வாழும் தமிழ்

lll

 

க்க்காங்….ரீங்ங்ங்ங்ங்…..பேரன்பிற்கும் … ஓக்கே…. பேரன்பிற்கும், வணக்கத்திற்குமுரிய மீனாட்சிபுரம் நகர் வாழ் எனதருமை பொதுமக்களே, இங்கே இன்றைய தினம் இந்த அருமையான மாலை நேரத்திலே எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் அன்பான ஆணையினை ஏற்று இன்றைய தினம் இங்கே இந்த அருமையான மாலை நேரத்திலே அருமையானதொரு பொதுக்கூட்டத்தினைக் கூட்டி எங்கள் அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கொடியினை ஏற்றும் பொருட்டு இன்றைய தினம் இங்கே கூடியுள்ள அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் அருமைத்தொண்டர்களே..[கைத்தட்டல்] மற்றும் இந்த மாலை நேர பொதுக்கூட்டத்தினை இன்றைய தினம் மிகவும் சிறப்பாக தலைமை தாங்கி எங்களையெல்லாம் வழிநடத்திக் கொண்டிருக்கும் நகர தீத்தீமுக பொதுச்செயலாளரும் எங்களுக்கெல்லாம் அரசியல் கற்பித்து மிகச்சிறப்பாக நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற எண்ணத்தோடு இன்றையதினம் இங்கே இந்த மாலை நேரத்திலே இன்றையதினம் இங்கு கூடி சிறப்பானதொரு பொதுக்கூட்டத்தை தலைமை தாங்கி மிகவும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கும் ஆருயிர் அண்ணன் மாவீரன் அஞ்சாத சிங்கம் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதையெல்லாம் எதிர்த்து நின்று வாகை சூடுகின்ற சிறப்பான தலைவராக இருந்து இன்றையதினம் இந்த மாலை நேரத்திலே அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கொடியினை ஏற்றி வைத்து அருமையானதொரு தலைமையுரையினை மிகவும் சிறப்பாக ஆற்றி விட்டு அமர்ந்திருக்கின்ற நகர தீத்தீமுக பொதுச்செயலாளர் ஆருயிர் அண்ணன் சைக்கிள்கடை கோலப்பன் அவர்களே…

மற்றும் இங்கே இன்றையதினம் அருமையானதொரு சிறப்புரையினை ஆற்ற வந்துள்ள தலைமைக் கழகப்பேச்சாளரும் கழகத்தின் கூர்வேலும் கேடயமும் ஆக திகழக்கூடிய அண்ணன் சீறும் சிங்கம், பாய்ந்து வரும் புலி, சிறைக்கஞ்சா சிங்கம் எத்தனை வழக்குகள் வந்தாலும் அவற்றையெல்லாம் வென்று புறங்கண்டு அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கருத்துக்களை இன்றையதினம் மிகவும் சிறப்பாக மக்கள் மத்தியிலே கொண்டு,சென்று இன்றையதினம் மிகவும் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆருயிர் அண்ணன் தருவை தெய்வ,சிகாமணி அவர்களே…

மற்றும் அருமையானதொரு முன்னிலையுரையினை ஆற்றிவிட்டு அமர்ந்திருக்கின்ற நகர தீத்தீமுக பொருளாளரும் எங்களையெல்லாம் இன்றையதினம் அரசியலிலே நல்லதொரு வழியைக் காட்டி இன்றையதினம் மக்களுக்கு நல்லது செய்து அவர்கள் துயரங்களுக்கு தீர்வுகண்டு அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்கள் காட்டிய வழியினிலே இன்றையதினம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற ஆருயிர் அண்ணன் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் எங்களுக்கு மேல்நிலைத்தொட்டி இன்றையதினம் இந்த அருமையான மாலை நேரத்திலே இங்கு கூடியிருக்கின்ற திரளாகக் கூடியிருக்கின்ற மக்கள் மத்தியிலே அருமையானதொரு முன்னிலையுரையினை மிகவும் சிறப்பாக அண்ணார் அவர்கள் வழங்கிவிட்டு அமர்ந்திருக்கின்ற இந்த வேளையிலே அண்ணாரைப்பற்றி ஒன்றைச் சொல்ல ஆசைப்படுகின்றேன். அண்ணார் அவர்கள் எதிரிகளைக்கண்டு அஞ்சுபவரல்ல. எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நின்று அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கொள்கை வழிநின்று இன்றையதினம் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டு வருகின்ற அண்ணார் இடலாக்குடி பாஷா அவர்களே..

மற்றும் மிகவும் சிறப்பாக இங்கே சிறப்பானதொரு பேருரையினை நிகழ்த்தவிருக்கின்ற எங்களுக்கெல்லாம் காவல் தெய்வமாக விளங்குகின்ற மிகவும் சிறப்பாக இன்றையதினம் இந்த நாகர்கோயில் நகரத்திலே அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கொடியினை ஏந்தி இந்த ஏழைமக்களுக்கு சிறப்பானதொரு வாழ்க்கையை அளிக்கும் பொருட்டு மிகவும் சிறப்பாக இன்றையதினம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அருமை அண்ணன் நகர கழக இலக்கிய அணிச்செயலாளர் மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்று மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொல்லியதுபோல நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணியிருந்தால் என்று புரட்சித்தலைவர் எம்ஜியார் [கைதட்டல்] பாடியதுபோல இன்றைக்கு மிகவும் சிறப்பான செயல்பட்டுக் கோண்டிருக்கின்ற அருமை அண்ணன் கறிக்கடை கோவிந்தன் அவர்களே….

இன்றையதினம் இந்த அருமையான மாலைநேரத்திலே மிகவும் சிறப்பானதொரு வரவேற்புரையினை ஆற்றிவிட்டு அமர்ந்திருக்கின்ற ஆருயிர் தம்பி அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் போர்வாள் எத்தனை இடிகள் வந்தாலும் கலங்காமல் இன்றையதினம் முன்னால் நின்று அருமைத்தலைவர் ஆருயிர் அண்ணன் பொறுப்பு எம்ஜியார் [கைதட்டல்] அவர்களின் கொடியினை ஏந்தி அஞ்சாமல் முன்னால் சென்று மாற்றார் புறமுதுகிட்டு ஓட வாகை சூடி இன்றைய தினம் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அருமைத்தம்பி ஜெராக்ஸ் செல்லப்பன் அவர்களே…..

மேலும்…..

 

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Feb 5, 2008

முந்தைய கட்டுரைவெண்கடல் பற்றி ஒரு விமர்சனம்
அடுத்த கட்டுரைவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 59