ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…

சுந்தர ராமசாமி  

ஜெயகாந்தன் தமிழ்விக்கி

அன்புள்ள ஜெயமோகன்

பட்டறிவு, கேட்டறிவு, படிப்பறிவு என்றெல்லாம் கேட்கிறோம் பட்டறவு சரி, கேட்டறிவு சரி  படிப்பறிவின் முக்கியத்துவம் தான் இங்கே கேள்வி  இந்த இடத்தில்  பழைய  விஷயம்  ஞாபகப் படுத்திப் பார்க்கிறேன்.

நாகர்கோவிலில் முன்பொரு தரம் சு.ரா அவர்கைளப்  பார்க்க வந்திருந்த தோழர் நெல்லை கிருஷியுடன் நண்பர்கள் குழாமாக சேர்ந்து சென்றோம்.  சம்பாஷணைக்கு நடுவே கிருஷி சு.ரா விடம் கேட்டார்  “ஜெயகாந்தன் ஒரு முறை எங்கோ சொல்லியிருக்கிறார், நான் என்னுடைய தனித்துவம் மற்றும் சுதந்திர சிந்தனையைப் பாதிப்பின்றி பாதுகாக்கும் நோக்கம் இருப்பதனால் பிறர்  படைப்புகளை முக்கியத்துவம் கொடுத்துப் படிப்பதில்லை என்று”

சு.ரா எங்களை கூர்ந்து பார்த்தார் பின்பு நிதானமாக சொன்னார்.”அது கத்தியைத் தீட்டத் தீட்ட மழுங்கி விடும் என்பது போல”

சு.ரா வுக்குப் பின் தன் மிகத் தெளிவானப் பார்வையால் நான் ஆராதிப்பது சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களை. தன்னிலையில் வாழ்க்கையை உணர்வதையே மையமாகக் கொண்டது அவரது பார்வை. ஒருகேள்விக்கு அவர் இங்ஙனம் பதிலளிக்கிறார்.

To become a Philosopher is made quite simple for anybody in this planet. Go through a set of books, thoroughly misunderstand it , express yourself, to be termed a philosopher.

மனம் என்பது பிறந்தநாள் முதல் இன்று வரையிலும் நம் அறிவில் ஏற்பட்டிருக்கும்  பதிவுகளின் குவியல்தான். இந்தப் பதிவுகளும் ஐம்புலன்களின் வழியாகவே நம்மை  வந்தடைந்திருக்கின்றன. ஐம்புலன்களுக்கு உண்மையை  உள்ளபடி உணரும் பக்குவம் இல்லை. எதையும் ஒப்பிட்டுப் பார்த்தே உணர்ந்து பதிவு செய்கிறது.

உதாரணத்திற்கு ஓர் உலோகத்தைத் தொடும் பொழுது குளிர்மையாக உணர்கிறோம். காரணம் நம் உடல் அதை  விடவெப்பமாக இருப்பதனால். நம் உடல் வெப்பம் அதை விடக் குறைவாக இருந்தால் அதே உலோகத்தை நாம் வெப்பமாக உணரவும் வாய்ப்பிருக்கறது. ஆக ஓர் உலோகத்தின் உண்மையான தன்மையைக் கூட நம் உடலுடன் ஒப்பிட்டுப் பார்த்து தான் நம் புலன்கள் நமக்கு அறிவிக்கிறது. ஐம்புலன்கள் வழியின்றி வேறெந்த  வழியில் நாம் உலகை உணர்கிறோம?

இந்த ஐம்புலன்கள் உதவியுடன்  உலகத்தையே அளக்கக் கிளம்புவது எப்படி? பலரும் தாங்கள்  உணர்ந்தவற்றை மனசாட்சிக்கு  விரோதமில்லாமல் உண்மையாகவே பதிவு  செய்திருக்கிறார்கள்.  எல்லாவற்றையும் தேடிப் பிடித்துப் படிக்கவில்லையே என்று வருந்தலாமா அல்லது …..

