தாய் எனும் நிலை – சீனு

5.1.11
இனிய ஜெ.எம்.,

இன்று காலை ஆஃபீஸ் திறக்கக் கிளம்பும்போது பிரதான சாலையில் ஒருகாட்சி. சாலை கடக்க முயன்றிருக்கிறது ஒரு அம்மா நாயும், பிறந்து சில வாரங்களேயான குட்டியும். சாலை கடக்கும் சிக்கலில் நாய் எதிர்சாரி சென்றுவிட, குட்டி வாகனத்தில் சிக்கித் தலைபிளந்து இறந்து போனது. குட்டி நோக்கித் தாய்வர, டிராபிக் தடுக்க நாய் திரும்ப ஓட, சில நேர முயற்சிக்குப் பின் அந்த நாய் சாலை ஓரம் அமர்ந்து முன்னங்கால்களும் மூக்கு நுனியும் 90டிகிரியில் நிற்க ஊளையிட்டு அழுதது. அப்படி ஒரு கேவலை இதுவரை நான் அறிந்ததில்லை. முதுகுத்தண்டில் ஐஸ் இறங்கி குதம் கூசியது. தொடைகள் உதறப் பதறி அக்காட்சி விட்டு விலகினேன். மனம் அலைக்கழிந்து ஏதேதோ பிம்பங்கள் பொங்கின.

வீட்டு எதிரில் ஒரு தெருநாய் எங்கள் வீட்டு உணவில்தான் திரிந்தது. ஒருமுறை 2 குட்டி போட்டது. ஒன்று கருப்பு, இன்னொன்று அப்பட்டமான வில்வ இலைப் பச்சை. இப்படி ஒரு நிறத்தில் ஒரு நாயை நான் பார்த்ததே இல்லை. அதை வீட்டு நாயாக வளர்க்க எண்ணினேன். ஒரு மழைநாள் முடிந்த காலை ஒன்றில் அக்குட்டி இறந்துபோனது. தாய் யாரையும் நெருங்கவிடவில்லை. என்னைத் தவிர. கருப்புக் குட்டி பால் குடிக்கும்போது செத்த குட்டியையும் இழுத்துப் போட்டுக் கொண்டது. எங்கு சென்றாலும் செத்த குட்டியைக் கௌவிக்கொண்டே அலைந்தது.

ஒருநாள் தாயைக் காணோம். கருப்புக்குட்டி மட்டும் என் வீட்டு வாசலில் கிடந்தது. தாய் நாயைத் தேடினேன். தெருமுனைப் புதரருகே அமர்ந்து எதையோ தின்று கொண்டிருந்தது. என்னைக் கண்டதும் வாயில் கௌவிய உணவுடன் உற்சாகமாக வாலாட்டியது. அதன் வாயில் இருந்தது பாதி உண்ணப்பட்ட பச்சை நிறக்குட்டி.  ‘நான் கடவுள்’ க்ளைமாக்ஸ் வசனத்தின்போது என்னையறியாமல் அழுதுகொண்டிருந்த பின்புலத்தில் இதுவும் இருக்கக்கூடும்.

செழியன் விகடனில் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். “அம்மாவைத் தேடி” தலைப்பு. முகங்கள் மட்டுமே வேறு “தாய்” என்பவள் ஒருவள்தான் என்று எழுதி இருந்தார். முகங்கள் மட்டுமல்ல உடல்கள் வேறானாலும் தாய் என்பது ஒன்றுதான்போல.

சுனாமியன்று சென்னையில்தான் இருந்தேன். நண்பரின் ஜீப்பில் கடற்கரைச் சாலைவழி கடலூர் சென்று கொண்டிருந்தேன். தொடர் குழப்பங்களுக்கிடையே ஒரு காட்சியைக் கண்டேன். ஊனமுற்றோர் ஓட்டும் கையில் பெடல் வைத்த மூன்று சக்கர வண்டி. அதில் முள்கரண்டியில் மிஞ்சிய நூடுல்ஸ் போல அலங்கோலமாய் விழுந்து கிடந்தாள் ஓர் ஊனமுற்ற பெண். முகத்தின் இடதுபுறம் கிழிந்திருந்தது. வாய்கொள்ளாத கடற்கரை மண் (நிச்சயமாக இறந்துபோயிருக்கக்கூடும்) அழுதபடியே அந்த வண்டியைத் தள்ளியபடி ஓடிக்கொண்டிருந்தாள் அந்தப் பெண்ணின் தாய். ஒருவருக்கு மற்றவர் உதவி செய்யும் நிலையில் யாரும் இல்லை. எல்லோருமே ஓடிக்கொண்டிருந்தார்கள். இத்தனை மகத்தான வீழ்ச்சியைத் தாங்கக்கூடியதா ஒரு தனி மனிதப் பிரக்ஞை? 10 நாள் காய்ச்சலில் கிடந்து எழுந்தேன்.

கீழவெண்மணி பற்றி ஒரு டாகுமெண்டரி பார்த்தேன். யாரோ விவரிக்கிறார். தீயில் எரியும் குடிசைக்குள்ளிருந்து தன் குழந்தையை வெளியே வீசி எறிகிறாள் ஏதோ ஒரு தாய். திரும்பவும் குழந்தை அவளிடமே சேர்க்கப்படுகிறது. ‘விரிந்த கரங்களில் காலமெல்லாம் விழுந்து கொண்டிருக்கிறது என்றும் மீளமுடியாத நம் இம்சைகள்.’

காலையில் கேட்டேன் “ஏம்மா இந்த சட்டைய இன்னும் தோச்சுப்போடல?’’ “நீ திடீர்னு கௌம்பிட்டியா, வரவரைக்கும் உன்வாசனை இருக்கட்டுமேன்னு விட்டுட்டேன்.” (செத்து, சடங்கு எல்லாம் முடிந்ததும், விசும்பலுடன் பதுக்கப்படும், உடல்வாசம் மாறாத இறுதி உடை). அனேகமாக இது எல்லா தேசத்திலும் நிகழக்கூடும்.

மனம் பொறுக்காமல் திரும்பி வந்தேன். குறைந்தபட்சம் அக்குட்டியின் உடலையாவது சாலை கடந்து தாய்வசம் சேர்த்துவிட எண்ணினேன். திட்டாக ரத்தத்தடம், வாகன சக்கரம் தன் தடத்தால் அதை ஏதோ நவீன ஓவியமாக மாற்றி இருந்தது. குட்டியைக் காணவில்லை. சாலை முனைவரை விழியோட்டினேன். நகராட்சி குப்பை டிராக்டர் பின்பாக மடி துவள ஊளையிட்டு அழுதபடி ஓடிக்கொண்டிருந்தது அந்தத் தாய்.

மாளும் இவ்வுடல் கொண்டு இப்புவியில் நாம் எய்தவந்ததுதான் என்ன?

சீனு
கடலூர்.

முந்தைய கட்டுரைஅருகர்களின் பாதை 5 – ஹங்கல், பனவாசி, லட்சுமேஸ்வர்
அடுத்த கட்டுரைஜம்பை, ஆலம்பாடி – ஒரு கடிதம்