சங்க இலக்கியப் பரப்பில் செல்லும் ஒருவன் மொழியை இயற்கையின் நுண்வடிவமாக தரிசிக்கவேண்டும். இயற்கையின் இன்னொரு வடிவமே மானுட மனம் என்பது. மனம் இயற்கையை நடிக்கிறது. இயற்கை மனதை நடிக்கிறது. ஒன்றையொன்று பிரதிபலிக்கும் இரு பெரும் ஆடிகள் அவை. மிக நுட்பமான இந்த விஷயம்தான் சங்கப்பாடல்களை மகத்தான கவிதைகளாக ஆக்குகிறது.
என் மனம் என நான் நினைக்கிறேனே அது என்ன? எனக்குள் ஓடும் படிமங்களும் எண்ணங்களும் கலந்த பிரவாகம் அது. அந்தப் பிரவாகத்தின் அடியில் நான் எப்போதாவது உணரும் ஆழம் அது. அது எதனாலானது? அந்த பிம்பங்கள் முழுக்க என் புலன்களால் வெளியுலகில் இருந்து அள்ளி எனக்குள் நிறைத்துக்கொண்டிருப்பவை. வெளியுலகுக்கு நான் கொடுக்கும் எதிர்வினைகளே என் எண்ணங்கள். அப்படியென்றால் என் அகம் என்பது புறத்தின் பிரதிபலிப்புதானா?
[வரையாடு]
அப்படியென்றால் புறம் என்பது என்ன? இதோ நான் காணும் இந்தக்காட்சி என்னுடைய உணர்வுகளையும் சேர்த்துப் பின்னப்பட்டது அல்லவா? நான் சஞ்சலத்தில் இருக்கையில் இந்தத் திரைச்சீலை கொந்தளிப்பதைக் காண்கிறேன். நான் குதூகலத்தில் இருக்கையில் இது நடனமிடுவதைக் காண்கிறேன். நான் அஞ்சும்போது இது துள்ளுவதைக் காண்கிறேன். அப்படியென்றால் இந்தத் திரைச்சீலையை என்னுடைய அகம் கலக்காமல் என்னால் பார்க்கவே முடியாதென்று அர்த்தம். நான் காணும் இந்த புறக்காட்சி என் உணர்வுகளால் என்னுடைய புலன்களில் நான் வரைந்தெடுத்துக்கொள்வது மட்டுமே. ஆம் என்னைப்பொறுத்தவரை புறம் என்பது, நான் எதை அறிகிறேனோ அதுதான் இல்லையா? என் அகத்தைத்தான் இந்தப் புறம் பிரதிபலித்து எனக்குக் காட்டுகிறது இல்லையா?
ஆம் புறம் அகத்தால் ஆனது. அகம் புறத்தால் ஆனது. இரு பெரும் ஆடிகள். இந்த விந்தையை உணர்ந்தவனுக்கே சங்கப்பாடல்கள் கவிதையனுபவமாக ஆகும். சங்கப்பாடல்களில் வரும் இயற்கைச்சித்திரங்கள் வெறும் புறவருணனைகள் அல்ல என அவன் அறிவான். அவை அகத்தின் புற வெளிப்பாடுகள். அக்கவிதையின் அகத்துள் கொந்தளிக்கும் உருகும் நெகிழும் உணர்வுகளைத்தான் வெளியே உள்ள இயற்கை நடித்துக்காட்டுகிறது.
சங்கப்பாடல் எப்போதும் ஒரு நாடகக்காட்சி. சொல்லப்போனால் ஒரு நாடகத்தின் சின்னஞ்சிறு துளியே ஒரு சங்கப்பாடல். அதுவும் உச்சகட்டம் மட்டும். அந்த நாடகக்காட்சியில் ஒரு நாயகன் அல்லது நாயகியின் அகத்தின் உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவை வெளியே உள்ள இயற்கையில் பிரதிபலிக்கின்றன. அவ்வாறு பிரதிபலிக்கும்போது அது பிரம்மாண்டமாக விரிந்து விடுகிறது. இயற்கை அந்த உள்ளத்தைச் சூழ்ந்திருக்கிறது, மாபெரும் குழியாடி போல. அந்தக் குழியாடியில் அது மிகப்பிரம்மாண்டமாகப் பிரதிபலிக்கிறது. அந்தத் தனிமனித அகத்தின் உணர்வு இயற்கையில் பரவி ஒரு இயற்கைப் பெருநிகழவாக மாறிவிடுகிறது.
அவ்வாறு ஒரு மனித மன உணர்வை மானுட உணர்வாக ஆக்கும்பொருட்டே அந்த உணர்வுகளை அடைபவர்கள் தனித்த அடையாளமில்லாதவர்களாக இருக்கிறார்கள். தலைவன் தலைவி என்ற எளிய சுட்டுகள் மட்டுமே கொண்டவர்களாக இருக்கிறார்கள். சங்கப்பாடல்கள் பாடுவது எந்த ஒரு மனிதருடைய உறவையும் பிரிவையும் அல்ல. அவை உறவு-பிரிவு என்ற மானுடநிகழ்வுகளைப் பாடுகின்றன. அந்த மானுட நிகழ்வுகளை இயற்கையின் நிகழ்வுகளாக மாற்றிக்காட்டுகின்றன.
