிய உலகில் ஒரு சாதனை என்று சொல்லலாம்.   குமுதம் நாடகப்போட்டியில் பரிசு பெற்ற இந்த நாடகம் ‘துரோணன்’ எழுதியது. ஒரு வாரஇதழின் ஓவியப்பக்கங்களுக்கு முழு ஓவியத்தையே உருவாக்கும் சிரத்தையுடனும் நுட்பங்களுடனும் வரைந்திருந்தார் கோபுலு.

முதன்முறையாக நம் நாடக-சினிமா பாணியை முழுமையாக துறந்தார். கோயில்சிற்பங்கள், ஓவியங்கள் மற்றும் இலக்கியக் குறிப்புகளைச் சார்ந்து மிக விரிவாக ஆராய்ச்சி செய்து கரிகால்சோழனின் அரச சபையையும் அக்கால மன்னர்களையும் மக்களையும் மிக நுணுக்கமாக வரைந்தார்.

அந்தக்கோட்டோவியங்கள் சிறுவனாக இருந்த என் மனதில் உருவாக்கிய உணர்ச்சிக்கொந்தளிப்புகளையும் கனவுகளையும் இப்போது சொல்லிவிடமுடியாது. சமீபத்தில் அந்த ஓவியங்களை கண்டெடுத்து பார்த்துக்கொண்டிருந்தபோது அப்படியே அந்தக் கனவுக்குள் நுழைந்து விட்டேன்.

இப்போது பார்க்கையில் கோபுலுவின் ஓவியங்களின் சிறப்புகள் ஒவ்வொன்றாக மனதை தொடுகின்றன. மனிதர்களை கோயில் சிற்பங்களில் இருந்து இறங்கி வந்தவர்களைப்போல அப்படியே ஆடை ஆபரணங்களுடன் படைத்திருக்கிறார். முகங்கள்கூட சாமுத்ரிகா இலக்கணம் மீறாதவையாக உள்ளன. இந்த ஓவியங்களில் உள்ள ஆதிமந்தியின் முகம் கிருஷ்ணாபுரம் மோகினியின் முகம்போலவே உள்ளது.

மனிதர்களின் தோரணைகளை நாடகக் காட்சியாக அமைக்காமல் நடனக்காட்சியாக அமைத்திருப்பதிலும் கோபுலுவின் சிறப ரசனை வெளிப்படுகிறது. மேலாடையின் சுளிவுகளிலும் அசைவுகளிலும் கோபுலு காட்டும் கற்பனை கிருஷ்ணாபுரம் சிற்பங்களில் நாம் காணச்சாத்தியமானது.

gopulu-2

பின்னணி நுட்பங்களை மிகுந்த தகவலறிவுடன் செதுக்கியிருக்கிறார் கோபுலு. தாழ்வான கூரைகள். வளைவான வாசல்கள். கல்லால் ஆன படிகள். மரத்தால் அல்லது கல்லால் ஆன ஆசனங்களில் சாய்மானம் மிக குறைவாக இருக்கிறது. அதேபோல உடைகள். கரிகால்பெருவளத்தான் கிரீடம் அல்ல தலைப்பாகைதான் அணிந்திருக்கிறான். அவன் முகமும் மீசையும்  கம்பீரமான தெற்கத்திச்சாயலுடன் இருக்கின்றன.

கரிகால் சோழனின் அரச சபைக்காட்சியை அப்படி வரைய எத்தனைதூரம் வரலாற்று பிரக்ஞ்ஞை தேவை. எத்தனை எளிமையான சபை. அதில் குலமூத்தோர் மன்னனுக்கு நிகராக அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கு அரசில் இருக்கும் அதிகாரம் தெரிகிறது. அக்கால மன்னன் சர்வாதிகாரி அல்ல , குலத்தலைவன் மட்டுமே என்பதைக் காட்டுகிறது அது.

கோபுலுவின் இந்த அமரத்துவம் வாய்ந்த ஓவியங்கள் வந்த பின்னரும் கூட நம் இதழ்களில் ‘லதா’ போன்றவர்கள் வரைந்த அபத்தமான ஓவியங்கள்தான் சரித்திர நாவல்களில் அதிகமாக இடம்பெற்றன என்னும்போது இது கோபுலுவின் ரசனை மற்றும் ஞானமே ஒழிய அவ்விதழ்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்றே தெரிகிறது

எத்தனை நுட்பங்களை அளித்திருக்கிறார்! பனையோலையால் ஆன குடை. ஆலவட்ட அலங்காரங்கள். விதவிதமான சால்வைகள். சாதிக்கு ஏற்ற தலையணிகள். பெண்களின் கொண்டைகளையும் குழைகளையும் நம் சிற்பங்களில் பார்க்கும்போது பெரு வியப்பு ஏற்படும் .நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான வகை கொண்டைகள். ஒருபோதும் ஒரு கொண்டை இன்னொருமுறை வருவதில்லை. அந்த நுட்பத்தை கோபுலு திருப்பிக் கொண்டுவந்திருக்கிறார்.

இக்கோட்டோவியங்களில் தூரத்து முகங்களுக்குக் கூட கோபுலு அளித்திருக்கும் கவனமும் கோடுகளின் செறிவும் அவர் பத்திரிகை ஓவியங்களையே எத்தனை தீவிரமாக எடுத்துக்கொண்டு வரைந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது. ஆகவே அவர் மெல்லமெல்ல இதழ்களால் மனச்சோர்வடைந்து விலக முனைந்தது இயல்பே

இதேபோல ஆலவாய் அழகன் என்னும் தொடர்கதைக்கு கோபுலு வரைந்த ஓவியங்களும் மிக முக்கியமானவை. கோபுலு பத்திரிகை வருமானம் போதாமல் விளம்பரங்களுக்குச் சென்றது ஒரு பெரும் இழப்பு.

பண்பாட்டை வரையறைசெய்த கோபுலுவைப்போன்ற கலைஞர்களை புறக்கணிக்கிறோம். நாம் கொண்டாடும் பல நவீன ஓவியர்கள் வெறுமே ஐரோப்பிய அலைகளை நகலெடுப்பவர்கள் என்பதை நாம் அறிவதில்லை.

[மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009 பெப்ருவரி]

கோபுலுவின் கார்ட்டூன்கள்

gopuluC3

கோபுலு இணையதளம்

 

 

 

 

 

முந்தைய கட்டுரைபின்நவீனத்துவம் – விளையாட்டுக்கையேடு
அடுத்த கட்டுரைஅஞ்சலி : கோபுலு