தொடர்ச்சியாக நீண்ட பயணங்கள். சொல்லப்போனால் நான் டிசம்பர் பதினாறாம் தேதி வீட்டைவிட்டுக் கிளம்பியபின் தொடர்ந்து பயணத்திலேயே இருக்கிறேன். நான் எழுதும் மணிரத்னத்தின் படம் 20 ஆம் தேதி வாக்கில் படப்பிடிப்பு தொடங்கப்போகிறது. நான் எழுதும் சீனு ராமசாமியின் படமும் கிட்டத்தட்ட அதே நேரத்தில் ஆரம்பமாகிறது. அந்நேரத்தில் நான் இந்தியப்பயணத்தில் இருப்பேன். ஆகவே எல்லாவேலைகளையும் முடித்தாகவேண்டியிருந்தது.
சென்னைக்கு இருபத்திரண்டாம் தேதி சென்று சேர்ந்தேன். இருபத்து மூன்றாம் தேதி தமிழ்மரபு அறக்கட்டளை உரை. அங்கே இங்கே அத்து அலைந்து இருபத்தேழாம்தேதி காலை ஈரோடு வந்தேன். பொதுவாக நான் ரயில்பயணங்களில் மிக நன்றாகத் தூங்கிவிடுவேன். ஆனால் விடியற்காலையில் இறங்கவேண்டும் என்றால் என்னதான் முன்னேற்பாடுகள் செய்திருந்தாலும் என்னால் தூங்கமுடியாது. சிலமுறை இறங்குமிடம் தாண்டிச்சென்று இறங்கி அவஸ்தைப்பட்டதன் விளைவு. ரயிலில் உதவியாளரிடம் என்னை எழுப்பிவிடும்படிச் சொல்லிக் கைபேசியில் எழுப்பியை அமைத்து வைத்தும்கூட என்னால் தூங்கமுடியவில்லை.
ஈரோட்டில் கடும்குளிரில் அதிகாலையில் விஜயராகவன் ரயில்நிலையம் வந்திருந்தார். விஜயராகவனின் வீட்டுக்குச்சென்றோம். அவரது பெரிய நாய் ஜில்லி [ லாப்ரடார் ராட்வீலர் கலவை. புத்தரையும் அலக்ஸாண்டரையும் கலந்தது போல ஒரு பரிசோதனை முயற்சி. அலக்ஸாண்டர் தோற்றத்தில் மட்டும் எஞ்சினார்.] என்னை அடையாளம் கண்டுகொண்டு கம்பிக்கதவு வழியாகக் கைநீட்டி வரவேற்றது. அவரது வீட்டில் இரண்டுமணிநேரம் தூங்கினேன். மோகனரங்கன் வந்தபோது விழித்துக்கொண்டேன். கொஞ்ச நேரத்தில் கிருஷ்ணன் வழக்கறிஞர் உடையில் வந்தார். பேசிக்கொண்டிருந்தபின் கிருஷ்ணன் சிறியவேலையாக நீதிமன்றம் சென்று வருவதாகச் சொல்லிவிட்டுச் சென்றார்.
விஜயராகவன் இல்லத்தில் காலைச்சாப்பாடு. நண்பர்கள் எல்லாரும் வருவதற்குப் பன்னிரண்டு மணி ஆகும் என்றார்கள். அதன்பின் சேர்ந்து விஜயராகவனின் காரில் அவினாசி அருகே உள்ள காதுகேளாதோர் பள்ளிக்குச்செல்வதாக ஏற்பாடு. நண்பர்கள் வர வர விஜயராகவன் வீட்டுமுன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஈரோட்டில் ஒருவரை ஒருவர் சந்தித்ததுமே மாறிமாறி ‘வாரி’க்கொள்ளுதல் வழக்கம். இலக்கிய விவாதம் அதன்பின்னர்தான். சிரிப்பு இல்லாமல் ஓர் இலக்கிய- தத்துவ விவாதம் நடந்தால் அது விவாதமே அல்ல என்பதுதான் என்னுடைய எண்ணம். நித்யா அதை அடிக்கடி வலியுறுத்திச் சொல்வதுண்டு.
