[Tinneveli District Gazetteer By H.R.Pate I.C.S. ]
திருநெல்வேலியைப்பற்றி அறிவதற்கான முதல் வரலாற்று நூலாக இருப்பது பிஷப் கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி சரித்திரம். 1916ல் சென்னை ஆளுனரின் ஆணைக்கேற்ப நெல்லை ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட் தொகுத்தெழுதிய திருநெல்வேலி மாவட்ட ஆவணப்பதிவு அதன் பின் வந்த நேர்த்தியான மொழியில் எழுதப்பட்ட தகவல் களஞ்சியம். நுட்பமான தகவல்கள் செறிவாக தொகுக்கப்பட்டு அழகிய நடையில் எழுதப்ப்பட்ட இந்நூலும் அக்கால ஆங்கில ஆட்சியாளருக்கு இருந்த நூலறிவு மொழிப்பயிற்சி ஆகியவற்றுக்குச் சான்றாகும். சுதந்திரத்துக்குப் பின் நம் ஆட்சியர்களில் மிகச்சிலரே நூல்களை எழுதியிருக்கிறார்கள் என்பதும் அந்நூல்களில் மிகச்சிலவே வாசிக்கத் தகுதி கொண்டவை என்றும் பார்க்கும்போது இப்போது ஆட்சியர் பணி என்பது ஓருவகை ‘பெரிய குமாஸ்தா’ பதவிதான் என்ற எண்ணம் ஏற்படுகிறது.
ஆங்கிலேயர் எழுதிய ஆவணக்குறிப்புகள் மற்றும் வரலாற்று நூல்கள் பொதுவாக கீழ்க்கண்ட சிறப்புகள் உடையவை. 1. தெளிவான செறிவான நடை 2. ஏராளமான தகவல்கள் 3. தகவல்களை பகுக்கவும் தொகுக்கவும் அறிவியல்நோக்கு சார்ந்த ஒரு அடிப்படைத்தளம் 4. பிரச்சார நோக்கம் இல்லாத பதிவுத்தன்மை. 5. பலதுறை அறிதல்களை தொகுக்கும் இயல்பு
அவை அனைத்துக்குமே கீழ்க்கண்ட குறைகளும் உண்டு 1. ஆதிக்க இனத்தின் நோக்கில் இந்தியாவை பார்ப்பதனால் உருவாகும் இயல்பான அலட்சியமும் புரிதல் குறைகளும் 2. மதக்காழ்ப்பும் மதக்காழ்ப்புள்ள பாதிரிமாரின் நூல்களை சார்ந்திருக்கும் தன்மையும் 3. இந்தியா போன்ற ஒரு பரந்த நாட்டின் பல்லினப் பலமொழி பலமதப் பண்பாட்டை எளிதில் பொதுமைப்படுத்திக்கொள்ளும் முயற்சி. இக்குறைகளை கவனத்தில்கொண்டபின்பு நாம் இவர்கள் அளிக்கும் தகவல்களை கணக்கில் கொண்டால்கூட நம்மைப்பற்றி நாம் அறிய மிகச்சிறந்த ஆவணங்கள் இவை.
மேலும் நாம் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்பின் ஒரு பகுதியாக உருவாக்கிக் கொண்ட சுயபெருமிதம் சுதந்திரத்துக்குப் பின்பு ஒரு பெரும்போக்காக மாறி இப்போது நம்மைப்பற்றி பொய்யான கற்பிதங்களை உருவாக்கிக் கொள்ளும் மிகை வரலாறுகளை எந்தவித ஆவணப்பின்புலமும் இல்லாமல் எழுதிக்கொள்ளும் இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளது. பிரிட்டிஷ் ஆவணப்பதிவுகள் இந்நிலையில் ஒப்புநோக்க மேலும் சமநிலை கொண்ட வரலாற்றுக்குறிப்புகளாக உள்ளன. நமது எம்பித்தாவல்களை சமன்படுத்தும் பின் எடைகளாக இவை அமையலாம்.
