தமிழ்க் கவிமரபுக்கு மலர்களுடன் உள்ள உறவு பிரமிக்கச் செய்கிறது. ஐந்து திணைகளுக்கும் ஐந்து மலர்கள். பூத்துப்பூத்துச் சொரியும் முல்லை காதலுடன் காத்திருத்தலுக்கு. அதன் வாசனை கற்பனைகளைத் தூண்டுவது. நீர்த்துளி சொட்டும் நெய்தல் மலர் பிரிந்து இரங்கலுக்கு. வாசனை குறைந்த மலர், நறுமணத்தைத் தன் இதழ்களை விட்டு வெளியே விடாத மலர்! நீர்வெளியில் உதிர்ந்து பரவும் மருதமலர் ஊடலுக்கு. அதன் வாசனைக்கு விந்துவின் சாயலுண்டு.
[முல்லை]
[நெய்தல்/கருங்குவளை/நீல அல்லி]
[மருதமலர்]
[கள்ளிப்பாலை]
[குறிஞ்சி]
ஆனால் தன்னந்தனியாக நிற்கும் பாலையை, அதன் மனம் பேதலிக்கச் செய்யும் வாசனையைப் பிரிவுக்கு அடையாளமாக்கியவன் மகாகவிஞன். அதைவிட மணமோ அழகோ இல்லாத, பன்னிரு வருடங்களுக்கொருமுறை மட்டுமே பூக்கும் அபூர்வத்தன்மையால் மட்டுமே முக்கியமான குறிஞ்சியைக் கூடலுக்குப் படிமமாக்கியவன் ஞானி.
சங்க இலக்கியத்தின் தாவரங்களைப்பற்றிப் பேராசியரியர் கு. சீனிவாசன் எழுதிய ‘சங்க இலக்கியத் தாவரங்கள்’ முக்கியமான நூல். அவற்றில் பெரும்பாலான மலர்கள் அடையாளம் காணப்பட்டுக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. சங்க இலக்கியத்தைப் பொருள்கொள்ள அந்த மலர்களை அறிந்தாகவேண்டும். அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் மலர்களை நாம் அறிந்தவுடன் பெரும்பாலான பாடல்கள் புத்தம் புதியதாக மலர்வதைக் காணலாம்.
ஆம், நீங்கள் உள்ளூர வினவுவது எனக்குக் கேட்கிறது. சங்க காலத்தில் இந்த மண் பூத்துக் கனிந்து நிறைந்திருந்தது. இன்று எங்கே மலர்கள்? காட்டுமரங்களும் காட்டுச்செடிகளும் எல்லாம் பயனற்றவை என்று நாம் புரிந்துகொண்ட போது சங்ககாலம் நம்மைவிட்டு விலகிச்சென்றது. விளையும் தாவரங்களைவிட வீட்டுமனைகள் பயனுள்ளவை என்று நாம் புரிந்துகொண்ட பின்னர் சங்ககாலத்தின் நினைவும் அகன்றுவிட்டது. கற்பூரமிருந்த சிமிழின் வாசனையாவது நேற்று இருந்தது. இன்று அச்சிமிழ் மீது கற்பூரம் என்று எழுதி ஒட்டிய குறிப்பு மட்டுமே உள்ளது.
நித்ய சைதன்ய யதியும் அவரது ஆசிரியர் நடராஜகுருவும் இமயமலை காணச்சென்ற அனுபவம் நித்யா எழுதிய ‘குருவும் சீடனும்’ என்ற நூலில் உள்ளது [எனி இண்டியன் பிரசுரம்]. நடராஜ குரு சொல்கிறார், ‘காளிதாசன் கலக்காமல் இமயமலையை இனிமேல் பார்க்கமுடியாது’ என்று. தன் அழியாத சொற்கள் மூலம் காளிதாசன் இமயமலையின் பனிக்கும் படவுக்கும் முடிக்கும் முனிவுக்கும் பொருள் அளித்துவிட்டான். கண்முன் திகழும் இமயத்தை அகத்தில் நிகழும் ஒன்றாக ஆக்கிவிட்டான்.
