அணுவும் அறிவும் – ஒரு கடிதம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்களது வலைதளத்தை கடந்த சில வாரங்களாகத்தான் படிக்கக் கூடிய வாய்ப்பு அமைந்தது. உங்களது பார்வை பல இடங்களில் மகிழ்ச்சியை அளித்தது. உதாரணம் அன்னா ஹசாரே அவர்களைப் பற்றிய பார்வை. ஞாநியின் எழுத்துக்களையும் படித்திருக்கிறேன். சிலர் சொல்வது போல் அந்த நடிகர்தான் பிடிக்கும் அவர் பிடிக்காது என்றில்லை. நல்ல எழுத்துக்கள் யாரிடமிருந்து வந்தாலும் ரசிக்கும் ஒரு சாமானியன் (நான்). ஆனால் சில காலமாக உங்களைப் போல் எழுத்தாளர்கள் விஞ்ஞானத்துறையிலும் கருத்து சொல்லி வருவது வியப்பைத் தருகிறது. விஞ்ஞானிகள் உங்கள் எழுத்துக்களை விமர்சனம் செய்தால் ஏற்றுக் கொள்வீர்களோ என்னவோ தெரியவில்லை. இலக்கியத்தைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் என்று கேட்பீர்களா இல்லையா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கவும்.

தமிழ் நாட்டில் பொறியியல் துறையில் பயின்ற, பயின்று வருகிற மாணவர்களுக்கு ஏதாவது ஒரு ஆசிரியர் இந்த வார்த்தைகளை அனேகமாக சொல்லியிருப்பார்கள். மாணவர்களே இது கலைக்கல்லூரி அல்ல நீங்களும் கலைக்கல்லூரி மாணவர்கள் அல்ல. அவர்கள் போல் படிக்காமல் இருக்கக் கூடாது , விளையாட்டுத்தனமாய் இருக்கக் கூடாது. இந்த வார்த்தைகளைக் கேட்டு அவர்களை விட நாம் உயர்ந்ததை படிக்கிறோம் என்று எண்ணிக் கொண்ட மாணவர்களில் நானும் ஒருவனாகத்தான் இருந்தேன். பிற்காலத்தில் எந்தப் பாடமும் உயர்ந்ததுமல்ல எந்தப் பாடமும் தாழ்ந்ததுமல்ல என்று உணர்ந்து கொண்டேன். சிறப்பாகப் படிப்பவர்கள் எந்தப் பாடம் என்றாலும் பிரகாசிக்க முடியும்தானே.

என்றாலும் பொறியியலோ, மருத்துவமோ இவர்களில் யாரும் சிறந்த இலக்கியவாதிகளாக அனேகமாக பிரகாசித்ததில்லை. ஒரு சிலர் விதிவிலக்காக இருக்கலாம். இதற்குக் காரணம் இருக்கிறது. ஏனென்றால் இத்துறையில் இருப்பவர்களுக்கு வாசிக்கும் பழக்கம் கொஞ்சம்தான். நிறைய பேர் எழுத்தாளர்களை மதிப்பதில்லை என்பதும் உண்மை. அவர்கள் அப்படி ஆக்கப்பட்டிருகிறார்கள். எதையும் தொழில்நுட்பரீதியாக அணுக அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் துறை சார்ந்த வேலைகள், சுய விருப்பம், பழக்க வழக்கங்கள், நண்பர்கள் போன்ற காரணிகள் அதிகம் புத்தகங்களை வாசிக்கும் வாய்ப்புகளைத் தருவதில்லை.

உங்களது கட்டுரையைப் படித்த பொழுது நீங்கள் அணுமின் பற்றி எவ்வளவு படித்தீர்கள் என்று தெரியவில்லை. மிக மேலோட்டமாக எழுதியிருக்கிறீர்கள். அணுமின் விஞ்ஞானிகள் அனைவருக்கும் காற்றாலை, சூரிய சக்தி மற்றும் அனல்மின் நிலையங்களிடம் ஏதோ பங்காளிச் சண்டை இருப்பது போலவும் அவற்றின் அருமைகள் தெரியாமல் அணுமின்சாரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது போலவும் பல பேர் நினைப்பது போல் நீங்களும் எழுதியது மிகுந்த வருத்தத்தை தந்தது. இன்றைய ஊடகங்களைப் பற்றி நீங்கள் கூறியது போல் கால் பங்கு உண்மைதான் இருக்கும் என்பது போல உங்கள் கருத்துக்களிலும் கால்பங்குதான் உண்மையிருக்கிறது.