விஜயராகவன் கேட்டார், வாழ்க்கையில் தொழில்செய்கிறோம். அதில் வெற்றி. நேர்மையாகத்தான் இருந்தோம் என்ற எண்ணமும் உள்ளது. குடும்ப வாழ்க்கையும் நிறைவுதான். ஓரளவு கலை இலக்கிய ஆர்வமும் உள்ளது. வாசிக்கிறோம், இசைகேட்கிறோம்,பயணம் செய்கிறோம். அவ்வளவுக்கு அப்பாலும் ஓர் நிறைவின்மை வாழ்க்கையில் எஞ்சியிருக்கிறதே ஏன் என்று.
நான் சொன்னேன். அந்த நிறைவின்மையே எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்கிறது. நிறைவின்மை இருவகை. இனிய நிறைவின்மை நம் வாழ்க்கையின் சாதனைதான். அது மேலும் மகிழ்ச்சியை நோக்கியே கொண்டு செல்கிறது. கசக்கும் நிறைவின்மை இருக்கும் என்றால் வாழ்க்கை வாழப்படவில்லை என்றே பொருள்.அதைப்பற்றிக் கொஞ்சம் தீவிரமாக உடனே வேடிக்கையாக என நிறையப் பேசிக்கொண்டிருந்தோம்.
இந்தியப்பயணத்துக்கான மனநிலை வந்துவிட்டிருந்தது. காவல்கோட்டத்துக்கு சாகித்ய அக்காதமி கிடைத்ததனால் வசந்தகுமார் வரவில்லை. நாவல் 3000 பிரதி மேலதிகமாக அச்சிடப்பட்டிருப்பதாகத் தகவல். அவருக்கு பதில் காத்திருப்போர் பட்டியலில் அடுத்து இருந்த நண்பர் திருப்பூர் ராஜமாணிக்கம் [ கட்டுமானப் பொறியியலாளர்] அந்த இடத்தைப்பெற்றார். ஒருபயணம், சென்ற பயணம் பற்றிய நினைவுகளைக் கிளறிவிட்டுவிடுகிறது. அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம்.
காரில் திருப்பூர் சென்றோம். அங்கே ராஜமணிக்கம் அவர்களின் இல்லத்தில் சாப்பிட்ட்டோம். நான் சமீபமாக உணவைக் குறைத்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் நல்ல விருந்துகள் அந்த சுயக்கட்டுப்பாட்டைத் தகர்க்கின்றன. காலையில் விஜராகவன் வீட்டுச்சாப்பாடும் சரி, மதியம் ராஜமாணிக்கம் வீட்டுச்சாப்பாடும் சரி, அற்புதமானவை. வழக்கறிஞர் பார்த்திபனும் அவர் நண்பரும் ராஜமாணிக்கம் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.
சாப்பிட்டபின் அவினாசி வழியாகக் கோதப்பாளையம் கிராமம் சென்றோம். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் கிளையாக அங்கு ஓர் உண்டு-உறைவிடப்பள்ளி உள்ளது. நூற்றியிருபது காதுகேளாத பிள்ளைகள் படிக்கிறார்கள். திருப்பூர் காதுகேளாதோர் பள்ளியின் நிறுவனரான முருகசாமி அய்யா அவர்கள் இதையும் நடத்துகிறார். குக்கூ அமைப்பை நிகழ்த்திவரும் சமூகசேவகர் சிவராஜ் அவர்கள் இயல்வாகை என்ற அமைப்பை நிறுவி மரம்நடும் செயலை செய்துவருகிறார். அவரும் காதுகேளாதோர் பள்ளியும் இணைந்து அளிக்கும் விருது அது.
இரு காதுகேளாத குழந்தைகள் வந்து சிரித்தபடியே ஒலியும் சைகையுமாக எங்களை வரவேற்றன. அழகிய குழந்தைகள். மற்ற பிள்ளைகளுக்கிருக்கும் கூச்சம், ஒதுக்கம் ஆகியவற்றுக்குப் பதிலாகப் பிறரிடம் பேச பழக அதீத ஆர்வம் கொண்ட குழந்தைகளாக இருந்தன.நாங்கள் செல்லும்போது விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. சிவராஜ் தட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தார். அரங்கசாமி கோவையில் இருந்துவந்துசேர்ந்தார்.