ஒரு பண்பாட்டின் குழந்தைப் பருவத்திலேயே இது நிகழ்ந்துவிடுகிறது. அந்தப்பண்பாடு இயற்கையைத் தனக்காக அடையாளப்படுத்திக்கொண்டு விடுகிறது. இயற்கையை ஓர் உருவக வெளியாக அது மாற்றிவிடுகிறது. இயற்கையின் ஒவ்வொரு பொருளும் ஒவ்வொரு நிகழ்வும் அப்பண்பாட்டின் ஆழ்மனத்தில் ஒரு தொல்படிமமாக மாறிவிடுகிறது.
எமர்சன் அவரது இயற்கை என்ற கட்டுரையில் இயற்கையே மொழியை உருவாக்கியது என்கிறார். மனிதனுக்கு இயற்கை அளித்த பெரும் கொடை என்பது மொழியே என்கிறார். மொழி என்பதுதான் என்ன? இயற்கை மீது போடப்பட்ட ஒலியடையாளங்களின் பெருந்தொகுதி அல்லவா? மொழியை நாம் பேசும்போது இயற்கையை அளைந்து கொண்டிருக்கிறோம்
இன்னொரு கோணத்தில் இயற்கை என நாமறிவது எதை? நாம் பிறந்து வந்தகணம் நம்மை வந்து தீண்டும் இயற்கை மொழியின் வடிவில் அல்லவா இருக்கிறது? சூடும் குளிரும் பசியும் துயிலும் எல்லாம் சொற்கள் அல்லவா? அம்மா என்பதும் உணவு என்பதும் கூட சொற்கள் அல்லவா?
மொழியையும் இயற்கையையும் பிரிக்கமுடியுமா என்ன? மொழியே இயற்கை. இயற்கையே மொழி. காலவெளி என்று சொல்வதுபோல மொழியியற்கை என ஒரே சொல்லாகச் சொல்லவேண்டும் போல.
ஆனால் மெல்லமெல்ல நாம் மொழியை இயற்கையிடமிருந்து பிரித்துப்பார்க்கப் பழகிவிட்டிருக்கிறோம். நண்பர்களே, அதன் பெயர்தான் நாகரீகம். அதன் பெயர்தான் சிந்தனை. ஒரு கட்டத்தில் ஒவ்வொரு சொல்லும் அது சுட்டும் விஷயங்களில் இருந்து விடுபட்டு விடுகிறது. வெறும் ஒலியடையாளமாக ஆகிவிடுகிறது.
இப்படிச் சொல்கிறேன். விளையாட்டுச் சாமான்களுக்கு முடிவில்லாத அர்த்தங்கள் உள்ளன. சைதன்யா சின்னப்பிள்ளையாக இருக்கும்போது நாலைந்து ஸ்பூன்களையும் கிண்ணங்களையும் வைத்து ஒரு நகரத்தையே படைத்துவிட்டாள். என்னால் ஓர் அளவு வரை அதைப்புரிந்துகொள்ளமுடிந்தது. ஆனால் ஒரு ஸ்பூன் எப்படி மலையாக ஆக முடியுமென்று கற்பனை செய்யவேமுடியவில்லை. அதேசமயம் சமையலறைப் பாத்திரங்களுக்கு ஒரே அர்த்தம்தான். அள்ளவேண்டியவை அள்ளும், பரப்ப வேண்டியவை பரப்பும், கிண்டவேண்டியவை கிண்டும்.
மொழியின் இளம்பருவத்தில் சொற்கள் விளையாட்டுச்சாமான்களாக இருந்தன. அஸ்ஸாமியப் பழங்குடிக்கதைகளின் தொகுதி ஒன்றுக்கு ‘உலகம் குழந்தையாக இருந்த போது’ என்று தலைப்பு கொடுத்திருந்தார்கள். அற்புதமான தலைப்பு. உலகம் குழந்தையாக இருக்கையில் மனிதர்கள் நாகரீகமில்லாமல் இருந்தார்கள். குழந்தைகளைப்போல இருந்தார்கள். சொற்கள் விளையாட்டுச் சாமான்களைப்போல் இருந்தன. முடிவில்லாத அர்த்தங்களுடன் இருந்தன. உலகம் முதிர்ந்தபோது மனிதர்கள் வளர்ந்தவர்களாக ஆனார்கள். சொற்கள் சமையலறைப் பாத்திரங்களாக ஆயின.
