தமிழியக்கம்:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,
நலம்தானே. நானும் நலமே. நான் உங்கள் இணையதளத்தை ஆராய்ந்து வாசிக்கிற ஒருவன். தமிழாய்விலே ஆர்வம் கொண்டவன். உங்கள் இணையத்தில் வருகின்ற ஆராய்ச்சித் தகவல்களும் இணைப்புகளும் உதவியாக உள்ளன. என்னுடைய கேள்வி என்னவென்றால் எந்த அளவுக்கு நீங்கள் தமிழாய்வுகளில் ஈடுபாடு கொண்டிருக்கிறீர்கள் என்பதுதான். ஹான்காக் முதலியவர்களைப் பற்றி எல்லாம் எழுதியிருக்கிறீர்கள். தமிழின் தொன்மையைப் பற்றி எழுதிகிறிர்கள். தமிழியக்கத்தின் கொள்கைகளுடன் உங்களுக்கு உடன்பாடா?
ஆதிச்சநல்லூர் குறித்து எழுதியிருந்தீர்கள். அதற்கு இன்று நாம் செய்யவேண்டுவது என்ன என்று எண்ணுகிறீ£ர்கள்?
சிவ கனேசன்
கொழும்பு
அன்புள்ள சிவ கணேசன் அவர்களுக்கு,
வரலாற்று கோணத்தில் நோக்கினால் தமிழியக்கம் என்பதில் இரண்டு கூறுகள் உண்டு. ஒன்று அது தமிழின் தொன்மை, மேன்மை ஆகியவற்றை மீட்டு நிலைநாட்டும் நோக்கம் கொண்டது இரண்டு, அக்காலத்தில் தமிழை புறக்கணித்த ஆதிக்கக் கருத்தியல்களுக்கு எதிராக போராடும் நோக்கம் கொண்டது
இந்த நோக்கத்தில் இரண்டாம் நோக்கம் காலப்போக்கில் திரிபு பட்டு இன்று அப்பட்டமான இனவாதமும் ·பாஸிச இயல்புகொண்ட மொழி அடிப்படைவாதமும் ஆக மாறி உள்ளது. இன்று தமிழியக்கம் அரசியல் மயப்படுத்தப்பட்டுவிட்டது. வெறும் அதிகாரப்பாதையாக ஆகிவிட்டது. அதற்கு வெறுப்பு மட்டுமே போதும் என்ற நிலை உருவாகிவிட்டது.
ஆகவே முதல் நோக்கம் கைவிடப்பட்டது. இன்று தமிழியக்கத்தின் அடிப்படை உந்துதலான தமிழைப் படிப்பதும் ஆராய்வதும் தமிழில் எழுதுவதும் சிந்திப்பதும் எல்லாம் குறைந்து விட்டன. சென்ற 40, வருடங்களில் தமிழறிஞர்கள் உருவாவதே அனேகமாக இல்லாமல் ஆகிவிட்டது. தமிழியக்கம் என்றால் வசைபாடுதல் மட்டுமே என்ற நிலை உருவாகிவிட்டிருக்கிறது.
நான் தமிழியக்கத்தின் முதல் கூறுடன் முற்றிலும் இனைகிறேன். இரண்டாம் கூறை முழுமையாகவே நிராகரிக்கிறேன். தமிழைக் கற்பதும் ஆராய்வதும் என் பேரார்வத்துக்கு உரியவை. இந்த ஆர்வமும் கல்வியும் என் 14 வயது முதல் இன்றுவரை ஒருநாள் இடைவெளி இல்லாமல் நீளும் செயல்கள். முக்கியமான தமிழறிஞர்களுடன் நெருக்கமான தொடர்பும் உண்டு
என் இணையதளத்தில் முக்கியமான தமிழாய்வுகளை எப்போதுமே கவனத்துக்கு உள்ளாக்கி வருகிறேன். அதேசமயம் தமிழாய்வு என்ற பேரில் கக்கப்படும் இனவாத- மொழிவெறி ·பாசிஸத்தை ஒப்புக்கொள்வதில்லை
ஆதிச்ச நல்லூர் பற்றி…. இப்போது செய்யக்கூடுவதாக உள்ள ஒரே விஷயம் சர்வதேசக் கவனம் பெறும் ஒரு நல்ல வலைத்தளம். ஆங்கிலத்தில், முடிந்தால் ஜெர்மானிய  ·பரெஞ்சு மொழிகளிலும். அதில் ஆதிச்சநல்லூர் பற்றிய எல்லா தரமான எழுத்துக்களையும் சேகரித்தல். வசைகள் மற்றும் அபத்த கற்பனைகளை தவிர்த்தல்
அதைச்செய்ய வாய்ப்புள்ள ஒரே அமைப்பு குப்பம் திராவிட பல்கலை மட்டும்தான். சந்திரபாபு நாயிடு மீண்டும் பதவிக்கு வந்தால் ஏதேனும் நடக்கலாம். தமிழக அரசியல்வாதிகளும் பல்கலைகளும் செம்மொழி ஆராய்ச்சி மையமும் ஆதிச்சந்ல்லூரைப் பற்றி ஒன்றுமே பேசாமல் இருப்பதே அவர்கள் செய்யத்தக்க பெரும் சேவை
ஜெ
அன்புள்ள ஐயா வணக்கம்
தங்கள் எழுத்துகளை வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் நான் படிப்பதுண்டு.
ஆதிச்சநல்லூர் பற்றிய கட்டுரை வெளியானதை ஒரிசா பாலசுப்பிரமணி தெரிவித்தார்.
உடன் பார்த்தேன்.மகிழ்ச்சி.பாராட்டுகள்.
என் இணைப்பையும் வெளியிட்டுள்ள தங்கள் பேருள்ளத்தை நன்றியுடன் வணங்குகிறேன்.
கட்டுரை விரைவில் படிப்பேன்.கருத்துரைப்பேன்.
தங்கள் அன்பிற்குரிய
மு.இளங்கோவன்
புதுச்சேரி,இந்தியா
+91 9442029053
குறிப்பு
தமிழ் அறிஞர்களின் வாழ்க்கையை வெளியுலகில் இருப்பவர்க்குப் பயன்படும் வண்ணம் என்
பக்கத்தில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.பலர் அதனைக் குறிப்பிடாமல் தாங்கள் எழுதியதுபோல் தங்கள் பெயரில்
வெளியிட்டுக்கொள்கின்றனர்.
அதற்கு இடையே தாங்கள் என் பக்கம் குறித்தமைக்குதான் இந்த நன்றிமடல்
சான்றுக்குப் பார்க்கவும்.ஆறு மாதத்துக்கு முன் எழுதிய என் கட்டுரை.
இதனை நண்பர் ஒருவர் எப்படி பயன்படுத்தியுள்ளார். பாருங்கள்.

