ராஜ் ஆதித்யா:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

வணக்கம். என்னுடைய எளிய, சிறிய வாழ்கை அனுபவத்தில் நான் கண்டது காலம் காயங்களை ஆற்றும், நம் ஆத்மாவில் கலந்த விருப்பங்கள் என்றாவது ஒரு நாள் நிறைவுபெறும் என்றுதான். ராஜகுமாரன் தம்பி, தன்னுடைய கனவுகள் அந்த ஒரு படத்துடன் முடிந்துவிட்டதாக எண்ணிகொண்டது பெரும் பிழை. அவர் இன்னும் திடமாக, மன அமைதியுடன் காத்திருக்க வேண்டும்.

தன்னுடைய பெண் திருமணம் செய்துகொண்ட மாப்பிள்ளை சரியில்லை என்றால், தகப்பன் தற்கொலை செய்துகொள்ள வேண்டுமா என்ன?. என்றாவது மருமகன் திருந்துவான் என்று நினைக்க வேண்டும். அது ஒரு நாள் நிகழும். அதுபோல ராஜகுமாரன் இதைவிட ஒரு நல்ல படைப்பை கொடுத்து அந்த தயாரிப்பாளரின் முகத்தில் கரியை பூசிஇருக்கவேண்டும். அந்த தயாரிப்பாளர் ஒருநாள், மிஞ்சிபோனால் ஒரு வாரம் அவரது மரணத்தைபற்றி நினைக்ககூடும்.

இந்த மரணத்தின் மூலம் எதை வெளிப்படுத்த நினைத்தார்?. இது ஒரு தவறான வழி காட்டுதல் அல்லவா!. ஒரு கலை வல்லுனரின் மரணம் நிகழவிருந்த கலையின் மரணம் அல்லவா!.

அன்புள்ள குருமூர்த்தி,

சினிமாவிற்குப்பின்னால் இருக்கும் கடுமையான உழைப்பை ரசிகர்கள் பெரும்பாலானவர்கள் புரிந்துகொள்வதில்லை. எல்லா படங்களும் மலையை வெட்டி நிரப்பாக்குவதுபோன்ற பெரும் உழைப்பின் விளைவுகள்தான். பெரும் கனவும் ஆவேசமும் இல்லாமல் அந்த உழைப்பை செலுத்த முடியாது

நான் சினிமாவுக்கு உள்ளே வந்தபின்னர் இப்போதெல்லாம் எந்தப்படத்தையுமே நிராகரிக்க மாட்டேன். எந்தப்படம் தோல்வியடைந்தாலும் மனம் மருகுகிறது. அத்தனை உழைப்பு. துளித்துளியாக தேனீ சேர்ப்பதுபோல சேர்த்து சேர்த்து படம் உருவாகிறது. அதற்கு முன் பலவருடங்களாக ஒரு படம் குறித்த கனவு உருவாகி வளர்கிறது. படங்கள் வெற்றி தோல்வி அடையும். ஆனால் ஒரு படத்தின் சிதைவு என்பது சாதாரணமல்ல. அதன அடி மிக பிரம்மாண்டமான ஒன்று.

ஆனால் தற்கொலை அபத்தமானது. மீண்டும் மீண்டும் என் சொந்த வாழ்க்கை அனுபவத்தில் இருந்து நான் சொல்வது இதுதான். எந்த வாழ்வனுபவமும் அந்த அனுபவத்தின் ஈர்ப்பு வளையத்துக்கு வெளியே அவ்ந்துவிட்டால் மிகமிக அற்பமானதே. வெளிவருவதற்கு காலமாறுதல் உதவும். இட மாறுதல் உதவும். மானசீகமான அன்னியமாதலும் உதவும்.

வெளிவந்தபின் திரும்பிப்பார்த்தால் அட, இதுக்காகவா?’ என்று எண்ணும் அனுபவங்கள்தான் எல்லாமே

ஜெ

 

மதிப்பிற்குரிய ஜெயமோகன்,

 

நீங்கள் தமிழ் இயக்குநர்கள் எடுத்த தெலுஙுகு படங்கள் பார்த்திருக்கிறிர்களா?

ஏ.ஆர். முருகதாஸ் சிரஞ்சீவியை வைத்து ஸ்டாலின் படமும், செல்வராகவன் வெங்கடேஷை வைத்து ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேறுலே என்கிற படமும் எடுத்துள்ளார்கள்.
அந்த படங்களைப் பார்த்த போது தமிழில் நன்றாக படம் எடுத்த இவர்கள் ஏன் தெலுங்கில் மட்டும் இப்படி எடுக்க்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன்…
ராஜ் ஆதித்யா பற்றி நீங்கள் எழுதியிருப்பதை பார்த்ததும் தான் உண்மை புரிந்தது.

ஆந்திராவில் இருக்கும் என் நண்பர்கள் பலர் எனக்கு ஃபோன் செய்யும் போது அடிக்கடிக் கேட்பது எந்த தமிழ் படம் நன்றாக இருக்கிறது? என்பதுதான்…அந்தளவிற்கு அவர்கள் ஒரு நல்ல படத்திற்காக (!) ஏங்குகிறார்கள்…அங்கிருப்பவர்களுக்கு அது புரிந்தால் சரி….
அன்புடன்,
ஆர்.காளிப்ரஸாத்.

அன்புள்ள காளிப்பிரசாத்,

உண்மைதான். எந்தத் திரையுலகிலும் கலை – வணிகம் இரண்டும் சமநிலையில் இருக்கவேண்டும். கலையை விட வணிகம் மேலோங்கும்போது இம்மாதிரி வீழ்ச்சிகள் அனேகமாக நிகழ ஆரம்பிக்கின்றன. சினிமா என்ன இருந்தாலும் ஒரு கலை. அது கலைஞர்களாலேயே கட்டுப் படுத்தப் பட வேண்டும்

ஜெ

Dear J

 

கொடுமை.
தான் நேசித்த படைப்புக்காக உயிரைவிட்டவர் தனனையே நம்பி வந்த அந்த மனைவியையும் பிஞ்சு குழந்தையையும் நேசிக்க மறந்தது ஏனோ ..??
சூர்யா
சென்னை

 

அன்புள்ள சூர்யா,
நம்மால் இம்மாதிரி விஷயங்களை அந்த மனநிலையில் நின்று புரிந்து கொள்ள முடியாது. தற்கொலைகள் எப்போதும் கண நேரக் கொந்தளிப்புகளின் விளைவுகள். அவற்றுக்கு உணர்ச்சிகளின் தர்க்கம் மட்டுமே உண்டு
ஜெ

 

 

சினிமாவுக்கு ஒரு களப்பலி

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவாசிப்பில் நுழைதல்