இனிய ஜெ.எம்.,
சில தினங்கள் முன் ஒரு படம் பார்த்தேன். பெயர் “ஒரு அழுக்கன் அழகாகிறான்” கதை, வசனம், இயக்கம், நாயகன் எல்லாம் ஒருவரே. (பெயர் ஓம்காரேஷ் என ஞாபகம்) கதைச் சுருக்கம் இதுதான். ஓர் விளிம்புநிலை அப்பா. தன் பெண்டாட்டியை “வைத்து”க் குடும்பம் நடத்துகிறார். நோய்கண்டு தாய் இறந்துவிட, தகப்பன் பிள்ளையை அனாதையாக விட்டுவிட்டுப் போய்விடுகிறான். அனாதை, கூட்டாளிகளுடன் கார் திருடனாக வளருகிறான். ஒருமுறை கார் திருடும்போது அதில் உள்ள குழந்தையையும் சேர்த்துத் திருடி வந்து விடுகிறான். பிறந்த குழந்தையைத் திரும்பவிட மனமின்றித் தன் சேரியிலேயே வளர்க்கிறான். ஓர் இளம் அனாதைத் தாயை மிரட்டி அந்தக் குழந்தைக்குப் பால் தர ஏற்பாடு செய்கிறான். பிறகு அந்தத் தாயால் திருந்திக் குழந்தையை மீண்டும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கிறான். அனாதைத் தாயும், அதன் குழந்தையுமாக நாயகன் ஃபேமிலி மேன் ஆக செட்டில் ஆகிறான். வேணு அரவிந்த், ரோபோ ஷங்கர் என ஒரே ஸ்டார் வேல்யு மழை.
இதே படத்தை “யோகி” யாக அமீர் தயாரித்தார். இந்த இரு படங்கள் வெளிவர சிலவருடங்களுக்கு முன்பே ஒரு தென்னாப்பிரிக்க டைரக்டர் இதை சுட்டு ‘தோஸ்தி’ என எடுத்து அவார்டு ஜெயிச்சார். மூன்றையும் பார்த்து மண்டை காய்ந்த எனக்கு வந்த கோபத்தில் ஒரு “வேர்ல்டு சினிமா” எடுத்துவிட நினைத்தேன். தயாரிப்பாளர் சிக்கவில்லை. சில வருடம் முன் “மிருகம்” என ஒரு காவியம் பார்த்தேன். இந்தப்படம் வெளிவரும் சில வருடத்துக்கு முன்னரே ஒரு தென்னாப்பிரிக்க இயக்குனர் மிருகத்தைச் சுட்டு “குமாரோ” என்று ஒரு படம் எடுத்தார். கொஞ்சம் கூடக் கூச்சமே இல்லாமல் நம் “தமிழ்ப் படைப்பாளிகள்” படைப்பைத் திருடும் இந்த “வேர்ல்ட் சினிமா” இயக்குனர்களை என்ன செய்யலாம்?
கடலூரில் கமலம் என ஒரு தியேட்டர் உண்டு. க்யூப் முறை. அதிகபட்ச டிக்கட் விலை 15 . சென்சார் அனுமதித்த “குஜால்” படங்கள் வரும். ‘அப்டேட்டாக’ இருக்க அனைத்தையும் பார்த்து வைப்பேன். (நாயகன் மூச்சு சீறியடிக்க நாயகிமீது கவிழ்வார். கேமரா நைட் லேம்ப்பை க்ளோசப்பில் காட்டும். நைட் லேம்ப் ஒளி உதய சூரியனாக மாறி விடிந்துவிடும்) அதில் “சிந்து சமவெளி” வந்தது பார்த்தேன். கடலுக்குள் இருந்து நாயகன் வெளியே வருகிறார். நத்தைகள் அலையும் கரை. ஒரே பாறை மயம். நடுவில் படகுத்துறை. அதில் நடந்து வெளியே வருகிறார். பெப்பரப்பே என விரிந்து கிடக்கிறது புல்வெளி. நடக்கிறார். பெரிய கருநாகம் கடந்து செல்கிறது. நடக்கிறார். யானைக்கூட்டம் கடந்து செல்கிறது. நடக்கிறார். ஒரு வீடு. வாசலில் மாங்கா மரம் வீட்டுக்குப் பின்னால் (கிணறு) மின்சார உற்பத்திக்கோ (என்ன எழவுக்கோ) ஒரு காத்தாடி. வீட்டைத் தாண்டினால் தண்டவாளம் அதில் ரயில். உஸ் அப்பாடா இப்பவே கண்ணக் கட்டுதே.
