இஸ்லாமும் சாதியும்-ஒருநாவல்.

நாகர்கோயிலில் எழுபதுகளில் இஸ்லாமுக்கு மதம் மாறிச்சென்ற தலித் ஒருவருடன் அந்தரங்கமாக உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் மதம் மாறியதைச் சுற்றியுள்ள இஸ்லாமிய சமூகம் பெரும் கொண்டாட்டத்துடன் வரவேற்றது. பெரியமனிதர்களெல்லாம் வீடுதேடி வந்தார்கள். ஊர் ஊராகக் கூட்டிச்சென்று பேசவைத்தார்கள்.கொஞ்சம் பணம் கிடைத்து வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளவும் முடிந்தது

ஆனால் எல்லாம் சிலநாட்களுக்குத்தான். அதன்பின் ஒன்று புரிந்தது, மதம் மாறினாலும் அவர் புத்தன்தொப்பி என்றே அறியப்பட்டார். அவரது குடும்பத்துடன் மண உறவு கொள்ள எந்தப் பழைய இஸ்லாமியரும் தயாராக இல்லை. மணவிஷயம் பேச ஆரம்பித்தபோதுதான் இஸ்லாமிய சமூக அமைப்புக்குள் உள்ள சாதியம் தெரியவந்து அவர் விரக்தி அடைந்தார்.பின்னர் தமிழகம் முழுக்க அலைந்து அவரைப்போன்றே மதம் மாறிய தலித் சாதியைக் கண்டுபிடித்து பிள்ளைகளுக்குப் பொருந்தா மணங்களைச் செய்து வைக்க நேர்ந்தது.

‘ஏன் திரும்ப இந்துவாக ஆகியிருக்கலாமே?’ என்றேன். ‘இல்லை, திரும்பச்சென்றால் என் பூர்விகசாதியிலும் நான் கடையனாகவே கருதப்படுவேன். நான் மதம் மாறும்போது என்னுடைய சாதி வறுமையில் இருந்தது. அதை ஒட்டிய இழிவும் இருந்தது. இன்று அப்படி அல்ல. வறுமை பெருமளவு நீங்கிவிட்டது. அதையொட்டி குடும்பப்பெருமைகளும் குலப்பெருமைகளும் எல்லாம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். என் சாதிக்குள் எனக்குக் கடைசி இடம்தான் கிடைக்கும்’ என்றார்

இஸ்லாமுக்குள் சாதி இல்லை என அவர் எப்படி நம்பினார் என்று கேட்டேன். சாதி என்ற சொல் ஜாத என்ற வேர்ச்சொல் கொண்டது. பிறப்பு என்று பொருள். பிறப்பு சார்ந்த குல,குடி, இனக்குழு அடையாளம் இல்லாத மக்கள் உலகில் எங்குமே இல்லை. நவீன ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்தான் குலம்,குடி சார்ந்த அடையாளம் சென்ற இருநூறாண்டுக்காலத்தில் மெல்லமெல்ல மழுங்கியுள்ளது.

ஆனால் அங்கும் இனம் சார்ந்த அடையாளங்கள் திட்டவட்டமானவை. அமெரிக்க சமூகத்த்தின் உச்சியில் ஆங்கிலோ சாக்ஸன் இனம்தான் இன்றும் உள்ளது. யூதர்கள், இத்தாலியர்கள், ஹிஸ்பானியர்கள், சீனர்கள், கறுப்பர்கள் எனத் தெளிவான இனப்பிரிவினை அங்குள்ளது. அது உண்மையில் ஒரு நவீன சாதியடுக்குத்தான். சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் இருந்தது போல அங்கே ஒவ்வொரு இனமும் தங்களுக்குரிய குடியிருப்புப்பகுதிகளில் தனித்தனியாகத்தான் வாழ்கிறார்கள். பொதுவான புழங்குதளத்தில் ஒரு சுமுகமான உறவிருக்கிறதென்பதைத் தவிர்த்தால் அவர்களுக்குள் தனிப்பட்ட, குடும்ப உறவுகள் ஏதுமில்லை. ஆம், அக்ரஹாரங்களும் சேரிகளும் புதிய வடிவில் அங்கே உள்ளன.