குமார் முல்லக்கல்

***

அன்புள்ள குமார்,

சுந்தர ராமசாமியின் பதில் சாமர்த்தியமானது- கச்சிதமானது. அவர் இம்மாதிரி விடைகளைச் சட்டென்று சொல்வதில் வல்லவர். அவை மிகச் சிறப்பான பதில்கள் என்று அப்போது தோன்றும். ஆனால் நம் மரபில் உபமானம் என்பது உண்மைக்குச் சமானமானது. அது நிகருண்மை. உபமானத்தை நிறுவி விட்டால் உண்மையும் நிறுவப்பட்டு விடும். ஆகவே உபமானத்தை மிகப் பொருத்தமானதாக மட்டுமே அமைக்க வேண்டும்.

நீங்கள் கேட்டது, ஒருவனின் அறிவு மற்றும் ஆன்ம மேம்பாட்டுக்குப் படிப்பு இன்றியமையாததா என்று தானே? அந்தக் கேள்விக்கான உவமை கத்தியை சாணைக்கல்லில் தீட்டித்தான் ஆக வேண்டுமா என்பதாகவே இருக்க முடியும். கத்தி கூர்மையடைய வேண்டும், அதற்கு அதைத் தீட்டவும் வேண்டும். ஆனால் அதைச் சாணைக்கல்லில்தான் தீட்டியாக வேண்டுமென்பதில்லை. கத்தியைத் தீட்ட எத்தனையோ வழிகள் உள்ளன. சாணைக்கல்லில் தீட்டுவது வழக்கமான சிறந்த வழிமுறை. ஆனால் அது மட்டும் அல்ல. சாணைக்கல்லையே பார்த்திராத கத்தி கூட கூர்மையில் ஜொலிக்க முடியும்.

என் நாவல்களை முன்வைத்து இந்தக் கேள்வியை பலர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ‘ரப்பர்’ நாவலில் கண்டன்காணி, ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலில் நாகம்மை, ‘காடு’ நாவலில் குட்டப்பன் போன்றவர்கள் இயல்பாகவே மேலான விவேகத்துடன், கூரிய அறிவுடன், அவை அளிக்கும் வாழ்க்கைத் தெளிவுடன் இருக்கிறார்கள். படிப்பு தேவையில்லாதவர்கள் அவர்கள். அப்படியானால் கல்வி, வாசிப்பு போன்றவற்றுக்கு என்ன தேவை?

அவ்வினாவுக்கு நான் விரிவாகவே பதில் சொல்லியிருக்கிறேன். மனித ஆளுமை என்பது அவன் எந்த விஷயங்களை தெரிந்து கொண்டிருக்கிறான் என்பதைச் சார்ந்து உருவாவதில்லை. ஏராளமான விஷயங்களை அறிந்த ஒன்றுக்கும் பயனில்லாதவர்களை நான் நிறையவே கண்டிருக்கிறேன். மனிதஅறிவும், விவேகமும் அம்மனிதன் கொள்ளும் அனுபவங்கள், அவ்வனுபவங்களில் இருந்து அவன் பெறும் அகப்பக்குவம் ஆகியவற்றைச் சார்ந்து மட்டுமே உருவாகின்றன.

அவ்வனுபவங்கள் நேரடியான வாழ்க்கையில் இருந்து பெறப்பட முடியும். பட்டறிவு என்பது அதுவே. ஆனால் மானுட அனுபவங்கள் மட்டுமே மனிதனை மேம்படுத்துமா? மகத்தான அனுபவங்கள் வழியாகச் சென்ற பின்னும் காலியான டப்பாக்களாக இருக்கும் பலரைக் கண்டிருக்கிறேன். அனுபவங்களை ஒருவனின் அகம் சந்திக்க வேண்டும். உள்ளே இழுத்துக் கொண்டு அக அனுபவங்களாக ஆக்க வேண்டும், செரித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமான அனுபவங்களில் இருந்தே தீவிரமான ஆளுமை வளர்ச்சியைப் பெற்றவர்களும் உண்டு.

அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளக் கூடிய, ஆராயக் கூடிய, சாராம்சப்படுத்தி தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளக்கூடிய, அந்த அகச்செயல்பாட்டைத்தான் சிந்தனை என்கிறோம். அனுபவங்களை சிந்தனை இணையான வேகத்துடன் சந்திக்கும் போது சிறந்த ஆளுமை உருவாக்கம் நிகழ்கிறது எனலாம்.