இன்னொரு முக்கியமான அம்சம் இரு உலகப்போர்களை ஒட்டி இந்தியாவில் உருவான தீவிர நவீனமயமாதலால் இந்தியாவின் முகம் மாறியது. சாலைகள் உருவாயின. பல தொழில்கள் பிறந்தன, மரபான தொழில்கள் அழிந்தன. ஏராளமான மரபுச்சின்னங்கள் அழிந்தன. இவ்வழிவுக்கு முந்திய சித்திரங்களை இந்நூல்கள் அளிக்கின்றன. உதாரணமாக இந்நூலில் ஹெச்.ஆர்.பேட் வள்ளியூர் , திருக்கணங்குடி, பணகுடி பகுதிகளில் பல கோட்டைகளின் இடிபாடுகள் இருந்ததாகச் சொல்கிறார். இவை பெரும்பாலும் மண்கோட்டைகள் அல்லது வெட்டுபாறையால் கட்டபட்டவை. கற்கோட்டைகள் மட்டுமே நவீனமயமாதலை தாண்டின. அவரது கணக்கெடுப்பில் வள்ளியூரிலும் சுற்றுப்புறங்களிலும் பற்பல இடிந்த சமணக்கோயில்கள் இருந்திருக்கின்றன. 1930களில் பிறந்த முதியவர்களுக்குக் கூட அவற்றை பார்த்த நினைவு இல்லை. அவ்வகையிலும் இந்நூல்கள் முக்கியமானவை
இந்த ஆங்கிலேயரின் குறைபாடுகளை வரலாற்று எழுத்தில் எழுதுபவனின் ஆளுமையும் ஆதிக்க நோக்கும் வெளிப்படும் தவிர்க்க இயலாத குறைகளாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் எழுதப்பட்ட சுதேசிய வரலாறுகளிலும் முறையே பிராமண வேளாள நோக்குகள் ஓங்கியிருந்தன என்று காணலாம். வெள்ளை அதிகாரிகளின் நோக்கில் உள்ள திரிபுகள் இயல்பாக நிகழ்பவை, திட்டமிட்டு செய்யப்படுபவை அல்ல என்றே சொல்ல வேண்டும். உதாரணம் ஹெச்.ஆர்.பேட் இந்நூலில் இந்துமதம் குறித்து எழுதும் பகுதிகள். நெல்லையில் சைவ வைணவ மதங்களைவிட மேலாக சிறுதெய்வ வழிபாடு ஓங்கியிருந்த சித்திரத்தை நேர்த்தியாக பதிவுசெய்கிறார். பெரும்பாலான ஆட்சியர்கள் அவர்களின் கோணத்தில் அக்காலத்தில் ஓங்கியிருந்த காலனிய நோக்கையும் மீறி அறிவியல் ரீதியாக செயல்பட்டிருப்பதாகவே எனக்குப் படுகிறது. ஹெச்.ஆர்.பேட்டின் இந்நூலும் அத்தகையது. மனோன்மணியம் பல்கலை 1993ல் இந்நூலை மறு பதிப்பு செய்துள்ளது.
**
ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் நில அமைப்பு குறித்த விரிவான சித்திரத்தை அளிக்கிறது முதல் அத்தியாயம். நெல்லை கனிவளத்தில் வளம் மிக்கதல்ல என்று சொல்லும் ஹெச்.ஆர்.பேட் அதன் முக்கியமான நிலத்தனித்தன்மையாகச் சொல்வது கோயில்பட்டியை மையமாக்கிய பருத்திக்கான கரிசல் நிலத்தையே. பின்னர் அரசியல் வரலாறு. தொல்லியலாளர் புரூஸ் ·பூட் [Bruce Foote] 1883ல் சாயர்புரத்தில் ஒரு மேட்டு நிலத்தில் கற்கால பண்பாட்டின் தடையங்களை கண்டெடுத்ததையும், ஆதிச்சநல்லூர் ஆய்வுகளையும் குறிப்பிட்டு நெல்லை மண்ணின் தொன்மையை விவரித்து பேச ஆரம்பிக்கிறார். ஆதிச்சநல்லூர் ஆய்வுகள் பிற்பாடு ஆதிச்சநல்லூரைப்பற்றிய குறிப்புகளில் மிக விரிவாக அளிக்கப்படுகின்றன. இக்காலகட்டத்தில் திராவிட -ஆரிய வாதம் முன்வைக்கப்பட்டிருந்தபோதிலும்கூட இங்கு முதுமக்கள் தாழிகளில் புதைக்கப்பட்ட மக்கள் எவர், எந்த இனம் என்பதெல்லாம் மேலதிக ஆய்வுக்குப்பின்னரே வகுக்கப்பட இயலும் என்கிறார் ஹெச்.ஆர்.பேட் .