அரேபிய சமூகத்தின் இனக்குழு அடுக்குகளைப்பற்றி இன்று எந்த ஒரு சமூகவியல் நூலிலும் வாசிக்கலாம். அதன் உச்சியில் இன்றும்கூட குறைஷிக்குலமே உள்ளது, நபி அக்குலத்தில் பிறந்தாரென்ற தனி அடையாளத்துடன்.
இஸ்லாம் பரவிய எந்த நாட்டிலும் அங்குள்ள இனக்குழு வேறுபாடுகள் இல்லாமலானதில்லை. இன்னும்கூட மன்னராட்சியும், பாரம்பரியப் பதவிமுறைகளும் நிலவும் இஸ்லாமிய நாடுகளில் இனம்,குடி,குலம் போன்ற பிறப்படையாளங்களைத் தவிர்ப்பது சாத்தியமே அல்ல என்பதே உண்மை.மனிதர்கள் அவர்களின் பாரம்பரியத்தாலன்றி உழைப்பாலும் திறனாலும் அடையாளப்படுத்தக்கூடிய நவீனக்கருத்துக்கள் வளரக்கூடிய சூழல் கொண்டஒரு சமூகத்திலேயே சாதி போன்ற பிறப்படையாளம் காலப்போக்கில் வலுவிழக்க வாய்ப்புள்ளது. ஐரோப்பாவை விட்டால் இந்தியாவில்தான் அதற்கான வாய்ப்பு அதிகம்.

இந்திய இஸ்லாமிய சமூகம் எக்காலத்திலும் அதற்கான பிறப்படிப்படையிலான பிரிவினைகளைப் பேணி, அப்பிரிவினைகளுக்குள் கடுமையான வெறுப்புகளை வளர்த்துக்கொண்டு செல்வதாகவே இருந்துள்ளது. சுன்னி-ஷியா என்ற பிரிவினைகூட இன்று நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல, பிறப்பின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் மாறிமாறிக் கொன்றுகுவித்துக்கொண்டிருக்கிறார்கள். கேரளத்தில் எழுநூறாண்டுகளுக்கு முன்னால் மதம் மாறியவர்கள் இன்றும்கூட முஜாஹிதுகள் என்று சுன்னிகளால் சற்றே தள்ளித்தான் வைக்கப்பட்டிருக்கிறார்கள். அரசியல் ரீதியாகக்கூட அவர்கள் ஒன்றுபடமுடியவில்லை. தமிழகத்தில் இன்றும்கூட பட்டாணிகளும் மரைக்காயர்களும் தங்களை ஒரே சமூகமென உணர்வதில்லை.

ஐநூநூறாண்டுகளுக்கு முன்னால் கிறித்தவர்களாக மதம்மாறிய தலித்துக்கள் இன்றும்கூடக் கேரளத்தில் தலித் கிறிஸ்தவர்களாகவே நீடிக்கிறார்கள். மதம் மாறிய நம்பூதிரிகளும் நாயர்களும் அந்த அடையாளத்தை இழக்கவும் இல்லை. இது இங்கு மட்டுமல்ல, உலகமெங்கும்தான். மதம் இன,குல,குடி அடையாளங்களை அழித்து மக்களை ‘ஒரேதிரளாக’ ஆக்கும் என்பதற்கு உலகில் எந்த நாட்டில் இருந்தும் ஒரே ஒரு உதாரணம் கூட அளிக்கமுடியாது நம்மால். இன்னொரு மதத்துக்கு எதிராகப் போராடும்போது ஒரு தற்காலிகப் பொது அடையாளத்தை அது உருவாக்கும், அவ்வளவுதான்

என்ன காரணம்? இந்தப் பிரிவினைகளை உருவாக்குவது பெரும்பாலும் மதம் அல்ல என்பதுதான்– சுன்னி-ஷியா பிரிவினை போல சில விதிவிலக்குகளைத் தவிர்த்தால் இதுவே நியதி. இந்தப்பிரிவினைகள் மதம் தோன்றாக்காலத்திலேயே உருவாக்கப்பட்டுவிட்டவை. இனம்,குலம்,குடி ,இனக்குழு போன்ற அடையாளங்களுக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை. மதம் அவற்றை உருவாக்கவில்லை, ஆகவே அவற்றை மதத்தால் களையவும் முடியாது.