நான் இன்னும் கிராமத்தில்தான் இருக்கிறேன். பார்வதிபுரம் கணியாகுளம் என்ற கிராமத்தின் ஒரு பகுதி. இன்னும் தினமும் வயல்வெளியிலே காலைநடை செல்கிறேன். ஒரு சொல் காதில் விழுந்தது. உரம்போட்டுக்கொண்டிருந்த பெரியவர் சொன்னார் ‘ஏலே வாமடைய அடைலே’. வாமடை. வாய்மடை. நண்டுவளைகளினாலோ எலிவளைகளினாலோ வரப்பில் தானாகவே உருவாகி வரும் மடை அது. வரப்பு வாய்திறந்த மடை. அந்த பெயரைப்போட்டவன் குழந்தை. அவன் சொல்லை வைத்து விளையாடினான்.
இன்று நாம் சொற்களை அப்படிக் கையாள்வதில்லை. என்னிடம் ஒரு நண்பர் கேட்டார், ‘கருங்காலி என்று காட்டிக்கொடுப்பவனைச் சொல்கிறோமே, துரோகத்துக்கும் காலுக்கும் என்ன சார் சம்பந்தம்?’ நான் கேட்டேன் ‘உங்கள் இஷ்ட தெய்வம் என்ன?’ ‘திருச்செந்தூர் முருகன்’ என்றார். நான் சொன்னேன், ‘கருங்காலி என்பது ஒரு மரம். தோதகத்தி என்று இன்னொரு பெயர் அதற்கு உண்டு. எபோனி என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். திருச்செந்தூர் கருங்காலிச்சோலை என்று சொல்லப்படுகிறது. கருங்காலிச் சோலை உறை கந்தனே என்று பித்துக்குளி முருகதாஸ் பாடலைக் கேட்டிருப்பீர்கள்.’
‘ஆமாம்!’என்றார் அவர். ‘கேட்டிருக்கிறேன்.ஆனால் இந்த அர்த்தத்தில் எடுத்துக்கொண்டதில்லை!’ என்றார். ஈட்டிக்கம்பு கருங்காலியில் செய்யப்படுவதனால் ஈட்டி மரம் என்று சொல்லப்படுவதுண்டு. பழங்காலத்தில் உலக்கை, கோடாலிப்பிடி போன்றவை பெரும்பாலும் கருங்காலியில்தான் செய்யப்படும். கருங்காலி மரம் உறுதியானது. அதை கருங்காலிப்பிடி உள்ள கோடரியால்மட்டுமே முறிக்கமுடியும். தன் இனத்தையே அழிக்க உதவுவதனால் கருங்காலிப்பிடி என்ற சொல்லாட்சி துரோகத்துக்கு வந்தது.
ஆம், நாம் மொழியை அது சுட்டும் இயற்கையை அறியாமல் கையாளப்பழகிவிட்டிருக்கிறோம். வழியோரங்களில் தூரம் காட்டும் கல்லடையாளங்கள். அதைப்போல இவை வெறும் சொல்லடையாளங்கள். என்ன சொல்கின்றன என்பதே போதும். எதை உணர்த்துகின்றன என்பது முக்கியமானதே அல்ல.
அந்த மனநிலையில் இருந்து விடுபட்டு வாசிக்கவேண்டியவை சங்க இலக்கியங்கள். சமையலறைப் பாத்திரங்களை ஒரு குழந்தை விளையாட்டுச் சாமான்களாக ஆக்கிக்கொள்ளும். அதைப்போல நம் மனதிலும் நாவிலும் புழங்கும் இந்த லௌகீகமான மொழியை நம்மால் இயற்கையின் ஒலிவடிவமாக ஆக்கிக்கொள்ள முடிந்தால் மட்டுமே நாம் சங்கக்கவிதைக்குள் செல்லமுடியும்.
