விழா-கடிதங்கள்

ஒரு எழுத்தாளன் தன் உழைப்பிற்கு பதிலாக இந்த உலகோடு கோருவது ஒன்றை மட்டும் தான். அவன் படைப்புகள் வாசிக்கப்பட வேண்டும். ஒரு எழுத்தாளனின் படைப்பில் ஒரு நல்ல வாசகன் தொட்டுக் காட்டும் ஒரு சிறிய நுண்மை, எத்தனை கோடி இன்பங்களை அந்தப் படைப்பாளியின் மனத்தில் விதைக்க முடியும் என்பதைப் பூமணியோடு நம் வாசகர் வட்ட நண்பர்கள் நிகழ்த்திய உரையாடலைக் கண்ட போது நேரடியாகக் கண்டுகொள்ள முடிந்தது. மகிழ்ச்சியாக இருந்த சமயத்தில் குற்ற உணர்வும் கவ்விக்கொண்டது உண்மை. நான் ஒரு சில சிறுகதைகளைத் தவிர பூமணியின் படைப்புகளைப் படித்ததில்லை. அந்த ஒன்றிரண்டைப் படித்ததும் ஜெ வழியாகக் கிடைத்த அறிமுகத்தால் மட்டுமே. ஜெ இத்தகைய அறிமுகப்படுத்தல்களையும், அடையாளங்காட்டல்களையும் தொடர்ந்து செய்துகொண்டே இருப்பதன் நோக்கம் மிக மிகப் பாராட்டப்பட வேண்டியது. என்றும் நன்றியோடு நினைத்து பார்க்க வேண்டியது என்பதல்லாமல், தமிழ் இலக்கியச் சூழலில் அதன் அவசியத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

இரவு வரை நீண்ட இலக்கிய உரையாடல்களும், தமிழ் உலகின் முக்கியமான இலக்கிய ஆளுமைகளான ஜெ, எஸ் ரா போன்றவர்கள் துளி கர்வம் இல்லாமல் துவக்க நிலை வாசகர்கள் கேட்கும் வெகு அடிப்படையான கேள்விகளுக்கும் கூட மென்மையாக பதில் சொல்லிக் கொண்டிருந்ததும் ஆச்சரியமாக இருந்தது. புகழின் சுமையைத் தலைகளில் கொண்டு திரியாத எளிய மனிதர்கள்.

யுவன், ஜெ மற்றும் எஸ் ரா வின் மேடை உரைகள் அருமையானவை.

சந்தித்த ஒவ்வொருவரையும் எனக்கு மிக நெருக்கமானவர்களாகவே உணர்ந்தேன்.

அடுத்த சந்திப்பு எப்போது என்று இப்போதே மனம் பறக்கத் துவங்கிவிட்டது. :)

ஏன் இவர்களை எல்லாம் முன்பே சந்திக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போய் விட்டது என்று வருத்தமாக இருந்தது.

அலை ஓய்ந்து கடலாட நினைத்திருந்தேன். அலை ஓய்ந்த பின் கடலாடல் எதற்கு? என்ற உணர்வு முன்பே வந்திருக்கலாம்.

சுந்தர வடிவேலன் சுப்புராஜ்

நேற்று கோவையில் நடந்த விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவுக்கு வந்திருந்தேன். மதியம் ஜெ.மோ அவர்களை சந்தித்தபோது அரங்க சாமி அவர்கள் அறிமுகப்படுத்திய போது அவர் என்னை ஞாபகம் வைத்து முத்துகிருஷ்ணனை எனக்குத் தெரியுமே என்று கூறி நல்லா இருக்கீங்களா என்று கேட்டது ரொம்ப சந்தோசமாக
இருந்தது. எஸ்ராவை சந்தித்தபோது அவரும் திருப்பூரில் சந்தித்த
நிகழ்ச்சியை சொல்லிப் பேசினார். எழுத்தாளர் யுவன் சந்திரசேகரிடம் அவரின் மணற்கேணி, ஒளிவிலகல் புத்தகத்தைப் படித்துள்ளேன். மிகவும் பிடித்திருந்தது என்று சொன்னபோது மிகவும் சந்தோசப்பட்டு அருமையாகப் பேசினார். நிகழ்ச்சியும் மிக அருமையாக இருந்தது. பயனுள்ளதும் மறக்கமுடியாத நாளாக இருந்தது.
அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி. மிக்க நன்றி.