நீங்கள் கருத்து கூறுவதைப்பற்றி ஒரு பதிவில் எழுதியிருந்தீர்கள். தெளிவான புரிதல் இன்றி கருத்து கூறுவதில்லை என்று. அணு சக்தியில் என்ன புரிந்து கொண்டீர்கள்? உங்கள் பதிலில் இருந்து நீங்கள் எதையும் புரிந்து கொள்ளவில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இப்படி எழுத கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கிறது..

உலகம் அறிவியலையும், அறிவியலாளரையும் ஏன் மிகச் சிறந்த மனிதர்களையும் எப்பொழுதுமே தாமதமாகத்தான் அடையாளம் காண்கிறது. கலிலியோவைம், சாக்ரடீஸையும், கிரிகர் ஜோகன் மென்டலையும் அப்படித்தான். நம்மூர் பாரதியும் விதிவிலக்கல்ல… காற்றாலையும், சூரிய ஒளி மின்சாரமும் மிகச் சிறந்தவை. உங்களை விட மின்துறையில் இருக்கும் அனைவருக்கும் இது தெரியும். இந்தியாவின் மின் தேவையை காற்றாலையோ, சூரிய சக்தியோ, புனல் மின் நிலையமோ கொண்டு சமாளித்து விட்டால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் இவற்றில் ஏதாவது ஒன்றைக் கொண்டு சமாளிக்க முடியுமா என்றால் இவற்றின் பங்கீடு சேர்ந்தே 32 சதவிகிதம் தான். அனல் மின் 65 சதவிகிதம். அணுமின் 2.6 சதவிகிதம்.

இந்தியாவின் அணுமின் வரலாற்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். அதிகமான அறிவியல் கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்த 18ம் நூற்றாண்டில் இந்தியர்களின் நிலையோ வேறுமாதிரி இருந்தது. அதனால்தான் மிகப்பெரிய கண்டுபிடிப்புகள் எதையும் இந்தியர்கள் கண்டுபிடிக்கவில்லை என்பதையும் நாம் மற்ற நாடுகளை விட மிகவும் பின்தங்கிய நிலையிலே இன்றும் பயணம் செய்கிறோம் என்பதை உணர்ந்திருப்பீர்கள். 18ம் நூற்றாண்டிற்கு முன்பு வரை இந்தியா எந்த நாட்டிற்கும் எந்த வகையிலும் குறைந்திருக்க வில்லை. நாகரீகமாக இருந்தாலும் சரி, பண்பாடு பழக்க வழக்கம், கல்வி, செல்வம், வீரம், இலக்கியம், மொழி, வானவியல், மருத்துவம் எதுவாக இருந்தாலும் சரி. எத்தனையோ நாடுகள் விடுதலை அடைந்து 50 வருடங்களுக்குப் பின்னால் விடுதலை அடைந்தோம்.

தொழில் நுட்ப விசயங்களில் இன்று வரை நாம் சிறந்த இறக்குமதியாளராகவே இருக்கிறோம். மொபைலாக இருந்தாலும் சரி, கம்ப்யூட்டராக இருந்தாலும் சரி. முன்பெல்லாம் ஒரு தொழில் நுட்பம் மேலை நாடுகளில் வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகே இந்தியாவிற்கு வரும். இப்போது பரவாயில்லை. ஆப்பிள் ஐபாட் எல்லாம் உடனே கிடைக்கிறது.