வாசிப்பும், கல்வியும் எதற்கு என்றால் இந்த இரண்டையும் வலிமைப் படுத்திக் கொள்வதற்காகவே. நம் அனுபவங்களின் எல்லை மிக, மிகக் குறைவானது. என்னுடைய சொந்தவாழ்க்கை எப்போதுமே நிகழ்ச்சிகள் நிறைந்தது. அலைச்சல்கள், மனிதர்கள். ஆனால் என்னுடைய வாழ்க்கை கூட மிகச் சிறியதென்றே எனக்குப்படும். பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கும் வாழ்க்கை என்பது மிகச்சாதாரணமான ஒன்று. ஒருவனின் மொத்த வாழ்க்கையில் பொருட்படுத்தத் தக்க அனுபவங்கள் ஒரு மணி நேரத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்பது ஓஷோ சொன்னது.

ஆனால் நாம் அனைவருக்குமே கற்பனை அனுபவங்களின் பல மடங்கு விரிவான ஓர் அகஉலகம் உண்டு. உண்மையில் அந்த அனுபவ உலகில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அந்தப் பெரிய அனுபவ உலகை ஒரு ஏரி என்றால் அதில் வந்து சேரும் ஓடைகளும், ஆறுகளும்தான் நிஜமான அனுபவங்கள். நிஜ அனுபவங்களை கற்பனை மூலம் பெரிது படுத்தி பலவாக்கி அனுபவிக்கிறோம். நம் வாசிப்பு நம் அகஅனுபவ உலகை பிரம்மாண்டமானதாக ஆக்குகிறது. நம் கற்பனை அனுபவ உலகம் விரிந்து விரிந்து பரவுகிறது.

ஒருவர் பனிமலைகளில் ஏறலாம், கடலடியில் வாழலாம், அவமானப்படலாம். விசாரிக்கப்படலாம், வதைக்கப்படலாம்; ஆனால் ஓர் இலக்கிய வாசகன் அந்த வாழ்க்கையை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையிலான வாழ்க்கைகளை வாழ்கிறான். ஆகவே அவன் அடையும் பக்குவமும் பல மடங்கு.

அனுபவங்களை உட்கொள்ளும் சிந்தனைத் திறனை விரிவாக்குவதற்கும், தீவிரப்படுத்துவதற்கும் கல்வியும், வாசிப்பும் உதவுகின்றன. ஓர் அனுபவத்தை நல்ல வாசகன் சிந்தனைமரபின் பெரும் பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்ள முடியும். வரலாற்றின் நீட்சியில் நிறுத்திப் புரிந்து கொள்ள முடியும். உலகளாவ விரித்தும், உளவியல் சார்ந்து ஆழத்துக்குக் கொண்டு சென்றும் புரிந்து கொள்ள முடியும்.

ஆக, அக வளர்ச்சியின் இரு தேவைகளையும் வாசிப்பு நிறைவு செய்கிறது. இவ்விரு தளங்களையும் நிறைவு செய்யும் சரிசமமான வாசிப்பு இல்லாவிட்டால் ஆளுமைவளர்ச்சியானது குறைவு படுகிறது. வெறும் சிந்தனைக் கல்வி வெறும் வரட்டுப் பாண்டித்தியமாக ஆகும். வெறும் கற்பனை சார்ந்த வாசிப்பு பகற்கனவுகளில் கட்டிப் போடும். சரிசமமான வாசிப்பு மனிதர்களை மலரச் செய்கிறது.

