கவிதைக்கு நம் ஐம்புலன்களில் எதனுடன் நெருக்கமான உறவு இருக்கிறது? பெரும்பாலானவர்கள் காதுடன் என்றே சொல்வார்கள். செவிநுகர்கனிகள் என்று கவிதையைச் சொல்லும் வழக்கமே நம்மிடமுண்டு. ஆனால் கவிதை எங்கும் கண்ணுடன் அதிக நெருக்கம் கொண்டது. பெரும்பாலான நல்ல கவிதைகளை நம்மால் பார்க்க முடியும். காட்சித்தன்மை என்பது கவிதையின் அழகியலில் மையமானது.
ஏன்? காட்சியே முதன்மையானது. ஒரு குழந்தை அறியும் பிரபஞ்சம் காட்சிகளாலானது. வாயும் மூக்கும் அதன் வாழ்க்கைக்கு அவசியமானவை. ருசியாலும் மணத்தாலும்தான் குழந்தை அன்னையை அறிகிறது. அது நடைமுறைஞானம். ஆனால் குழந்தை அறியும் புறவுலகமென்னும் கொண்டாட்டம் வண்ணங்களே. கண்ணாலேயே குழந்தை இப்பிரபஞ்சத்தை நோக்கித் தன்னை விரித்துக்கொள்கிறது.
கவிதை,மொழியின் குழந்தைநிலை. அந்நிலையில் காட்சி ஒரு கொண்டாட்டம். சங்கக்கவிதைகள் எல்லாமே அற்புதமான காட்சித்துளிகள். அதையே எதிர்மறையாகச் சொன்ன காலமும் உண்டு. புதுமைப்பித்தன் அவறறைப் புகைப்படக்கவிதைகள் என்று சொன்னார். என்ன ஆச்சரியம் என்றால் அதையே பேராசிரியர் ஜேசுதாசனும் சொன்னார். அவர்களுக்கெல்லாம் கம்பன் ஆதர்சம் என்னும் போது அந்த விமர்சனத்தைப் புரிந்துகொள்ளமுடிகிறது. அவர்கள் கவிதையை உயர்ந்த கற்பனையாக, முதிர்ந்த விழுமியமாக, ஆழ்ந்த தரிசனமாகப் பார்த்தார்கள்.
நேர் மாறாக, சங்கக்கவிதை குழந்தைத்தனமானது. குழந்தையும் ஞானியும் சந்திக்கும் புள்ளியில் நிகழ்வது. ஒரு குழந்தையாக நாம் ஆகாவிட்டால் நம்மால் சங்கப்பாடல்களை உள்வாங்கிக்கொள்ள முடியாது. ஆகவே நம்முடைய ஆராய்ச்சி மனதை குளிப்பதற்கு முன் உடைகளை கழற்றிப் போடுவது போலத் தூக்கி வீசிவிட்டு சங்கப்பாடல் என்ற பேராற்றில் இறங்கவேண்டும்.
சங்கப்பாடல்களில் உள்ள காட்சித்தன்மை பலசமயம் நிறங்களுடன் சம்பந்தப்பட்டது. வண்ணங்களின் வெளியாக இயற்கையை சங்கப்பாடல் பார்க்கிறது. ஒருமுறை சேலத்தில் ஆதிமூலம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் அருவ ஓவியங்களை வரைந்துகொண்டிருந்த காலகட்டம் அது. அருவ ஓவியங்களை ஏன் வரையவேண்டும், அதன் நோக்கம் என்ன என்று கேட்டேன்.
அருவப்படுத்துதல் என்றால் என்ன என்று கேட்டார். தாய் என்ற கண்முன் உள்ள ஆளுமையைத் தாய்மை என்று ஆக்கினால் அது அருவப்படுத்தல். பிரபஞ்சத்தைப் பிரபஞ்ச சாரமான ஒரு இருப்பாக உருவகம் செய்தால் அது அருவப்படுத்தல். அருவப்படுத்தல் என்பது உருவத்தின் சாராம்சம் நோக்கிச் செல்லுதல்.
இயற்கை என்ற காட்சியனுபவத்தையே கடைசியில் வண்ணங்களின் கலவையாக சாராம்சப்படுத்த முடியும். தண்ணீரில் ஒளி அலையடித்தல் என்ற காட்சியனுபவத்தை நீலமும் வெண்மையும் கொள்ளும் முயக்கமாக ஆக்கிவிடமுடியும். ஒரு மாபெரும் நகரத்தை, ஒரு வனத்தை சில வண்ணத்தீற்றல்களாகக் குறுக்கி விடமுடியும். அதைத்தான் அருவ ஓவியங்களில் செய்கிறேன் என்றார்.
அப்படியானால் வடிவங்கள் என்றேன்? கண்ணைப்பொறுத்தவரை வடிவமென்பதே கூட நிழலும் ஒளியும் கொள்ளும் வேறுபாடுதான். அதுவும் வண்ணத்தீற்றல்தான் என்றார்.