வழக்கம்போல பண்டைவரலாறு சுருக்கமாகவும் அதிக தகவல்கள் இல்லாமலும்தான் உள்ளது, ஆய்வுகள் பிற்பாடு தான் வளர்ந்தன. ஆனால் நாயக்கர் காலத்தில் உருவான பாளையப்பட்டுகள் எப்படி நெல்லை நிலத்தை பகுத்து ஆண்டன என்பதன் மிக விரிவான சித்திரமும் அவற்றுக்கிடையேயான பூசல்களின் ஏராளமான உள்தகவல்களும் இந்நூலில் உள்ளன. இப்பகுதி colleries என்றும் cullers என்றும் பாதிரிகளால் குறிப்பிடப்படும் கள்ளர்கள் மற்றும் தொட்டிய நாயக்கர்கள், கம்பளத்து நாயக்கர்கள் ஆகியோரின் சிறு சிறு படைகளால் தனித்தனி துண்டுகளாக ஆளப்பட்டன. சிவகிரி ,அழகாபுரி ஆகிய பாளையப்பட்டுகள் வன்னியர்களுக்குரியவை. பிரிட்டிஷார் நெல்லையில் காலெடுத்து வைக்கும்போது இந்த பாளையப்பட்டுகள் பலவாறாகபெருகி விட்டிருந்தன என்று ஹெச்.ஆர்.பேட் சொல்கிறார். அவரது நோக்கில் முதலில் நெல்லைக்கு வந்த வெள்ளைய அதிகாரி லெ·ப்டினெண்ட் இன்னிஸ் தான் [Lt.Innis]
பிரிட்டிஷ் அதிகாரியான ஓர்மே [Orme] எழுதிய ஒரு குறிப்பு எடுத்து தரப்படுகிறது ” இப்பகுதியின் கள்ளர்கள் [திருநெல்வேலி மேற்கு] பொதுவாக மலைவாழ்மக்களில் காணப்படும் குரூபத்தையோ உருவப்பிழையோ கொண்டவர்கள் அல்ல. இவர்கள் உயரமான திடமான நல்ல தோற்றம் கொண்டவர்கள். அம்புகள் ஈட்டிகள் ஆகியவற்றை ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். ஆண்கள் எப்போதும் வாளும் கேடயமும் தரித்திருக்கிறார்கள். இவர்கள் தீரமான போர்வீரர்கள். ஆயுதங்கள் வைத்திருப்பதற்கு ஏற்ப பல குழுக்களாக போரில் ஈடுபட்டாலும் கூட வேல்கம்பு ஏந்தியவர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்களே போர்களில் முன்னேறித்தாக்குபவர்கள். பதினெட்டடி நீளம் வரை வரும் கூரிய ஆயுதம் இது. இதில் முனைக்கு கீழே செங்காவி நிறத்தில் குதிரைமுடியை கட்டியிருப்பார்கள். குதிரைகளைத் தாக்கும்போது அதில் சிறிய மணியையும் கட்டியிருப்பார்கள். முன்கூட்டிய தயாரிப்போ ஒத்திகையோ இல்லாமல் அவர்கள் ஒரு இறுக்கமான குழுவாக திரண்டுகொள்வார்கள். ஒருவரோடொருவர் ஒண்டிக் கொண்டபடி நிதானமான உறுதியான அடிகள் வைத்து வேல்கம்புகளை நீட்டியபடி முன்னேறுவார்கள். ஈட்டிகளை ஆட்டி மணியொலி எழுப்பி குதிரைகளை அச்சுறுத்தி கலையவைத்து தாக்குவார்கள். காலாள்படையை வேகமாக தாக்குவார்கள். பீரங்கிகளை எதிர்கொள்ளும் பயிற்சி இவர்களுக்கு இல்லை….”
