அடிமை மானுடம் – சீனு

22-2-2011

இனிய ஜெ.எம்.,

யாரோ ஒரு நண்பர் உங்கள் பிளாக்கில் கேட்டிருந்தார். இப்படியெல்லாம் தமிழகத்தில் அடிமைமுறை இருந்ததற்கான ஆதாரம் ஏதும் உண்டா என்று. பாவம் அவர் தெருவிலேயே இறங்காதவர் போல் இருக்கிறது. சில மாதங்கள்முன் கடலூரில் ஓர் இளம்பெண்ணைப் பார்த்தேன். குற்றுயிராய் வந்து சேர்ந்தாள். விழுப்புரம் பக்கம் செங்கல் சூளையில் வேலை பார்க்கும் “கொத்தடிமை’’. ஆம், கடனை வேலை செய்து அடைக்கும் கொத்தடிமை. பாலியல் கொடுமை தாங்காமல் எதிர்க்க, வழக்கம்போல் கந்தலாக்கப்பட்டாள். விழுப்புரத்தில் பார்க்க முடியாதென சொல்லிவிட கடலூர் வந்து சேர்த்தனர்.

ஏதோ விழுப்புரத்தில் ‘பெரிய ஆண்டை’. விஷயம் ரசத்தில் விழுந்த அப்பளமா ஆகிப்போச்சு. வந்து சேரும்போது அந்தப் பெண்ணைப் பார்த்தேன். நிர்வாணமாக. எலும்பு வரிகள் தெரியும் மெல்லிய உடல். இளமைக்கான சதைப்பற்று அப்போதும். உடம்பெங்கும் வரிவரியாய்க் காயம். வீங்கிய முகம். கிழிந்த உதடு. இடது முலைக்கண் இருந்த இடத்தில் அதற்குப் பதில் காயம். பல்தடம். கடித்துத் துப்பிவிட்டார்கள். மெல்லிய அகட்டிப்போட்ட தொடைகள், பிறப்புறுப்பில் செருகி இருந்தது சூளை எரிக்கப் பயன்படும் கருவேல மரத்தின் சிம்பு ஒன்று.

விழுப்புரத்தில் சில இடங்களில் இன்னும் இரட்டைக் கிணறு. இரட்டை டம்ளர் உண்டு. எதுவும் ‘ஆண்டைகளை’த் தாண்டி வெளிவராது. எழுச்சித் தமிழர் இலக்கிய முரசு, ஜனநாயகத்தின் நாலாவது தூணான மீடியா எல்லோருக்கும் இது தெரியும். ஆனால் எதுவும் மாறாது. வெளியேறுமுன் அந்தப்பெண் என்ன புலம்புகிறாள் எனக் காது கொடுத்தேன். ஒரே உச்சாடனம் திரும்பத் திரும்ப, “ஏம்மா என்னைய பெத்த?”

நேற்று இரவு மகம். தண்ணீரில் இருந்து மீனவர்கள் தரைக்கு வரும் நாள். வருடாந்திர வழக்கமாக இம்முறையும் வன்னியர் மீனவர் இடையே வெட்டுக்குத்து. கலவரத்தில் மீனவர் ஒருவர் பலி. அடுத்த வருட மகம் நிச்சயம் வன்னியர் ஒருவரின் களபலியோடுதான் துவங்கும்.  92 அல்லது 93இல் பத்தாவது முடித்து கடலூர் ஊர்பூரா நாயாக ஓடிய காலத்தில் மூண்டது அந்தக் கலவரம். மீனவர் ஒருவர் தன் கர்ப்பிணி மனைவியை டூவீலரில் ஆஸ்பிடல் கொண்டு போன வழியில் சிறு மோதல். மோதியவர் வன்னியர். மோதல் முற்றி கர்ப்பிணியின் வயிற்று சிசு இறந்துபோனது. ஒரு வாரம் கடலூர் ரணகளம் ஆகிப்போனது. காரணங்கள் புறம் தள்ளப்பட்டு மனிதர்கள் வீதியில் மிருகங்களாக உலவினர். சட்டம், வழக்கம்போல லீவில் போனது.

ஒருநாள் மொட்டைமாடியில் நானும் என் வயதொத்த சிறுவர்களும் பீதியில் பதுங்கிக் கிடந்தோம். தெருவெங்கும் அலங்கோலம். எரியும் டயர்கள், உடைந்து சிதறிய பாட்டில்கள், ஒற்றை செருப்புகள், மூடியகதவுகள், எரியும் தார் டிரம். ஒருவரை இழுத்து வந்தனர். மனைவி கதறித் தீர்த்தாள். அவனை கரண்ட் கம்பத்தில் கட்டிவைத்து ஜட்டியோடு நிற்க வைத்தனர். தங்கச்சங்கிலி மோதிரத்தைக் கழற்றிக்கொண்டான் ஒருவன். மனைவியை இருவர் பிடித்து மாறி மாறி அறைந்து அவள் தொய்ந்து துவளத் தூக்கிக் கணவன் முன் நிறுத்தினர். கணவனை ஒருவன் நெருங்கினான். ஸ்டிக்கர் வெட்டு கத்தியைப் பிரித்தான், மீனவன் உடலில் எங்கெங்கு கட்டுமஸ்தாக சதை உள்ளதோ அத்தனையும் கேக் துண்டுபோல வெட்டி எடுத்தான். ஓலம், ஓலம், ஓலம், மரண ஓலம் – என் பிணம் சிதையில் எரியும்போது மட்டுமே என் காதைவிட்டு விலகப்போகும் ஓலம்.