ஆனால் நூல் வாசிப்பு மட்டுமே இந்த மலர்ச்சியை அளிக்கும் என்றும் சொல்ல முடியாது. வாசிப்பளவுக்கே விரிவான சிந்தனைத் திறனை அளிக்கும் செவிக்கேள்வியும் இருக்கலாம். உதாரணமாக இப்போது 80 வயது தாண்டி விட்ட என் பெரியம்மா தாட்சாயணியம்மா அவர்கள் படிக்காதவர். ஆனால் திருவிதாங்கூரின் வரலாறு, இந்துமத சிந்தனைகள், புராண மரபு ஆகியவற்றை அவர் செவிக் கேள்வியாகவே மிக விரிவாக அறிந்திருக்கிறார். சுற்றிலும் உள்ள தாவரங்கள், மிருகங்கள், பருவகாலங்கள், இயற்கை நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிய மிகக் கூரிய ஞானத்தை கேட்டறிந்திருக்கிறார். அவரை ஒரு அறிஞர் என்று எந்த ஐயமும் இல்லாமல் சொல்லிவிட முடியும்.

ஆனால் இத்தகைய ஒரு வாய்ப்பு சமகாலத்தில் குறைவாகவே இருக்கிறது. முன்பு செவிவழி ஞானத்தைக் கைமாற்றும் ஒரு மரபு இருந்தது. பெரும்பாலான தொழில்ஞானங்கள் செவிவழியாகவே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப் பட்டன. ஆசாரிமார்கள், மூசாரிமார்கள் போல தொழில் குழுக்கள் இருந்த காலம் அது.

இத்தகைய செவிவழி அறிவு கொண்ட ஒருவர் தன் அனுபவங்களை தொடர்ச்சியாக எதிர்கொள்வதன் மூலம் விவேகமும் ஞானமும் கனிந்த ஒருவராக ஆகமுடியும். குட்டப்பன் அப்படிப்பட்ட ஒருவன். அத்தகைய பலரை நான் கண்டிருக்கிறேன். அவர்களை நான் ஒருபோதும் சுந்தர ராமசாமி அல்லது ஜெயகாந்தனை விட கீழானவர்கள் என்று எண்ண மாட்டேன்.

***

நம் அனுபவ அறிவை இந்திய ஞானமரபு முதல்படி என்றே கருதும். ஏனென்றால் அனுபவம் என்பது நம் ஐம்புலன்களால் நமக்கு அளிக்கப்படுவது. ஆறாவது புலனான மனமும் ஏழாவது புலனான புத்தியும் அவற்றை அறிகின்றன. இந்தப்புலன்களின் எல்லைகளுக்குள் நிற்பவையே நம் அனுபவங்கள். ஆகவே அவை குறைப்பட்டவை, உண்மையை நமக்கு அளிக்கமுடியாதவை.

ஏனென்றால் மனத்தையும் புத்தியையும் மூன்று தளைகள் கட்டியிருக்கின்றன. முதலில் தளையாக அமைவது நான் என்னும் உணர்வு. சுயமைய நோக்கு. குழந்தை கருவுக்குள் நுழையும்போதே அது உருவாகிவிடுகிறது என்பது நம் மரபு. அதற்கு ஆணவமலம் என்று சைவசித்தாந்தத்தில் பெயர். நான் என்பது நான் உருவாகும்போதே உருவாகி என்னுள் எப்போதும் இருக்கும் ஒரு உணர்வு.

அந்த ஆணவத்துடன் இணைவது முன்னரே இருந்து பிறந்ததும் வந்து ஒட்டிக்கொள்ளும் உலகியல்கூறுகள். உறவுகள், சூழல், இனமதமொழி அடையாளங்கள் என அது பலவகை. நம் செயல்கள் சிந்தனைகள் அனைத்தையுமே நாம் வந்து பிறக்கும்போது வந்து சூழும் இந்த விஷயங்கள் தீர்மானிக்கின்றன. இந்த தொடர்ச்சியையே கன்மம் என்கிறார்கள். அது முற்பிறப்பின் விளைவாக இப்பிறப்பில் தொடர்வது என்பது ஓரு விளக்கம். அவ்விளக்கத்தை ஏற்காவிட்டாலும் இது நம் சிந்தனையை வடிவமைத்துக் கட்டுப்படுத்தும் தளை என்பதை நாமே உணரலாம்.

