26-8-2010
இனிய ஜெ.எம்.,
நேற்று மாலை நானும் என் நண்பர் வெங்கடாஜலமும் டூவீலரில் பாண்டிச்சேரி போயிருந்தோம். கடலூர் முதல் பாண்டி வரை இடைவெளியற்ற கருமேகங்களால் மூடப்பட்ட வானம், மாலைச்சூரியன் மேகத்தின் பின்னால் சிக்கிக்கொண்டதால் வானமெல்லாம் ஒளிரும் மென்னொளி, ஈரக்காற்று. சைக்கிள் சவாரிபோல் மிதமான பயணம். மகாத்மா காந்தி ஆஸ்பிடல் அருகே 30 அடிக்குள் மிகமிகப்புதிதாக முளைத்திருந்தது ஒரு சர்ச். சென்றவாரம் கெடிலம் நதி ஓரக் குடிசைவாசிகளுக்கு பிரட்பாக்கெட் விநியோகித்துக் கொண்டிருந்த வேன் சர்ச் முன்னால் நின்றிருந்தது. புறக்கணிப்பு, வறுமை, நோய் இந்த மூலத்தைத்தான் மிஷனரிகள் குறிவைக்கின்றன. சிலர் தங்கள் ஆயுளை இந்த மூலத்தை நீக்குவதில் செலவு செய்கிறார்கள். துரதிருஷ்டவசமாகப் பலர் இந்த மூலத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே உண்மை.
பாண்டிச்சேரி பீச் மிக அழகாக, சுத்தமாகப் பராமரிக்கப்படும் இடங்களில் ஒன்று (ஆமாம் சென்னை மெரினா பீச் போல பாண்டிச்சேரி பீச்சுக்கு என்ன பேர்?) டூப்ளக்ஸ் சிலைக்குப் பின்னால் சற்று ஆழத்தில் பாறைகளைத் துழாவிப்பார்க்கும் கடல், தோன்றிய இடத்திலேயே அலைகள் மடங்கி அடங்கும் கடலின் விசித்திர மேற்பரப்பு. மிகநீண்ட நடைபாதை. சாய்வு நாற்காலிகள், ஓலைவேய்ந்த குடைகள், நீரூற்றும் டால்ஃபின் பொம்மைகள், குப்பைத்தொட்டி ஏந்திய கங்காரு பொம்மைகள். சாலை மறுபுரம் டூப்ளே காலக் கட்டிட வரிசை. கட்டிட முனைகளில் குமிழாய் பல்பு தொங்கும் சாலை விளக்குகள் நடைபாதை நீளத்தின் மையமாய் நான்கு பிரும்மாண்டத் தூண்களிடையே 35அடி உயர காந்தி சிலை. (முகத்தைப் பார்த்தால் அடிவயிற்றில் ஒரு கிலி பரவும். கன்னியாகுமரி வள்ளுவர் சிலை முகத்தைப் பார்த்தாலும் இப்படித்தான் நேரும்).
சாலை இறுதியில் நடமாடும் கழிப்பிடம். உடல் உதற நடைபோடும் வெள்ளைத்தோல் யுவதிகள், ஸ்கேட்டிங் செய்தபடி நடக்கும் வெளிநாட்டுக் குழந்தைகள், கம்பீரமாக நடைபோடும் வெளிநாட்டுத் தாத்தாக்கள். நேர்மாறாக நம்மூர் மக்கள், எல்லோரும் விசித்திரமாகப் பார்க்கும், எல்லாவற்றையும் விசித்திரமாகப் பார்க்கும் கிராமத்து டீன் ஏஜ் யுவன் யுவதிகள். அனைத்தையும் பராக்கு பார்த்தபடி நடக்கும் என்னைப் போன்றோர். எதுவும் மாறாமல் எல்லாம் அப்படியே இருக்கிறது. ஒன்றே ஒன்றைத்தவிர, காந்தி சிலை எதிரே பண்பாட்டுத்துறைக்கு சொந்தமான கட்டிடத்தில் “சாகித்ய அகாதெமியின்” புத்தக விற்பனை மையம் ஒன்று இயங்கிக் கொண்டிருந்தது. அதை மட்டும் காணவில்லை. விசாரித்தேன். “கட்டிடம் ரொம்ப டேமேஜ் கண்டிஷன்ல இருக்கறதால எடுத்துட்டோம். கட்டிடம் சரி பண்ணதும் வரும்” என்றார்கள். அந்தப் ‘பொன்நாள்’ வருமா? பார்ப்போம்.
