விழா

விஷ்ணுபுரம் விருது விழாவுக்கு நான் ஒரு வகையில் தாமதமாகவே சென்றேன். இப்போது இந்த விழா பழங்காலக் கூட்டுக்குடும்பக் கல்யாணங்களைப்போல மூன்றுநாள் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. 17 ஆம் தேதி காலையிலேயே இருபதுபேர் வரை கோவைக்கு வந்துவிட்டார்கள். ஈரோடு திருப்பூர் கரூர் பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பெங்களூர் ஹைதராபாத் என வெளியூர்களில் இருந்தும் நிறைய நண்பர்கள்.

எஸ்.ராமகிருஷ்ணன் ஈரோடுக்கு வந்து அங்கிருந்து நண்பர்களுடன் கோவைக்கு 17 ஆம்தேதி காலை பத்துமணிக்கே வந்திருந்தார். அவரைச்சுற்றி ஒரு கும்பல் அமர்ந்து அவரது படைப்புகளையும் படைப்பனுபவங்களையும் பற்றிப் பேச ஆரம்பித்தது கிட்டத்தட்ட மறுநாள் காலைவரை நீடித்தது. யுவன் சந்திரசேகர் பதினேழாம் தேதி இரவில் வந்துசேர்ந்தார். அவரைச்சூழ்ந்து இன்னொரு குழு.

நான் சென்றபோது நள்ளிரவு 12 மணி. எனக்கு திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளியில் ஒரு நிகழ்ச்சி. நான் அந்நிகழ்ச்சியைக் காலையில் முடித்துக்கொண்டு மதியம் கிளம்பி மாலையில் கோவை வருவதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் மாலையில் களம் அமைப்பு சார்பில் திருச்சியில் அறம் தொகுதி பற்றி ஒரு கூட்டம். அதை எனக்குத் தெரிவித்திருந்தார்கள். மறந்துவிட்டேன்.

திருச்சியில் இரு நிகழ்ச்சிகளுமே மிகச்சிறப்பாக நடைபெற்றன. காலையில் மாணவர்களிடம் புத்தகப்படிப்பின் அவசியம் பற்றிப் பேசினேன். மாலையில் அறம் கூட்டத்தில் ஒரிசா மாநிலத்தின் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியும் சிந்துசமவெளி ஊர்ப்பெயர்கள் பற்றிய ஆய்வாளருமான பாலகிருஷ்ணன் என் அறம் கதைகளைப்பற்றிப் பேசினார். இந்திய ஆட்சிப்பணிக்குச் செல்வதற்கு முன்னால் காங்கிரஸின் கள ஊழியராக இருந்திருக்கிறார். தங்குதடையற்ற சிறப்பான பேச்சு. நுட்பமான பேச்சும் கூட. நான் அறம் எழுத நேர்ந்ததன் மன எழுச்சி பற்றிப் பேசினேன்

உடனே காரில் கிளம்பிக் கோவை வந்தேன். கோவை தங்கும் விடுதியில் முப்பது பேர் காத்திருந்தார்கள். பேச ஆரம்பித்தோம். விடியற்காலை ஐந்துமணி வரை பேச்சு நீண்டது. நான் ஐந்து முதல் ஏழு மணிவரை தூங்கினேன். அதற்குள் அடுத்த குழு நண்பர்கள் வர ஆரம்பித்தனர். பூமணி வந்துசேர்ந்தார்.

பாரதிராஜா ஒன்பதுமணிக்கு வந்தார். அவர் கோரியபடி லீ மெரிடியன் ஓட்டலில் அவருக்கு அறை போட்டோம். நானும் எஸ்ராவும் சென்று அவரை சந்தித்தோம். உண்மையில் இது ஏதோ ஒரு டிரஸ்ட் நடத்தும் விழா, நான் அதன் பொறுப்பாளர் என்றே அவர் நினைத்திருந்தார். வந்த பின்புதான் நானும் நண்பர்களும் நடத்தும் விழா என அறிந்து ஆச்சரியப்பட்டார். அவரது தங்குமிடம் மற்றும் செலவுகளைத் தானே ஏற்றுக்கொண்டார்.