நாம் இப்பிரபஞ்சத்தை ஒரு குறிப்பிட்ட வகையிலேயே காணமுடியும் என்னும் எல்லை அடுத்த தளை. நம் புலன்களின் இயல்புகள்தான் நாம் காணும் உலகத்தை தீர்மானிக்கின்றன. வவ்வால் காணும் உலகம் மண்புழு காணும் உலகம் பாக்டீரியா காணும் உலகம் அல்ல நாம் காண்பது. நம் புலன்களால் நாம் கற்பனை செய்துகொள்ளும் உலகம் மட்டுமே நம் அறிதலுக்குச் சாத்தியமானது. இதையே மாயை என்கிறார்கள்.

இந்த மூன்று தளைகளையும் மெய்யறிவை அளிக்கும் அகவிழியை மறைக்கும் மூன்று அழுக்குகள் என்று நம் மரபு சொல்கிறது. மும்மலங்கள் என்று. இவ்வழுக்குகளை வென்று அடையும் நோக்கே முழுமையானது என்றும் அது மட்டுமே ஞானம் என்றும் நம் மரபு வகுத்துள்ள்ளது.

மரபின் பதிலைச் சொல்கிறேன் என்று எண்ணுகிறீர்கள் என்றால் நான் சொல்வது இதுதான். மரபின் இப்பதிலில் இருந்து மேலும் நுண்ணிய பதிலை நம் ஞானத்தால் அறியலாம், முன்வைக்கலாம். மரபை அறியாமல், இந்தத் தத்துவ சிந்தனையின் வீச்சுக்குப் பலகாத தூரம் பின்னால் நின்றுகொண்டு சின்னஞ்சிறு பதில்களை உருவாக்கிக் கொள்வதையே நம் நவீனத்துவர் பலர் செய்கிறார்கள். அது அறிவோர் வழி அல்ல.

மேலைநாட்டுச் சிந்தனை நாம் அறியும் உண்மையை நடைமுறை உண்மை,[புலனறிதல் உண்மை, நிரூபண உண்மை] தர்க்கபூர்வமான உண்மை, [ஊக உண்மை, ஈவுண்மை] கவித்துவ உண்மை [மீபொருண்மை உண்மை, தரிசன உண்மை] என்றெல்லாம் பிரித்து அவற்றின் பல தளங்களை அறிய முயன்றுள்ளது. இந்த ஒவ்வொரு தளத்தைச் சார்ந்தும் தனித்தனியான தத்துவநோக்குகள் உருவாகி வந்துள்ளன. அவற்றை முன்வைக்கும் தத்துவ ஞானிகள் இன்றளவும் உருவாகிக் கொண்டே இருக்கின்றனர்.

அபூர்வமாக இவற்றுக்குப் பொதுவான ஓர் உண்மையை கண்டடையும் முயற்சிகளும் உள்ளன. அவர்களின் வழி என்பது அறிதல்களை இப்படி பல நோக்குகளாகவும் போக்குகளாகவும் பிரித்தபின் அப்பிரிவுகளுக்கு நடுவே ஓர் மையத்தை, சமரசப்புள்ளியை காண முயல்வது. அதை முழுமை நோக்கு என்று அவர்கள் சொல்கிறர்கள். நெடுங்காலமாக அதற்கான முயற்சிகள் நிகழ்கின்றன. சமீபத்தில் கென் வில்பர் அவ்வாறு கவனத்தை ஈர்த்த சிந்தனையாளர்.

நம் மரபில் இதை இன்னும் விரிவாக ஆராய்ந்துள்ளனர். இங்கே அதை விரிவாகப்பேச முடியாது. அறிதலில் இரு புள்ளிகள்தான் உள்ளன. ஒன்று இது [இதம்] அதாவது நான். என் ஆத்மா. என் ஞானம். அதாவது அறிவோன். அல்லது இன்றைய மேலைநாட்டுத் தத்துவக் கலைச்சொல்லால் சொல்லவேண்டுமென்றால் தன்னிலை. [Subjectivity ] இரண்டு ‘அது’ [அதம்] உலகம், பிரபஞ்சம் அதாவது அறிபடு பொருள். புறனிலை [Object].