***

அன்புள்ள இளங்கோவன்

எனக்கு ஆர்வமுள்ள துறைகள் என்பதனால் நான் மூன்று தரப்பினரை எப்போதும் கூர்ந்து கவனிப்பேன். 1. தமிழாளர்கள் 2. வரலாற்றாளர்கள் 3. இந்திய தத்துவ இயலாளர்கள். ஆகவே நான் உங்கள் எழுத்துக்களை எப்போதும் கூர்ந்து படிப்பேன்.

ஆதிச்ச நல்லூர் பற்றி நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்று பார்த்தேன். அந்த இணைப்பு கிடைத்தது. நல்ல இனைப்பு அது. என் வாசகர்களின் ஒரு சாரார் தமிழாய்வுகளை விரும்பி கவனிப்பவர்கள்.

உங்கள் கட்டுரையின் பிரதியெடுப்பை கண்டேன். சரி, தகவல்கள் பரவட்டுமே என்று என்ணிக்கொள்ள வேண்டியதுதான்.

அ.கா.பெருமாள் தமிழினி இதழில் கவனிக்கப்படாத தமிழறிஞர்களைப் பற்றி ஒரு தொடர் எழுதுகிறார். கவனிக்கிறீர்கள் என எண்ணுகிறேன்

அச்சு வடிவ இதழ்களில் நீங்கள் தமிழினி மாத இதழுக்கு எழுதலாம். உங்களைப்போன்றவர்களுக்கு உகந்த இதழ். உங்களை வசந்தகுமாருக்கு தெரியும், நான் சொல்லியிருக்கிறேன்

ஜெ

திரு ஜெயமொகன் அவர்களுககு,

தங்களின் ஆதிச்சநல்லூர் கட்டுரை நமது பன்பாடு மற்றும் கலாச்சாரத்தின் மீது எந்த அளவுக்கு நாம் அக்கறை வைத்துளோம் என்பதை கான்பிக்கின்றது. தமிழகம் மட்டுமல்ல, மோத்த இந்தியாவே தன்னை மேன் மேலும் சீரழித்துக்கொள்ளும் ஒரு குஷ்ட நோயாளி போல இருக்கின்றது. எல்லாவற்றிலும் போலித்தனமே பல்லிலிக்கின்றது.சத்தமாக சுரனையற்று இருக்கிறோம். எந்த வகையிலும் எந்த துறையிலும் விழிப்புணர்வு வருவதற்கான் வாய்ப்பு இருப்பதாக தோன்றவில்லை. தேர்தலின் மூலமாக வீட்டுகுள்ளேயும் ஊழல் வந்துவிட்டது. உங்கள் கட்டுரையை படித்த பிறகு ஆற்றாமையும், சோர்வுமே ஏற்பட்டது.


ராஜசேகர்
முந்தைய கட்டுரைமுள்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியப்போராட்டம் இன்று