இவ்வாறு ஒரு மனித உணர்வு மானுட உணர்வாக விரியும் அந்த நொடியை நம் கற்பனையின் நுண்ணிய விரல் ஒன்றால் தொட்டு விடுவதையே நாம் சங்கப்பாடல் அளிக்கும் கவிதையனுபவம் என்கிறோம். அது நிகழாதபோது சங்கப்பாடல் வெறும் வரிகளாக , விவரணைகளாக எஞ்சுகிறது.
புரி மட மரையான் கருநரை நல் ஏறு
தீம் புளி நெல்லி மாந்தி, அயலது
தேம் பாய் மா மலர் நடுங்க வெய்து உயிர்த்து,
ஓங்கு மலைப் பைஞ் சுனை பருகும் நாடன்
நம்மை விட்டு அமையுமோ மற்றே-கைம்மிக
வட புல வாடைக்கு அழி மழை
தென் புலம் படரும் தண் பனி நாளே?
– மதுரைக் கண்டராதித்தன்
ஓர் அழகிய கவிதை. மதுரைக் கண்டராதித்தன் எழுதியது. சுருண்ட கொம்புகள் கொண்ட, நரைத்த கருமை கொண்ட ஆண் வரையாடு புளிப்பும் இனிப்பும் கொண்ட நெல்லிக்காயைத் தின்று அருகே நின்ற தேன்நிறைந்த மலர்மரம் நடுங்க அதில் முட்டி மூச்சுவிட்டு ஓங்கிய மலையின் பசுமையான ஊற்றில் நீர் பருகும் மலையைச் சேர்ந்த தலைவன் நம்மைக் கைவிடுவானா என்ன? வடதிசை வாடைக்காற்றில் ஏறிக் குளிர்ந்த மழை தென்னகம் நோக்கி வரும் இந்தக் கூதிர்காலமல்லவா இது?
இரு இயற்கைச்சித்திரங்கள். அவை இரு மனநிலைகளைப் பிரதிபலிக்கையில் இரு படிமங்களாக ஆகின்றன. ஒன்று, தலைவனின் காதலைச் சுட்டுகிறது. காதலின் அவஸ்தையை அறிந்த எவரும் மெல்லிய புன்னகையுடன் மட்டுமே அந்த வரையாட்டின் நிலையை உணர முடியும். முதலில் இனிப்பும் புளிப்பும் நிறைந்த நெல்லிக்காய். புளிப்பதனால் தின்னவும் முடியாமல் இனிப்பதனால் விடவும் முடியாமல் தின்று தின்று நிறைதல். பிறகு ஒரு இன்னதென்றிலாத நிலைகொள்ளாமை. சப்புக் கொட்டியபடி மரத்தை முட்டி முட்டித் தவித்தல். மரம் உதிர்த்த தேன்மலர்களை உடம்பெங்கும் சூடியபடி சென்று காட்டுச்சுனை நீரைக்குடிக்கையில் நாவில் தொடங்கி உடலெங்கும் நிறையும் இனிமை. காதலென்றால் வேறென்ன?
அவளுடைய காத்திருப்பின் படிமமாக வருகிறது மழை. வடதிசையே குளிர்ந்து கனத்து இருண்டு தென்னகம் நோக்கி வருகிறது. மழைகாத்து நிற்கும் நிலத்தை நான் காண்கிறேன். தவளைகளின் ஒலியில் நிலம் சிலிர்த்துக்கொள்கிறது. இலைகள் அசையாமல் நின்று செவிகூர்கிறது. மெல்லிய காற்றில் புல்லரித்துக்கொள்கிறது. வந்துகொண்டிருக்கிறது குளிர்மழை.
காதலின் இரு முகங்கள். அவை இயற்கையின் பெரும்நாடகமாகவே ஆக்கப்பட்டுவிட்டன இக்கவிதையில். அதுவே சங்கப்பாடலின் அழகியல். நம் முன்னோர் இதை உள்ளுறை உவமம் என்றார்கள். உவமை உள்ளே உறைந்திருக்கிறது. சொல்லப்படாத உவமை. உவமிக்கப்படாத உவமை. அன்ன என்ற சொல் சங்கப்பாடல்களில் மிகமிக முக்கியமானது.
உவமை என்பதைப்பற்றிச் சிந்தித்திருக்கிறோமா? உலகமெங்கும் கவிதையில் உவமையே முக்கியமான அணியாக உள்ளது. நவீனக்கவிதைகூட உவமையையே அதன் வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டுள்ளது. அது உவமையைப் படிமமாக ஆக்கி முன் வைக்கிறது அவ்வளவுதான். ஆயிரக்கணக்கான வருடங்களாகக் கவிதை உவமைகளைக் கொட்டிக்கொண்டே இருந்தபின்னும் இன்னும் திடுக்கிடச்செய்யும் சிலிர்க்கச்செய்யும் உவமைகள் வந்தபடியே உள்ளன.