ஸ்ரீ அன்னை பூக்களைப்பற்றி சொல்கிறார். பூக்கள் என்றால் என்ன? வண்ணங்கள் அல்லவா? வண்ணங்கள் தங்களை உருவங்களாக்க விரும்பி மலர்களாயின என்று சொல்லலாம் அல்லவா?
சங்கக் கவிஞனின் மனம் உணர்வுகளையும் இயற்கையையும் ஒன்றாக்கியது. அந்த சந்திப்புப்புள்ளியின் நிறத்தை அவன் கண் கண்டடைந்தது. அகக்கண் கண்டதா? இல்லை புறக்கண் கண்டதா? அகக்கண்ணுக்குப் புறக்கண்தான் வாசல். புறக்கண்ணுக்கு அகக்கண்தான் ஒளி.
செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த
செங் கோல் அம்பின், செங் கோட்டு யானை,
கழல் தொடி, சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே.
– திப்புத்தோளார்
காந்தள் மலர் எங்களூரில் கார்த்திகைப்பூ என அழைக்கப்படுகிறது. கார்த்திகை சிவனின் மாதம். பெரும்பாலும் சிவன் கோயிலில் கார்த்திகை மலர் இருக்கும். முதல் கார்த்திகைமலர் சிவனுக்கு சார்த்தப்படும் நாள் முக்கியமானது. அன்று தனிப்பூஜை உண்டு.
காந்தள், மலர்வடிவமாக வந்த நெருப்பு. நெருப்புவண்ணனுக்கு மக்கள் கொளுத்தி வைக்கும் தீபவரிசைகளுக்கு நிகராகக் காடு காந்தள் மலரைக் கொளுத்தி வைக்கிறது போல.
எனக்குப் பிடித்தமான சினிமாப்பாடல் வரிகளில் ஒன்று ’எல்லா சிவப்பும் உந்தன் கோபம்’. என்னைப்பொறுத்தவரை மிக ஆன்மீகமான வரி அது. எல்லா சிவப்பும் அவன் கோபம் என்றால் எல்லா வெண்மையும் அவன் தியானமா?
காந்தள் அவன் கோபம். காந்தள் அவன் உக்கிரம். செந்நிறம் ரஜோகுணத்திற்குரியது. ரஜோகுணமே மலராகிவந்தது காந்தள்.
சங்கப்பாடலில் ஒருவன் தன் காதலிக்குக் காந்தளைக் கொடுத்துக் காதலைத் தெரிவிக்கிறான்.அதற்குக் குருதிப்பூ என்றும் பெயருண்டு. ஆறு இதழ்களுடன் எரியும் நெருப்பு போல விரிந்த மலர். ஆறாகப் பிளந்த இதயம் போன்றது. தன் நெஞ்சையே பிய்த்து அவள் முன் வைப்பது போல அந்த மலரை அவள்முன் வைக்கிறான்.
அவளுடைய பதில் அக்கவிதை. ’செங்குருதி பொங்கும் சிவந்த போர்க்களத்தில் அசுரரைக் கொன்று குவித்து செந்நிற வேலும் செந்நிற அம்புமாக செங்குருதி வழியும் தந்தம் கொண்ட யானை மீது திரும்பி வரும் செந்நிறக்கழல் கொண்ட குமரன் ஆளும் எங்கள் குன்றமும் செங்காந்தளால் நிறைந்திருக்கிறது’ என்கிறாள்
பல கோணங்களில் நுண்பொருள் தந்து விரியும் பாடல் இது. இந்த மலரைப்போன்ற ஏராளமான மலர்களால் ஆனது எனது குன்றம், எனவே இந்த மலர் எனக்கொரு பொருட்டே அல்ல என்கிறாளா? நீ அளித்த இந்த மலரில் உள்ள குருதிமணம் எனக்குத் தெரிகிறது என்கிறாளா? என் குலத்து வேலுக்கு பதில் சொல்லி வீரனாக வா என்கிறாளா? வள்ளியைக் கவர்ந்த குமரன் போல என்னைக் கவர்ந்து செல் என்கிறாளா? உன் காதலை இந்த மலையெங்கும் நான் காண்கிறேன் என்கிறாளா? ஆறு இதழ் கொண்ட மலர் போல ஆறு பொருள் கொண்டு விரிகிறது கவிதை.
ஆனால் இக்கவிதையின் அழகென்பது அதன் நிறம்தான். செந்தழல் விட்டு எரிந்துகொண்டிருக்கிறது இக்கவிதை. மத்தியானத்தில் காந்தளைப் பார்க்கக்கூடாது என்பார்கள் எங்களூரில். கண்வலி வரும். அதனாலேயே அதற்கு கண்ணுவலிப்பூ என்ற பேரும் உண்டு. காந்தள் பூத்த காடு கண்களைக் குருடாக்கிவிடும் என்று தோன்றுகிறது. உக்கிரமே நிறமாக ஆன சிவப்பு. எல்லா சிவப்பும் அவன் கோபம்.
