உரை; கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கோதை ஆற்று வெள்ளம் பாய்ந்து வந்து சென்னையில் எங்களை நிலை குலையச் செய்தது. குறுந்தொகை மூலம் கவிதையை மட்டும் அல்ல, வாழ்வையும் மீண்டும் புதிதாக அறிமுகம் செய்து வைத்தது உங்கள் உரை. ‘காடு’ தந்த பேரெழுச்சியை விட இன்னும் தீவிரமானதாக இருந்தது என்றே சொல்வேன். தொடக்கத்தில் இருந்தே உவமைகளும் படிமங்களும் கொட்டியபடியே இருந்தன. எதுவுமே வலிந்து புனைந்ததாக இல்லாமல் வெகு இயல்பாக அமைந்தன. இவ்வளவு உணர்ச்சிகரமான ஒரு உரையை நான் என் வாழ்நாளில் கேட்டதில்லை. ஒரு பத்து நிமிடங்கள் கடந்த பின் ‘யோவ் தாங்கலை! நிறுத்துய்யா’ என்று கூவத் தோன்றியது.

இன்னும் ஒரு பித்து நிலையிலேயே இருப்பதாக உணர்கிறேன்!

நன்றி ஜெ.

சீனிவாசன் ராகவன்

அன்புள்ள ஜெ

குறுந்தொகை பற்றி நீங்கள் பேசிய உரையை கேட்டது மகத்தான அனுபவம். என் வாழ்க்கையில் கேட்ட மிகச்சிறந்த உரை இதுதான். இதற்குமுன் நான் நீங்கள் பேசிய பல உரைகளை கேட்டிருந்தாலும் இந்த உரை வேறு ஒரு தளத்தில் இருந்தது

குறுந்தொகையின் மௌனத்தைப்பற்றிச் சொன்னீர்கள். அப்படி சூட்சுமமான ஒரு விஷயத்தைப்பற்றி இன்று கத்தி ,கூச்சல் போட்டு, கைகால்களை ஆட்டி, ஆவேசமாக பேசுவதைத்தானே கேட்கிறோம். அது கூச்சலுக்கு நேர் எதிரானது என்றே நீங்கள் சொன்னீர்கள். அதற்கு ஏற்ப உங்கள் உரை மிக மிக அமைதியானதாக மெல்லிய நீரோடை போல இருந்தது.குரலை உயர்த்தவே இல்லை. மனதோடு ரகசியம் பேசுவதுபோல உங்கள் குரல் ஒரு மணிநேரம் ஒலித்துக்கொண்டேஇருந்தது

நல்ல உரை என்றால் அது அனுபவங்களையும் கதைகளையும் நிறைய கலந்து நகைச்சுவையுடன் சொல்லப்படுவதாக இருக்கும், இதுதான் ஃபார்முலா. ஆனால் உங்கள் உரையிலே நீங்கள் கவிதையை தொடுவதற்கு மட்டுமே முயற்சி செய்தீர்கள். கவித்துவத்தை மட்டுமே சொல்லிக்கொண்டிருந்தீர்கள். முதல் வரிமுதல் உவமைகள், உருவகங்கள் என்று கொட்டிக்கொண்டே இருந்தன. ‘அவன் மார்பில் பச்சைகுத்தப்பட்டவள் போல அவள் இருந்தாள்’ என்று சாதாரணமாகச் சொல்லி சென்றீர்கள். அந்த பெண் கறுப்பு அந்தப்பையன் சிவப்பு என நான் ஊகித்து அந்த வரியின் மயக்கத்தை விட்டு வருவதற்குள் இன்னும் நாலைந்து படிமங்கள் சென்று விட்டன. பிறகு பத்ரி சேஷாத்ரியின் உரைப்பதிவிலேதான் மீண்டும் கேட்டேன். கவிதையைப்பற்றி கவிதையாலேயே ஆன உரை என்று சொல்லலாம். ஒரு இசைக்கச்சேரி மாதிரியே இருந்தது. பலபேர் சொன்னார்கள். ஒரு அற்புதமான ராக ஆலாபனை மாதிரி இருந்தது என்று சொன்னார்கள். வந்துகொண்டே இருந்த அழகான வரிகளை அருவிக்கு கீழே நின்று குளிப்பதுபோல அனுபவித்துக்கொண்டே இருந்தேன்

கவிதையை பேசும்போது தத்துவம் இல்லாமலா? பலபல கிளைகளாக பிரிந்து போன உரை அற்புதமான தத்துவ தர்சனங்களாக மாறியதை ஆச்சரியம் என்றுதான் சொல்லுவேன். முழுமையான உறவு மானுடனுக்கு சாத்தியமா என்ற ஒரு வரியை வைத்தே ஒரு உரை செய்யலாம். பூக்களின் வரலாறே மானுட ஆன்மீகத்தின் வரலாறு என்று இன்னொரு உரை செய்யலாம். அகம்புறம் பற்றிய விவரிப்பு இன்னொரு சிகரம். எதையும் அதிகநேரம் ஆலாபனைசெய்யவில்லை. சிந்திக்க ஒரு வரைபடத்தை கொடுத்து மேலே சென்று கொண்டேஇருந்தீர்கள்.

அற்புதமான உரை. இந்த உரையை ரசிக்கவும் உள்ளே செல்லவும் ஒரு தகுதி வேண்டும். அந்த தகுதி எங்களுக்கு இருக்கிறது என நம்பி இந்த உரையைச்செய்தீர்கள் பாருங்கள் அதற்காகவே நாங்கள் நன்றி சொல்லவேண்டும். பெரும்பாலான உரை சபையில் கடைக்கோடியினரை அளவு வைத்து செய்வதாக இருக்கும். அதுதான் சாதாரணம், அதுதான் ஒரு வகையிலே நியாயமும் கூட. நீங்கள் சபையின் மிகச்சிறந்தமனிதர்களை குறிவைத்து பேசினீர்கள். அதுதான் இந்த நல்ல உரைக்குக் காரணம். ஒருவேளை சிலருக்கு உரைக்குள் முழுசாக வரமுடியாமல் போகலாம். ஆனாலும் உரை அவர்களை கற்பனைகளுக்கும் மன விரிவுக்கும்தான் எடுத்துச்சென்றிருக்கும் என நினைக்கிறேன். என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜெயமோகன்

சீனிவாசன்

முந்தைய கட்டுரைஞானக்கூத்தன்
அடுத்த கட்டுரைநாதஸ்வரம் தவில்-கடிதம்