பூமணி-கடிதங்கள்

அன்பிற்குரிய ஜெயமோகன்,

விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு பூமணிக்குக் கொடுத்திருப்பது குறித்து மிகவும் மகிழ்கிறேன். பெருமைப்படுத்த வேண்டிய ஆளுமைகளை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். அத்துடன் அவர்களின் படைப்புகளைக் குறித்து நூலும் எழுதுகிறீர்கள். உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.
அன்புடன்,
பெருமாள்முருகன்
www.perumalmurugan.com

அன்புள்ள பெருமாள்முருகன்,

நன்றி.

இது ஒரு அவசியமான விஷயம். இதைச் செய்யவேண்டுமெனப் பிறரிடம் பல ஆண்டுகளாகச் சொல்லி வந்திருக்கிறேன். சரி என்று நானே ஆரம்பித்துவிட்டேன். ஆனால் இந்த விருதுகளில் ஒரு சின்ன குறை உள்ளது. ஆ.மாதவன் அதைச் சொன்னார் ‘நீ எனக்கு விருது கொடுத்தது என் பையன் எனக்குச் செய்தது மாதிரி’ என்று.  ஆம், இந்த விருதை நானோ நீங்களோ ஆ.மாதவனுக்கோ அல்லது பூமணிக்கோ கொடுப்பதென்பது உண்மையில் அவர்களின் சொந்தப் பிள்ளைகள் அவர்களுக்கு விழா நடத்துவதுபோல. நம் அமைப்பின், சூழலின் அங்கீகாரம் மிச்சமிருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டவே இதெல்லாம். ஆனால், ஒரு பெரிய இளைய வாசகர்கூட்டம் கூடி அவரிடம் பேசியதுதான் இதன் உண்மையான அங்கீகாரம்.

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

ஜெ

இந்தக்கட்டுரை திரு.பூமணி அவர்களின் சூழல் மற்றும் அவரின் சுயதேடல் இட்டுச் சென்ற இடங்கள், மட்டுமல்லாது அவரின் எழுத்து சார்ந்த தேர்வு அதற்கு அவர் பட்ட வாதைகளைத் தெளிவாக இயம்பியது. அய்யா.கி.ரா வின் எழுத்து அவரைப்போல எப்போதும் மார்க்கண்டாயுசுடையது. மண்ணையும் மனிதர்களையும் சுமந்து வருவது மட்டுமின்றி வசீகரம் கூடியது. இளம் எழுத்தாளர்களுக்கு இன்றும் பல (எழுத்து/சாப்பாடு/வாழ்வு) நேர்த்திகளைக் கற்றுக்கொடுப்பவர். ஓடும் ரயிலில் தன்னைச் சுற்றியும்,வெளியிலும் என்ன நடக்கிறது என பார்க்காமல் ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு இருப்பவர்களை அந்தப் புத்தகத்தை அவர்களின் முகத்தோடு வைத்தபடியே சுட வேண்டும் என்பார்.

தேவதச்சன் சார் எப்போதும் நான் பேச விரும்பும் மனிதர்களில் ஒருவர். அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எப்போதும் எதாவது இருக்கும். ஒரு “ஃபேண்டஸி”யை எதிராளியின் மனதில் எளிதில் விதைத்து விடுவார். முதல் பார்வையில் நான் எமாந்துபோனேன் இவரிடம். போர்ஹே, லா.ச.ரா, ராமசாமி, ஜெமோ, கோணங்கி, கென் வில்பர், காஃப்கா எனத் தன்னை எப்போதும் புதுப்பித்துக் கொண்டே இருப்பவர். ஸ்பானியப் பழமொழி ஒன்றை ஆங்கிலத்தில் படித்தேன் ” The person who is resistant to change is destained to perish” என. அதை மனத்தில் கொண்டிருப்பாரோ தேவதச்சன்!!!

மேற்சொன்ன இருவரும் திரு.பூமணி அவர்களை பாதித்ததில் வியப்பில்லை. இலக்கிய ரசனையில் முரண்பாடுகள் இருப்பினும்.

மேலும், கட்டுரையின் இறுதிப் பத்தியில்

” சிங்கில் ஜத்மாத்தஸ் பூமணிக்குப் பிரியமான நாவலாசிரியர். பூமணியின் ‘பிறகு’ நாவலில் சிங்கிஸ் ஜத்மாத்தலின் கன்னிநிலம் போன்ற நாவல்களின் அழகியல் பாதிப்பினைக் காணமுடியும்.” என உள்ளது

மேற்கண்ட மூன்று வரிகளில் “ Chinghiz Aitmatov (1928-2008)சிங்கிஸ் ஐத்மாதோவ் என்று இருந்தால் வாசகர்களுக்கு அந்த நாவலாசிரியரை பற்றித் தேடுவதோ வாசிப்பதோ எளிதாக இருக்கும். மேலும் சிங்கிஸ் ஐத்மாதோவின் நாவல்கள்
Jamilya
The White Ship
The Day Lasts More Than a Hundred Years
போன்றவை.

Mikhail Sholokhov (1905 -1984) மிக்கையீல் ஷோலகோவ் எழுதிய

Virgin Soil Upturned ( கன்னி நிலம் என தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது)
And Quiet Flows the Don ( ஸ்டாலின் பரிசு1941 !!! நோபல் பரிசு1965 பெற்ற நாவல்)
The Don Flows Home to the Sea

உங்களின் தளத்தில் சரிசெய்து விடவும். வாழ்த்துக்கள்

நன்றி, வணக்கம்
பாம்பாட்டிச்சித்தன்

அன்புள்ள பாம்பாட்டிச்சித்தன்

நன்றி. மெய்ப்புப்பிழை, திருத்திவிடுகிறேன்.

சிங்கிஸ் ஐத்மாத்தவ் ஒரு காலகட்டத்தில் தமிழக முற்போக்கு வாசகர் நடுவே மிகவும் பிரபலம். அவரது அன்னைவயல் , ஜமில்யா போன்ற நாவல்களைத்தான் டி.வை.எஃப்.ஐ போன்றவற்றில் சேர்பவர்களுக்கு முதலில் வாசிக்கக் கொடுப்பார்கள். மூன்று ரூபாய்தான் முதலில் விலை இருந்தது. எங்கள் தொழிற்சங்கங்களிலும் அவ்வழக்கம் இருந்தது. நானே இருபது பிரதிகள் வரை வைத்திருந்தேன். இப்போதெல்லாம் அந்தப் போக்கு அப்படியே மறைந்துவிட்டது. அன்னைவயலைத்தான் கன்னிநிலம் என்று நினைவுப்பிழையாகச் சுட்டியிருந்தேன்.

கோயில்பட்டியில் இலக்கியரசனையைத் தீர்மானிப்பதில் ருஷ்ய மொழியாக்கங்கள் எப்போதும் பெரும்பங்காற்றியிருக்கின்றன. தேவதச்சன்-தமிழ்ச்செல்வன் காலத்தில் மட்டும் அல்ல. கு.அழகிரிசாமி-கி.ராஜநாராயணன் கடிதங்களில்கூட ருஷ்ய மொழியாக்கங்கள் பற்றிய விவாதம் இருந்துகொண்டே இருப்பதைக் காணலாம்

ஜெ

முந்தைய கட்டுரைஇலட்சியவாதத்தின் நிழலில்…
அடுத்த கட்டுரைஅறம்-எஸ்.கெ.பி.கருணா