25-10-2010
இனிய ஜெ.எம்.,
என் நெருங்கிய நண்பர் ஒருவர். அவருக்கு எதிர்வீட்டில் ஒரு மனிதர். திருமணமானவர். ஒரு மகனுண்டு. அந்த மனிதர், ஒரு காலனிப் பெண்ணிடம் தகாதவாறு நடந்து கர்ப்பமாக்கிவிட்டார். பெரிய பஞ்சாயத்து. இறுதிவரை, தான் உத்தமன் என்று அவர் வாதாட அந்தப்பெண், ஒருபெண் குழந்தையைப் பெற்றுவிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள். ஊர்ப் பஞ்சாயத்துக்குப் பிறகு அந்தக் குழந்தை அவர் வசம் வந்தது. (எனக்குப் பேர் தெரியாது. அதனால் அஞ்சலை என வைத்துக் கொள்வோம்.) அஞ்சலை ஒரு பன்றிக்குரிய மரியாதையுடன் அவர் வீட்டில் வளர்ந்தாள்.
அவரது மனைவி உலக கொடுமைக்காரி. அஞ்சலைக்கு மூளைவளர்ச்சி குறைவு. 8 வரை படித்தாள். வயதுக்கு வந்தாள். 18வயது சகமாணவன் பயன்படுத்திக் கொண்டான். அஞ்சலை கர்ப்பமானாள். கணவன் இவன் என்று நிரூபிக்க கோர்ட் படி ஏறப்பட்டது. 15 வயதில் அஞ்சலை ஒரு அழகான பெண்குழந்தை பெற்றாள். பக்கத்து பாட்டில் கம்பனியில் தினம் 75 ரூ சம்பளத்தில் வேலை பார்த்தாள். அந்தக் குடும்பத்துக்குக் கொத்தடிமையாக இருந்தாள். 2 நாள் முன்பு கொடுமை எல்லை மீறிப்போனது. வெறும் நைட்டியுடன், மூளைவளர்ச்சி குன்றிய அஞ்சலை, 11 மாதப் பெண் குழந்தையுடன் ஊரைவிட்டுப் போய்விட்டாள். (பஸ் ஸ்டாண்டில் கண்டதாக சிலர் சொன்னார்கள்.)
தன் மகளே இல்லை என்று சத்தியம் செய்த அந்த மனிதர், சாலைப்புழுதியில், எச்சில் படியும், மண் படிந்த முகத்தோடு புரண்டு புரண்டு அழுதார். அஞ்சலையை ரோஜா நிற உதடு கொண்ட பெண்குழந்தையை, போலீஸ், மீடியா என சகலவிதமாக நானும் என் நண்பர் அருளும் 2 நாள் தேடி ஓய்ந்தோம். இன்று காலை திருவந்திபுரம் கோயில் போனோம். துக்கம் தொண்டைகட்ட வேண்டிக்கொண்டோம், கடவுளே அவளையும் குழந்தையையும் பத்திரமாகப் பார்த்துக் கொள்.
உங்கள் புதியகாலம் புத்தகத்தில் கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’ பற்றி எழுதி இருந்தீர்கள். இந்த அஞ்சலை எனக்கு சொன்னது என்ன? காடு நாவலில் கிரிதரன் மாமாவால் சீரழியும் எண்ணைச்செட்டிச்சி பற்றி இரண்டு பாரா வருகிறது. ரேசாலம் என் முன் அந்த மனிதராக மாறிப் புழுதியில் புரள்கிறான். நான் இலக்கியத்தில் தேடுவது வாழ்வைப் புரிந்துகொள்ளும் வழியை. இலக்கியத்தின் தர்க்கங்களை உதறி நூறு மடங்கு உக்கிரம் கொண்டு எழுகிறது வாழ்வின் ஓட்டம். சுற்றி எங்கெங்கு காணினும் வாழ்வின் மறுபக்கமான தீமையின் பேருருவம் களிநடனம் புரிந்து கொண்டிருக்கிறது. மனிதவாழ்வு தீமைகளால் மட்டுமே இயக்கப்படுகிறது. நன்மைகளால் அலைக்கழிக்கப்படுகிறது. இதுவரை நான் வாழ்ந்து பெற்ற அனுபவமும், நான் கண்ட காட்சிகளும், படித்த இலக்கியமும் தொலைந்து போன என் அஞ்சலையும் எனக்கு சொன்னது இதுதான் “வாழ்க்கை என்பது எப்போதும் மனித அறிதலுக்கு வெளியேதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது”.
விஷ்ணுபுரத்தின் நாய் முதல் யானை, அஜிதன்வரை இந்த அறியமுடியாமையைத் தங்கள் அற்ப யத்தனங்கள் மூலம் அறிய முயன்று, கொண்ட ஆயாசத்தையே இந்த இரண்டு நாட்களாக நான் அனுபவித்து வருகிறேன். அனைத்தையும் உண்டு செரித்துக் கழித்தோடும் காலமெனும் பிரும்மாண்ட அபத்தம். ஆம் காலமென்பது அபத்தம்தான். விஷ்ணுபுரம் ஆனாலும் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ஆனாலும் சரி அதன் காலம் தரும் சேதி ஒன்றுதான். காலம் என்பது வெறுமை. காலம் என்பது அபத்தம். வெறுமையில் கரைந்தழிந்த மற்றொரு அபத்தம் என் அஞ்சலை.