இந்தியக் கல்வி முறை ஆங்கிலக் கல்வி முறைக்கு மாறிய பிறகு நம்மால் நல்ல வேலைக்காரர்களைத்தான் உருவாக்க முடிகிறதே தவிர கண்டு பிடிப்பாளர்களை உருவாக்க முடியவில்லை. இதைப் பற்றி உங்களைப் போல சமூகவாதிகள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. இதைப் பற்றி எழுதியிருந்தால் சொல்லுங்கள். மருத்துவமனைக்கு சென்றிருப்பீர்களல்லவா அங்கிருக்கும் உபகரணங்களெல்லாம் பாதிக்கு மேல் இறக்குமதி செய்யப்பட்டதாகத்தான் இருக்கும். கோயமுத்தூர் சென்று எந்திரங்களைப் பாருங்கள். அங்கும் பாதிக்கும் மேல் இறக்குமதிதான். கார்களை கவனியுங்கள். உங்களைப் போன்றவர்கள் கூட வெளிநாட்டு கார்களைத்தான் வைத்திருப்பீர்கள். இது தான் இன்றைய இந்தியா..

இதே சூழ்நிலையில்தான் அணுமின் தொழில் நுட்பமும் இந்தியாவிற்கு வந்தது. நமது விஞ்ஞானிகள் அதிலிருந்து கற்றுக்கொண்டு சிறிது வளர ஆரம்பித்தார்கள். இதனிடையே ஒரு அணுசோதனையும் நடத்தினார்கள். அவ்வளவுதான். உலக நாடுகள் கைவிரித்தன. ரசியா மட்டும் உதவியது. இந்தியாவில் அப்பொழுது யுரெனியத்தை எரிபொருளாக மாற்ற தொழில் நுட்பம் இல்லை. எரி பொருளுக்காக சார்ந்திருக்க வேண்டியதிருந்தது. நேரு காலத்து நட்பின் காரணமாக ரசியா மட்டும் பக்க பலமாக இருந்தது. உலக அரங்கில் இந்தியாவிற்கு ஒரு பாதுகாவலன் போல் இருந்தது. பெரியண்ணன் அமெரிக்காவை மீறி பலமுறை உதவியது. இந்தியா அணு ஆயுத நாடாக மாறிய பிறகுதான் இந்தியா பற்றிய கண்ணோட்டம் உலக அரங்கில் மாறியது. இதற்கு முன்னாலும் இந்தியா என்றால் பாம்பாட்டிகளும் சாமியார்களும் உள்ள நாடு என்ற கண்ணோட்டத்தை மாற்றியவர் சுவாமி விவேகானந்தர்.

மனிதன் எப்பொழுது நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டானோ, சக்கரத்தைக் கண்டுபிடித்தானோ அன்றே இயற்கை அன்னையை காயப்படுத்த ஆரம்பித்துவிட்டான். அவன் கண்டு பிடித்த எந்த விஞ்ஞானத்தில் கேடு இல்லை என்று சொல்லுங்கள். தமிழ் நாட்டிலே ஒரு கூட்டம் கள் குடிக்கக் கூடாது ஆனால் சாராயம் குடிக்கலாம் என்கிறார்கள். அது போலத்தான் ஒரு கூட்டம் அணுமின் சக்தியை எதிர்த்து வருகிறது. வேண்டுமானால் பாருங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகு உலகில் பெட்ரோல், டீசல், எரிவாயு, நிலக்கரி எதுவும் இருக்காது அணுமின் சக்தி மட்டுமே இருக்கும். நமது வாரிசுகள் பார்க்கட்டும்.

அப்படியென்ன கதிரியக்கம் கடவுளைவிட சக்திவாய்ந்ததா? கதிரியக்கம் இயற்கையிலே நமக்குக் கிடைக்கிறதே அதற்கென்ன செய்வது? இயற்கையாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கதிரியக்க தனிமங்கள் அதிகமாக உள்ளதால் கதிரியக்கம் அதிகமாக உள்ளது. அதற்கென்ன செய்வது? சூரியனிலிருந்தும் நட்சத்திரத்திலிருந்தும் வரும் கதிரியக்கத்தை எப்படி தடுப்பது? கேன்சர் வந்தால் எப்படி குணப்படுத்துவது? ஸ்கேன் எக்ஸ்ரே எப்படி எடுப்பது, இன்னும் எவ்வளவோ?

