தமிழ் சினிமா: தொழில்நோக்கு தேவை

தமிழ் சினிமாவில் இது ஒரு பொற்காலம். பொற்காலம் என்றால் வருடத்தில் ஐந்து படங்களாவது யதார்த்தமாகவும் ரசிக்கக் கூடியனவாகவும் அமைவது. இதற்கு முக்கியமான காரணம் இன்று ஒரு நல்ல திரைக்கரு அதற்கான முக்கியத்துவத்தைப் பெறுகிறது. தொடர்ச்சியாக இளம் இயக்குநர்கள் உள்ளே வர முடிகிறது. இரண்டுவருடங்களுக்குள் தமிழ் திரைப்படத்தின் அமைப்பிலும் நோக்கிலும் ஏதேனும் ஒரு மாறுதல் நிகழ்ந்து விடுகிறது என்பதை இதற்கான ஆதாரமாகச் சொல்லலாம்.

இதற்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுவது திரையுலகில் பொது முதல் நிறுவனங்கள் வருகை. நேற்றுவரை ஒரு நல்ல கரு படமாவதற்கு முக்கியத்தடையாக இருந்தது அதை தயாரிக்க முனைபவரால் முதலீட்டை புரட்ட முடியாதென்ற நிலைதான். பொது முதல் நிறுவனங்களுக்கு அந்தச் சிக்கல் இல்லை

ஆனால் இப்போதும் நல்ல படங்கள் திரையுலகில் உள்ள பல தடைகளை தாண்டி அப்படைப்பாளியின் தனிப்பட்ட தீவிரம் காரணமாக உருவாக்கப்பட்டவையாகவே உள்ளன. நல்ல படங்கள் உருவாகும் பிற மொழிச் சூழல்களில் உள்ள இன்றியமையாத பலவிதமான அமைப்புகள் நம்மிடையே இல்லை. குறிப்பாக தமிழ் திரையுலகில் எழுத்தாளனுக்கு பங்கே இல்லை.

மலையாள இயக்குநர் ஒருவர் என்னிடம் சொன்னார், இயக்குநர் கதை எழுதுபவராக இருந்தால்கூட தான் இயக்கும் படங்களுக்கு தானே எழுதக்கூடாது என்று. தன் கதையை புறவயமாக நோக்க அவரால் இயலாது. அதன் குறைகள் அவர் கண்ணில் படாது. அனைத்தையும் விடமேலாக அவர் அக்குறைகளை நியாயப்படுத்தும் விதமாகவே திரைக்கதை அமைப்பார். அதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொன்னார் அவர். இயக்குநர் தன் படத்தின் அனைத்து கூறுகளையும் வெளியே நின்று விமரிசனத்துடன் நோக்கி தனக்கு வேண்டியதைக் கொள்ளும் நிலையில் இருக்கவேண்டும் என்றார்

கதை எழுதும் கலை வேறு, காட்சிப்படுத்தும் கலை வேறு. மலையாளத்தின் மாபெரும் இயக்குநர்கள் எவருமே கதை எழுதியவர்கள் அல்ல. அங்குள்ள மாபெரும் திரைக்கதாசிரியர்கள் நல்ல இயக்குநர்களாக மாறவும் இயலவில்லை. ஒளிப்பதிவுபோல, இசைபோல, கலையமைப்பு போல இயக்குநர் வெளியே இருந்து பெற்றுக்கொள்ளும் ஒரு கலைக்கூறாகவே கதையும் இருக்கவேண்டும். இயக்குநருக்கு அதில் முழுமையான புறவய நோக்கு இருக்க வேண்டும். உலகமெங்கும் இந்நிலைதான் உள்ளது.

இயக்குநர் ஒளிப்பதிவு உள்ளிட்ட பிற துறைகள் மேல் எந்த அளவுக்கு ‘கருணையற்ற’ கறார் நோக்கை கொண்டிருக்கிறாரோ அப்படியே அவர் கதையையும் அணுக வேண்டும். அவர் அந்தக்கதையை சொல் வடிவிலிருந்து காட்சிக்கலையாக மாற்ற வேண்டும்.எந்நிலையிலும் ஒரு படம் அதன் இயக்குநரின் ஆக்கமேயாகும்.