“இந்தியா பற்றி மார்க்ஸ்” பதிவு படித்தேன். இ.எம்.எஸ். தன்னுடைய “இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு” புத்தகத்தின் முன்னுரையிலேயே இதைப்பற்றி விவாதிக்கிறார். அவர் “மார்க்ஸின் தவறான புரிதல்” என்பதற்குப் பதில் “முழுமையற்ற புரிதல்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். மார்க்ஸ் மேற்கோள் காட்டப்படுகிறார், புரிந்து கொள்ளப்படவில்லை என்பது சரியான சொல். என்னைச் சுற்றிப் பல “தோழர்கள்” அவ்வாறுதான் இருக்கிறார்கள். உங்கள் புத்தகங்களில் நான் மிகக் குறைந்த முறை படித்த புத்தகம் பின் தொடரும் நிழலின் குரல். டபிள்யூ. ஆர். வரதராஜன் இறந்தபோது தோழர்களின் நிலை கண்டு ஆச்சர்யமாக இருந்தது. அவர்களின் ஒவ்வொரு அசைவும் பின் தொடருமில் ஆவணமாகி இருக்கிறது.
இலக்கியத்துக்குள் அனைத்தையும் உள்ளடக்கும் உங்கள் படைப்புத்திறனின் விரிவு பற்றி ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. சில வருடம் முன் கடவுளர்களின் தெரு என்று லெபாக்ஷி பயணம் குறித்த உங்கள் கட்டுரை படித்தேன். அதில் ஒரு காட்சி. வீட்டுக்குள் நிற்கும் சிலைக்குக் கீழ் கல்லடுப்பில் அரிசி கொதித்துக் கொண்டிருக்கிறது. அதற்குப் பல வருடங்கள் முன் எழுதப்பட்ட விஷ்ணுபுரத்தில் ஒரு காட்சி, திருவடி மடத்தை விட்டு அதன் இறுதிமடாதிபதி வெளியேறுகிறார். அப்போது அவரது பின் நிற்கும் விஷ்ணு சிலையின் கதாயுதத்தில் கௌபீனம் காய்ந்து கொண்டிருக்கிறது. இப்படித்தான் எனக்கும் விஷ்ணுபுரம் எந்நேரமும் என் காலத்தின் மீது படிந்து கொண்டிருக்கிறது. வாழ்வின் அடுத்த கணம் ஒரு புதிர். விஷ்ணுபுரம் காலத்தின்முன் வாழ்வே மாபெரும் புதிர் என்று சொல்லி எதையும் விளக்காமல் அந்தப் பெரும்புதிரைப் புதிராகவே என் அந்தரங்கத்துக்குள் புதைத்துவிட்டது.
தலாய் லாமா எழுதி ஆழி வெளியீடாக “நல்ல வாழ்வு நல்ல மரணம்” எனும் புத்தகம் படித்தேன். முன்பு ஒரு புகைப்படம் பார்த்தேன். ஒரு லாமாவைக் கலவரத்தில் கொளுத்துகிறார்கள். சிறிதுகூட சலனம் இன்றி, பத்மாசனத்தில் அமர்ந்தபடி, தியான நிலை கலையாமல் எரிந்து சாம்பலாகிறார். அந்தப் புகைப்படம் சிறிய வயதில் எனக்கு ஏற்படுத்திய மனத்தாக்கம் மிக அதிகம். அது எப்படி சாத்தியமானது என்று, அதன் சில (விளக்கப்படக்கூடிய) பகுதிகளை தலாய்லாமா அந்தப் புத்தகத்தில் முன்வைக்கிறார்.
சில தியானமுறைகள் மரணம் என்னும் நிகழ்வை அபௌதிக விதிகளின் மீதான சாதகமாகவே மாற்றிவிடுகிறது. மரணத்தை அனுபவிக்க முடியாது. அதை அறிதலின் பாதையாக மாற்றுவதன் வழி சிறந்த மறுபிறவியை எட்டலாம் என்கிறது அந்தப் புத்தகம். மரணம் என்பது “இல்லாமல் போவது” அல்ல. “இல்லாமல் இருப்பது” என்று தலாய் சொல்கிறார் போலும். இதுவரை நான் எதையும் தொலைத்தது இல்லை. முதல்முறையாக தலாய்லாமாவின் இந்தப் புத்தகத்தைத் தொலைத்துவிட்டேன். பேருந்தில் இருந்து போன் பேசியபடி, சீட்டிலேயே புத்தகத்தை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.
அடுத்த வாரம் கோதாவரி நதி வழி பயணம் போவதாகச் சொன்னீர்கள். ஊட்டி முகாமில் பறவைகள் பற்றிப் பேசும்போது சலீம்அலி பற்றிக் குறிப்பிட்டீர்கள். லைப்ரரியில் தேடினேன். நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக சலீம் அலியின் சுயசரிதம் “ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” என்ற பெயரில் வந்துள்ளது. தொடர்ந்து தேடிப் பிடித்து முகமது அலி என்பவர் எழுதிய சந்தியா வெளியீடான “வட்டமிடும் கழுகு” படித்தேன். கோதாவரி நதிக்கரைப் புதர்க் காடுகளில் மிகமிக அரிய பறவை இனமான இருவரிக்காடை என்ற பறவை இனத்தைப் பலர் தொடர்ந்து 80 வருடமாக நம்பிக்கையோடு தேடிக் கண்டடைந்ததை, அதை சலீம் அலி வந்து பார்த்ததை, மிகச்செறிவாக ஒரு புனைவு போன்ற கட்டுரையாக எழுதி இருக்கிறார். காடையை நீங்களும் பார்த்தால் ஒரு ஹாய் சொல்லி வையுங்கள்.
கடிதத்துக்குத் தலைப்புக்கான காரணம், விஷயத்தைவிட்டு விலகிப்போகாமலிருக்கவே தவிர வேறு காரணங்களில்லை. முடிந்தால் ஞாயிறு போன் செய்கிறேன்.
என்றும் நட்புடன்,
கடலூர் சீனு