கல்கியில் அசோகமித்திரன் இதேபோலத் “தொலைந்துபோன” புத்தகக்கடை ஒன்றைப் பற்றி எழுதியிருக்கிறார். பாண்டி மகாத்மா காந்தி சாலையில் ஜம்பு புக் ஸ்டால் என ஒரு பழைய புத்தகக் கடை உள்ளது. அங்கே காவ்யா பதிப்பகத்தின் அத்தனை புத்தகங்களும் வந்து கிடக்கிறது (பாதி விலை) நான் கிரிஷ் கர்னாடின் நாகமண்டலம் உட்பட சில புத்தகங்கள் வாங்கினேன். உயிர்மை ‘வார்சாவில் ஒரு கடவுள்’கிடந்தது. எல்லாமே புதுக்கருக்கு குலையாத புத்தகங்கள். (ஒருவேளை பதிப்பகத்தில் அச்சடித்து முடித்தவுடன் இங்கே கொண்டு வந்து போட்டு விட்டார்களோ?) லெனின் சாலையில் இலக்கியம் என்ற பேரிலேயே கடை திறந்திருக்கிறார்கள். பெரும்பாலும் ஆர்டரின் பேரில் வாங்கித்தான் தருகிறார்கள்.
என்னதான் நடக்குது இலக்கியப் புத்தக விற்பனை உலகில்? ‘காவல்கோட்டம்’ ஒரு புத்தகம் 600 ரூபாய். 500 புத்தகம் அச்சடிக்கப்படுகிறது எனில் மொத்தம் புரள வேண்டிய தொகை 3 லட்சம். ஒரே ஒரு புத்தகத்துக்கே இத்தனை பணம் முடக்கப்படுகிறது எனில் ஒரு பதிப்பகம் எப்படித்தான் இலக்கியத்தை நம்பி முன்செல்கிறது? தமிழ்நாட்டில் இலக்கியம் படிப்போர் ஒரு 5000 பேர் எனக்கொண்டால், அத்தனை பேரும் “வாங்கிப் படிக்கும்” பொருளாதாரத் தகுதி கொண்டோர் இல்லையே. காவல்கோட்டம் அனேகமாக என் பேராண்டி காலத்தில்தான் லைப்ரரிக்கு வரும். இப்போதே கூட அட்டைபைண்டு புத்தகத்தையோ, 200 ரூ மேலான புத்தகத்தையோ லைப்ரரியில் இருந்து வெளியே எடுத்துச்சென்று படிக்க முடியாது. அப்படி எனில் இத்தனை உழைப்பும் முதலீடும் வெறும் 500 பேருக்காகவா?
இதற்கிடையே கிழக்கு பதிப்பகம் வித்தியாசமான முயற்சியெல்லாம் செய்கிறது. கடலூரில் பிரபல புரொவிஷன் கடை மூலையில் கிழக்குக்கென ஒரு ஸ்டாண்ட். ’18வது அட்சக்கோடு’ஆடாமல் அசையாமல் அங்கேயே இருக்கிறது நெடுநாட்களாய். இணைய உலகில் உலவும் என் நண்பர்களோ சாரு டப்பாங்குத்துப் பாட்டுக்கு ஆடறாராம், கனிமொழியை ஜெயமோகன் திட்டிட்டாராம் என்பதைத் தாண்டி இதுவரை உருப்படியான ஒரு விஷயத்தைக்கூட என்னிடம் கொண்டுவந்து சேர்த்ததில்லை. இவர்கள் இலக்கியத்தையும் தெரிந்துகொள்ள விழைகிறார்களேயன்றிப் பயில முயல்வதில்லை. சந்தானம் என்ற நண்பரே அனைத்து இடைநிலை மற்றும் இலக்கிய பத்திரிக்கைகளுக்குக் கடலூர் ஏஜண்ட். காசு சரியாக அனுப்பிவிடும் ஏஜண்ட். இருந்தும் வார்த்தையைக் காணவில்லை. எப்போதாவது வருகிறது அடவி. அப்பப்போ வரும் அம்ருதா. ஆச்சரியமாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது ரசனை, உயிர்எழுத்து. எழுத்தாளர், பதிப்பாளர், விற்பனை, வாங்கும் திறன்கொண்ட வாசகர், நூலகம், நுண்ணுணர்வற்ற இன்றைய தமிழகம் என இலக்கிய ஆக்கம் எதிர்கொள்ளும் சில சவால்கள் மலைக்க வைக்கிறது.