கூட்டம் ஐம்பது அறுபதுபேர் என ஆனதும் விடுதியினர் சுதாரித்துக்கொண்டார்கள். உடனே காலிசெய்யவேண்டும் என சொல்ல ஆரம்பித்தனர். நீங்கள் தங்குவதற்கு நான்கு சூட் கேட்டீர்கள். இப்போது அறுபதுபேர் வந்திருக்கிறீர்கள் என்றார்கள். கொஞ்சநேரத்தில் பிளேட்டை மாற்றி எம் எல் ஏவும் குழுவும் வருகிறார்கள் காலி செய்யுங்கள் என சொல்ல ஆரம்பித்தனர்.

வேறுவழியில்லாமல் ஒன்பதுமணி வாக்கில் முருகன் ஓட்டலுக்குச் சென்றோம். அங்கே ஐந்து அறை போட்டோம். ஆனால் அதற்குள் ஐம்பதுபேர் செல்லமுடியாதென்று சொல்லிவிட்டனர். ஓட்டல் உரிமையாளரிடம் அரங்கசாமி பேசி ஒருவழியாக அனுமதி பெற்றுத்தந்தார். மூன்று அறைகளில் மூன்று கூட்டம். ஒன்றில் பூமணி. அவரைப்பார்க்க வந்த ஞானி மற்றும் நண்பர்கள். இன்னொரு அறையில் எஸ்ரா. இன்னொன்றில் யுவன் சந்திரசேகர்.


மதியம் தாண்டியபின் கூட்டம் இன்னும் அதிகரித்தது. அறைக்குள் அமரவே முடியாதபடி. ஓட்டல்காரர்கள் இது இலக்கியக்கூட்டம் மாதிரி இருக்கிறதே எனச் சொல்ல ஆரம்பித்தனர். ஆகவே கூட்டமாக மூன்றுமணிக்கே அரங்குக்குச் சென்றோம். அரங்குக்குள் பல குழுக்களாக அமர்ந்து இலக்கிய விவாதம்.

அடுத்தமுறை ஒரு கல்யாண மண்டபம் எடுக்கவேண்டும் என முடிவெடுத்தோம். இரவு தங்கவும் பகலெல்லாம் பேசவும் அதுவே வசதி.

மாலை ஆறுமணிக்கே அரங்கு நிறைந்துவிட்டது. கீதா ஹால் உரிமையாளர் எல்லாருக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.

விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. அதைப் பலர் எழுதி விட்டார்கல், எழுதப்போகிறார்கள். விழாவில் என்னுடைய மனப்பதிவுகள் மிகவும் நிறைவூட்டுவனவாக இருந்தன. பாரதிராஜா மிக ஆத்மார்த்தமாகப் பேசினார். வெ.அலெக்ஸ், பிரதீபா நந்தகுமார் ஆகியோர் கச்சிதமாகவும் பொருத்தமாகவும் பேசினர்.

எஸ்ரா மகத்தான பேச்சாளர் என்பது எனக்குத் தெரியும். என் நோக்கில் தமிழின் இலக்கிய வரலாற்றிலேயே மிகச்சிறந்த மேடைப்பேச்சாளர்கள் அவரும் ஜெயகாந்தனும்தான். ஆனால் யுவன் சந்திரசேகர் கிட்டத்தட்ட அவருக்கிணையாகப் பேசியது ஆச்சரியமளித்தது. அவரும் எஸ்ராவும் கோயில்பட்டியை மையமாகக் கொண்டு வளர்ந்தவர்கள். பூமணியின் இளவல்கள். அந்த நினைவுக்கொந்தளிப்புகள் காரணமாக இருக்கலாம்.

