பெருங்காடும் நான் மேய்ந்த நுனிப்புல்லும் – சீனு

இனிய ஜெ.எம்.,

திரும்பவும் ஒருமுறை காடு நாவல் படிக்க நேர்ந்தது. சில தினங்கள் முன் டிவியில் ஒரு காட்சியைக் கண்டேன். செய்தி, சரக்கு ரயில் மோதி ஒரே நேரத்தில் 7 யானைகள் இறந்துபோன காட்சியை ஒளிபரப்பினார்கள் (யானைகளை இந்தியாவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்போவதாக சில தினங்கள் முன்தான் ஒரு செய்தி பார்த்தேன்) சிகப்பு ரெயில் எஞ்ஜின் முன், கரிய குவியலாய், விழி மூடி, ரத்தம் வடியும் அசைவற்ற காதுகளுடன், ஜல்லிக்கற்களில் துதிக்கை புரண்டு கிடக்க, ஒருக்களித்து இறந்து கிடந்தது ஒரு யானை. கொம்புகளற்ற யானை. யானை தன் அடுத்த தலைமுறையை உருவாக்க 25 வருடங்களாவது தேவைப்படும். (செல்போன் டவரால் குருவிகள், ரயிலால் யானைகள், விஷவாயுவால் மனிதர்கள்)

இம்மியளவு கூட அலட்சியத்தை விட்டு வெளியேறாத சகமனிதர்கள், மூளையற்ற அரசியல்வாதிகள்,முட்டாள் அதிகாரிகள், தூக்கமற்ற இன்னொரு இரவு. காடு நாவலைப் பிரித்தேன். தன்னியல்பாய் மனம் காட்டாற்றுக் கணவாயில் சிக்கித் தவிக்கும் கீரக்காதன் பற்றிய சித்திரம் தேடி ஓடியது. என் வழக்கப்படி அங்கே துவங்கி நாவலைப் பின்பக்கம் முதல் முன்பக்கம் வரை என வாசிக்கத் துவங்கினேன். என் அனுபவத்தில் சொல்கிறேன். எழுத ஆசைப்படுபவர்கள் நாவலை இப்படிப் பின்முதல் முன்னாகப் படித்துப்பார்த்தால் சில எழுத்து நுட்பங்களை, அந்த நாவலின் வடிவ பலம், பலவீனங்களை, உதிரிக் கதாபாத்திரங்களின் விஸ்வரூபத்தை எனப் பலதும் கிரகிக்கலாம். மோகமுள் ஒரு குறுநாவல் என நான் கண்டுபிடித்தது இந்த உத்தி மூலம்தான்.

பின் முதல் முன் எனில் எழுத்து எழுத்தாக அல்ல அத்யாயம் அத்யாயமாகப் படிக்கவேண்டும். ஒரு புளியமரத்தின் கதையை இப்படிப் படித்துப்பார்த்தேன். காலத்தின் முன் ஓர் இடம் இதுதான் நாவலின் ஆதாரப்புள்ளி. ஐதீகத்தில் துவங்கி, வரலாற்றின் வழி நவீன காலத்துக்குள் வருகிறது ஒரு புளியமரம். புளிய மரத்தை மையப்படுத்தி முன் வைக்கப்படும் சூழலின் வளர்சிதை மாற்றம். இயல்பில் காலத்தின் முன் வளர்சிதை மாற்றம் என்பது பிரும்மாண்டமான வலை போன்றது. அதன் கண்ணிகள் நமக்குப் புலனாகாத ஆயிரம் கோடி அசைவுகளால் ஆனது. இதன் பிரதிபலிப்புக் கூடப் புளியமரத்தில் இல்லை. காலம் வரலாறு எல்லாம் தண்டவாளத்தில் ஓடும் ரயில்போல நேர்கோட்டில் ஓடுகிறது.