நாயக்கராட்சியின் இறுதியில் சந்தா சாகிபின் படைகள் நெல்லையையும் அதன் வழியாக குமரியையும் சூறையாடிய சித்திரம் ஏராளமான தகவல்கள் வழியாகச் சொல்லப்படுகிறது. அதன் பின்னர் கட்டப்பொம்மு நாயக்கனும் பூலித்தேவனும் நடத்திய கலகங்களின் விரிவான சித்திரம் அளிக்கப்படுகிறது. கட்டப்பொம்மு நாயக்கரின் கலகம் நாம் நன்கறிந்த சிவாஜிகணேசனின் திரைப்படம் காட்டும் சித்திரத்துக்கு பலவகையிலும் வேருபட்டு இந்நூலில் காட்சியளிக்கிறது. கட்டபொம்மு நாயக்கருக்கு தேசியம் சார்ந்த புரிதலோ ஒரு நாட்டை அமைக்கும் நோக்கமோ இருந்ததாக தெரியவில்லை. பிற பாளையக்காரர்களைப்போல அவரும் மற்ற பாளையபப்ட்டுகளில் மக்களை கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிரிட்டிஷார் அவரை கட்டுப்படுத்தி கடுமையான கிஸ்தி போடுகிறார்கள். பொதுவாக பாளையக்காரர்களுக்கு போடப்பட்ட கிஸ்திக்கு எதிராக கடுமையான அதிருப்தி இருந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெ·ப்.ஜாக்ஸனிடம் வாதாடியபின் இறங்கிச்ச்செல்லும் வழியில் கட்டப்பொம்மு நாயக்கர் அவரை தடுக்க முயன்ற ஆங்கில ஊழியர் கிளேர்க்கை கொன்று தப்பிச்செல்கிறார்.
கட்டபொம்மு நாயக்கருக்கு அவரைச் சுற்றியிருந்த மறவர், வன்னியர் பாளையக்காரர்கள் அனைவருமே எதிராக இருக்கிறார்கள். ஊத்துமலை ஜமீந்தாரும், சிவகிரி ஜமீந்தாரும் சுப்ரமணியபிள்ளை தலைமையில் தங்கள் நாடுகளில் கொள்ளையடிக்கும் பாஞ்சாலங்குறிச்சிக்காரர்களுக்கு எதிராக போராட வெள்ளையரை தங்கள் உதவிக்கு அழைக்கிறார்கள். இவர்களின் உதவிகொண்டு கட்டப்பொம்மு நாயக்கர் ஒடுக்கப்படுகிறார். இதன் விரிவான தகவல்கள் இந்நூலில் அளிக்கப்படுகின்றன.
ஹெச்.ஆர்.பேட் டின் சித்தரிப்பில் நமக்குக் கிடைப்பது நாயக்கர் கால மைய ஆட்சி ஒழிந்து சுதந்திரம் பெற்ற பாளையப்பட்டுகள் எவ்விதமான நியதியுமில்லாமல் பரஸ்பரம் போரிட்டு மக்களைக் கொள்ளையடித்து அட்டூழியம் செய்த ஒரு சித்திரம். பல்வேறு நாட்டார் இலக்கியங்களும் இதை உறுதிசெய்கின்றன. இந்த அராஜகநிலையை பயன்படுத்திக்கொண்டு வெள்ளையர் காலூன்றுகின்றனர். அவர்கள் உருவாக்கிய உறுதியான நிர்வாகம் மக்களிடையே பேராதரவு பெற்று அவ்வாதரவு வ.உ.சிதம்பரனார் காலத்து சுதந்திரப்போராட்டம் வரை அப்படியே நீடித்தது. நாம் அறியும் பாஞ்சாலங்குறிச்சி கதை சில சில நாட்டுப்புற வீரகதைப்பாடல்களில் இருந்து மாயாண்டி பாரதி பின்னர் ம.பொ.சிவஞான கிராமணி போன்றோரால் உருவாக்கபபட்டு சுதந்திரப்போராட்டத்தின் ஒருபகுதியாக முன்வைக்கப்பட்ட சித்திரமாகும்.