அறிவு என்பது இரண்டுக்கும் நடுவே உருவாவது. அது ‘இதை’ சார்ந்து இருக்கும் தோறும் இதன் எல்லைகளுக்கு உட்பட்டது. அந்த அறிவை ‘அதை’ சார்ந்து ஆக்கும்தோறும் அது முழுமை கொள்கிறது. அதற்கான வழிமுறை ‘இதை’ மெல்ல மெல்ல இல்லாமலாக்குவது. மேலைநாட்டுக் கலைச்சொல்லால் சொல்லவேண்டுமென்றால் தன்னிலையைக் கரைத்தழிப்பது. அறிதலை மெல்ல மெல்ல ‘என்’ அறிதல் அல்லாமலாக்குவது.

அறிதலை முழுமைப்படுத்துதல் என்பதே அந்த அறிதலை தன்னில் இருந்து விலக்குதல்தான் என்பதே இந்திய முறை. அதற்கான வழிமுறையாக நெடுங்காலமாகவே தியானம் சொல்லப்பட்டிருக்கிறது. அந்நிலையில் அறிதல் மெல்ல மெல்ல ஒரு மனிதனின் அனுபவம் சார்ந்ததாக அல்லாமல் ஆகிறது.

அதாவது கல்வியும் வாசிப்பும் முதல் படி. அவை அகங்காரத்தை வலுப்படுத்தும். அவை நம் அறிவை உருவாக்கும். அவ்வறிவில் நம்மை கட்டிப்போடவும் செய்யும். நாம் கற்றவையே உண்மை என நம்மை நம்பவைக்கும். கற்றவற்றைக் கொண்டு அறியாமையை கடப்பதும் கடந்தபின் அறிவைக் கடப்பதும் இன்றியமையாதவை.

ராமகிருஷ்ண பரமஹம்சர் இதை இப்படிச் சொல்கிறார். காலில் முள் குத்தினால் இன்னொரு முள்ளைக் கொண்டு அதை எடுக்கிறோம், இரண்டையும் வீசிவிட்டு முன்னால் செல்கிறோம். அறியாமை முள்ளை அறிவால் எடுத்தபின் அதையும் வீசிவிடவேண்டும்.

பிரபஞ்சம் என்பது நம் அறிதலே. நாம் என்பதும் நம் அறிதலே. நம் அறிவென்பதும் நம் அறிதலே. அறிவோனும், அறிபடுபொருளும், அறிவும் ஒன்றேயாகும் உயர்நிலையே முழுமை ஞானத்தின் நிலை. நாராயணகுரு தன் ‘அறிவு’ என்னும் சிறிய நூலில் இதை அழகாக வகுத்துரைக்கிறார்.

*

அனேகமாக அனைத்து எழுத்தாளர்களும் மிகச்சிறந்த வாசிப்பாளர்களே. மிகமிக அபூர்வமாகவே வாசிப்பு இல்லாத சிறந்த எழுத்தாளர்கள் உருவாகிறார்கள். அவர்கள் மேலே சொன்ன செவிவழி மரபு கல்வியும் நேரடி அனுபவங்களும் மிக்கவர்களாக இருப்பார்கள். அப்படி அமைவது குறைவு. அல்லாத அனைவருக்குமே வாசிப்பு இன்றியமையாதது என்றே நான் எண்ணுகிறேன்.

ஆனால் எழுத்தாளர்கள் ஓர் எல்லையில் வாசிப்பில் இருந்து மிகவும் ஒதுங்கிவிடுகிறார்கள். மிகச்சிலரே கடைசிவரை வாசிக்கிறார்கள். அதில் இருவகை. தன் சொந்த எழுத்தில் மூழ்கி அதைத்தவிர வேறெதிலும் மனம் தோயாமலிருத்தல் முதல் வகை. அது ஒரு வகையான மூளைச்சோம்பல். அத்தகையோர் மெல்ல மெல்ல தேங்கி மறைவார்கள். ஒரு கட்டத்தில் தங்களையே பிரதி எடுப்பார்கள்.