தினமும் 60 கோடி பேர் செல்போன் பேசுகிறார்கள். அவர்களின் மூளை செல்போன் அலைக்கதிர்களால் பாதிக்கப்படாதா? சிகரெட் குடிப்பவர்கள் எத்தனை கோடி பேர், வாகன புகை எவ்வளவு? காற்றாடியில் மின்சாரம் தயாரிப்பதை நிறுத்தி விட்டோமா என்ன. அதுவும் செயல் படுத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க 1 மெகாவாட்டிற்கு 3 ஏக்கர் நிலம் தேவைப்படும். இந்தியாவின் மிகப்பெரிய சூரிய மின் ஆலையே 40 மெகாவாட்தான். அதுவும் கூட செயல்படுத்தப்பட்டுதான் வருகிறது.

மின் இழப்பு பற்றியும் சொல்லியிருந்தீர்கள். அவற்றையும் குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. விபரங்களுக்கு மினிஸ்டரி அப் பவர் வெப்சைட் பாருங்கள். 2030 ல் இந்திய மின் தேவை 4 இலட்சம் மெகாவாட். தற்போதைய உற்பத்தி 1 இலட்சத்து 82 ஆயிரம் மெகாவாட்.. தேவை தேராயமாக 2 இலட்சம் மெகாவாட். இந்த அளவை காற்றாடி மட்டுமோ, சூரிய சக்தி மட்டுமோ, அனல் சக்தி மட்டுமோ, நீர் மின்சக்தி மட்டுமோ அல்லது அணு மின்சக்தி மட்டுமோ ஈடு செய்ய முடியாது, இவை அனைத்தையும் பயன்படுத்துவதன் மூலம்தான் தீர்க்க முடியும். இது ஒரு கூட்டு முயற்சி போலத்தான்.

அல்லது திரு உதயகுமார் போன்றவர்களிடம் மின்சக்தி துறையை கொடுத்து விடலாம். அனைவரும் அவருக்கு கீழ் வேலை செய்து மின் பற்றாக்குறையை சமாளிக்கலாம். அணு சக்தி இல்லாமல் இதை சமாளிக்க முடியுமென்றால் பின் அணுமின் தேவை இல்லை என அணு விஞ்ஞானிகளே ஒப்புக்கொள்ள எந்த தயக்கமும் இருக்காது.

பின்குறிப்பு:

அணு உலைகளை நிறுத்த சில வினாடிகளே போதுமென்றால் அவ்வளவு ஆபத்து இருக்கும் அதை 2020 வரை ஏன் இயக்க வேண்டும்? அது வரை மனித உயிருக்கு அங்கு மதிப்பில்லையா அல்லது சாப்பிட்டு முடித்த பிறகுதான் சாப்பிடமாட்டேன் என்பது போல்தானா?. பெப்சி 2020 ல் மூடிவிடுகிறேன் என்றால் சிறுவணிகர்கள் எல்லாம் இன்றே மூடிவிட வேண்டுமா என்ன?
நன்றி.

ஆனந்த்

அன்புள்ள ஆனந்த்,

உங்கள் கடிதம்.

வழக்கமாக இந்திய கல்விநிலையங்களால் உருவாக்கப்படும் ‘அறிவியல்’ மாணவர்கள் சொல்லும் எல்லா வரிகளையும் கொண்டிருக்கிறது உங்கள் கடிதம் என்றால் வருத்தப்படமாட்டீர்களல்லவா?

உங்கள் கேள்விகளுக்கு சுருக்கமாகவே பதில் சொல்கிறேன்.

ஒன்று, கூடங்குளம் போன்ற ஒரு நிகழ்வு முழுக்கமுழுக்க அறிவியல் விஷயம் அல்ல. அறிவியலாளர்களும் தொழில்நுட்பவாதிகளும் மட்டும் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டிய ஒன்று அல்ல அது. அது ஓர் அறிவியல் கொள்கை என்றால், ஓர் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு என்றால் துறைசாராத பிறருக்கு அதில் பேச ஏதும் இல்லை. இது அப்படி அல்ல.