அசோகவனம் 3000 பக்கம் என்பதன் பிரும்மாண்டம் பக்க அளவு மட்டும் சார்ந்ததல்ல. இத்தகைய விஷயங்களையும் எதிர்த்து அல்லது விலக்கி விரியும் பிரும்மாண்டம் அது. நூலகம் தவிர்த்து இதுவரை நான் படித்த புத்தகங்கள் எல்லாம் காசு கொடுத்து வாங்கியே படித்திருக்கிறேன் (மிகமிக எளிய வருமானம் என்னுடையது). இலக்கியம் மேல் மரியாதை உடையோர் நிச்சயம் காசு கொடுத்தே அதை அனுபவிப்பார் என்பது என் எண்ணம். அசோகமித்ரனின் “மணல்” குறுநாவல் படித்தேன். முழங்கையில் இடித்துக்கொண்டதைப்போல ஊமை வலி. வாழ்வு பலசமயம் புதைமணல், சில சமயம் கண்ணில் விழுந்த துளி மணல். ஒரு குடும்பத்தின் வளர்சிதை மாற்றத்தை எத்தனை துல்லியமாகக் கொண்டுவந்திருக்கிறார்!
என் மனம் பெண்டுலம்போல ஓர் அசைவில் உக்கிரமாக ஜெயமோகனை நாடும். (ஆச்சர்யமாக அகம் அப்போது பேரமைதியாக இருக்கும். விஷ்ணுபுரத்தில் கைவிடப்படும் கிழவி பற்றிய சித்திரத்தை எத்தனை முறை படிக்கும்போதும் என் அகம் அதிக அதிக மௌனத்திற்குள் அமிழ்வது இன்றுவரை எனக்குப் புரியாத விசித்திரம்) மறு அசைவில் அசோகமித்திரனை நாடும். (18வது அட்சக்கோட்டில் ரயில் ஜன்னல் வழி நாடோடிகள் கற்பழிக்கப்படும் காட்சி காட்டப்பட்டு விலகும்) மனம் கொதித்துத் தூக்கத்தை இழப்பேன். எல்லா வாசகருக்கும் இப்படித்தானா என்று தெரியவில்லை.
“பண்படுதல்” படித்தேன். இறுதிப் பகுதிகளில் “அன்பு வழி” புத்தகம் பற்றி எழுதி இருந்தீர்கள். நான் எப்போதும் ஏதேனும் ஒன்றை உத்வேகத்துடன் உங்களிடம் சொல்வேன். நீங்கள் சிம்ப்பிளாக “இதப் பத்தி முன்னயே எழுதிஇருக்கேனே” என்பீர்கள். எனவே இம்முறை நான் ஆச்சர்யம் அடையவில்லை. செவன் பவுண்ட்ஸ் என்றொரு வில் ஸ்மித் படம் பார்த்தேன் (எஸ்ரா விகடனில் அறிமுகம் செய்திருந்தார்). அதுவும் அன்பு வழியும் ஒன்று. பாவம் செய்வது, குற்ற உணர்வில் வீழ்வது, பிறகு தன் உயிரையே தியாகம் செய்து அந்தக் குற்ற உணர்வை வெல்வது.
எனக்கு பெர்லாகர் க்வெஸ்டை விட லியோ டால்ஸ்டாய்தான் பிடித்திருக்கிறது. புத்துயிர்ப்பு கிட்டத்தட்ட இதே போன்றதொரு மையம்தான். ஆனால் லியோ வாழ்வை ஏற்றுக்கொள்ளச் செய்கிறார். வாழ்வதினூடாக அகத்தின் கீழ்மைகளை, சக ஒழுங்கீனங்களைக் கடந்துபோக வைக்கிறார். மனித ஆன்மாக்களை எந்நிலையிலும் ஒளியை நோக்கி ஈர்க்கப்படும் ஒன்றாகவே காண்கிறார். எனக்குப் பிடித்ததைத்தான் லியோ தல்ஸ்தோயும் ஜெயமோகனும் பேசுகிறார்கள் வெவ்வேறு வார்த்தைகளில்.
அன்புடன்,
கடலூர் சீனு