தமிழில் ‘கதை, திரைக்கதை, வசனம்’ என்று தலைப்பில் பெயர் வரவேண்டுமென்ற இயக்குநர்களின் ஆசையிலிருந்து தமிழ்ப்படங்களின் இன்றைய நிலை தொடங்குகிறது. அதற்கு பிறமொழி உரிமை போன்ற வணிக காரணங்களும் உள்ளன. இதன் விளைவாக நன்றாக இயக்கப்பட்ட பல படங்கள் அர்த்தமில்லாமல் அலையும் திரைக்கதை கொண்டிருக்கின்றன. சிறந்த கதை கொண்டிருக்கும் பல படங்கள் முதிர்ச்சியில்லாமல் இயக்கப்பட்டிருக்கின்றன.

ஒரு நல்ல கதையை உருவாக்க முடிந்தால் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது என்பது துரதிருஷ்டவசமாக இன்று தமிழில் உள்ள நிலைமை. இயக்கப் பயிற்சி இல்லாதவர் வெறுமே கதையை மட்டும் தமிழில் திரைக்கு அளிக்க வாய்ப்பே இல்லை. ஆகவே பயில்முறை இயக்குநர்கள் உருவாக்கும் கதைகளுக்கு மட்டுமே தமிழ் திரையுலகம் வழி திறந்திருக்கிறது. இதேபோல தமிழில் இசையமைப்பையும் இயக்குநரே செய்ய ஆரம்பித்தால் பாடலின் தரம் என்ன ஆகும்?

உணர்ச்சிகரமாகக் கதை ‘சொல்ல’த்தெரிந்தவர் இயக்க முடியும் என்ற நம்பிக்கை இங்கு உள்ளது. கதைகள் எழுதப்படுவதுகூட இல்லை. சொல்லப்பட்ட கதைக்கு கடைசி வடிவம் இல்லை. அதன் நீளம், உணர்ச்சிகளின் சரிவிகிதம், தொடர்ச்சி எதையும் முன்கூட்டியே தீர்மானிக்க முடியாது. சொல்லும்போது சீரான ஓட்டம் இருக்கும். எழுதிப்பார்த்தால் துண்டுகளாக நிற்கும். ஏன், அதன் செலவைக்கூட கணக்கிட முடியாது.

உலகமெங்கும் திரைப்ப்படத் தயாரிப்பில் உள்ள முறைமை என்பது முதலில் கதையை வாங்குதல், அதன்பின் இயக்குநரை அமர்த்துதல், அதன்பின் உரிய நடிகர்களை தேர்வுசெய்தல் என்பதாகும். இங்கு இது தலைகீழாக உள்ளது. இங்கே இயக்குநர் சொல்லும் கதையை காட்சிகளாக ஆக்க மட்டுமே அபூர்வமாக எழுத்தாளன் அழைக்கப்படுகிறான்.

இன்று திரையுலகுக்குள் வந்திருக்கும் பொதுமுதல் நிறுவனங்கள் உலகமெங்கும் உள்ள திரைவழக்கத்தை அப்படியே பின்பற்றவேண்டும் என்று சொல்லப்போனால் அது அதிக எதிர்பார்ப்பு ஆகிவிடும். ஆனால் குறைந்தது இதையாவது கருத்தில் கொள்ளலாம். ஒரு திரைப்படம் அடிப்படையில் எழுத்தாளனின் கற்பனையால் தொடங்கப்படுவது. எழுத்தில், தாளில் தீர்மானிக்கப்படுவது. இயக்குநரால் முழுமைசெய்யப்படுவது.

அந்த புரிதல் ஏற்பட்டால் தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

[சண்டே இண்டியன், பிப்ரவரி 2008, சினிமா சிறப்பிதழில் வெளியான கட்டுரை]

முந்தைய கட்டுரைதிரையும் சமரசமும்- ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைஉயிர் எழுத்து மாத இதழ்