இது ஓர் அறிவியல் பிரச்சினை என்பதை தாண்டி குறைந்தது மூன்று அடிப்படை விஷயங்கள் இதில் அடங்கியுள்ளன என்பதையாவது நீங்கள் கருத்தில்கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.

ஒன்று, இது லட்சக்கணக்கான சாமானிய மக்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. அவர்களுடைய பாதுகாப்பு சார்ந்த சிக்கல் இதில் உள்ளது. அவர்களின் இடப்பெயர்வு சார்ந்த சிக்கல் உள்ளது. ஆகவே இது ஒரு சமூகவியல் பிரச்சினை.

இரண்டு, இதில் கோடிக்கணக்கான பணம் செலவிடப்படுகிறது. அது நம்முடைய சமூகத்தின் பொருளியல் உற்பத்தியை பாதிக்கக்கூடியது. ஆகவே இது ஒரு பொருளியல் பிரச்சினை.

மூன்று, இது அரசியல்வாதிகளால் முடிவெடுக்கப்படுகிறது. சர்வதேச உறவுகள் சார்ந்து அவ்வுறவுகள் அமைகின்றன. ஆகவே இது ஓர் அரசியல் பிரச்சினை.

இதில் கருத்து தெரிவிப்பவர்களில் அறிவியலறிஞர்கள் அல்லாதவர்கள் பிற மூன்று தளங்கள் சார்ந்துதான் தங்கள் ஆய்வையும் விவாதத்தையும் நிகழ்த்துகிறார்கள். அறிவியல் தரவுகளுக்கு அவர்கள் அறிவியல் அறிஞர்களின் கருத்துக்களை எடுத்துக்கொள்கிறார்கள்.

நான் கூடங்குளம் குறித்த என் கருத்துக்களையும் இந்த எல்லைக்குள் நின்றே சொல்கிறேன். முதலில் இதை ஒரு சமூகவியல் பிரச்சினையாகவே காண்கிறேன். இந்தியாவின் சமூகம் சார்ந்த அமைப்புகள் எந்தத் துறையிலும் பாதுகாப்பையும் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாத அளவுக்கு ஊழலிலும் பொறுப்பின்மையிலும் ஊறியவை. இங்கே எவரும் எதற்கும் பொறுப்பேற்றுக்கொள்வதில்லை. அதற்கு நூற்றுக்கணக்கான உதாரணங்கள் நம்மிடையே உள்ளன.

மேலும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடிய விஷயங்களை அம்மக்களுக்குத் தெரியாமல், அவர்கள் அனுமதி இல்லாமல் அரசும் அதிகார வர்க்கமும் ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கின்றன. இவ்வாறு சர்வாதிகாரமான முடிவுகள் எப்போதும் எங்கும் அழிவையே உருவாக்கியுள்ளன. ஒரு சமூகத்தின் ஒட்டுமொத்த இயக்கத்தை கருத்தில் கொள்ளாமல் ஒரு தளத்தில் அதிகாரம் மூலம் செய்யப்படும் திருத்தங்கள் அபாயகரமானவை. கூடங்குளம் திட்டத்தின் சூழியல் அழிவுகள், சமூகவியல் அழிவுகள் அது உருவாக்கும் மின்சாரத்தின் லாபத்தைவிட பலமடங்கு அதிகமானவை.

இரண்டாவதாக, இதை ஒரு பொருளியல் பிரச்சினையாகக் கருதுகிறேன். இந்தியாவின் மாற்று எரிபொருள் வாய்ப்புகளுக்கு மிகமிகக் குறைவாகவே நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மின் இழப்பு சீர்செய்வதற்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்தியாவின் புதைஎரிபொருள் வளங்களைக் கண்டுபிடிக்கவும், பயன்படுத்திக்கொள்ளவும் தேவையான ஆராய்ச்சிக்கும் தொழில்நுட்பத்துக்கும் குறைவாகவே பணம் செலவிடப்படுகிறது. ஆனால் கோடானுகோடி ரூபாய் அணு உலைகளுக்காகச் செலவிடப்படுகிறது.