மணிரத்னத்தின் தனிப்பட்ட அலுவலக அறை எனக்கு மிகவும் பிடித்தமானது. பெரிய கண்ணாடிச்சுவருக்கு அப்பால் செடிகள் அடர்ந்து நிற்கும். அவை மழைக்காடுகளில் வளரும் நீர்த்தாவரங்கள். கமுகு,காட்டுசேம்பு,கல்வாழை போல. நான் அந்தச் செடிகளை எங்களூரின் மழைக்காடுகளில் நிறையப் பார்த்திருக்கிறேன். ஏதாவது பேச்சின் இடைவெளியில் சட்டென்று கண்களைத் திருப்பி அந்தச் செடிகளைப்பார்க்கையில் மழைக்காட்டின் குளிரும் சீவிடு ரீங்காரமும் தழைமணமும் நீராவியும் வந்து என் மனதைச் சூழும்.
அதேபோல நம் அலுவலக அறைக்குள் வந்து சேரும் ஒரு சின்ன மழைக்காடு குறுந்தொகை. நம் முன்னோர் இயற்கையும் மனமும் ஒன்றாக வாழ்ந்த அந்தக் காலத்தில் உருவானது. அந்த மழைக்காடு நம்மை விட்டு விலகி எங்கோ இருக்கிறது. மானுடம் வாழ்ந்த மடித்தட்டு. நம் பண்பாடு தவழ்ந்த தொட்டில். ஆனால் அதன் ஒரு துளி சங்க இலக்கியம் என்ற வடிவில் நம்முடன் உள்ளது. நம் அலுவலக அறையில் இருந்து அதைப் பொருள்கொள்ள முடியாது. அந்த மழைக்காட்டுக்குள் இறங்கிச்செல்லமுடியுமென்றால் மட்டுமே அது பொருள் தரும்.
ஆம் ஒரு மழைக்காட்டிற்குள் சென்று இயற்கையை தரிசிக்கும் மனநிலையில் சங்கப்பாடல்களுக்குள் நுழையவேண்டும். சிலசமயம் சர்வசாதாரணமான ஒரு வரி நம்மை வந்து சூழும். ‘மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடி கறவை கன்று வயின் படர, புறவில் பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் செவ்வான் செவ்வி கொண்டன்று’ – ‘மேகம் விளையாடும் குன்றின் சரிவில் உள்ள சிறு வீட்டில் கறவைப்பசுக்கள் கன்றுதேடி மீள்கின்றன. புறத்தோட்டத்தில் பச்சை இலைகொண்ட முல்லை செவ்வானின் ஒளியில் செம்மை கொண்டது’
மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக்
கறவை கன்றுவயின் படர, புறவில்
பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச்
செவ் வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் போல்வல்-தோழி!-யானே.
– வாயிலான் தேவன்
அழகிய சித்திரம். என்றாலும் மழை விளையாடும் குன்று என்ற வரி. வெண்முகில் கைக்குழந்தைபோல மலையின் மடியில் கிடப்பதைக் கண்டதுண்டா? தந்தையின் தலைமேல் ஏறிய குறும்புக்காரப் பிள்ளையைப்போல வெண்முகில் மலைமேல் ஏறி அமர்ந்திருப்பதைக் கண்டதுண்டா? மழை விளையாடும் குன்று! அந்த வரியில் அந்தக் காட்சி திறந்துகொண்டதென்றால் நீங்கள் சமையல் பாத்திரங்களை விளையாட்டுச்சாமான்களாக்கும் பிள்ளையாக ஆகிவிட்டீர்கள். சங்கச் செவ்வியலின் உலகுக்குள் நுழைய உங்களுக்கு அனுமதிச்சீட்டு கிடைத்துவிட்டது.
என் ஆசிரியர் சொன்னதைச் சொல்கிறேன். சங்கக்கவிதையைக் கவிதையாக வாசியுங்கள். ஆகவே தயவு செய்து சொல்லாராய்ச்சி செய்யாதீர்கள். தயவுசெய்து பொருளாராய்ச்சி செய்யாதீர்கள். நான் இன்னும்கூட சொல்வேன். அந்தக்கவிதை தலைவிகூற்றா செவிலிகூற்றா என்றுகூடப் பார்க்காதீர்கள். அந்தக் கவிதையின் திணையும் துறையும் எதுவென்று பார்க்காதீர்கள்.