மாறாக எப்படிப்படித்தாலும் ஆழம் மாறாத நாவலாகவே இருக்கிறது காடு. யானை முதல், எறும்பு வரை – குருக்கன் முதல் மின்மினிப்பூச்சிகள் வரை சகலமும் சொற்கள் வழியே உருவாகி, மனதுக்குள் உயிர்கொண்ட காடு ஒன்றை உருவாக்கி அழிக்கிறது உங்கள் படைப்புத்திறன். தந்தைப்பாசம் தற்கால நிலவரத்தில் நம் இலக்கியங்களில் அதிகமாகக் கையாளப்பட்ட ஒன்றாகத் தெரியவில்லை. அதன்மீது அடிக்கடி கவனம் குவிப்பது நீங்கள் மட்டுமே. ரேசாலம் மேஸ்திரிக்கும் தேவாங்குக்கும் இடையே நிகழும் தந்தை மகள் உறவு படிக்கப் படிக்கத் தீராத மர்மங்களைத் தந்தபடி வசீகரம் வளர்ந்தபடியே இருக்கிறது. சாம்பல் குழியில் வலிப்பு வந்து விழுந்து இறக்கும் தங்கன் முதல் புலி தூக்கிச் செல்லும் தேவாங்கு வரை கிரி மாமாவின் காமத்தினுடைய ‘பட்டர்ஃப்ளை எஃபெக்ட்’அதன் உக்கிரம் குறையாமல் பொங்கி வருகிறது நாவலில்.

ஒரு நாவலில் சொல்ல வேண்டியதை இரண்டே பாராவில் வலிமாறாமல் எண்ணைச் செட்டிச்சியின் தலைமுறையே நாசமாவதை எப்படி உங்களால் எழுத முடிந்தது? குரிசு பைபிளுடன் வரும் காட்சியெல்லாம் பகடியுடன்தான் துவங்குகின்றன. குரிசு தன்னியல்பிலேயே கிறிஸ்துவத்தின் சாரமாக இருக்கிறான். தன்னை அமைப்புக்குள் அடைத்துக்கொள்ள ஓயாத பிரயாசையில் இருக்கிறான். கிரியிடம் குரிசு இறுதியில் பேசும் சொற்கள் குரிசைக் குட்டப்பனுக்கு இணையான ஆளுமையாக மாற்றிக் காட்டுகிறது.

நாவல் நெடுக முன்வைக்கப்படும் உணவு வகைகளில் தேன், மாங்காய், கருப்பட்டி, சக்கரை வள்ளிக்கிழங்கு இவற்றைத் தவிர வேறு எதுவும் நான் உண்டதில்லை.நீங்கள் பறித்துத் தருபவை கிரிக்கே பெயர் தெரியாத பழங்கள். சந்தனக்காட்டுத்தேன் சொல்லிப்பார்த்தாலே கிறுகிறுக்கிறது. எஞ்சினியர் வீட்டுக்குப் போகும் முன் கிரி நீரருந்தும் மானைப் பார்க்கிறான். இஞ்சினீயர் வீட்டில் மான் தோலறுக்கப்படுகிறது. மானை அதன் அத்தனை உயிரோட்டத்துடனும் அதே மானை அதன் அத்தனை சவத்தன்மையோடும் எப்படிக் காட்சிப்படுத்த முடிகிறது? அதனால்தான் உங்கள் எழுத்தை கலைடாஸ்கோப் என்கிறார்களோ?

குறிஞ்சிப்பூவில் அமரும் வண்டு பற்றிய சிந்தனை என்னை ரொம்பவே அலைக்கழித்து விட்டது. (யானையை மோதிய ரயில் அதன் அடுத்த தலைமுறையை மோதக் கால் நுற்றாண்டு தேவை) தன் அந்திம காலத்தில், தன் பால்யம்முதல் இன்று வரையிலான சிறந்த காலத்தைப்பற்றி இனி நினைத்துப்பார்ப்பதாக இருக்கிறது நாவலின் வடிவம்.பொதுவாக அந்திமத்தில் எதிர்காலம் என்ற ஒன்று இனிஇல்லை என்று திட்டவட்டமாகத் தெரிந்தஉடன் மனம் உக்கிரமாக இறந்த காலத்தை மீண்டும் வாழ்ந்து பார்ப்பதைப் பல முதியவர்களிடம் நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். ஆனந்தலட்சுமி அம்மா, வேணி, புவனா மாமி, அம்பிகா அக்கா, கிரியின் அம்மா, கிரி முதன்முதலாக புணரும் பணிக்கத்தி, ஸ்னேகம்மை, மிஷனாஸ்பத்திரி மேரி, ரெஜினாள் என நாவலின் ஒவ்வொரு பெண்களும் முற்றிலும் தனித்தனி மன உலகங்களோடு விஸ்வரூபம் கொள்கிறார்கள். இவர்களோடு ஒப்பிட நீலியின் மனஉலகம் சொல்லப்படவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும். நீலி வன நீலியாக மாறி அறைக்கதவை முட்டியழும் இறுதிச் சித்திரம் தவிர.