இயல்வாகை அமைப்பு நடப்போகும் மரங்களுக்கான நாற்றுப்பண்ணையை, அவர்களின் நண்பரும் சமூகசேவகருமான டேவிட் திறந்து வைத்தார். கிருஷ்ணன் முதல் விதை ஊன்றினார். அக்குழந்தைகள் அனைவருக்குமே சிவராஜ் யானைடாக்டர் கதையை சொல்லியிருந்தார். பெரும்பாலான குழந்தைகள் யானைடாக்டர் கதையை வாசித்துமிருந்தன. சின்னக்குழந்தைகள் என்னையே யானைடாக்டர் என நினைத்தன. ஒரு சின்னப்பெண் சொன்னதை ஆசிரியை சித்ரா மொழியாக்கம்செய்தபோது அது அப்படித்தான் சொன்னது. சித்ராவின் சற்றும் சலிக்காத ஊக்கமும் ஆர்வமும் ஆச்சரியமளிப்பது.
டாக்டர் கதையை வாசித்து அதைப்பற்றி வரைந்த ஓவியங்களின் கண்காட்சி ஒன்றிருந்தது. கிட்டத்தட்ட ஐம்பது நீர்வண்ண ஓவியங்களும் சில வண்ணப்பென்சில் ஓவியங்களும். நான் உயர்நிலைப்பள்ளித் தரத்துக்குக் கீழே இந்த அளவுக்கு படைப்பூக்கம் கொண்ட ஓவியங்களைக் கண்டதே இல்லை. பல பள்ளிகளில் ஓவியங்களைக் கண்டிருக்கிறேன், அவற்றில் திறமை தெரியும். ஆனால் படைப்பூக்கம் இருக்காது. ஓவியக்கலை அளிக்கும் ‘கண்ணால்மட்டுமே காணப்பெறும் தனித்தன்மை’ இருக்காது. எண்ணங்களும் உணர்ச்சிகளும் கலந்த காட்சிவெளி இருக்காது. அவை இந்த ஓவியங்களில் இருந்தன
[யானைடாக்டருக்குக் குழந்தைகள் வரைந்த படங்களில் ஒன்று]
பலகாட்சிகளில் உள்ள கற்பனை பிரமிக்கவைத்தது. மரத்தில்சாய்ந்து நின்று சாகும் யானை, வெள்ளெலும்பாக மாறிக் கிடக்கும் யானை, அறுவை சிகிழ்ச்சை செய்யப் படுத்திருக்கும் யானை, புல்வெளியில் குட்டியுடன் நடந்துசெல்லும் யானைக்கூட்டம், யானைடாக்டருக்கு வாழ்த்துரைக்கும் யானைகள், கோயில்முன் நின்று ஆசி கொடுக்கும்போது தன் காட்டுவாழ்க்கையைக் கனவுகாணும் யானை, பக்கெட்டில் குளித்தபடி காட்டுத்தடாகத்தைக் கனவுகாணும் யானை, புழுவே குழந்தையாக ஆகும் நிலை என வகைவகையான கற்பனைகள்! ஒரு சின்ன துளி சோப்பு அண்டாநிறைய நுரையாக ஆகி வண்ணம்பொலிவது போல என் கதை பிரம்மாண்டமானதாக ஆகிவிட்டிருந்தது. உண்மையில் ஓர் எழுத்தாளன் எதிர்பார்க்கக்கூடிய பெரும் பரிசு இதுவே!
