அசடன்

இருபது வருடங்களுக்கு முன்னால், நான் ருஷ்யப்பேரிலக்கியங்களை வெறியுடன் வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்த காலகட்டத்தில், திரிச்சூர் ரயில்நிலையத்தில் பேரா.எம்.கங்காதரனுடன் பேசிக்கொண்டு நின்றிருந்தேன். இரவு நானும் அவரும் பரப்பனங்காடிக்கு அவரது ஊருக்குச் செல்லவேண்டியிருந்தது. தஸ்தயேவ்ஸ்கி பற்றிப் பேசினோம். நான் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் ‘குற்றமும் தண்டனையும்’ தான் மிகச்சிறந்தது என்று சொன்னேன். ’எனக்கு அசடன்தான் முக்கியமான நாவல்’ என்றார் கங்காதரன். ’ஏன்?’ என்று கேட்டேன்.

தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களை வாசிப்பதற்கு நல்ல தொடக்கம் ’குற்றமும் தண்டனையும்’.அது உணர்ச்சிகரமானது. ஆழமான உளவியல் மர்மங்களும் அகப்போராட்டங்களும் நிறைந்தது. நம்மை முழுமையாக அது ஆட்கொள்கிறது. கொஞ்சம் முதிர்ச்சி வருகையில் நமக்கு ’கரமசோவ் சகோதரர்கள்’முக்கியமானதாகப் படுகிறது. பாவம், குற்றம், மீட்பு என்பதையே அதுவும் பேசுகிறது. ஆனால் அது அந்த உணர்ச்சிகரத்தை மேலும் தீவிரமான அறிவார்ந்த கொந்தளிப்பாக ஆக்கிக்கொள்கிறது. மானுட ஞானத்தின் பெரும்பரப்பில் வைத்து அது அதே பிரச்சினைகளை விவாதிக்கிறது’

‘ஆனால் நமக்கு வயதாகும்போது நாம் ’அசடன்’ நாவலை நோக்கி வந்துசேர்கிறோம்’ என்று தொடர்ந்தார் கங்காதரன். ‘அந்த இரு பெருநாவல்களிலும் பேசப்பட்டதே இந்நாவலிலும் உள்ளது. அது தஸ்தயேவ்ஸ்கியின் நிரந்தரமான தேடல். ஆனால் இங்கே பரப்பு இல்லை குவிமுனை மட்டுமே உள்ளது. என் சிறுவயதில் நிளா நதிக்கரையில் ஓணத்தல்லு என்னும் மல்யுத்தம் நடக்கும். பல ஆவேசமான மோதல்களைப் பார்த்தபடி நான் நடந்தேன். ஓர் இடத்தில் வயதுமுதிர்ந்த இரு மாபெரும் மல்லர்கள் அமர்ந்தவாறே ‘பிடி’ பிடித்தனர். ஆட்டத்துக்கான சிலாவரிசைகள் வேகங்கள் எதுவுமே இல்லை. ஆட்டத்தின் உச்சகட்டமான பிடியின் தொழில்நுட்பம் மட்டுமே வெளிப்படும் மோதல். ஆனால் அதுதான் ஆட்டத்தின் உச்சம் என்று எனக்குப் பட்டது. ’அசடன்’ அப்படிப்பட்டது’

‘அசடன் அடிப்படையில் பாவியல்பு [Lyrical Quality] முற்றிய ஒரு நாவல். அது புனைவின் தளத்தில் இருந்து தூயநாடகத்துவம், தூயகவித்துவம் நோக்கி நகரும் படைப்பு. புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…அது உலகப் புனைவெழுத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று’

அசடன் நாவல் தமிழில் எம்.ஏ.சுசீலாவால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. பாரதிபுத்தகாலயம் வெளியீடு. அவர்கள் வெளியிட்ட முந்தைய ருஷ்ய செவ்விலக்கிய நூல்களைப்போலவே அகலமான வடிவமைப்பில் கதைமாந்தர்களின் முகங்களைக் காட்டும் திரைப்படக் காட்சிப்படங்களுடன் இந்நூல் வெளியாகியிருக்கிறது. சிறந்த கட்டமைப்பு கொண்ட நூல்.

நான் இந்நூலுக்கு அசடனும் ஞானியும் என்ற சிறிய முன்னுரை ஒன்றை எழுதியிருக்கிறேன்

எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைக் குறிப்பாகச் சொல்லவேண்டும். முழுமையாக மூலத்துக்கு விசுவாசமாக இருந்தபடி அற்புதமான சரளத்தைக் கொண்டுவர அவரால் முடிந்திருக்கிறது. உணர்ச்சிகரமான நீண்ட உரையாடல்களே இந்நாவலின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. அவற்றைத் தமிழ் மொழி சார்ந்த அனுபவமாக ஆக்க சுசீலாவால் முடிந்திருக்கிறது. ஏற்கனவே தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் நாவலைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்

தமிழில் ஒரு பேரிலக்கிய அனுபவத்தை நாடுபவர்கள் தவறவிடக்கூடாத நூல் இது

அசடன் -எம்.ஏ.சுசீலா
மொழியாக்கம் கலந்துரையாடல் – சுசீலா
தஸ்தயேவ்ஸ்கி-கடிதம்
கனவுபூமியும் கால்தளையும்
அசடனும் ஞானியும்
தஸ்தயேவ்ஸ்கி தமிழில்
குற்றமும் தண்டனையும்
குற்றமும் தண்டனையும் மொழியாக்க விருது
இரண்டாம் மொழிபெயர்ப்பு
இரண்டு வானோக்கிய சாளரங்கள்
ஓர் எளிய கூழாங்கல்
பேரா நா தர்மராஜன்
மொழியாக்கம் கடிதங்கள்
மொழியாக்கம்:கடிதங்கள்
தஸ்தயேவ்ஸ்கி கடிதங்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை
அடுத்த கட்டுரைபூமணியின் வழியில்