கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.

தங்களது அறம் நூல் வாசித்துக்கொண்டு இருக்கிறேன்.. ஒரு வாரத்திற்கு முன்பு முதல் கதையான அறம் வாசித்து அதன் பாதிப்பில் இருந்து வெளி வர இயலாததால் தொடர்ந்து படிக்கவில்லை. நேற்று வணங்கான் வாசித்தேன்.

“மனிதன் கள்ளமற்று இருக்கும்போது கடவுள் அவரது இரக்கமில்லாத விதிகளை எல்லாம் கொஞ்சம் தளர்த்திக்கொள்ள வேண்டும். வேறு வழியே இல்லை அவருக்கு.”

கடவுள் எத்தனையோ முறை இக்கட்டான சூழல்களில் இருந்து காப்பாற்றி இருக்கிறார். அப்போதெல்லாம் மிகுந்த நன்றிமட்டுமே இருந்தது. உங்கள் இந்த வரிகள் வேறொரு கோணத்தில் இருக்கிறது.. பிரமிப்பாக இருக்கிறது. இப்படி எல்லாம் கூட யோசிக்க முடியுமா என்று தோன்றுகிறது. தங்களை வாசிக்க ஆரம்பித்தது குறித்து இன்னும் அதீதப் பெருமை கொள்கிறேன். சொல்லத்தோன்றியது சொல்லிவிட்டேன். மிக்க நன்றி.

பணிவுடன்,
வானவன் மாதேவி.

அன்புள்ள வானவன் மாதேவி,

நலமாக இருக்கிறீர்களா? உடல்நிலை எப்படி இருக்கிறது. உங்கள் கடிதம் மனநெகிழ்ச்சியூட்டியது. வாழ்க்கையின் எல்லாத் தருணங்களிலும் வாழ்க்கையை இனிதாக ஆக்கிக்கொள்ள இலக்கியம் உதவும் என்பதற்கான வாழும் உதாரணம் நீங்கள். சில சமயங்களிலேனும் இதெல்லாம் எதற்கு என்று எழும் ஐயத்துக்கான பதில்கள் போல.

எழுதும்போது சில வரிகள் அந்த மன எழுச்சியைப் பின்பற்றி அமைகின்றன. நானெல்லாம் யோசித்து எழுதும் வகை அல்ல. எழுதியபின் யோசிக்கக்கூடியவன்

ஜெ

அன்புள்ள ஜெ,

தினமும் உங்கள் ஒரு பதிவையாவது படித்து விடுவது என் அன்றாட வேலைகளில் ஒன்று. படித்த பின், தம் அடிக்கும் நண்பர்கள் முகத்தில் காணப்படும் ஒரு ஏகாந்தக் களை என் முகத்தில் இருப்பதை என்னால் உணர முடியும்.

’ஒரு மரம், மூன்று உயிர்கள்‘ என்னைப் பாதித்த அளவு அதிகம். ஒரு வகையில் பார்த்தால், எல்லாமே அறியாமை, எல்லாரிடம் இருப்பதுவும் ஒரு குழந்தைத்தனம் என்று நினைத்தால் இது போன்ற மனிதர்களை சுலபமாகக் கடந்து போக இயல்கிறது. அந்த முதிர்ச்சி நமக்கு வருவதற்கு உங்கள் எழுத்துக்கள் துணை செய்கின்றன.

அது போக, நமது நடத்தையையும் கண்ணாடி போல் பார்த்துக்கொள்ளவும், முடிந்த அளவுக்கு நம் பலவீனங்களை சரி செய்து கொண்டு, முடியா விட்டால், மறைத்துக் கொண்டு போகவும் ( முடி இருந்தால் தலை சீவவும், இல்லா விட்டால் சொட்டையை மறைத்துக் கொள்வது போல) வழி வகுக்கும் உங்கள் எழுத்துக்கள், என் தனி மனித வாழ்க்கையில் செய்த செல்வாக்கு மிக அதிகம்.

என்றும் உங்கள் அபிமானி,
உமாசங்கர்.

அன்புள்ள உமாசங்கர்

அந்தக் கட்டுரையை மீண்டும் வாசித்தேன்.

இந்த உலகில் வெற்றி என எப்போதும் எண்ணியிருக்கக்கூடியவற்றைப்பற்றி ஒரு பொதுப்பார்வை அது. எது வெற்றி என்பதை நிறைவைக்கொண்டு அளப்பதே முறை என்று தோன்றுகிறது

பின் தொடரும் நிழலின் குரல் நாவலில் ஒரு கவிதை

இரு பறவைகள்

வல்லூறு ஆற்றல் மிகுந்த பறவை
காற்றின் படிக்கட்டுகள்
அதன் கண்களுக்கு மட்டுமே தெரியும்
பூமி ஒரு கசங்கிய போர்வை அதற்கு.
சிட்டுக்குருவி சின்னஞ்சிறியது
கிளைகள் மீது எம்பித்தாவுகிறது
வானம் அதற்கு
தொலைதூரத்து ஒளிகடல்.

இரு பறவைகள்
இரண்டிலுமிருந்து வானம்
சமதூரத்தில் இருக்கிறது.


ஒருமரம் மூன்று உயிர்கள்


வணங்கான்

முந்தைய கட்டுரைவிழா
அடுத்த கட்டுரைவிழா-கடிதங்கள்