அந்த மாற்று வாய்ப்புகள் முழுக்க ஆராயப்பட்டபின் வேறுவழியில்லாமல் அணு உலைகளை நோக்கி நாம் செல்லவில்லை. அந்த வாய்ப்புகளை எல்லாம் உதாசீனம் செய்துவிட்டு அணு உலைகளை நோக்கி நாம் உந்தப்படுகிறோம். அதற்கான காரணம் அந்த நிதிமுதலீடு நமக்குக் கடனாக சர்வதேச நிதியங்களால் அளிக்கப்படுகிறது என்பதே. அது நம்மை நிரந்தரக் கடனாளிகள் ஆக்குகிறது. வெளிநாட்டுத் தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கும் சவலைகள் ஆக்குகிறது.

இந்த முதலீடு, இதன் வட்டியுடன் சேர்த்துப்பார்த்தால் பெரும் இழப்பையே உருவாக்கும். இது உருவாக்கும் ஆற்றல் மூலம் உருவாகும் பொருளியல் லாபத்தைவிட இந்த முதலீடு அதிகம். இந்தப்பணம் முழுக்க வெளிநாட்டுத் தொழில்நுட்பத்துக்காக நாட்டைவிட்டு வெளியே செல்கிறது. ஆகவே இது ஒரு பொருளியல் பேரிடர்.

இந்த இழப்பு நம் நாட்டுக்கு அரசியல்வாதிகளால் சுயநல நோக்குடன் நிகழ்த்தப்படுகிறது. பெரும்பாலும் சர்வதேச அரசியல் ஒப்பந்தங்களின் ஒரு பகுதியாக, மறைமுகமாக இந்த உலைகள் நம் மீது சுமத்தப்படுகின்றன. இந்த ஒப்பந்தங்களின் உண்மையான நோக்கமும் இலக்கும் நமக்கு ஒருபோதும் சொல்லப்படுவதில்லை. ஆகவே இது ஓர் அரசியல் பிரச்சினை.

இந்த ஒவ்வொரு தளத்திலும் நான் சொல்லும் கருத்துக்களுக்கு ஆதாரமாக நான் நூற்றுக்கணக்கான தரவுகளை அளிக்கமுடியும். புள்ளிவிவரங்களைத் திரட்டி முன்வைக்க முடியும். என்னளவில் வாசித்துத் தெளிவுகொண்டபின்னரே அவற்றைச் சொல்கிறேன்.

அறிவியல் சார்ந்து நான் எவற்றையும் சொல்வதில்லை. கூடங்குளத்தின் பாதுகாப்புத் தொழில்நுட்பம் அல்லது கதிரியக்கச் சாத்தியம் எதைப்பற்றியும் நான் ஒரு நிபுணனாக நின்று எதையாவது சொல்லியிருக்கிறேனா என்ன? நான் அறிவியல் சார்ந்து எதையாவது சொல்லியிருந்தால் அது இன்னொரு நம்பத்தகுந்த அறிவியலாளர் சொன்னதை மேற்கோள் காட்டுவதாகவே இருக்கும். கூடங்குளத்தை எதிர்ப்பவர்களில், சூழியலாளர்களில், அணு விஞ்ஞானிகளும் உண்டு என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நேர்மாறாக, ‘கடுமையாக’ படித்து அறிவியல் கற்றவர் என உங்களை எண்ணிக்கொள்ளும் நீங்கள் உங்களின் எளிய அறிவியல் தகவல் கல்விக்கு வெளியே எதையும் தெரிந்துகொண்டிருப்பதாகத் தோன்றவில்லை. ஆகவேதான் அபாரமான தன்னம்பிக்கையுடன் கூடங்குளம் பிரச்சினை ஓர் அறிவியல் பிரச்சினை மட்டுமே என்ற எளிய முடிவுக்கு வருகிறீர்கள். நான் இதுவரை எழுதியவற்றை வாசிக்காமல், இந்த விவாதத்தில் பொதுவாக என்ன பேசப்படுகிறது என்பதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல், விசித்திரமான அப்பாவித்தனத்துடன் பேச முன்வருகிறீர்கள்.