அடுத்தவகையினர் அடிப்படையான ஒரு வாசிப்பை ஆழமாக நிகழ்த்திவிட்டு அதற்குள் நின்று தங்கள் அனுபவங்களை மீளமீளச் சிந்திப்பவர்கள். கணிசமான தத்துவ ஞானிகள் அத்தைகையவர்களே. அன்றாட விஷயங்களை, புதியவற்றை அவர்கள் அவ்வப்போது வாசிக்க வேண்டுமென்பதில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை ஏற்கனவே வாசித்துவிட்டார்கள். மிகச்சிறந்த உதாரணமாக நான் கண்டவர் பேரா ஜேசுதாசன். ஒருகட்டத்தில் அவருக்கு கம்பனும் பைபிளுமே போதுமானதாக ஆகிவிட்டது. ஜெயகாந்தன் இந்தவகை.

நான் பல சந்தர்ப்பங்களில் ஜெயகாந்தனிடம் பேசியிருக்கிறேன். அவர் சமகால எழுத்துக்களை மிகக் குறைவாகவே வாசித்திருக்கிறார். வாசிக்க அவர் மனம் ஒப்பவில்லை என்பதே சரி. ஆனால் திருக்குறள், சித்தர் பாடல்கள், பட்டினத்தார் பாடல்கள், ராமலிங்க வள்ளலார் பாடல்கள் ஆகியவற்றில் அவர் மனம் ஆழமாகத் தோய்ந்திருக்கிறது. அந்நூல்கள் அவர் மனதுக்குள் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஜெயகாந்தன் பேசும்போது அந்நூல்களின் பாடல்கள் சட்டென்று அபூர்வமான ஒளியுடன் மேலெழுந்து வருவதைக் காணலாம். சாதாரணமான பேச்சில்கூட ஒருபோதும் சாதாரணமாக நாமறிந்த பாடல்கள் வருவதில்லை. வரும்பாடல்கள் ஒருபோதும் நாம் புழங்கும் பொருள் கொள்வதுமில்லை. அவரது சிந்தனை அந்நூல்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. அவர் அந்நூல்களை இப்போது வாசிப்பதில்லை. ஆனால் அந்நூல்களை அவர் மனம் புரட்டிக்கொண்டே இருக்கிறது. அதுவும் வாசிப்பே.

நேர்மாறாக சுந்தர ராமசாமி. அவர் அடிப்படையான செவ்வியல் நூல்களை ஆழ்ந்து பயிலவில்லை என்று நான் கண்டிருக்கிறேன். அவரது மிகப்பெரிய பலவீனமே இதுதான். இந்திய மரபின் நூல்களில் அவருக்கு இளக்காரமான பார்வை இருந்தது. மேலைநாட்டு செவ்வியல் சிந்தனைகளை அவர் முறையாகக் கற்கும் கவனம் கொள்ளவில்லை. பெரும்பாலான மேலைநாட்டுச் செவ்வியல் சிந்தனையாளர்களுடன் அவருக்கு எளிய அறிமுகம் கூட இல்லை.

அவரது வாசிப்பு டி.எஸ்.எலியட் முதலான நவீனத்துவ சிந்தனைகளில் இருந்து தொடங்குகிறது. அவர் கவனித்து வாசித்த சிந்தனையாளர்கள் பெரும்பாலும் நவீனத்துவர்கள். ரஸ்ஸல், எமர்ஸன் போன்ற மேலைநாட்டவர்கள். எம்.என் ராய், ராம் மனோகர் லோகியா போன்ற இந்திய சிந்தனையாளர்கள்.

சுந்தர ராமசாமி ஒவ்வொரு கணமும் சிந்தித்தவர். ஐயமின்றி நவீனத்தமிழின் மகத்தான சிந்தனையாளர்களில் அவரும் ஒருவர். சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கான சிந்தனைமுறை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். கச்சிதமான ஒரு வரையறையை அளிக்க முயன்றுகொண்டே இருப்பது சுந்தர ராமசாமியின் வழிமுறை. அவரது பேச்சுக்களில் சட்டென்று வந்து விழும் வரையறைகள் நம் மூளையை சிலிர்த்தெழச் செய்பவை. ஆகவேதான் அவரை அணுகிய பெரும்பாலானவர்கள் தாங்களும் சிந்தனைப் பயிற்சியை அடைந்தார்கள்.