பிள்ளைகள் எடுத்த புகைப்படங்கள் ஒரு தனிக் கண்காட்சியாக இருந்தன. சின்னத் தீப்பெட்டியில் ஊசியால் துளைபோட்டு அவர்களே செய்த லென்ஸ் இல்லாத காமிராக்களில் ஃபிலிமைப் பயன்படுத்தி எடுக்கப்பட்ட அருவப் புகைப்படங்களில் உள்ள கற்பனைவளம் பிரமிப்பூட்டியது. குறிப்பாக இந்தக்குழந்தைகளுக்கு நிறம் பற்றிய அபாரமான கவ்னிப்பு உள்ளது. சாதாரண குழந்தைகள் நிறங்களை தனியாக கவனிப்பதில்லை, அவற்றை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றன என்று இந்த ஓவியங்களையும் படங்களையும் பார்க்கையில் தோன்றியது.
இக்குழந்தைகளுக்குப் புகைப்படக்கலையைக் கற்பித்த இருவரையும் வினோத் என்ற நண்பரையும் சந்தித்தேன். சமீபத்தில் ஆங்கோர்வாட் சென்றிருந்ததாகச் சொன்னார். அவர் ஹம்பிக்கும் அவசியம் சென்றாகவேண்டும் என்று சொன்னேன். சிவராஜுடன் இணைந்து பணியாற்றும் நண்பர் ஸ்டாலின் வந்திருந்தார். தொடர்ந்து பல நண்பர்களைச் சந்தித்தேன். எல்லாருமே இலட்சியவாதத்தையே வாழ்க்கையாகக்கொண்டவர்கள். அவர்கள் வாழ்க்கையின் இலக்கும் மகிழ்ச்சியும் சேவை. ஒருவகையில் நாம் வாழும் வாழ்க்கைக்கு அப்பால் வேறு எங்கோ இருப்பவர்கள்.
ஈரோட்டில் இருந்து சூழியல் மற்றும் ஏழைகளுக்கான மருத்துவத்தில் பணிபுரியும் ஜீவானாந்தம் , மலைவாழ்மக்களுக்காகக் கல்விப்பணி புரியும் வி.பி.குணசேகரன் கோவை ரவீந்திரன் எனப் பலர் வந்திருந்தார்கள். இலட்சியவாதம் அவர்களை எல்லாம் ஒரே இடத்தை நோக்கிக் குவிக்கிறது போலும். திருப்பூரில் இருந்து எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வந்திருந்தார்.
அறம் வரிசைக் கதைகள் வெளிவரும்போது பலர் ‘இப்போது அத்தகைய மனிதர்கள் இல்லையே’ என்ற வகையில் எனக்கு எழுதியிருந்தார்கள். ஒவ்வொருநாளும் சுயநல லௌகீகத்திலேயே மூழ்கியிருக்கும் வாழ்க்கையில் அவர்கள் நம் கண்களுக்குப் படுவதில்லை என்பதே உண்மை என எழுதினேன். நமக்குத்தெரிவதில்லை என்பது நம் பார்வையின்மை மட்டுமே. நமக்குத் தெரிவதில்லை என்பதனாலேயே அந்த உலகம் இல்லை என்று நாம் கற்பனைசெய்துகொள்கிறோம்.அதைவிட அப்படி நம்புவது நம்மை நம்முடைய எளிய சுயநல லௌகீகத்தில் குற்றவுணர்ச்சி இல்லாமல் மூழ்கி வாழ அனுமதிக்கிறது. அவ்வுலகை நிராகரிப்பதென்பது நம்முடைய வாழ்க்கைக்கான தேவையாக ஆகிறது.
அறம் வரிசைக் கதைகள் வெளிவந்தபோது அவை முன்வைக்கும் இலட்சியவாதத்தை மொட்டை அறிவுஜீவித்தனத்தால் நிராகரித்தும் கிண்டலடித்தும் எழுதிய பலரை என் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். நான் அவர்களை வழக்கம்போல ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. ஏனென்றால் அவர்களில் பலரின் தனிவாழ்க்கையை நான் அறிவேன். சல்லித்தனமான வாழ்க்கையில் உழலும் சல்லித்தனமான மனிதர்கள். அந்த சல்லித்தனம் அவர்களுக்கே அந்தரங்கமாகத் தெரியவும் செய்யும். அந்தச்சிறுமையை அவர்களாலேயே தாங்கிக்கொள்ளமுடியாது. அந்த வாழ்க்கையை, அந்த சுயத்தை அவர்கள் நியாயப்படுத்திக்கொள்ளவேண்டும், இல்லையேல் வாழமுடியாது. ஆகவே அதற்குமேல் அதைத்தாண்டிச்செல்ல ஒரே வழி அதற்குமேலுள்ள எல்லாவற்றையும் நிராகரிப்பதே. அது ஒரு சல்லித்தனமான வழி.
