கூடங்குளமும் கலாமும்

அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,

இந்த மாதக் காலச்சுவடு இதழில் அப்துல் கலாமைப் பற்றிக் கொஞ்சம் தரக்குறைவாகவே எழுதியிருந்தார்கள். காரணம் கூடங்குளம். நான் பல கட்டுரைகளைப் படித்தவரையில் இந்த அணு உலை பலவிதமான பாதுகாப்பான ஏற்பாடுகளுடனேயே கட்டப்பட்டுள்ளதாகப் படுகிறது. இந்திய அரசியலின் ஊழல், கட்டுரை எழுத்தாளனின் உள்நோக்கங்கள் என்ற காரணங்களால் நாம் சந்தேகப்பட்டாலும் ஒரு வகையில் இந்த அணு உலை நமக்கு நல்லதைத்தான் தரும் என்று நம்பத்தோன்றுகிறது. அதே வேளையில் இங்கு சமய அரசியல் காரணங்கள் தான் இந்தப் போராட்டங்களுக்கு முக்கிய பின்புலமாக இருக்கின்றது என்றும் நேரடியாகப் பார்த்த பல நிருபர்கள் கூறுகிறார்கள்.

அருகில் உள்ள நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

கோவை விழா சிறப்படைய வாழ்த்துக்கள். திருச்சி வந்தால் சற்று முன்பே கூறவும். ஒரு வாசகர் வட்டம் இங்கும் தேவை.

அன்புடன்
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்

அன்புள்ள வே.விஜயகிருஷ்ணன்,

நான் கூடங்குளம் பற்றிய என்னுடைய ஐயங்களையும் எதிர்ப்புகளையும்  முன்னரே எழுதிவிட்டேன்.

ஒன்று, நம்முடைய அணு உலைகள் இதுவரை உருவாக்கிய மின்சாரத்தையும் அவற்றுக்கு நாம் இன்றுவரை செலவழித்த பணத்தையும் வைத்துப்பார்க்கையில் இந்த உலைகள் சாதகமான பலன்களை அளிக்கும் என நான் நினைக்கவில்லை.

இரண்டு, இந்த அணு உலைகள் நம்முடைய தொழில்நுட்பம் அல்ல. அவை நம் மீது சுமத்தப்படுகின்றன. ஆகவே அவற்றால் நமக்கு ஒட்டுமொத்தமாக இழப்புகளே இருக்கும் என நினைக்கிறேன்.

மூன்று, அணு உலை தொடர்பான விஷயங்களில் இருக்கும் மூடிய தன்மை. அங்கே ஊழல்களை உருவாக்கக்கூடும் என்று படுகிறது. இந்த ஊழல் காரணமாகவே இதன் பாதுகாப்பு சம்பந்தமான ஐயம் நியாயமானதே எனத் தோன்றுகிறது.

நான்கு, இந்தியா பல்வேறு வகையான மாற்று எரிபொருள் சாத்தியங்களை ஆராய வாய்ப்புள்ளது. ஆனால் அந்த ஆராய்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் நிதி செலவழிக்கப்படுவதில்லை.மொத்த நிதியும் அணு உலை போன்ற பெருந்திட்டங்களுக்காக வீணடிக்கப்படுகிறது.

ஆனால் கூடங்குளம் விவகாரம் மெல்லமெல்ல இன்று இந்திய எதிர்ப்பாளர்களால் கையிலெடுக்கப்பட்டுவிட்டதோ என்ற ஐயத்தை நான் அடைந்திருக்கிறேன். குறிப்பாக முத்துகிருஷ்ணன், அ.மார்க்ஸ் போன்ற விலைபோய்விட்ட அரசியல் பிரச்சாரகர்கள் அதைப் பேசும்போது ஆழமான சஞ்சலம் ஏற்படுகிறது.

இவர்கள் அடிப்படையில் வசைபாடிகள். இவர்களுக்கு சிந்தனை என்பதே அறிமுகமில்லை. அவதூறும் வசையும் மட்டுமே இவர்களின் செயல்பாடுகள். தமிழ்ச்சூழலில் எளிதில் எடுபடுவதும் இதுவே. இவர்கள் சமீபத்தில் கூடங்குளம் பற்றி எழுதிய கட்டுரைகளைத் திரிபுகள்-பொய்கள் என்று மட்டுமே சொல்லமுடியும்.

குறிப்பாக அப்துல் கலாம் பற்றி எழுதியவை. தன் வாழ்நாளை முழுக்க தொழில்நுட்பத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டவர் அவர். தொழில்நுட்பமே அவரது கடவுள். உலகின் அனைத்துப் பிரச்சினைகளையும் தொழில்நுட்பம் தீர்க்கும் என்றும், தொழில்நுட்பம் மூலம் உருவாகும் பிரச்சினைக்கே கூட தொழில்நுட்பமே தீர்வாகும் என்றும் அவர் நம்புகிறார். அதுவே அவரது செயல்தளம்.

கூடங்குளம் விவகாரத்தில் நவீனத்தொழில்நுட்பத்தின் பிரச்சாரகர் என்றமுறையில் கலாம் முன்வந்து அவரது தரப்பைச் சொன்னது மிக இயல்பானது. தொழில்நுட்பம் மீதான நம்பிக்கையை மக்களிடையே உருவாக்குவதே அவரது வாழ்க்கைப்பணி என்ற முறையில் எப்போதும் சொல்லிவருவதையே இப்போதும் சொல்கிறார்.