இவ்வருடம் நோபல்பரிசு பெற்ற டிரான்ஸ்ட்ரூமர் அவர்களின் கவிதையில் வயலின் பெட்டிக்குள் இருக்கும் வயலின் போலக் கவிஞன் அவன் நிழலுக்குள் நடந்து சென்றான் என்ற உவமையை சந்தித்த கணம் என் காலமே நின்று போய்விட்டது போல உணர்ந்தேன். சொல்லப்போனால் கவிதை என்பதே உவமித்தல்தான். ஏன்?
வெளியே நிறைந்து பரந்து கிடக்கும் இந்த இயற்கை என் அகம்தான். இதோ வெளியே விரிந்துள்ள ஒவ்வொன்றும் என் அகத்தில் உள்ள ஒன்றின் உவமை. அப்படிப் பார்த்தால் வெளியுலகமென்பதே பிரம்மாண்டமான உவமைகளின் தொகுதி மட்டுமே. ஒரு மனம் இயற்கையைச் சந்திக்கும்போதே உவமைகளை உருவாக்கிக்கொள்ள ஆரம்பித்துவிடுகிறது. நாம் நம் அன்றாட வாழ்க்கையில் உவமைகள் இல்லாமல் பேசிக்கொள்வதே இல்லை. ஒருநாளில் எத்தனை உவமைகளைப் பயன்படுத்துகிறோம். ‘படிப்படியா முன்னேறணும்’ என்கிறோம். ‘நிக்க நெழலில்ல வாழ்க்கையிலே’ என்கிறோம்.
மொழியின் இளம்பருவத்தில் உவமைகளே மொழியாக இருக்கின்றன. எங்களூர் காணிக்காரர்கள் ஆட்டின் இலை என்பார்கள் அதன் காதை. மரத்தின் கொம்பு என்றுதான் நாம் சொல்கிறோம்.மீனின் முள் என்கிறோம். குருவியின் மூக்கு என்கிறோம். மொழி இயல்பாக உவமைகளாகவே நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்திலேயே இதெல்லாம் உருவாகி விட்டன. நாம் வாசிப்பது அந்த நாற்றங்கால்பருவத்தில் உருவான கவிதைகளை.
மிக இயல்பாக உவமைகள் அமையும் அழகையே நாம் சங்கப்பாடல்களில் காண்கிறோம்.நாற்றங்காலில் நாற்று முளைவிட்டிருக்கும் அழகை கவனித்திருக்கிறீர்களா? குட்டிப்பூனையின் முடிபோல. தமிழை நாம் அந்தக் குழந்தையழகுடன் காண்பது நற்றிணையிலும் குறுந்தொகையிலும்தான்.
உவமித்தலின் முடிவில்லாத குழந்தைக் குதூகலத்தை ரசிப்பதற்காகவே நான் சங்கப்பாடல்களுக்குள் செல்கிறேன். ‘பைங்கால் கொக்கின் புன் புறத்தன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின’ என ஓரம்போகியாரின் கவிதையை வாசிக்கும்போது அற்புதமான ஒரு மலர்ச்சி என் மனதில் எழுகிறது. ஒரே கணத்தில் அக்காட்சியை ரசித்தபின் அதன் நுட்பங்களுக்குள் செல்கிறேன். பசிய கால்கொண்ட கொக்கின் சூம்பிய பின்புறம் போல குளத்தின் ஆம்பல்கள் கூம்பின என்றவரியை சொல்சொல்லாக மீண்டும் வாசிக்கிறேன்.
பைங்கால் கொக்கின் புன் புறத்தன்ன
குண்டு நீர் ஆம்பலும் கூம்பின; இனியே
வந்தன்று, வாழியோ, மாலை!
ஒரு தான் அன்றே; கங்குலும் உடைத்தே!
– ஓரம்போகியார்
பைங்கால் கொக்கு என்னும்போது ஒற்றைக்காலில் நிற்கும் கொக்கின் காலை ஆம்பலின் தண்டுடன் இணைக்கத்தோன்றுகிறது. புன்புறம் என்ற சொல்லாட்சியில் புன்னகை புரியாமலிருக்கமுடியாது. கொக்கின் பின்புறம் எந்தக்குழந்தைக்கும் ஆச்சரியமூட்டுவது. பிற பறவைகளைப்போலன்றி தூவலோ வாலோ இல்லாமல் சட்டென்று சூம்பியிருக்கும். சங்கு போல. கொக்கின் பின்பக்கம் நீரைநோக்கிக் குனிந்திருப்பதுபோல ஆம்பல் கூம்பித் தலைகுனித்திருப்பதைச் சுட்டுகிறார் கவிஞர்.
அந்தக்காட்சி அளிக்கும் தூய இன்பத்தாலேயே அக்கவிதையை அறியமுடியும். அதன் உள்ளுறைப்பொருளுக்குச் செல்லுவது அடுத்தபடி. கூம்பிய நெஞ்சம். தலைகவிழ்ந்து தனித்திருக்கும் ஓர் இரவு. இல்லை அலைகளில் தன் முகம் கண்டு குனிந்திருக்கும் நிலையா?
[மேலும்]