மேலும் நாலின் முக்கியமான அம்சம் நீலிவரும் காட்சிகள் யாவும் கிரிதரனால் மட்டுமே சொல்லப்படுகிறது. ஒரே ஒருமுறை ஐயர் வார்த்தைகளின் வழி உருவாகிறாள் நீலி. கிரி போலவே எனக்கும் எரிச்சல் மண்டியது. குட்டப்பன் இரண்டே வரியில் முடித்துவிடுகிறான். தங்களின் மரணத்தை விடக் குரூரமாக முன்வைக்கப்படுகிறது நீலியின் மரணம். ரேசாலம், மாமாவைக் கொலை செய்துவிடுவது கிரி போலவே நானும் முன்னுணர்ந்துள்ளது எப்படி? புலி வருவதை அறிவிக்கும் பறவைபோல ஒளி எழுப்பிக் கீரைக்காதனிடமிருந்து தப்புகிறாள் நீலி. குட்டப்பன் கணக்கு மட்டும் எங்கோ தவறிப்போகிறது. யானை ஜெயித்துவிடுகிறது.

நடுக்காட்டில் சுயஇன்பம் அனுபவிக்கும் கிரி முதுமையில் ப்ராஸ்டேட் சுரப்பி பிரச்சனையால் மூத்திரம் பெய்யவே முக்குகிறான். முதுமையில் உடல்தான் முதல்பாரம். நாவல் நெடுகக் காமத்தால் அலைகழியும் உடல்களையே காண்கிறோம். ஒரே ஒரு நம்பிக்கை தரும் ஆளுமை கிரியின் மகன். இன்னும் ரெண்டே வருஷம்பா. அப்புறம் நான் பாத்துக்கறேன் என்கிறான். கிரி அவன் வயதில் தேங்காய்திருடித் தலையெழுத்தையே மாற்றிக் கொள்கிறான்.

“நெலா கண்ட சேவக்கோளி போல” “தொண்டைல கௌங்கு விக்குன நரி போல” என்று எப்போதும் மனதை விட்டு நீங்காத நிறைய சொற் பிரயோகங்கள். கீரக்காதனின் பாடம் செய்யப்பட்ட தலை குறித்த சித்திரத்தை முதன்முறை படித்தபோது உங்களை அடி மனதில் இருந்து வெறுத்தேன். சமன்பெற ரொம்பநாள் ஆனது. காடென்பது மிருகங்களுடன் தெய்வங்கள் வாழும் இடம். நாடென்பது மிருகங்கள் போல மனிதர்கள் வாழும் இடம். காடழிந்து நாடாவதே வளர்சிதை மாற்றத்தின் இயங்கியல் விதி.

நாவலின் துவக்கத்தில் வரலாறு எழுதி வாசிக்கப்படும் விதம் பற்றி கிரி நையாண்டியாக யோசிக்கிறான். வரலாறு குறித்த கிரியின் ஆர்வம் எத்தகையது என்று நாவலில் வேறு எங்கும் சொல்லப்படவில்லை. 2000ல் கிரியின் வயது 70 என வைத்துக்கொண்டால், அவனது காடு காண் பருவத்தில் சுதந்திரப்போர் அதன் உச்சியில் இருக்கவேண்டும். கிறிஸ்துவ மிஷினரியின் பங்களிப்பின் துல்லியம் உள்ள இந்த நாவலில் ஏன் அரசியலே இல்லை? “காங்கிரஸ் கவிழ்ந்த பிறகு” என்ற இரண்டே இரண்டு வார்த்தையைத் தவிர? மொத்த நாவலிலும் அரசியலால் தீண்டப்பட்ட மனம் ஒன்றுகூட சித்தரிக்கப்படாதது ஏன்? ரட்சண்ய சேனையின் முக்கியஸ்தராக வருகிறார் கண்டன் புலையனின் பேரன். வேறு காட்சிகள் ஏதும் இல்லை.