ஆனால் நம்மைச்சுற்றி வாழும் நம்மைவிட மேலான மனிதர்களை, அருஞ்செயல்களைச் செய்பவர்களை சந்திப்பதும் அவர்களை அங்கீகரிப்பதும் சாதரண விஷயம் அல்ல. அது நம்மை இடைவிடாது தகர்த்தபடி இருக்கிறது. நம்மைக் குற்றவுணர்ச்சி கொள்ளவும் நிம்மதி இழக்கவும் வைக்கிறது. ஆனால் அதனூடாகவே நாம் நம்மைப்பற்றி மேலும் மேலும் நிறைவுகொள்ளும் வாழ்க்கையை நோக்கிச் செல்கிறோம்.
[ குக்கூ சிவராஜ்]
இன்று என் வாசகர்களில் பெரும்பாலானவர்கள் முப்பது வயதுக்குள் உள்ளவர்கள். இன்னும் இருபது வருடம் வாழ்ந்தவன் என்றவகையில், சில தீவிரமான அனுபவங்களின் வழியாகச்சென்றவன் என்றமுறையில், சிலவற்றைக் கற்றுப் பயணம் செய்து அறிந்து எழுதியவன் என்ற வகையில் நான் சொல்லக்கூடிய ஒன்றுண்டு. வாழ்க்கை ஒன்றும் அதிகநீளம் உள்ளதல்ல. அதிலும் இன்றுள்ள அவசரவாழ்க்கையில் என்ன ஏது என நிதானிப்பதற்குள் பாதிவாழ்க்கை சென்றிருக்கும்.
இவ்வாழ்க்கையில் பின்னால் திரும்பிப்பார்க்கையில் சென்று போன நம் வாழ்க்கை நமக்கே நிறைவை அளிக்கவேண்டும். ஆம்,நான் வாழ்ந்திருக்கிறேன் எனத் தோன்றவேண்டும். அதற்கு அப்பால் வாழ்க்கைக்கு என இலக்கோ பொருளோ இல்லை. இருக்கலாம், அதை நாம் ஒருபோதும் அறிந்துகொள்ளமுடியாது. இந்தப் பிரபஞ்சத்தின், இந்த உலகத்தின் ஒட்டுமொத்தப்பெரும்போக்குடன் சம்பந்தப்பட்டது அது. அதில் நாம் துளியினும் துளி. அதில் நம் பங்களிப்பு என்பதை நம்மால் ஒருபோதும் நம் அறிவைக்கொண்டு அறிந்துவிடமுடியாது. நாம் முடிந்தவரை நாட்களை நம் அகத்துக்கு மகிழ்வளிக்கும் விதமாகச் செலவழித்திருக்கிறோமென நினைத்தோம் என்றால் நம் வாழ்க்கை நிறைவுற்றது என்றே பொருள்.
அப்படித்தோன்றவேண்டுமென்றால் உண்மையிலேயே நமக்கு எது மகிழ்ச்சியை அளிக்கிறதோ அதை நாம் செய்திருக்கவேண்டும். சாதாரணமாக நாம் வெற்றி, உடைமை இரண்டையுமே மகிழ்ச்சி என எண்ணப் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம். இரண்டுக்கும்தான் கடுமையாக உழைக்கிறோம், பெரும்பகுதி வாழ்க்கையை செலவிடுகிறோம். அவை கண்டிப்பாக முக்கியமானவை. ஆனால் அவை மகிழ்ச்சியை அளிப்பதில்லை என்பதைத்தான் நம்முடைய ஒவ்வொரு உடைமையை நாம் அடையும்போதும், ஒவ்வொரு வெற்றியை நாம் சந்திக்கும்போதும் அறிய நேரிடுகிறது.
