தாய்மொழியானாலும் மலையாள வாசிப்பு மிகவும் குறைவேயெனக்கு (வளர்ந்ததும் படித்தும் எல்லாம் புதுவையில்) ஆனாலும் M.T.V மற்றும் பஷிரீன் எழுத்துக்களைத்தான் முதலின் படித்தேன், ரசித்தேன். தகழி, சக்காரியா, முகுந்தன் என இப்போதுதான் வட்டம் விரிவடைய தொடங்கியுள்ளது.
மிக விரைவான பதிலுக்கு நன்றி, ஜெமோ!
”விஷ்ணுபுரம்” பற்றி நிறைய எழுத தோன்றுகிறது, ஆனால் எழுதி விட்டால் மனம் வெறுமையாகி விடுமோ, நான் பெற்ற அரிய அனுபவம் “ நீர்த்து” போய் விடுமோ என ஒரு சின்ன அச்சம்…. :-).. சொற்கள் எனக்குள்ளேயே இருக்கட்டும் கொஞ்ச காலம்… ஆனால் நான் வாசித்த வரையில் நாவல் ஆக்கத்தில் இதுதான் உங்கள் “ Master Piece” ! [ குறு நாவலில் “டார்த்தீனியம்” போல].
”மலையாள மனோரமா” வாரப்பத்திரிக்கை வாயிலாகத்தான் நான் மலையாளம் படிக்க கற்றுக்கொண்டேன் – எங்கள் வீட்டில் வரும் ஒரே இதழ் அதுவாகத்தான் இருந்தது. மொழி பிடித்திருந்தாலும் அதில் வரும் கதைகள் அறவே பிடிக்காமலிருந்தது(எ.கா மாத்யூ மற்றம், கமலா கோவிந்த், கோட்டயம் புஷ்ப நாத்,சுதாகர் மங்கலோதயம் அவர்களின் கதைகள் – தமிழில் வரும்(வந்த?) ராணி,தேவி தொடர் எழுத்தாளர்களின் கதைகள் போல ஒரு “ஒவ்வாமை”), ஒரு காலகட்டத்தில் முழுமையாக நிறுத்தி விட்டேன்.
முதல் முறையாக எம்.டி வாசுதேவன் அவர்களின் சிறுகதை தொகுப்பு ( நாலு கெட்டு) வாசிக்க கிடைத்தது, மொழியை அவர் கையாண்ட விதமும் கதை மாந்தர்களும் களமும் வசீகரித்தன. பின் தேடல் தொடங்கியது….தொடர்கிறது…[ உங்கள் கட்டுரையில் சில புதிய எழுத்தாளர்களை அறிந்து கொண்டேன், நன்றி! ]
நீங்கள் பல முறை குறிப்பிட்டது போல பஷீர் ஒரு முக்கியமான இலகுவான நடையில் வசப்படுத்தும் அரிய எழுத்தாளராகத் தெரிந்தார். அவரின் இரண்டு பெரிய புத்தகங்களை ( DC Books வெளியீடு ) இன்னும் வாசித்து கொண்டிருக்கிறேன்.
சம்ஸ்கிருத வாடை அதிகமுள்ளாதலேயே என்னால் மலையாள கவிதைகளை புரிந்து கொள்ள இயலவில்லை. ஐயப்ப பணிக்கர், குஞ்ஞுண்ணி மாஷ் அவர்களின் கவிதைகள் பிடிக்கும்.
பல மொழிகளில் மூல நூல்கள் வழியாகவே அந்தந்த எழுத்தாளர்களை படிக்கும் சுகம் மொழிப்பெயர்ப்பு நூல்களில் கிடைப்பதில்லை[ டப்பிங் திரைப்படங்கள் பார்ப்பது போல் இருக்கிறது ]- “Lost in Translation”.
உங்கள் மலையாள புத்தகங்களின் பதிப்பாளர்கள்/பதிப்பகங்கள் விவரங்கள் கிடைக்குமா? திருச்சூரில் கிடைக்குமா என விசாரிக்கிறேன் ( என் தாயும் தந்தையும் அங்குதான் வசிக்கின்றனர்).
ப்ரியமுடன்,
ரா.சு.
அன்புள்ள சுப்புலட்சுமி
நான் மலையாளத்தில் ஒரு நூல்மட்டுமே வெளியிட்டிருக்கிரேன் — நெடும்பாதையோரம். அதை திரிச்சூர் கரெண்ட் புக்ஸ் வெளியிட்டார்கள். திரிச்சூரில் கிடைக்கலாம்.
மலையாளத்தில் மலையாள நூல்களை மட்டுமல்ல யஷ்பால், ஆஷாபூர்ணா தேவி, பிமல் மித்ரா போன்றவர்களின் மொழியாக்கங்களையும் படிக்கலாம், தமிழில் கிடைக்காது.
மலையாள எழுத்தில் இலக்கியத்தரமான எழுத்துக்கள் எண்ணிக்கையில் மிக அதிகம். ஆனால் மிகச்சிறந்த, தனித்தன்மை கொண்ட, எழுத்துக்கள் தமிழ் அளவுக்குத்தான் இருக்கும்.
தமிழில் வந்துள்ள மலையாள மொழியாக்கங்கள் பெரும்பாலும் மிகச்சுமாரானவை.
உங்களுக்கு மொழிகற்க ஆவலிருந்தால் இந்தி- தேவநாக்ரி லிபி கற்றால் வங்கம் மராத்தி என பல மொழிகளுக்குள் இயல்பாக நுழைய முடியும்
ஜெ