சங்க இலக்கியத்தில் குறிஞ்சிப்பூ பற்றிய தடயங்கள் இல்லை எனும் அளவு அதில் தோய்ந்தவன் கிரி. கிரி புத்தகம் படிப்பதாகவோ அல்லது அவன் தலைமாட்டில் ஒரு புத்தகம் குப்புறக் கிடப்பதாகவோ நாவலில் ஒரு வரியாவது வந்திருந்தால் இன்னும் நிறைவாக இருந்திருக்கும். (இங்கே சம்பந்தம் இல்லாத ஒரு கேள்வி, நீங்கள் புத்தகம் படிப்பது போல ஒரு போட்டோகூட வெளிவராதது ஏன்?)

நாவலில் எனக்குப் பிடிக்காத அம்சம் ஒன்று. கிரி இலக்கிய ரசிகன். வாழ்வில் தோல்விகளை மட்டுமே சந்திக்கிறான். ஐயர் இலக்கிய ரசிகர். வாழ்க்கையை விட்டே ஒதுங்கி விடுகிறார். வேதசகாய நாடார் இலக்கிய ரசிகர். மனைவியின் சன்னதியில் நாயினும் கடையனாக வாழ்கிறார். இது என்னவிதமான ஒழுங்கமைவு?

இறுதியாக, காடு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படப்போவதாக ஒரு இலக்கியக் கிசுகிசு பரவி உள்ளது. காடு ஆங்கிலத்தில் எப்படி இருக்கும்? ஒரு உதாரணம் மூலம் யோசிக்கலாம்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇ
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந்தன்றோ இலளே பானாள்
பள்ளியானையின் உயிர்த்து என்
உள்ளம் பின்னும் தன் உழையதுவே.

-குறுந்தொகை

வனத்தடாகத்தில் பூப்பறித்து மாலைகட்டி அணிந்து,
காட்டில் கிளியோட்டும் பெரிய கண்ணழகி அறியமாட்டாள்
தூங்கும் யானை போலப் பெருமூச்சு விட்டு
என் மனம் அவள் நினைவைத் தொடர்வதை

கிரி -உரை.

சுனைப்பூக்களைப் பறித்து மாலை தொடுத்துத்
தினைப்புனத்தில் கிளி விரட்டுபவளை
என் உள்ளம்
ஒரு சாமத்தில் படுத்திருக்கும்
யானை போலப் பெருமூச்சு விட்டுப் பிரிந்த பின்னும்
அவளுடன் வசிப்பதை
அறிவாளோ அறியாளோ! –

சுஜாதா -உரை

முன்னது அகத்துடன் அகம் நிகழ்த்தும் பரிமாற்றம். சுஜாதா “உலகத்தீரே இதனால் அறியப்படும் சேதி என்னவென்றால்..” எனக் கூறுகிறார். சுஜாதாவின் திருக்குறள் உரை இன்னும் ஒரு படி மேல். உ மட்டும்தான் இருக்கிறது. ரையை காணவில்லை. காடு ஆங்கிலத்தில் மொழி “பெயர்க்கப்பட்டால்” இப்படித்தான் இருக்கும். சாறு நம்மிடம், சக்கை அவர்களிடம். அதைப் படித்துவிட்டு தமிழே தெரியாத “வேர்ல்டு இலக்கிய” மேதாவி ஒன்று தமிழ் இலக்கியத்தில் சாறே கிடையாது, சக்கை மட்டும்தான் உண்டு என்று திருவாய் மலரும்.

