விழா- கடிதங்கள்

அதிக இலக்கியப் பரிச்சயம் இல்லாத நண்பர்களிடம் பேசும்போது பொதுவாக ஒன்று கவனித்திருக்கிறேன். பெரும்பாலும் அவர்களுக்குப் படிக்க உள்ளுர ஆர்வம் இருக்கிறது. ஆனால் ஆரம்பிக்க ஏதோ ஒரு தடை. வாழ்கை நேரமின்மையில் சென்று முடியுமோ ? பணியில் செயல்திறன் குன்றுமோ ? குடும்பத்தைக் கவனிக்க முடியாமல் போகுமோ என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். இதை ஒத்த ஒரு தயக்கம் இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் சில அன்பர்களுக்கும் உண்டு. நெடுந்தொலைவிலிருந்து வருவார்கள்; ஆனால் அரங்கத்தின் வாசல் வரை வந்ததும் அங்கேயே நின்று விடுவார்கள். அரூபமான ஒரு விசை மேற்கொண்டு செல்வதைத் தடுப்பது போல..

நேற்று விஷ்ணுபுர விருது விழாவில் இப்படி வாசலிலேயே நின்று விட்டவர்களின் சிக்கலை விசாரித்து உள்ளே அமரச்செய்யும் பணியிலமர்த்தப்பட்டிருந்தேன். மேடையில் பாரதிராஜா அவரது சொற்பொழிவுக்கான தயாரிப்புக்களையும் தாண்டி உணர்ச்சிபூர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார். பார்வையாளர்களின் சில பெருமூச்சுகள் தவிர்த்து அரங்கம் வெகு அமைதியிலிருந்தது. அப்போது 40 வயது மதிக்கத்தக்க கொஞ்சம் சீரியஸான தோற்றம் கொண்ட ஒரு அன்பர் படியேறி மேலே வந்தார். வந்தவர் வாசலில் நிலை கொண்டு அரங்கம் முழுவதையும் ஊன்றி கவனித்தார். நான் மெல்ல அருகில் சென்று “ ஸார் உள்ளே..” திரும்பி என்னை உற்று நோக்கியவர், தாடையைப் படிக்கட்டின் கீழ்நோக்கி அசைத்தார். அங்கு ஒரு பெண்மணியும் ஒரு சிறுவனும் படியேறி வந்து கொண்டிருந்தனர்.

மூவருமாகக் கொஞ்சம் நகர்ந்து உள்ளே சென்றனர். நானும் மறந்து விட்டேன். ஒருசில நிமிடத்தில் திரும்பி என்னை நோக்கி வந்தார். வந்தவர் ஒரு கேள்வி கேட்டார். ” இந்த விஷ்ணுபுரம் எங்கே இருக்கிறது..? ” அட .. ! சில கணங்கள் இமைக்காமல் நின்றேன். இயல்பாகி, ” சார் அது எங்கேயும் இல்லை. ஜெயமோகன் சாரோட ஒரு புஸ்தகம் பெயர் அது. நாங்கள் நண்பர்களெல்லாம்…” அவர் தலையாட்டிவிட்டுத் திரும்பி நடந்து போய் அமர்ந்து கொண்டார். நான் உற்சாகமானேன். அவருக்கும் அந்தப் பெண்மணிக்கும் ஏதோ உரையாடல் நடக்கிறது. இரண்டு செல்போனும் காதில் ஸ்பீக்கரும் நெற்றி வியர்வையுமாகக் கடந்து சென்ற அரங்கசாமியிடம் சொல்ல எத்தனித்துக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

இப்போது அந்தப் பெண்மணி என்னருகே வந்தார். ” விஷ்ணுபுரம் ஜெயமோகன் பிறந்த ஊரா…? ” ஆஹா..! ” இல்லை மேடம் அது வந்து… ” ” அப்போ பூமணி பிறந்த ஊரா…?” எனது முழு அறிவும் பதிலின்றி விக்கித்து நிற்க அவரும் வந்து சேர்ந்து கொண்டார். பெண்மணி அவரைப் பார்த்துத் தலையசைக்க, மூவரும் படியிறங்கி வேகமாகச் சென்றனர். அது வரை எந்த சலனமும் வெளிக்காட்டாதிருந்த பையன், பாதி படி இறங்கியதும் நின்று, திரும்பி என்னைப்பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். பின் நடையைத் தொடர்ந்தான்.

கெ.பி.வினோத்

அன்புள்ள ஜெ

நான் செழியன். விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்திருந்தேன். ஆனால் உங்களிடமோ எஸ்ராவிடமோ நான் அறிமுகம் செய்துகொள்ளவில்லை. கூச்சம்தான் காரணம். காலையிலேயே வந்தேன். கீதாஹாலில் கேட்டபோது பக்கத்திலே முருகன் ஓட்டலில் இருப்பதாகச் சொன்னார்கள். அங்கே வந்தேன். பிறகு கீதா ஹாலிலும் வந்தேன். எஸ்ரா பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டேன். தகவல்களும் ஜோக்குகளுமாகப் பேசிக்கொண்டே இருந்தார். அவரது கிரியேட்டிவிட்டி என்னை ஆச்சரியப்படுத்தியது. அவரை நிறைய வாசித்திருக்கிறேன். அவரது கதைகளைப் பற்றி அவரிடம் சொன்னேன். யுவன் சந்திரசேகரிடமும் அவரது கதைகளைப்பற்றி சொன்னேன்.

விழா மிகமிக சிறப்பாக நடைபெற்றது. எல்லாருமே நன்றாகப் பேசினார்கள்.எஸ்ரா சிறப்பான பேச்சாளர் என்பது தெரியும். யுவன் சந்திரசேகர் இப்படிப் பிரமாதமாகப் பேசுவார் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. விழாவின் ஒவ்வொரு விஷயமும் அருமை. எல்லாரும் பூமணி பற்றியே பேசியதும் வழிதவறிசெல்லாமல் இருந்ததும் மிகப்பெரிய விஷயம். பூமணியின் மனைவியை கௌரவித்ததும் அவர் கண்ணீர் விட்டார். அதைக்கண்டு நானும் கண்ணீர் விட்டேன். அதுதான் இந்த விழாவின் நோக்கம் நிறைவேறியதற்கான ஆதாரம்

வாழ்த்துக்கள்

செழியன்

முந்தைய கட்டுரைசு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது
அடுத்த கட்டுரைகுறுந்தொகை உரை