இன்னொரு கவிதையின் வண்ணத்தேர்வு என்னை இன்னும் பிரமிக்கச் செய்திருக்கிறது. தலைவி காத்திருக்கிறாள். சூழ்ந்திருக்கிறது இருட்டு. கருமை. கருமையின் விவரணைகளாலேயே ஆன ஒரு கவிதை.
திரிமருப்பு எருமை இருள் நிற மைஆன்
வருமிடறு யாத்த பகுவாய்த் தெண் மணி,
புலம்பு கொள் யாமத்து, இயங்குதொறு அசைக்கும்
இது பொழுது ஆகவும் வாரார்கொல்லோ-
மழை கழூஉ மறந்த மா இருந் துறுகல்
துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும்
இரும்பல் குன்றம் போகி,
திருந்து இறைப் பணைத் தோள் உள்ளாதோரே?
– மதுரை மருதன் இளநாகனார்
இருளின் நிறமுள்ள கொம்பு சுருண்ட எருமையின் தொங்கும் கழுத்தில் கட்டப்பட்ட பிளவுபட்ட வாய் கொண்ட மணி அதன் அசைவுக்கெல்லாம் ஒலிக்கும் இந்த இரவிலும் அவர் வரவில்லை. மழை பொழிவதை மறந்த மாபெரும் உருளைப்பாறை உச்சிகள் மண்மூடிய யானைபோல் தோன்றும் மலைகளைத் தாண்டிச் சென்ற பின்பு என் அழகிய வளைந்த தோள்களை நினைக்கவும் மறந்தாரோ?
இருளின் கருமையின் இரு படிமங்களால் ஆன கவிதை. உச்சிமலையின் கரும்பாறை. மண்மூடிய யானைபோன்ற அதன் உருண்ட வடிவம். உச்சிமலை மௌனத்தாலானது. மௌன வடிவமாக ஓங்கி சூழ்ந்து நிற்பது. பெரும் பொட்டல் நிலத்தில் செல்லும்போது நம்மால் உச்சிமலையை ஏறிட்டுப்பார்க்கமுடியாது. அதன் அந்த அசைவின்மை ஒலியின்மை காலமின்மை நம் ஆழ்த்தை உலுக்கிவிடும்.
ஆனால் அவளருகே அசையுந்தோறும் ஒலித்துக்கொண்டிருக்கிறது ஒரு கருமை. இருள் வடிவமான எருமை. இருளின் ஒலியல்லவா அந்த மணியோசை?
இருட்டின் அழகு கொண்ட கவிதை இது. இருட்டைக்கொண்டு வடிக்கப்பட்ட ஒரு சிற்பம். பாறையின் சாம்பல் நிறம், யானையின் கருமை நிறம், எருமையின் கன்னங்கரிய நிறம். அதை விட அந்த மணியோசையின் அடர்கரிய நிறம்!
சங்கப்பாடலகளை நம் பண்பாட்டின் தொடக்கநிலைகளாகக் கருதவேண்டும். நம் பண்பாட்டின் சாரமாக நமக்குள் உறங்கும் பற்பல தொல்படிமங்கள் [ஆர்கிடைப்] பின்னர் உருவம் கொண்டவை. ஆனால் அந்தத் தொல்படிமங்களை உருவாக்கிய தொடக்கமாக அமைந்த காட்சிப்படிமங்களை, மனநிலைகளை நாம் சங்க இலக்கியத்திலே காணலாம்.
நம் புராண மரபில் யானையும் எருமையும் இருட்டின் வடிவங்கள். நம் சிவாலயங்களில் கருவறைச்சுவரில் மேற்கே கஜசம்ஹார மூர்த்தியைக் காணலாம். கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிய வடிவில். யானையின் தோலைக் கிழித்துப்போர்த்தி நடனமிட்டு நிற்கும் வடிவில். நம்முடைய எல்லா சிற்பங்களும் தாந்த்ரீக மரபில் வேர் உள்ளவை. அவை அனைத்துமே யோக தத்துவ குறியீடுகள். அந்தச் சிற்பத்தைக் காணும் எவரும் அந்த யானை இருள் என்பதை உணர முடியும்.
யோகி அறியும் இருள் அது. பிரபஞ்ச இருள். அதை உரித்துப் போர்த்திக்கொண்டு நின்றாடுகிறது சிவம். இருளில் கஜாசுரனின் தந்தங்கள் இரு நிலவு. யோக மரபு அந்த நிலவை யோகியின் நெற்றியில் உதிக்கும் பிறை என உருவகிக்கும். கிழக்கிலிருந்து மேற்குநோக்கி நிற்கும் கஜசம்ஹார மூர்த்தியின் சிலை சூரியனின் யோக உருவகம் கூட. யோகத்தில் உதிக்கும் ஆதித்யன்.
எமனின் வாகனமாக எருமை சொல்லப்பட்டுள்ளது. எமன் காலம். காலத்தின் பாசம் மரணம். மரணத்தின் வாகனமாக இருள். காலத்தின் முடிவிலா இருள். எருமை இருளின் படிமமாக நம் மரபில் உள்ளது. அந்த இரு படிமங்களுமே ஒரே கவிதையில் அமைந்துள்ளன இங்கே.
[மேலும்]