வணிக இலக்கியத்துக்கும் சீரிய இலக்கியத்துக்கும் முக்கியமான வேறுபாடு ஒன்று உள்ளது. என் படிப்பின் வளர்ச்சிப் பருவத்தில் சாண்டில்யனின் மனமோகம் என்று புத்தகம் படித்தேன். நாயகன் நாயகி டென்னிஸ் விளையாடுகிறார்கள். ஒரு சமயம் நாயகன் டென்னிஸ் பந்து நாயகியின் மார்பகத்தில் ஒன்றை பலமாகத் தாக்கிவிடுகிறது. பிறகு (ஆசை, தோசை, அப்பளம், வடை, மிச்சத்த நீங்களே புத்தகம் படிச்சுத் தெரிஞ்சுக்கோங்க) சாண்டில்யன் முதல் சுஜாதா வரை வெகுமக்களின் தீராத ஏக்கங்களை விழைவுகளை வெற்றிகரமாகத் தொட்டு அதன் பயனாகவே நட்சத்திர அந்தஸ்தை அடைந்தார்கள். இன்று எந்த ஒரு நகரத்திலும் உடல் ஒட்டிய உடைகளில், உள்ளாடை இன்றி, கொங்கைப்பூண்களின் தடம் துளிர்க்க நடைபோடும் யுவதிகளைக் காணலாம். சாண்டில்யன் காலத்திய ஏக்கம் இன்று நடைமுறை. சுஜாதா காலத்திய ஏக்கம் நாளைய நடைமுறை.

வணிக எழுத்தை சமூக ஆய்வுக்கான களமாகவும் கொள்ளலாம். மாறாக சீரிய இலக்கியம் “நான்” ஆகி வந்த வேர்களை நோக்கிச் செல்கிறது. வணிகம் ஊரைக்கூட்டிக் கூச்சலிட, இலக்கியம் நம் அந்தரங்கத்தோடு கிசுகிசுக்கிறது. நினைவு தெரிந்த நாள் முதல் என்கிறோம் சாதாரணமாக. ஆனால் நினைவு தெரிதலின் சாரம், நம் உடல் எல்லையைக் கடந்த ஒன்று. நாம் பிறப்பதற்கு முன் துவங்கி இறந்த பின்னும் தொடரும் ஒன்று. பிரும்மாண்டமான தேன் கூடு. அதன் ஒவ்வொரு துளியும் ஒவ்வொரு தேனியின் மரபணுவில் பொதிந்துள்ளது. தேன் கூடு போல காலமும் வாழ்வும், அதன் ஒரு தேனி நான். இதைப் பிரதிபலித்துப்பார்த்துக்கொண்ட புத்தகங்களில் ஒன்று காடு.

என்றும் நட்புடன்,
கடலூர் சீனு

ஜோக் வேண்டுமெனில் அடுத்தபக்கம் திருப்பவும்

இது பின்நவீனத்துவ காலம் என்பதால் இந்த இடைச் செருகல்:
சாண்டில்யன் குறிவைத்த ஏக்கம்தான் இன்றைய மானாட மயிலாட. சுஜாதாவின் நாயகிகள் (பிரிவோம் சந்திப்போம் மதுமிதா, அனிதாவின் காயங்கள் அனிதா) இன்று கடலூர் கடைத் தெருவில் கூடக் காணலாம். மாறாகக் காடு நாவலின் நீலி இனிநான் ஒருபோதும் பார்க்கவே முடியாத பெண்.

வணிக எழுத்து சமூக ஏக்கத்தைப் பிரதிபலிக்கிறது அதன்வழி வெகு ஜனத்தைச் சுரண்டுகிறது.மாறாகக் காடு நம் ஆழ்மன பிம்பங்களால் ஆன கலைடாஸ்கோப்பைக் குலுக்குகிறது. முழுக்க முழுக்க ஏக்கத்தை உருவாக்கி அதன்வழி நாம் ஒரு போதும் மீட்டுக்கொள்ள முடியாத சரிவை, இழப்பை, மீளுருவாக்கம் செய்து, (கண்ணிவெடிபோல) நம் ஆழ்மனதில் புதைத்து வைக்கிறது.

மரத்தின் வேர் எதைப்பற்றி நிற்கிறது? இந்த மண்ணை. அதன் வழி இந்த முழு பூமியை. அதன் வழி இந்த மொத்த பிரும்மாண்ட பிரபஞ்சத்தை. நல்ல இலக்கியமும் மரத்தின் வேர்ப்பற்று போல ஒரு குட்டி “பிரபஞ்ச தரிசனம்” தான்.

சீனு, கடலூர்.

முந்தைய கட்டுரைசங்க இலக்கிய மலர்கள்
அடுத்த கட்டுரைமலர்களின் கவிதைகள்