எண்ணியிருப்பேனோ

இன்று பாரதி பிறந்தநாள். வழக்கம்போல கொஞ்சம் பாரதி கவிதைகள் வாசித்தேன், பாடல்கள் கேட்டேன். இந்தப்பாடலை மீண்டும் மீண்டும் கேட்டேன். நெடுநாள்களாயிற்று இதைக்கேட்டு. சந்தானம் எனக்கு என்றுமே பிரியத்துக்குரிய குரல். ஆனால் இசையைவிட வழக்கம்போல வரிகள்தான் எனக்குள் சென்றன. ஏக்கமும் தனிமையுமாக இந்தப்பாடலில் இருக்கிறேன்.

சென்ற சிலவருடங்களாகவே இந்தப்பாடல் முன்வைக்கும் உணர்வுக்கு நேரெதிரான உணர்வுநிலை கொண்டிருக்கிறேன். உலகியல்சார்ந்த எல்லாவற்றிலும் சலிப்பும் விலகலும் உருவாகிறது. அப்பால் ஒன்றை நோக்கிய கனவாகவே ஒவ்வொருநாளும் செல்கிறது. ஆனால் நீரில் பந்தை அழுத்துவதுபோல என் முழு அகவிசையாலும் நான் என்னை இவற்றில் எல்லாம் அழுத்திக்கொள்கிறேன். வேண்டுமென்றே அதிகம் எழுதுகிறேன், அதிகம் வாசிக்கிறேன். வேண்டுமென்றே அதிகமான உலகியல் பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறேன். அதன் பொருட்டுப் பயணங்கள், சந்திப்புகள், நட்சத்திரவிடுதிகளின் சுகவாசங்கள். ஆனால் அது மேலும் மேலும் என்னை வெளியே தள்ளுகிறது. இது இருபது வயதில் என்னை வெளியே தள்ளிய அதே தவிப்பு.

மோகத்தைக்கொன்றுவிடு என்றல்ல, இன்னும் கொஞ்சம் மோகத்துடன் இருக்கவிடு என்றுதான் நான் ஏகத்திருந்து எல்லாவற்றையும் ஆற்றுபவளிடம் கோரவேண்டும். நான் செய்யவேண்டியவை என எண்ணுபவை, செய்தேயாகவேண்டுமென இவ்வுலகம் எனக்குச் சொல்பவை நிறைய மீதமுள்ளன. ஆனாலும் ‘இந்தப்பதர்களையே எல்லாமென எண்ணியிருப்பேனா?’ என்று மனம் ஏங்கிக்கொண்டே இருக்கிறது. ஒரு நிலம், ஒரு இடம் கற்பனைக்குத் தெரிகிறது. சென்று சேரவேண்டிய இடம் என தோன்றுகிறது. ஆனால் ‘இப்போது இங்கிருக்கிறேன்..’ என்ற சொல்லாக மட்டுமே இருக்கிறது இருப்பு.

மீண்டும் மீண்டும் இந்தப்பாடல்.

http://www.youtube.com/watch?v=q_X-9S3TvyI

பாரதி மகாகவியா விவாதம்மகாகவி விவாதம்

கண்ணன்பாடல்கள் ஒரு கடிதம்


பாரதி வரலாறு

பாரதி பற்றி செல்லம்மாள்

முந்தைய கட்டுரைமேளம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்