பிடியில் மனைவி துள்ளித் துள்ளி விழுந்தாள். எடுத்த சதைத் துண்டுகளை எரியும் தார் டிரம்மில் போட்டான். பின் மனைவி வசம் வந்தனர். ‘வேணா வேணா’என ஈன சுரத்தில் கதறினான் கணவன். மனைவி கைகளை விரித்துப் பிடித்துக் கொண்டனர். கால்களை இருவர் விலக்கிப் பிடித்துக் கொண்டனர். நீலமேகம் கைநிறைய மண்ணள்ளி அவள் வாயில் குமட்டக் குமட்டக் கொட்டி மூடினான். இனி அலறல் இல்லை.

சேலையைத் தூக்கினான். கணவன் தலைதொங்கிக் கிடந்தான். இடதுகையால் யோனியைப் பிரித்து முடிந்தவரை விலக்கினான். கைநிறைய மண்ணள்ளி உள்ளே கொட்டினான். நடுவிரல் விட்டுக் குத்தினான். திரும்ப மணல் நிரப்பினான். மனைவி தொய்ந்தடங்கினாள். கணவன் உயிரைத் திரட்டிக் கத்தினான். “டேய் தேவுடியா புள்ளைகளா என்னக் கொன்னுடுங்கடா”. குழு அவன் கட்டை அவிழ்த்தது. கைகளைப் பின்புறம் கட்டினர். அவனைத் தலைகீழாகத் தூக்கி எரியும் தார் டிரம்மில் புதைத்தனர். விலகி உரக்க ஊளையிட்டபடி கலைந்து காணாமல் போயினர். வானுக்கு நிர்வாணம் காட்டியபடி அவன் இளம் மனைவி அசைவின்றிக் கிடந்தாள். ஆறு நாள் கலவரம், வன்னியர் மூவர் மீனவர் மூவர் பலி சமன் கண்டதும் கலவரம் ஓய்ந்தது.

படையாச்சிக்கு எதிரான மீனவர் கதைகள் அனேகம். தரைக்கும், தண்ணீருக்குமான போர். நான் வேறு, நீவேறு. இதேதான் மண்டைக்காட்டிலும் நடந்திருக்கும். தேசத்தின் மூலை எங்கும் நடந்து கொண்டிருக்கும். அழிவு, அழிவு, நம்மை நாமே கொன்று புதைத்துக் களியுவகை எய்துதல். ஹோமோசேபியன் இனமான நாம், நம்மைப்போலவே இருந்த நியாண்டர்தால்களைக் கொன்றொழித்து வந்தவர்கள் என்று படித்திருக்கிறேன். மரபணுவில் உறிப்போனது படைப்பிலேயே மட்டமானவன் இன, நிற, ஜாதி, மத, தேச, பொருளாதாரக் காரணிகள் கொண்டு பிறனை ஒடுக்கும் ஒருவன். “மனிதன் எத்தனை மகத்தான சொல்” என்று சொல்லி விம்மியவனைத் தேடுகிறேன், எரியும் தார் டிரம்மில் புதைக்க.

இதோ இப்போது என் எழுதும் மேஜையில் ‘காந்தியின் இறுதி 200 நாட்கள்’ புத்தகம் இருக்கிறது. இதைப்போலப் பல்லாயிரம் காட்சிகளை காந்தி கடந்து சென்றிருக்கிறார். அதன் பின்னரும் அன்பு எதையும் மாற்றி வைக்கும் என்று உரக்க உரக்கச் சொல்கிறார். மனிதன் மகத்தானவன்தான். காந்தியைப் போன்ற ஒருவன் மகத்தானவன்தான். இதை எழுதுவது உங்களுக்கு மட்டுமல்ல இங்கே என் தேசத்தில் கலந்துவிட்டிருக்கும் காந்தியின் ஆன்மாவுக்கும் இதை எழுதுகிறேன். எழுத எழுத அன்றைய காட்சி உக்கிரமாக ஏறி ஏறி வருகிறது. அழுகை வருகிறது. என்னால் எதுவும் செய்ய முடியாது. இன்றும் தூங்கப்போவதில்லை. இனிய ஜெ.எம்., தூங்கவேண்டும், ஒரே ஒருநாள் கனவுகள் ஏதுமின்றி, மிகமிகப் பாதுகாப்பு உணர்வின் மடியில் ஒரே ஒருநாள் தூக்கம் போதும். யாரிடமும் சொல்லாதது உங்களிடம் சொல்லிவிட்டேன், மனம் வெறுமையா இருக்கு.

சீனு, கடலூர்.

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 6 – மூல்குந்த், லக்குண்டி, டம்பால், ஹலசி
அடுத்த கட்டுரைஅருகர்களின் பாதை 7 – ஆயிரத்து எண்ணூறு கிலோமீட்டர்கள் கடந்து பெல்காம், கித்ராபூர், கும்போஜ்