இரு விஷயங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன். இந்திய அணு விஞ்ஞானிகள் மாற்று எரிபொருள் பற்றி தெரியாமல், பங்காளிச்சண்டையினால், மாற்று எரிபொருள் திட்டங்களைப் புறக்கணிப்பதாக நான் சொல்லவில்லை. இந்திய அணுமின் திட்டங்கள் அந்த அணுவிஞ்ஞானிகளால் தீட்டப்படுவன அல்ல. அவை அரசியல்வாதிகளால் எடுக்கப்படும் முடிவுகள். சர்வதேச பொருளியல் நிதியங்களால் நம் மீது சுமத்தப்படுபவை. அவற்றில் வேலைபார்க்கும் தொழில்நுட்ப நிபுணர்கள்தான் அணுவிஞ்ஞானிகள். அவர்கள் தொழிலுக்கு என்ன பேசவேண்டுமோ அதை அவர்கள் பேசுகிறார்கள். அப்படிப் பேசாமல் வெளியே வந்து உண்மைகளை உடைத்துப்பேசும் அணுவிஞ்ஞானிகளும் பலர் உண்டு.

இரண்டு, இந்தியா வெறுமே தொழில்நுட்பத் திறனாளிகளை மட்டுமே உருவாக்குகிறது என நான் பலமுறை இந்த தளத்திலேயே எழுதியிருக்கிறேன். அதற்குக் காரணம் நீங்கள் எழுதிய இக்கட்டுரையிலேயே உள்ளது. நீங்கள் நம் கல்விநிலையங்களில் கற்றுக்கொடுக்கப்படும் எளிமையான தொழில்நுட்ப வழிபாட்டு மனநிலையில் நின்று எழுதியிருக்கிறீர்கள். நவீனத் தொழில்நுட்பத்தின் தன்னளவிலான பலன்களை நம்புகிறீர்கள். நவீனத் தொழில்நுட்பம் நவீன சர்வதேச முதலாளித்துவத்துடன் பிரிக்கமுடியாதபடி சம்பந்தப்பட்டது. ஆகவே சர்வதேச அரசியலுடன் சம்பந்தப்பட்டது. அதைப்பற்றிய புரிதல் நம் அறிவியல் மாணவர்களிடம் இருப்பதில்லை, உங்களிடமும் இல்லை.

இவ்வாறு கருத்துக்களை ஒட்டுமொத்தமாக பார்க்காமல், கருத்தியல்களை பார்க்காமல், வெறுமே தொழில்நுட்பத்தை மட்டுமே கற்றுக்கொள்வதனால்தான் நாம் வெறும் தொழில்நுட்பத் தொழிலாளிகளாக மட்டுமே ஆகிக்கொண்டிருக்கிறோம். சிந்தனை நமக்கு கைவராமல் போகிறது.

கூடங்குளத்தை எதிர்ப்பவர்கள் விரிவாகவே எழுதியிருக்கிறார்கள். நான் திரும்ப அவற்றைச் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் எதிர்ப்பது அதன் தொழில்நுட்பத்தை அல்ல. அவர்களின் எதிர்ப்பு சமூகவியல், பொருளியல், அரசியல் தளம் சார்ந்தது. அக்கேள்விகளுக்கு தொழில்நுட்பத்தைக்கொண்டு மட்டும் பதில் சொல்லமுடியாது. அணுவிஞ்ஞானிகளும் பதில் சொல்லி முடிக்கமுடியாது.