விழாவின் நிறைவு என எனக்குப்பட்டது பூமணி அடைந்த மகிழ்ச்சிதான். தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தார். விருது என்னும்போது ஒரு சின்னக் கூட்டத்தையே அவர் எதிர்பார்த்தார். கோவை முழுக்க அவருக்கு விளம்பரத் தட்டி வைத்திருந்தோம். ஆனால் அதைவிட அவ்வளவு பெரிய இளைஞர் கும்பல் , அவரை நன்றாக வாசித்து நுணுகி ஆரய்ந்து தொடர்ந்து அவரை சூழ்ந்து அமர்ந்து அவரிடம் பேசியது அவரால் நம்பவே முடியாத ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொருவரிடமும் அவர்கள் உண்மையாக வாசித்தார்களா என்பது போலக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார். அவர்கள் வாசித்த நுட்பம் தெரிந்தபோது பிரமிப்பு. தன் உரையில் கூட அவர் அந்த இளம் வாசகர்களுக்குத்தான் நன்றி சொல்லியிருந்தார்.

விழாவில் பூமணியின் துணைவி கௌரவிக்கப்பட்டதும் அவர் கண்கலங்கினார். கண்ணீர் விட்டபடி இறங்கினார். அப்போதுதான் உண்மையில் இதோ முக்கியமான ஒன்றைச் செய்திருக்கிறோம் என்ற நிறைவை அடைந்தேன். நண்பர்களும் அதையே சொன்னார்கள்

இரவே எஸ்ரா, யுவன் எல்லாரும் கிளம்பிச் சென்றார்கள். விஷ்ணுபுரம் அமைப்பைச்சேர்ந்தவர்களும் அல்லாமலுமாக 25 பேர் தங்கினார்கள். எல்லாரும் படுக்க அறைகள் போதவில்லை. ஆகவே ஒரு பதினைந்துபேர் இரவெல்லாம் விழித்திருந்து பேசிக்கொண்டே இருந்தோம். ரயில்நிலையம் சென்று டீ குடித்துத் திரும்ப நடந்து திரும்ப டீகுடித்து பொழுதை விடியச்செய்தோம்

மறுநாள் முழுக்க கோவையில் இருந்தேன். நண்பர்கள் கூடவே இருந்தார்கள். 19 இரவு எட்டரை மணிக்கு எனக்கு நாகர்கோயில் எக்ஸ்பிரஸ். அதுவரைக்கும் நண்பர்களுடன் தொடர்ந்து இலக்கிய விவாதம். அறிவியல் புனைகதைகள் முதல் ஆன்மீகம் வரை. எட்டரை மணிக்கு ரயிலேறியதும் தூங்க ஆரம்பித்தேன். விடிந்து நாகர்கோயிலில் எழுந்தபோது ஒரு மூன்றுநாள்கனவு நிறைவுடன் கலைந்தது போலிருந்தது.

விழாவின் பிரச்சினையே இது எங்களை மீறிப் பெரிதாகியபடியே செல்வதுதான். இத்தகைய விழாவுக்கான ஒரு தேவை இருந்திருக்கிறது. அதை இந்த விழா நிரப்புகிறது. பலரால் பல திசைகளில் முன்னெடுக்கப்படும் இந்த விருது இன்று தமிழகத்திலேயே முக்கியமான இலக்கிய விருதாக ஆகிவிட்டது என்றார்கள் பலர். அந்த முக்கியத்துவத்தைக் கையாளுமளவுக்கு நாங்கள் இன்னும் தயாராக்கிக்கொள்ளவேண்டும்.


விஷ்ணுபுரம் விழா பற்றி வடகரை வேலன் எழுதிய பதிவு

படங்கள் சிறில்

படங்கள் ஆனந்த்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- வடகரை வேலன்
அடுத்த கட்டுரைகடிதங்கள்