உண்மையான மகிழ்ச்சி வேறெங்கோ இருக்கிறது. கலையில், இலக்கியத்தில், தொழில்நுட்பத்தில், சிந்தனையில், சேவையில், சாகசத்தில் என எங்கெங்கோ மனிதர்கள் அதைக் கண்டுகொள்கிறார்கள். ஆனால் ஒட்டுமொத்தமாக இப்படிச் சொல்லலாம். எங்கே ஒருவனின் தனித்தன்மை, அதாவது அவனுக்கே உரிய அக ஆற்றல், சிறப்பாக வெளிப்பாடு கொள்கிறதோ அங்கேதான் உண்மையான மகிழ்ச்சி உள்ளது. ஆற்றல் முழுமையாக செயலாக மாறுமிடத்தையே வாழ்க்கையின்பம் என்று சொல்கிறோம். ஆனால் அதைக் கொஞ்சமும் செயலாக ஆக்காமல் அந்த முழுஆற்றலையும் சும்மா உணர்ந்தபடி அமர்ந்திருத்தல் யோகம். அது வேறு இன்பம். அது கடல். வாழ்க்கையின்பம் அதன் அலை.
உடைமையும் வெற்றியும் லௌகீக வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. மிகச்சில இலட்சியவாதிகளால் மட்டுமே அவற்றைத் துறந்து எது அவர்களின் இன்பமோ அவற்றை மட்டுமே நம்பி வாழமுடியும். பிறரால் உடைமை வெற்றி இரண்டுக்கும் மேலே காலூன்றி நின்றபடிதான் தனக்கான மகிழ்ச்சியைத் தேடமுடியும். ஆனால் உடைமை வெற்றி ஆகியவற்றில் ஓர் எல்லையை வகுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. அது ஒரு பக்கம் மட்டுமே என்று உணரவேண்டியிருக்கிறது.
[விருது படம்]
இந்த சமநிலையை அடையாதவர்கள், ஏதோ ஒருவகையில் உண்மையான மகிழ்ச்சியை வாழ்க்கையில் தொலைத்து அர்த்தமற்றவற்றின் பின்னால் ஓடிக்களைத்தவர்கள், ஐம்பதுக்குப்பின் கசப்பும் வெறுப்பும் குரோதமும் நிறைந்தவர்களாக ஆகிறார்கள். அவர்களே பெரும்பாலும் இலட்சியவாதத்தை நிராகரிக்கவும் கிண்டல் செய்யவும் முன்னிற்கிறார்கள். இலட்சியவாதம் என்றால் வேறொன்றுமில்லை, ஒருவர் தனக்கு உண்மையான நிறைவை அளிக்கும் விஷயங்களைச் செய்வதும் பிறவற்றைச் செய்யாமலிருப்பதும்தான். ஓர் இலட்சியவாதி தியாகம் செய்கிறான் என்றால் அதில்தான் அவனுடைய முழுமையான பேருவகை இருக்கிறது, நிறைவு இருக்கிறது என்பதனால்தான்.
நம்மைச்சுற்றி இலட்சியவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள்தான் நாம் நிற்கும் நிலத்தைத் தாங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாம் வாழும் வாழ்க்கையை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள்தான் நம் சமூகத்தில் நம்பிக்கையை, கருணையை, நீதியுணர்ச்சியை, இலட்சியக்கனவை நிலைநிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நம்பித்தான் நாம் ‘இது நியாயமா?’ என்று கேட்கிறோம். அவர்களை நம்பித்தான் நம் பிள்ளைகளைத் தனியாகப் பள்ளிக்கூடம் அனுப்புகிறோம்.