மூன்றாம் அத்தியாயம் மக்களைப்பற்றியது. பொதுவாசகனை மிகவும் கவரக்கூடியதாக இது இருக்கும். பல்வேறு சாதிகளைப்பற்றிய ஆங்கிலநோக்கிலான அவதானிப்புகள் ஆர்வமூட்டக்கூடியவை. உதாரணமாக மறவர் சாதியில் உள்ள உள்பிரிவுகளில் கொண்டையங்கோட்டை, செம்புநாடு பிரிவுகள் மட்டுமே நெல்லையில் உள்ளன என்கிறார் ஹெச்.ஆர்.பேட் . கொண்டையங்கோட்டைபிரிவே நெல்லையில் பெருவாரியாக உள்ளவர்கள். கொண்டையங்கோட்டை பிரிவுக்குள் மிளகு, வெற்றிலை, தென்னை, பனை, ஈச்சம் என மரங்களின் அடிபப்டையில் பிரிக்கப்பட்ட இனக்குடும்பங்களும் உள்ளன என்று ஹெச்.ஆர்.பேட் விவரம் அளிக்கிறார். ஒட்டுமொத்த மறவர் குலமே போடும் தாலியின் அடிபப்டையில் பெருந்தாலி சின்னத்தாலி என்று பிரிக்கபட்டிருப்பது போன்ற தகவல்கள் ஏராளமாக சொல்லபப்டுகின்றன. இப்பிரிவுகள் அனைத்துமே தாய்வழியாக வருபவை என்று ஹெச்.ஆர்.பேட் சொல்வது மிகவும் ஆர்வமூட்டுவது.
அதேபோல நாடார்கள் என்றும் சாணார்கள் என்றும் அழைக்கப்பட்ட சாதியினர் தங்களை 1911ல் நடந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சத்ரியர்கள் என்று குறிப்பிட்டார்கள். காரணம் தாங்கள் மாட்டிறைச்சி உண்பதில்லை என்றார்கள் என்று கணக்கதிகாரி மோலோனி [Molony] குறிப்பிடுவதை சுட்டிக்காட்டும் ஹெச்.ஆர்.பேட் இக்காலகட்டத்தில் சாணார் சாதியினர் விவசாயம் வணிகம் தொழில் ஆகியவற்றில் ஆழ வேரூன்றி செல்வம் மிக்க சாதியினராக மாறிவருவதையும் சுட்டிக்காட்டுகிறார். இக்காலத்தில் நடக்கும் நிலவிற்பனைப் பதிவுகளில் கணிசமானவை இவ்வகுப்பினரால் வாங்கபப்டுபவை என்கிறார். இது மறவர் ,வேளாளார் முதலிய சாதிகளில் உருவாக்கிய கோபத்தை குறிப்பிடுகிறார். 1899ல் சிவகிரியில் நாடார்களுக்கும் பிறருக்கும் கடுமையான பூசலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன என்று விவரிக்கிறார்.
நாடார்கள் அதிகமும் பனை ஏறும் தொழில் செய்தாலும் வணிகமும் தொழிலாக பண்டுமுதலே இருந்தது என்கிறார். இவர்களில் கருக்குமட்டையன், மேனாட்டான்,கொடிக்கால் அல்லது நட்டாத்தி, காவடி புரத்தான் மற்றும் புழுக்கச் சாணான் என்னும் பிரிவுகள் இருப்பதைச் சொல்லும் ஹெச்.ஆர்.பேட் நட்டாத்தி மற்றும் காவடிபுரத்தார்கள் உயர்ந்தவர்கள் புழுக்கச்சாணார் அடிமைகள் என்று குறிப்பிடுகிறார். மறவரிலும் புழுக்கமறவன் என்னும் சாதி அடிமைகளாக இருந்தது. வேளாளர்களிலும் புழுக்கவேளார் என்ற அடிமைகள் இருந்தனர்.
நான் எழுதி இன்னும் வெளிவராத ‘ஏழுகோட்டைவீடு ‘ என்ற கதையில் நெல்லையில் குற்றங்களில் ஈடுபடும் ஒரு நாடார் வகுப்பைப் பற்றி சில தகவல்கள் சொல்லியிருந்தேன். அப்பிரிவைச் சேர்ந்த ஒருவர் தன்னை உவரிவழி என்று சொல்லியதாக நினைவு. அதை உறுதிப்படுத்தும் தகவலை இந்நூலில் கண்டேன். ஹெச்.ஆர்.பேட் உவரியை அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்த நாடார்கள் மறவர்களைப்போல ஊர்க்காவல் செய்தார்கள் என்றும் அவர்களுக்கு அம்பலக்காரர் பட்டம் இருந்தது என்றும் சொல்கிறார்.