எதிர்காலத்தில் அணுமின்சாரமே உலகில் இருக்கும் என நானும் அறிவேன். ஆனால் அது இன்றைப்போல அதிகமான வெப்பத்தையும் கதிரியக்கத்தையும் உருவாக்கும் தொழில்நுட்பமாக இருக்காது. அந்தப் பிரச்சினைகளை தொழில்நுட்பம் தாண்டிச்செல்லும். அப்போது நாமும் அங்கே சென்று சேர்வோம். இன்று காலாவதியான ஆபத்தான உலைகளை நம் தலையில் கட்டும் சர்வதேச நிதியமைப்புகளை நாம் தவிர்க்கலாம். அந்தப் பாதுகாப்பான அணுமின்சாரம் வரும் வரை நம்முடைய சொந்த எரிபொருளைச் சார்ந்து நிற்க முடியுமா என யோசிக்கலாம். தொழில்நுட்பத்தை விற்பவர்களிடமே வட்டிக்கு எடுத்த பணத்தைக்கொண்டு தொழில்நுட்பத்தை வாங்கி நிரந்தரக் கடனாளி ஆவதற்குப்பதிலாக நாமே ஆராய்ச்சியை வளர்த்துக்கொள்ள முடியுமா என்று பார்க்கலாம். இந்த கோடானுகோடி ரூபாயில் ஒரு பகுதியை அதற்குச் செலவிடலாம்.

இந்தியாவில் ஒரு விசேஷமான நிலை உள்ளது. இங்குள்ள அறிவியலாளர்கள் அரசின் உயரதிகாரிகளும் கூட! அதிகார வர்க்கமே அறிவியல்வர்க்கமாகவும் இருக்கிறது. ஆகவே அறிவியலாளர் அதிகாரியின் குரலில் பேசுகிறார். மக்களைப்பற்றி முடிவெடுக்க தனக்கு முழு உரிமை உண்டு என அவர் நம்புகிறார். கூடங்குளம் போன்ற ஒரு திட்டத்தை தாங்களே முடிவெடுத்து மக்கள் மேல் ஏற்றுகிறார்கள். மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கையில் ‘அதெல்லாம் நாங்கள் நிபுணர்கள் பார்த்துக்கொள்கிறோம்’ என்று பதில் சொல்கிறார்கள்.

எனக்கு இந்த நிபுணர்கள் மேல் நம்பிக்கை இல்லை. கிட்டத்தட்ட ஐம்பது அறுபதுகளில் இந்தியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணைத்திட்டங்களுடன் இன்றைய அணு உலைகளை ஒப்பிடலாம். அன்று ராம் மனோகர் லோகியா, ஜெ.சி.குமரப்பா போன்றவர்கள் அணைகள் நீண்ட காலத்தில் உருவாக்கும் அழிவுகளைச் சுட்டிக்காட்டினர். சிறிய கிராமத் தடுப்பணைகள், சிறிய குளங்கள் மூலம் அதைவிட வெற்றிகரமான இழப்புகள் அற்ற பாசன முறையைக் கொண்டு வரலாம் என்று அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். ஆனால் அன்றைய ‘நிபுணர்கள்’ அவர்களை எள்ளி நகையாடினார்கள். அதிகாரிகள் மக்களை வலுக்கட்டாயமாக குடிபெயரச்செய்து காடுகளை மூர்க்கமாக அழித்து அணைகளை உருவாக்கினார்கள்.

ஐம்பதாண்டுகளை ஒட்டுமொத்தமாகக் கணக்கிட்டால் அந்த அணைகளின் மூலம் உருவான ஒட்டுமொத்த விவசாய லாபத்தை விட அவை உருவாக்கிய சூழியல் அழிவின் இழப்பு அதிகம் என இன்று கணக்கிடுகிறார்கள். அந்த அழிவு இனிமேல் சரிசெய்யமுடியாதது, நிரந்தரமானது என்று கொண்டால் அந்த நஷ்டக்கணக்குக்கு எல்லையே இல்லை. அதையே கூடங்குளத்திலும் பொருத்திப்பார்க்கலாம்.

விரிவாக இதைச்சார்ந்து பலர் எழுதியிருக்கிறார்கள் . அவற்றை வாசியுங்கள். சில்லறை அறிவியல்தகவல்களுக்கு வெளியே சென்று முழுமையாகக் காண அவை உங்களுக்கு உதவக்கூடும்.

ஜெ

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 3 – மூடுபிதிரி, வேணூர், கர்க்களா, வரங்கா
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 4 – குந்தாதிரி, ஹும்பஜ்