தமிழ்நேயம்-31.’கொற்றவை’ சிறப்பிதழ்

மார்க்ஸிய அறிஞரு,ம் தமிழியக்கவாதியுமான ‘ஞானி’ வெளியிட்டுவரும் ‘தமிழ்நேயம்’ தன் 31 ஆவது இதழை ஜெயமோகனின் ‘கொற்றவை’ புதுக்காப்பியம் மீதான திறனாய்வுச் சிறப்பிதழாக வெளியிட்டிருக்கிறது. [ஜெயமோகன்: ‘கொற்றவை’ படைப்பும் பார்வையும்]

”ஒரு காப்பியம் என்ற முறையில் இளங்கோவடிகளுக்கு முன்னரே தமிழகத்தின் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் கண்ணகி பற்றிய கதை உருவாகி நாளடைவில் தமிழ் சமூகத்தின் தேவைகள் மற்றும் உணர்வுகளை உள்வாங்கி மேலும் திரண்டு இளங்கோவடிகள் மூலம் அற்புதமான காப்பிய வடிவம் பெற்று சிலம்பின் கதையாகியது. நம் காலத்திலும் நம் தேவைகளுக்கு ஒத்த முறையில் பாரதிதாசன் முதலியவர்கள் மூலம் மீண்டும் மீண்டும் மறுபடைப்பாக வெளிப்படுவதை பார்த்து வருகிறோம். சிலம்பினுள்ளும் பேசப்படாத மௌனங்களை உடைத்துப் பார்ப்பதோடு சிலம்புக்கு முன்னரே குமரிக்கண்டம் தொடங்கி தமிழ் வாழ்வினுள் தோன்றி பின்னர் தனக்குள் இறுகிய நூற்றுக்கணக்கான தொன்மங்களை உடைத்துப் பார்க்கும் அறிவாற்றலும், கற்பனை வளமும், புனைவுத்திறனும் கொண்டு, தமிழ் மொழியின் பேரழகுகள் அனைத்தும் கொண்டதோர் உச்ச அளவிலான ஒரு படைப்பாக, ஒரு செவ்வியல் நாவலாக, உருவாகியிருக்கிறது கொற்றவை. தமிழ் உணர்வாளர் அனைவரும் கூடிக் கொண்டாடும் தகைமையோடு விளங்குகிறது இந்தப் புதிய காப்பியம்

25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழரின் படைப்பு மற்றும் சிந்தனைத்துறையில் சாதனைகள் எனத் தொடர்ந்து நிகழ்த்தி வருபவர் நண்பர் ஜெயமோகன். தன்மீது சுமத்தப்பட்ட அவதூறுகள் அனைத்தையும் தூசென உதறிக்கொண்டு தலை நிமிர்ந்து நிற்பவர். இவரது படைப்புத்திறனுக்கும், வரலாற்று உணர்வுக்கும், திறனாய்வுப் பார்வைக்கும், தமிழுணர்வுக்கும் தன்னிகரற்ற சான்றுகளாக திகழ்பவை இவரது ‘விஷ்ணுபுரம்’ ‘பின் தொடரும் நிழலின் குரல்’ ‘காடு’ முதலிய நாவல்களும் திறனாய்வு நூல்களும். கொற்றவை இவரது படைப்புத்திறனுக்கு உச்சம் என நாம் பாராட்ட முடியும். இளங்கோவின் சிலம்பைக் கொண்டாடும் எந்தத் தமிழறிஞரும் இனிக் கொற்றவையை படித்துப் புரிந்து கொள்ளாமல் இருக்க முடியாது.

தமிழரின் முதல் தாய்த்தெய்வமும் போர்த்தெய்வமுமாக விளங்கிய கொற்றவை குமரிக்கண்டத்தில் எழுந்து தமிழர் வாழ்வோடு நூற்றுக்கணக்கான வடிவங்களில் கலந்து கண்ணகியாகி அநீதியை சுட்டெரித்து கேரள மண்ணில் தெய்வச்சிலையாக நிற்கிறாள். தமிழுணர்வின் பேரெழுச்சியென பாவாணர் தொடங்கி பலரை கொண்டாடும் நாம் தமிழ் படைப்பிலக்கியத்தின் உச்சமெனத் திகழும் நண்பர் ஜெயமோகனை இனிக் கொண்டாடத்தான் வேண்டும்.”

என்று ஞானி முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

1 முனைவர் ஜெ.ராமதாஸ்– ‘கொற்றவை,படைப்புத்தடத்தில் ஒரு பயணம்’

2 முனைவர் அருள்திரு ·பில்ப் சுதாகர்– ‘கொற்றவை,பெண்ணிய நோக்கில் தமிழ்ச்சமூகவரலாற்றின் மறுவாசிப்பு’

3 முனைவர் சு.வேணுகோபால்–‘அன்னையின் கரங்களில் துலங்கும் தமிழர் மானுடப்பரப்பு:கொற்றவை’

4 மலர்விழிமைந்தன் ‘கொற்றவை,ஒரு நயவுரை’

5 க.அறிவன் ‘சிலப்பதிகாரம்-கொற்ரவை இணைவும் விலகலும்’

ஆகிய ஐந்து கட்டுரைகள் இதில் உள்ளன.

[தமிழ் நேயம். ஆசிரியர் கி.பழனிச்சாமி [ஞானி] எண். 24,வி.ஆர்.வி நகர், ஞானாம்பிகை ஆலை அஞ்சல், கோவை 641029 இந்தியா]

கொற்றவை – ஒருகடிதம்

கொற்றவை, கோசாம்பி மற்றும் திரு.ஜெயமோகன் : அரவிந்தன் நீலகண்டன்

கொற்றவை – ஒரு பச்சோந்திப் பார்வை. ராமபிரசாத்

தமிழின் நல்லூழ்:இரா. சோமசுந்தரம்

முந்தைய கட்டுரைகனிமொழி வணக்கம்
அடுத்த கட்டுரைஇதழ்களும் மதிப்பீடுகளும்- ஒரு கடிதம்