பிற அனைவரையும் விட மானுடத்தீமையின் உச்சங்கள் எனக்குத்தெரியும். என் எழுத்தின் பெரும்பகுதியில் அவற்றைத்தான் சித்தரித்துமிருக்கிறேன். தமிழில் என்னைவிடத் தீவிரமாக அவற்றைச் சித்தரித்த எவருமில்லை என்றே நினைக்கிறேன். ஆனாலும் மனிதன் அந்த தீமைகளால் ஆனவன் என்று சொல்லமாட்டேன். அவனுள் உள்ள இலட்சியவாதம், அதனை நான் அறம் என்பேன், அவனுடைய பரிணாமத்தில் அவன் மெல்லமெல்ல உருவாக்கிக்கொண்ட ஒன்று. பல லட்சம் வழுக்களால், பிழைகளால் அவன் கற்றுக்கொண்டது. மானுடப்பரிணாம வரலாற்றில் இன்றுவரை அவன் அடைந்த உச்சகணம் என்பது இக்கணமே. இங்கே அவன் அந்த இலட்சியவாதத்தைப்பற்றிக்கொண்டுதான் ஏறி வந்திருக்கிறான். பலகோடிமுறை சறுக்கினாலும்கூட.
அறம் வரிசைக் கதைகள் அந்த இலட்சியவாதிகளில் சிலரைப்பற்றிய கதைகள். என்னைச்சுற்றி நான் என்றுமே அவர்களைப்போன்ற மகத்தான மனிதர்களை, மாபெரும் இலட்சியவாதிகளைக் கண்டுவந்திருக்கிறேன். அவர்களே என் ஞானத்தின் ஊற்று. என் நம்பிக்கையின் பற்றுக்கோடு. இன்னும் சிலநூறு இலட்சியவாதிகளைப்பற்றி என்னால் எழுதமுடியலாம்.
அறம் கதைத்தொகுதிக்கு அளிக்கப்பட்ட இரண்டாவது விருது இயல்வாகை -குக்கூ அமைப்பின் விருது. அது எந்த இலட்சியவாதத்தைப் பேசுகிறதோ அதையே வாழ்க்கையாகக் கொண்ட மனிதர்களால் அளிக்கப்படுவது. அந்நூலின் கதைநாயகர்களே வந்து விருதளிப்பது போன்றது.
பெரியவர் முருகசாமி அவர்களிடமிருந்து நான் முகம் விருதைப் பெற்றுக்கொண்டேன். குக்கூ சிவராஜ் உரையாற்றினார். அதன் பின் நான் சிறிய உரை ஆற்றினேன். மகாபாரதத்தில் சொர்க்கம் செல்லும் பாண்டவர்களின் கதை. தருமன் தன்னை அதுகாறும் பின்தொடர்ந்து வந்த நாயை சேர்க்காமல் மோட்சவிமானத்தில் ஏறுவதில்லை என்கிறான். என் தர்மத்தைக் கைவிட்டு நான் சொர்க்கம் செல்லவேண்டுமென்றால் எனக்கு அது தேவையில்லை என்கிறான். தன் நலனுக்காக தர்மத்தைக் கைவிடாத மனிதர்களின் கதைகளே அறம் என்று சொன்னேன்.
குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெறுமே ஓசையின் அதிர்வை மட்டுமே கொண்டு தாளம் தவறாமல் அவர்கள் ஆடிய நடனத்தின் கச்சித்தத்தன்மை பிரமிப்பூட்டியது. நண்பர்கள் அனைவருக்குமே ஓர் அற்புதமான அனுபவம் அது .
இரவு ஏழரை மணிக்கு விடைபெற்றுக்கொண்டோம். எனக்குப் பத்தரை மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில்.செல்லும்போது திருப்பூரில் இருது நண்பர் சந்திரகுமார் கூப்பிட்டார். உணர்ச்சிகரமான நிலையில் இருந்தார் ‘ஜெ, இனிமேல் அறம் நூலுக்கு ஒரு விருதையும் பெற்றுக்கொள்ளாதீர்கள்…இதற்குமேலே யார் கொடுக்கப்போகிறார்கள்’ என்றார்
விருது புகைப்படங்கள்
குழந்தைகளின் படங்கள் புகைப்படங்கள்
குக்கூ குழந்தைகள் வெளி
தொடர்புக்கு :9965689020, 9942118080 , 9994846491