இத்தகைய நிலவியலைக் கற்பனை செய்ய “சாமி” ஒருவரால் மட்டுமே முடியும். இயக்குனர் சாமி அல்ல. மேலே இருக்கும் சாமி. ஒளிப்பதிவு, இசை, நடிப்பு என அகப்பட்ட அனைவரும் என்னைப் பிளந்து கட்டிவிட்டார்கள். “லாஸ்ட் டெம்டேஷன் ஆப் கிறைஸ்ட்” என மார்டின் ஸ்கார்சஸ் இயக்கிய படம். அதில் யேசுவின் ஆன்மிகத் தத்தளிப்பை இசையாகப் பொழிந்திருப்பார். (இசைக் கலைஞர் பெயர் தெரியவில்லை) அந்த இசையை நாயகி மாமனாரைக் கரெக்ட் செய்யப் போகும்போது பின்னணியாக சேர்த்திருக்கிறார்கள். ரசனையின் உச்சம். இவான் துர்க்கனேவ் நல்லவேளையாகக் காலமாகிவிட்டார். இல்லையேல் இப்படத்துக்கு வசனமெழுதும் வாய்ப்பு அவருக்குப் போய் இருக்கும். (இனிய ஜெ.எம் இத்தனை நாராசத்தை எப்படி சகித்துக் கொண்டீர்கள்?)
மிலிட்டிரியின் நண்பராக வரும் அந்த மீசைக்காரர் மட்டுமே ஒரே ஆறுதல். உங்கள் பெயர் வசியத்தால் மட்டுமே இந்தப் படத்துக்குப் போனேன். கும்மாங்குத்து வாங்கினேன்.
தகப்பன் சாமி
சில நாள் முன் ஒரு குழந்தை தொலைந்து போனதைப்பற்றி எழுதியிருந்தேன். மஞ்சுளா. அவளது ஒன்றரை வயதுக் குழந்தையின் பெயர் கங்கா தேவி. (நான் பார்த்த பெண் குழந்தைகளிலேயே மிக அழகான குழந்தை அவள்). யதார்த்தத்தில் தாறுமாறாக இருக்கும் வாழ்க்கையை எழுதிப்பார்க்கும் போது “கச்சிதமாக”க் காட்சி தருகிறது. (ஒருவேளை என் மனப்பிராந்தியோ?) வாழ்வின் அடுத்த நொடி மர்மத்தில் புதைந்துள்ளது. எல்லா மர்மங்களும் வசீகரமானது. ஆம் மஞ்சுளாவைக் கண்டுபிடித்து விட்டோம். கங்காதேவி அருளைத் (என் நண்பர்) தவழ்ந்து வந்து கட்டிக்கொண்டாள்.
காணவில்லை என்ற போஸ்டர் பார்த்த நம்பருக்கு ஒருவர் போன் செய்திருந்தார். மஞ்சுளாவுக்கு அடைக்கலம் தந்தவர் அவர். கடலூர் பார்க்கில் தள்ளுவண்டியில் ஓட்டல் நடத்துகிறார். காலேஜ், +2, 10 படிக்கும் 3 பெண்கள். கூலி வேலை செய்யும் மனைவி. சாலையோரம் வெகுளியாய் பதில் பேசத்தெரியாமல் குழந்தையுடன் நின்ற மஞ்சுளாவுக்கு அடைக்கலம் தந்திருக்கிறார். கைவிடப்பட்ட குடிசை ஒன்றை மஞ்சுளாவுக்காகத் தயார் செய்துவிட்டார். வழக்கம்போல மனைவியின் வசை. நாட்கள் நீளும் முன் கண்டுபிடித்து விட்டோம்.
அந்த மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தேன். “நீங்களே கஷ்டத்துல இருக்கீங்க. 3 பொண்ணுக. பொண்டாட்டி ஏச்சு. இத்தனையும் தாண்டி இந்த அனாதைப் பொண்ணுக்கு அடைக்கலம் தர உங்களுக்கு எப்படித் தோணிச்சு” என்று கேட்டேன். அவர் கேட்டார், “உங்களுக்குக் கல்யாணம் ஆயிருச்சா?” மறுப்பாய்த் தலையசைத்தேன். கண்ணுக்குள் கண்பார்த்து மெல்லிய புன்னகை இழையோட சொன்னார் “பொட்டப் புள்ளயப் பெத்து வளத்த ஒருத்தனுக்கு அவனச் சுத்திலும் எத்தன பொட்டப் புள்ளைக இருந்தாலும் பத்தாது. எல்லாம் ஒரு பேராசதான்.’’
தெருப்புழுதியில் புரண்டழுத மஞ்சுளாவின் தகப்பன் முகம் ஒரு கணம் என்னுள் தோன்றி மறைந்தது. ஓட்டல்காரர் அப்பனிடம் சொன்னார். “இனிமே ஒங்க பொண்ணப் பத்திரமாப் பாத்துக்கிருவீங்களா?” அப்பன் தரையில் அறைந்து சத்தியம் செய்தான். “இனிமே எம்பொண்ண ஒருசொல் சொல்லமாட்டேன்யா” எல்லோரும் கலைந்து சென்றோம். அனைத்தும் அனைத்தும் இலகுவாகி உடல் தள்ளாடுவது போல் இருந்தது. அன்று திருவந்திபுரம் கோயில் கருவறையில் வேண்டினேன். சாமி அவள பத்திரமா பாத்துக்கோ அப்படின்னு. சாமி தெருவெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது தகப்பன்களாக. பெண் பெற்ற எந்தத் தகப்பனும் சாமிதான். தகப்பன் சாமி.
என்றும் நட்புடன்,
சீனு, கடலூர்.