ஆனால் அவரது எழுத்துக்களில் இச்சிந்தனை வீச்சு குறைவாகவே வெளிப்பட்டது. அங்கும் சுந்தர ராமசாமி வரையறை செய்யத்தான் முயல்கிறார். ஆனால் சுதந்திரமாக அல்ல. மிகக் கவனமாக. ஆகவே பலசமயம் தீவிரம் குறைந்த சொல்வெளிப்பாடுகளாக அவை நின்று விடுகின்றன. ஆனாலும் அவை தமிழுக்கு மிக முக்கியமானவை.

சுந்தர ராமசாமி ஆராய முனைந்த பரப்பைப் பார்க்கும்போது அவரது சிந்தனைக்கருவிகள் போதாதவை. அவரிடம் இந்திய வரலாறு, தத்துவம், தமிழக வரலாறு, இலக்கிய மரபு ஆகியவற்றைப் பற்றிய தெளிவான மனச்சித்திரம் இருக்கவில்லை. நவீனத்துவ சிந்தனை மரபைப்பற்றி அவர் தெளிவாக உரையாடமுடியும், அதற்கு முன்பு செல்ல நேர்ந்தால் அவரால் எதையும் தீண்ட முடியாது.

இதையெல்லாம் இன்று அவரது கட்டுரைகளை வாசிக்கும் ஒரு நல்ல வாசகன் எளிதில் உணர முடியும். அவர் முன்னோடிச் சிந்தனைகளை மேற்கோள் காட்டுவதில்லை, விவாதிப்பதில்லை. பெரும்பாலும் பொன்மொழித் தொகுப்புகள் போல கட்டுரைகளை எழுதிச்செல்கிறார். அபூர்மாக பேசப்படும் அனைவருமே நவீனத்துவ யுகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். அவர் பேசும் கருத்துக்கள் மற்றும் அவர் நிற்கும் வெளி ஆகிய இரண்டுமே அவரது எல்லை என்ன என்பதைக் காட்டும்.

ஆக, நான் சொல்ல வருவது இதுதான். படிக்காதவர் என்று சொல்லப்படும் ஒருவர், படிக்கமாட்டேன் என்பவர், படிக்காமல் இல்லை. மரபுடனும் பெரியதோர் ஞானக்களத்துடனும் ஒவ்வொரு கணமும் அவர் உறவு கொண்டிருக்கிறார். வாசித்துக்கொண்டே இருந்த இன்னொருவர் வாசிப்பை மிக மிக எல்லைக்குட்பட்டு நிகழ்த்தினார்.

இருவருடைய சிந்தனைகளும் இன்று கிடைக்கின்றன. ஜெயகாந்தன் சிந்தனைகளை அள்ளி இறைத்தார். அவ்வப்போது தோன்றியவற்றைச் சொல்லிக் கொண்டு திரும்பிப் பாராமல் சென்று கொண்டே இருந்தார். சுந்தர ராமசாமி மிகக்கவனமாக ஒரு சிந்தனை முறையை தனக்கென கட்டி எழுப்ப முயன்றார். இருவருடைய சிந்தனைகளும் இருவகையில் முக்கியமானவை.

ஒருவரோடு ஒருவர் முரண்படும் இரு சமகாலச் சிந்தனையாளர்கள் ஒருவரை ஒருவர் நிரப்புபவர்களாக இருப்பதைக் காணலாம். சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் அப்படிப்பட்டவர்கள்.

 மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 10, 2014

***

குரு என்னும் உறவு

ஜெகெ இருகடிதங்கள்

ஜெயகாந்தன்:கடிதங்கள்

கென் வில்பர்,ரமணர்,முழுமையறிவு:ஓரு உரையாடல்

கவிதை,கென்வில்பர்-இரு கடிதங்கள்

கென் வில்பர்:இருகடிதங்கள்

தன்னை விலக்கி அறியும் கலை

கலை இலக்கியம் எதற்காக?

வாசிப்பும் எழுத்தும்எதிர்வினையும்

தொற்று தந்த மாற்று வழிக் கல்வி

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009]

முந்தைய கட்டுரைவாழ்தலை முடிவுசெய்தல்- இரு கேள்விகள்
அடுத்த கட்டுரைபுழுக்களின் பாடல்-சரவணக்குமார்