இக்காலகட்டத்தில் நெல்லைப்பகுதியில் தெலுங்கு பிராமணர்களுக்கும் சைவ வேளாளர்களுக்கும்தான் ஆதிக்கப்போட்டி இருந்தது என்ற தகவலை காணலாம். வேளாளர்கள் சைவ உணவை உண்பதன் மூலம் சாதி மேன்மைக்கு முயல்வதை, ஒருவரை பார்த்ததுமே அவர் சைவ உணவா என்று கேட்டு அறிவதையும் அப்பிரிவினையின் சமூகவியல் உள்ளடக்கங்களையும் , வேளாளர்களில் சிறுபான்மையினரான கார்காத்த வேளாளர்களின் மதம்சார்ந்த மேலதிக சாதிமேன்மையையும் சுட்டிக்காட்டுகிறார் ஹெச்.ஆர்.பேட் .
அதன் பின் வேளாண்மை [அத்யாயம் 4] காடுகள் [அத்தியாயம் 5] தொழில் [அத்தியாயம் 6] செய்திபரிமாற்றம் [அத்தியாயம்7– இத்தகைய ஒரு தலைப்பு ஜெ.ஹெச்.நெல்சனின் மதுரை ஆவணப்பதிவில் இல்லை என்பதை கவனிக்கலாம். அது ஏறத்தாழ அறுபது வருடம் முற்பட்டது] மழைப்பருவங்கள் [அத்தியாயம் 8] ஆரோக்கியம் [அத்தியாயம் 9] கல்வி [10] நிலநிர்வாகம் [அத்தியாயம் 11] சில்லறை பொருளியல் [அத்தியாயம் 12] நீதி [அத்தியாயம் 13] உள்ளூர் நிர்வாகம் [ அத்தியாயம் 14] ஆகியவை பிற தலைப்புகள்.
பொதுவாசகனுக்கு மிக ஆர்வமூட்டுவது அதன் பின் 15 வது அத்தியாயத்தில் நெல்லையை தாலுக்காக்களாக பிரித்து ஊர்களைப்பற்றி ஹெச்.ஆர்.பேட் அளிக்கும் சித்திரம். குற்றாலம் வள்ளியூர் என எனக்கு நன்குதெரிந்த ஆர்வமூட்டும் ஊர்களைப்பற்றி படிப்பது உற்சாகமளித்தது. இடையான்குடி பற்றிய சித்தரிப்பில் பிஷப் கால்டுவெல்லின் வாழ்க்கையைப்பற்றிய அழகிய சித்தரிப்பு உள்ளது. தான் உருவாக்கிய நகரை மேற்பார்வையிட மரத்தில் மேல் ஏறி உட்கார்ந்திருக்கிறார் கால்டுவெல். அப்பகுதியை பொட்டலாக விற்ற நில உரிமையாளரான நாடார் தன் நிலத்தை பாத்திபோட்டு சீரழித்துவிட்டார் என்று புலம்புகிறார். சீரான தெருக்கள் அந்த அளவுக்கு அவரது கண்களுக்கு வித்தியாசமாக தெரிகின்றன. பாண்டிச்சேரியில் இருந்து இளையான்குடிவரை செருப்பில்லாமல் நடந்து வந்த கால்டுவெல்லின் சித்திரமும் அவர் பள்ளி தொடங்கியபோது வந்த எதிர்ப்புகளும் [ தாசிக்கும் அரசிக்கும்தானே கல்வி தேவை? எங்கள் பெண்கள் இரண்டும் அல்ல] ஆர்வமூட்டுபவை. அக்கால பாளையங்கோட்டை கோட்டைபகுதியைப்பற்றிய வரைபடமும் உள்ளது.
ஆய்வாளர்களுக்கும் பொதுவாக தமிழ்நாட்டை தெரிந்துகொள்பவர்களுக்கும் உதவும் நூல் இது.