சீனு-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

கடலூர் சீனுவின் எழுத்து பற்றி நீங்கள் கூறியது உண்மை.’அன்பை வாங்கிக் கொள்ளுதல்’ , கடிதத்தில் நான் பெற்ற மன எழுச்சிமூலம் அதை உணர்ந்தேன். சிங்கங்களைப் பற்றிய டாகுமெண்டரி குறித்துஅவர் எழுதிய பத்தி அருமை.

சீனுவுடைய பதிவுகளைப் படிக்கும்போது உணர்சிகளும் பின்னர் காட்சிகளும் வருகின்றன ஆனால் வண்ணங்கள் இல்லாமல். ஓராயிரம் வயலின்களின் இசை, அதை சரிக்கட்டிவிடுகிறது.

அன்புடன்
குரு, லாகோஸ் , நைஜீரியா

அன்புள்ள குருமூர்த்தி

எப்போதும் எழுத்துக்களுக்கு ஆதார விசையாக இருப்பது உண்மையான மன எழுச்சி. உத்தி , நடை எல்லாமே அதன் வழியாகவே உருவாகின்றன. நியாயப்படுத்தப்படுகின்றன. அதுவே இயல்பானது.

கடலூர் சீனுவின் நேர்மையான உணர்ச்சிகளே அக்கடிதங்களின் பலம்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நான் கடலூர் சீனு நண்பர் கண்ணதாசன். சீனு அடிக்கடி சொல்வார் எனக்கு ஜெயமோகன் நல்லா தெரியும் என்று. எனக்கு எப்போதும் சிறிது சந்தேகம் இருந்து கொண்டு இருந்தது. நான் நிரூபிக்கிறேன் என்று நாட்டியாஞ்சலி விழாவிற்கு அழைத்துக் கொண்டு வந்தார். அப்போது நான் உங்களை சந்திக்க முடியவில்லை.

ஆனால் சீனுவை நம்பினேன். சரி பையன் ஏதோ ஒண்ணு பண்றான் என்று நினைத்தேன். ஆனால் உங்களுடைய அன்புள்ள ஜெயமோகன் முன்னுரை படித்த பிறகுதான் தெரியுது நான் ஒரு நல்ல திறமைசாலியிடம் நட்பு கொண்டிருக்கிறேன் என்று. அவர் சொல்வார் நான் ஜெயமோகன் கூட அங்க போனேன் இங்க போனேன் என்று. நான் சும்மா கதை விடாதப்பா,அவர் இருக்கிற பிஸிக்கு உன்ன எங்க பார்க்கப் போறார்னு சொல்வேன். ஆனால் அவர் உங்களிடம் தினமும் பேசிக்கொண்டிருக்கிறார் என்று நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது.

நான் உங்கள் தளத்தைப் பார்ப்பேன் எனக்கு இலக்கியம் புரியாது. புரியாது என்று சொல்வதை விட எனக்குத் தெரியாது. சீனு தான் சொன்னார் நான் எழுதிய கடிதங்களை ஜெயமோகன் சார் புத்தகமாகப் போடுகிறார் அதற்கு முன்னுரை எழுதியிருக்கார் என்று. அதைப் படித்த பிறகுதான் தெரிந்தது உங்கள் இருவருக்குமான நட்பு. நான் சீனுவின் நண்பன் என்று சொல்வதற்குப் பெருமைப்படுகிறேன் பிழை இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி

கண்ணதாசன்

அன்புள்ள கண்ணதாசன்

உங்கள் தந்தைக்கிருந்த இலக்கிய ஈடுபாட்டின் சாட்சியமாக இருக்கிறீர்கள். இலக்கியம் புரிவதற்குப் பெரிய தகுதி என ஏதுமில்லை. அடிப்படை மொழியறிவு. வாசித்தவற்றை சொந்த வாழ்க்கையுடன் எங்கோ ஓர் இடத்தில் கற்பனைசெய்து இணைத்துக்கொள்ளும் தன்மை இரண்டும் இருந்தால் போதும். ஓராண்டு தொடர்ந்து வாசிக்கும் எவருக்கும் இலக்கியம் திறந்துகொள்ளும்

நவம்பரில் கடலூர் சீனு வீட்டுக்கு வந்திருந்தேன். மறுபடி வரும்போது உங்களையும் சந்திக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகூடங்குளமும் கலாமும்
அடுத்த கட்டுரைதேவதச்சனுக்கு விளக்கு விருது