ஆனால் மதங்கள் பிறப்படிப்படையிலான பேதங்களை நிலைநிறுத்தும் கொள்கைகளையும் நம்பிக்கைகளையும் உருவாக்க முடியும்.அவற்றை சமூகத்தில் நிலைநிறுத்த முடியும். அந்நிலையில் மதத்தின் பழைமைவாதப் போக்குக்கு எதிராக செயல்படும் சீர்திருத்த இயக்கங்கள் மூலம் அந்தக் கருத்தியலைப் பின் தள்ள முடியும். இந்திய சமூகத்தில் ஆரியசமாஜம்,பிரம்மசமாஜம் முதல் காந்திய இயக்கம் வரையிலான சீர்திருத்த இயக்கங்கள் பழைமைவாதத்தைப் படிப்படியாகப் பின் தள்ளியிருப்பதைக் காணலாம்.

பல்லாயிரம் வருட வரலாறுள்ள பிறப்புசார்ந்த பேதங்கள் அதிகபட்சம் நூறுவருடங்களுக்குள் கருத்தியல் அடிப்படையில் முழுமையாக நிராகரிக்கப்பட்டிருப்பதை ஒரு சாதனை என்றே நான் நினைக்கிறேன். ஐரோப்பா அதன் நிறவெறியைக் கருத்தியல் ரீதியாக வெல்ல இருநூறாண்டுகளுக்கும் மேல் அதி தீவிரமான கருத்துச்செயல்பாடு, சிந்தனைப்புரட்சி தேவைப்பட்டது என்பதை இதனுடன் ஒப்பிட்டாகவேண்டும்.நடைமுறையில் இன்னும் செல்லவேண்டிய தொலைவு மிக அதிகமென்றாலும் அது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மாற்றம், தவிர்க்கமுடியாத ஒரு மாற்றம்.

உண்மையில் சாதி நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் பிரிக்கமுடியாத பகுதி. பழங்குடிச் சமூகம் நிலப்பிரபுத்துவச் சமூகமாக மாறும்போது அது உருவாகி வந்தது. நிலப்பிரபுத்துவச் சமூகத்தின் கட்டமைப்பைத் தக்கவைத்துக்கொள்ள அது தேவைப்பட்டது. நிலப்பிரபுத்துவ சமூகம் முதலாளித்துவ சமூகமாக ஆகும்போது அது வலுவிழக்கிறது. இன்றும் நம் நாட்டில் எஞ்சியுள்ள நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்புடன் ஒட்டிக்கொண்டுதான் சாதி நீடிக்கிறது. மெல்லமெல்ல வலுவாக உருவாகிவரும் முதலாளித்துவ சமூகக்கட்டமைப்பால் அழிக்கப்பட்டு வருகிறது அது.

ஆகவே, பிறப்புசார்ந்த பேதங்களுக்கு மதம் காரணம் என்று நம்பி மதத்தை மாற்றிக்கொள்வது பிழையான முடிவாகவே இருந்திருக்கிறது.பேதங்கள் மறைவது, கருத்தியல் மாற்றங்களாலும் பொருளாதார வளர்ச்சியாலும் மட்டுமே. அவை இந்திய சமூகத்திற்குள் தீவிரமாக நிகழ்ந்து கொண்டுதான் உள்ளன.

இஸ்லாமுக்குச் சென்ற நண்பரிடம் பேசி முடித்தபோது அவர் சற்று நேரம் அமைதியாக இருந்தபின் பெருமூச்சுடன் ‘இதெயெல்லாம் யோசிச்சா ஒரு முடிவு எடுக்கறது?எடுத்தாச்சு. போகட்டும்’ என்றார். ‘எல்லா எடத்திலயும் வார மாற்றம் இஸ்லாமுக்குள்ளயும் வரட்டுமே’ என்றார்

நண்பர் மதம் மாறியது எழுபதுகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் மீனாட்சிபுரத்தில் பள்ளர் சாதியினர் மதம் மாறியதை ஒட்டித்தான். அது ஒரு எதிர்மறை வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவு. அந்த மதமாற்றம் நிகழ்ந்து கால்நூற்றாண்டாகிறது. அன்று மதம் மாறியவர்கள் எப்படி இஸ்லாமுக்குள் தலித்துக்களாகவே கருதப்படுகிறார்கள், எப்படி ஒதுக்கப்படுகிறார்கள் என்பதைச் சித்தரிக்கும் ஒரு நாவல் கருப்பாயி என்கிற நூர்ஜஹான் . அதைப்பற்றி ஆ.சிவசுப்ரமணியம் எழுதிய மதிப்புரையை வாசித்தேன்.நாவலை வாசிக்கவேண்டும்

முந்தைய கட்டுரைபூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழாவில் பூமணி உரை