எண்ணாயிரம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

சமீபத்தில் நான் சென்று வந்த எண்ணாயிரம் கிராமத்தைப் பற்றி உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.  இந்த கிராமம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது.  இங்குள்ள அழகிய நரசிங்கப் பெருமாள் கோவில் ஆயிரம் வருடம் பழமையானது.  ராஜராஜ சோழன் கட்டியதாகவும், இங்கிருக்கும் பெருமாள் அவனுக்குக் குல தெய்வம் என்றும் கூறப்படுகிறது.  இந்த ஊரைச் சுற்றி 3 சோழர் கால சிவன் கோவில்கள் உள்ளன. ராமானுஜர் இக்கோவிலுக்கு இருமுறை வந்து, ஏற்கனவே இங்கிருந்த எண்ணாயிரம் சமணர்களை வைணவர்களாக மாற்றி இருக்கிறார்.

இந்த ஊர் ஒரு பழமையான சமண ஊர் என்பதற்கு ஆதாரமாக, ஊருக்கு வெளியே எண்ணாயிர மலை உள்ளது. இம்மலையில் கி. பி.9, 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த 35 கற்படுக்கைகளும், 5 தமிழ்க் கல்வெட்டுகளும் இயற்கை குகைகளும் உள்ளன.  தொண்டை நாட்டில் வேறெங்கும் இவ்வளவு கற்படுக்கைகள் இல்லை. மிகவும் ஆச்சர்யமான செய்தி என்னவெனில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு ஒரு வேதக் கல்லூரி இருந்தது என்பதுதான்.  10 ஆசிரியர்களும் 340 மாணவர்களும் இங்கு தங்கி வேதம் பயின்று வந்துள்ளனர்.  அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உணவுப்படி வழங்கப்பட்டுள்ளது.

இவ்வளவு சிறப்புகள் உடைய ஊர் கவனிக்கப்படாமல் இருப்பது வருத்தமாக உள்ளது.

இக்கோவிலில் பூசை செய்பவர் ஒரு வன்னியர் (அவர் சொன்ன பிறகுதான் தெரிந்தது) என்பது குறிப்பிடத்தகுந்தது. அனைவரும் அர்ச்சகர்கள் ஆகலாம் திட்டத்தில் பயின்று வந்தவர்.  வெறும் அறுநூறு ருபாய் சம்பளத்தில் பணியாற்றுகிறார்.

இதைப்பற்றி இணையத்தில் நான் பதிவு செய்தவைகளை இங்கு இணைத்து உள்ளேன்.

நன்றி.
தங்கள் அன்புள்ள,
சரவணக்குமார்.

1) wiki article
http://en.wikipedia.org/wiki/Ennayiram

2) youtube videos

a) Azagiya narasimma perumal temple
i) http://www.youtube.com/watch?v=FT4gefi3EoY
ii) http://www.youtube.com/watch?v=w10bZTGRKEs&feature=related
iii) http://www.youtube.com/watch?v=qe3o_kTLAsg&feature=related

b)Jain cave, stone beds and Tamil inscriptions
i) http://www.youtube.com/watch?v=7RYt50XKEuA&feature=related
ii)http://www.youtube.com/watch?v=OEGXd3t_1sg&feature=related
iii)http://www.youtube.com/watch?v=LvE3JTouV3o&feature=related

3) wikimapia additions
i) http://wikimapia.org/#lat=12.1266069&lon=79.4792175&z=12&l=0&m=b&show=/8274336/Ennayiram
ii) http://wikimapia.org/#lat=12.1266069&lon=79.4792175&z=14&l=0&m=b&show=/22429551/Ennayiram-malai
iii) http://wikimapia.org/#lat=12.1246768&lon=79.4914913&z=16&l=0&m=b&show=/8274326/Azhagiya-Narasimha-Perumal-Temple-Ennayiram

அன்புள்ள சரவணக்குமார்,

சமணர்களின் கூட்டங்கள் எண்ணாயிரம், நாலாயிரம், மூவாயிரம் என்று சொல்லப்பட்டு வந்தன.  அது எண்ணிக்கை அல்ல, குலப்பெயர். அல்லது குடிப்பெயர்.

இந்த வரியைக்கொண்டே எண்ணாயிரம் சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்ற வகையான கதைகளெல்லாம் கட்டமைக்கப்பட்டன.

உண்மையில் இந்த எண்ணிக்கை சார்ந்த குலப்பெயர்கள் சமணர்களுடையதல்ல.  பழந்தமிழ் நாட்டில் வணிகர்கள் குலங்கள் அப்படி எண்ணிக்கைப் பெயர்களாக இருந்தன. இப்போதும் நாட்டுக்கோட்டையார் நடுவே அப்படிப்பட்ட பெயர்கள் உள்ளன.  வணிகர்கள் சமணர்களாக இருந்த காலகட்டத்தில் அந்தப் பெயர் சமணர்களுக்குச் சென்றிருக்கலாம்.

ஜெ

முந்தைய கட்டுரைமீண்டுமோர் இந்தியப்பயணம்
அடுத்த கட்டுரைபூமணி- எழுத்தறிதல்