நம்மில் பலர் ஒன்றை அறியாமலிருக்கிறோம். சங்கப்பாடல்களின் திணையும் துறையும் அப்பாடல்களுடன் இணைந்தவை அல்ல. அதாவது அவை அவற்றை எழுதிய கவிஞர்களாலேயே குறிப்பிடப்பட்டவை அல்ல. பெரும்பாலான திணை, துறை அடையாளங்கள் அவற்றின் உரையாசிரியர்களால் போடப்பட்டவை. இன்னும் சொல்லப்போனால் இருபதாம் நூற்றாண்டில் ஏட்டிலிருந்து அச்சுக்கு வந்தபோதுதான் நற்றிணை குறுந்தொகை போன்றவற்றுக்கான திணையும் துறையும் உருவாக்கப்பட்டன.
நற்றிணைக்கான திணை, துறை குறிப்புகளை அதைப் பதிப்பித்த பின்னத்தூர் நாராயணசாமி அய்யர் அமைத்தார். குறுந்தொகையை முதன்முதலில் பதிப்பித்தவர் திருக்கண்ணபுரம் சௌரிப் பெருமாள் அரங்கன் என்ற அறிஞர். [டி.எஸ். அரங்கசாமி அய்யங்கார்] அதன் முன்னுரையிலேயே அய்யம்பேட்டை முத்துரத்தின முதலியார் என்ற அறிஞர், அரங்கசாமி அய்யங்கார் குறுந்தொகைக்குத் திணையும் துறையும் வகுத்ததைச் சுட்டிக்காட்டுகிறார்.
சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நாம் பார்க்கலாம். நற்றிணை, குறுந்தொகை போன்றவற்றை ஆரம்பகால சங்கநூல்களாகக் கொள்ளலாம். அவற்றில் உள்ள பாடல்களில் திணைப் பிரிவினை அவ்வளவு கச்சிதமாக இருப்பதில்லை. அவை வெறும் கவிதைகளாகவே உள்ளன, திணைக்கும் துறைக்கும் ஏற்ப எழுதப்பட்டவையாக இல்லை. இனிமேல் பாடல்களைத் திணையை கவனிக்காமல் வாசித்துப் பொருள்கொண்டு பாருங்கள். இதை உணர்வீர்கள்.
திணை, துறை வகுத்தவர்கள் தோராயமாகவே அதைச் செய்திருக்கிறார்கள். அதாவது ஒரு பாடலின் முதல்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஒரு திணைக்குள் அமைந்தாலும் அப்பாடலை அந்த திணைக்குள் கொண்டுசென்று வைத்தார்கள். அந்த வகைப்பாடுகளைக் கொண்டு அப்பாடல்களின் அர்த்தங்களை எப்போதைக்குமாக வகுத்துக்கொள்வதென்பது கவிதையில் இருந்து நம்மை விலக்கிவைக்கவே உதவும். அவற்றை ஒருவகை இலக்கண அடையாளங்களாகவே கொள்ளவேண்டும், கவிதையை அறிவதற்கான வழிகாட்டிகளாகக் கொள்ளலாகாது. எந்த ஒரு நல்ல கவிதையையும் அதிலுள்ள சொற்களை மட்டுமே கொண்டு அர்த்தம் கொள்வதுபோலவே சங்கப்பாடல்களையும் அணுகவேண்டும்.
இன்னொரு விஷயம், பொதுவாக சங்க இலக்கியங்களை ஏட்டிலிருந்து அச்சுக்குக் கொண்டு வந்து பதிப்பித்தவர் என்ற முழுப்பெருமையையும் இன்று உ.வே.சாமிநாதய்யருக்கு வழங்கும் மனப்போக்கு பொதுச்சூழலில் உள்ளது. பதிப்புத்துறையில் செயல்பட்ட பலரது பெயர்கள் மறைந்துபோக இந்த நாயகவழிபாடு வழிவகுக்கிறது. குறுந்தொகையை 1915லேயே பதிப்பித்த சௌரி அரங்கசாமி அய்யங்காரின் பெயர் அதில் ஒன்று.
[மேலும்]