த.முத்துகிருஷ்ணன்

அன்புள்ள ஜெயமோகன்,
நான் மிகுந்த மனநிறைவுடன் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் “விஷ்ணுபுரம் விருது விழா”வும் ஒன்று. கோவை ஞானி அவர்கள் “மேடையில் அமர்ந்திருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன்,அருண் சந்திரசேகர்(?)……”என்று விளிக்க,நீங்கள் சின்ன திடுக்கிடலுடன் யுவன் சந்திரசேகரைத் திரும்பிப் பார்க்க அமர்களமாய் ஆரம்பமாகியது விழா.

விழாவில் யுவன் சந்திரசேகரின் பேச்சு தான் A1 – பூமணியின் “நைவேத்தியம்” சிறுகதையில் பிராமண பாஷை authentic காக இல்லை என்றதற்கு “அப்படியா சொல்லுதீக,நமக்கு அவுக பாஷ பழக்கமில்லப்பா” என்று ஒப்புக்கொண்டதை சொன்னதாகட்டும் “பிறகு” நாவலிலிருந்து நெகிழ்ச்சியான பகுதிகளைக் குறிப்பிட்டதாகட்டும் பூமணியின் முக்கியமான சிறுகதைகளைக் கோடிட்டுக் காட்டியதாகட்டும் அப்ளாசை அள்ளிக் கொண்டு சென்றார்.
பாரதிராஜா இந்த கூட்டத்திற்கு ஒரு label அவ்ளோதான் என்றது இன்றைய தினத்தந்தியைப் பார்த்த பிறகுதான் உறுதியாகியது. நீங்கள் பேசியதோ எஸ்.ரா பேசியதோ பத்தியாகவில்லை. இத்தனை எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள் என்கிற அளவிலேயே செய்தியாகி இருந்தது. இயக்குனர் இமயம் பேசியது மட்டுமே அச்சில் காணக் கிடைத்தது.

வழக்கம் போல எஸ்.ரா…. தன் கி.ரா.பள்ளியின் அனுபவங்கள், “நெய்கரிசல்”, கரிசலின் வெக்கை, ராஜநாராயணன் வேம்புன்னா பூமணி கருவேலம் என்று ஒப்பிட்டது…….அடடா!

நீங்கள் பேசுவதை நேற்றுதான் முதல் முறையாக நேரில் பார்கிறேன்,கேட்கிறேன். தாங்கள் பேசியதை எந்த அளவு கிரகித்துக் கொள்ள முயன்றேனோ அதே அளவு தங்கள் உடல் மொழியையும் கவனித்தேன். பூமணி சில கணங்களில் மிகுந்த நெகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தார். மெல்லிய குரல் அவருடையது. அவரிடம் autograph கேட்ட பொழுது “நான் அதெல்லாம் போடுறது இல்லப்பா.அந்த அளவுக்கு பெரியாளா நானு?” என்றார். ஒரு எழுத்தாளனின் கவசமாக நான் எப்பொழுதும் கர்வத்தையும் மிடுக்கையுமே கருதி வந்திருக்கிறேன். எளிமையும் பணிவும் கூட என்பதற்கு பூமணியே உதாரணம். இம்மண்ணின் உண்மையான இலக்கியவாதிகளை கௌரவித்ததற்கு இலக்கிய சமூகமும் வாசகர்களும் தங்களை என்றென்றும் நினைவுகொள்வர்.
நன்றி.

அன்புடன்,
கோகுல் பிரசாத்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைநவீனகுருக்கள்,மிஷனரிகள்