காந்திய தரிசனத்தில் நம்பிக்கை கொண்டுள்ள நான் கலாமின் இந்தப் பார்வையை முழுமையாக நிராகரிக்குமிடத்திலேயே இருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு நிலைப்பாடும் நம்பிக்கையும் ஒருவரிடம் இருக்கக்கூடாதென்று சொல்ல எனக்கு ஏது உரிமை? என் நண்பர்களிலேயே பெரும்பாலானவர்கள் உறுதியாக நவீன அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கக்கூடியவர்கள். அந்த நம்பிக்கையின் பொருட்டு கலாம் கீழ்த்தரமாக வசைபாடப்படுவதை நான் எப்படி எடுத்துக்கொள்வது?

சென்ற இரு மாதங்களில் அப்துல் கலாம் ஒரு மானுட விரோதி, துரோகி, அயோக்கியன், பொய்யன் என்று இவர்களால் வசைபாடப்படுவதைக் காண்கையில் உண்மையில் இவர்களின் அக்கறை கூடங்குளம்தானா என்றே ஐயப்படுகிறேன்.

தமிழகத்தின் வஹாபியர்களுக்கு என்றுமே கலாம் ஒரு துரோகி. இஸ்லாமியப் பெயர்தாங்கி என்று அவர் அவர்களின் இதழ்களில் ஈவிரக்கமில்லாமல் வசைபாடப்படுவதைக் காணலாம். வஹாபியர்களைப் பொறுத்தவரை இஸ்லாமியர்கள் எந்த மொழியையும் சமூகத்தையும் சேர்ந்தவர்களாக இருந்தாலும் உலகளாவிய இஸ்லாமியப் பண்பாடு மட்டுமே கொண்டவர்கள். எந்த மண்ணில் வாழ்ந்தாலும் இஸ்லாமிய சர்வதேசியம் ஒன்றுக்கு மட்டுமே கட்டுப்பட்டவர்கள்.

ஆகவே உலகமெங்கும் பிற சமூகத்திடமிருந்து இஸ்லாமியர்களைப் பிரிப்பதே வஹாபியர்களின் நோக்கம். பிறசமூகங்களைப்பற்றிய ஐயங்களையும் வெறுப்புகளையும் கட்டமைப்பதும் பரப்புவதுமே அவர்களின் இலக்கு. இஸ்லாமியர்களுக்கு ஓர் இஸ்லாமிய அரசிலன்றி எந்த அமைப்பிலும் நீதியும் உரிமையும் கிடைக்காது என்ற ஒற்றை வரியைப் பல்வேறு சொற்களில் விதைப்பதே அவர்களின் கருத்தியல் செயல்பாடு. அதற்காகப் பிரச்சாரம் செய்யவே அவர்கள் அ.முத்துகிருஷ்ணன், அ.மார்க்ஸ் போன்ற கூலிப்படைகளைப் பணம் செலவுசெய்து உருவாக்குகிறார்கள்.

அவர்களின் முக்கியமான இலக்காக அப்துல் கலாம் இருப்பது இயல்பே. கலாம் இந்துக்களும் இஸ்லாமியர்களும் சம உரிமையுடன் வாழும் ஒரு நவீன சமூகம் பற்றி பேசுகிறார். இந்து நம்பிக்கைகளை வெறுக்காத, அவமதிக்காத ஒரு சில இஸ்லாமிய அறிவுஜீவிகளே நம்மிடையே உள்ளனர். அவர்களில் ஒருவர் கலாம். அவர்கள் அனைவருமே கலாம் போல வஹாபியர்களால் வசைபாடப்படுகிறார்கள் – இஸ்லாமியக் ‘கடமையை’ செய்யாத காரணத்துக்காக.

அனைத்துக்கும் மேலாக கலாம் இந்திய தேசியம் மீது பற்று வைத்திருக்கிறார். இந்த நாடு ஒற்றுமையும் மேன்மையும் கொள்ளவேண்டுமெனப் பேசுகிறார். இதன் எதிர்காலத்தை நம்புகிறார். இந்த நாட்டின் கோடிக்கணக்கான மக்களும் அவர்களின் பல்லாயிரமாண்டு பண்பாடும் அநீதியில் மட்டுமே வேரூன்றியவை, ஆகவே அழிந்தாகவேண்டியவை என அவர் சொல்வதில்லை.

ஆகவே அவர் வஹாபியர்களின் முழுமுதல் எதிரியாக இருக்கிறார். அவர்கள் இந்தியா பற்றி இந்திய இஸ்லாமியர்களிடம் உருவாக்கிவரும் எல்லா சித்திரங்களுக்கும் நேர் எதிரான கண்கூடான சாட்சியமாக கலாம் இருக்கிறார். அதனால் அவரை இழிவு செய்ய, அவரது ஆளுமையைப் படுகொலைசெய்ய அவர்கள் முயல்கிறார்கள். வஹாபியர்களின் இந்தத் திட்டத்தை சிரமேற்கொண்டு செய்கிறார்கள் அவர்களின் கூலிப்படையினரான அ.முத்துக்கிருஷ்ணனும் அ.மார்க்ஸும்.

அதற்கு அவர்கள் கூடங்குளத்தைப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்கள் என்றே நான் நினைக்கிறேன். அந்த வலையில் பிற கூடங்குளம் எதிர்ப்பாளர்களும் சிக்கியிருப்பதைக் காணமுடிகிறது. அது மிகமிக மனச்சோர்வூட்டுகிறது.

கூடங்குளம் நம்முடைய மண் மீது நமக்குள்ள உரிமையை, நம் சந்ததிகள் மீது நமக்குள்ள அக்கறையை முன்வைத்து நிகழ்த்தப்படும் மக்கள்போராட்டம். இந்தக் கூலிப்படை வசைபாடிகளை இணைத்துக்கொள்வதனூடாக அதன் நோக்கமும் இலக்கும் தவறிப்போய்விடக்கூடாது.

முந்தைய கட்டுரைபூமணி- எழுத்தறிதல்
அடுத்த கட்டுரைசீனு-கடிதங்கள்