வணக்கம் ஜெ.
நலமா?
பத்திரிக்கைத் துறையில் உள்ள எனது நண்பர் ஒருவர் மூலம் தங்களது எழுத்துகள் பரிச்சயம். மூன்று வருடங்களாக வாசித்து வருகிறேன். கார்ப்பரேட் சாமியார்கள் தொடர்பாக சமீபத்திய கேள்விக்கான தங்களின் பதில் கண்டேன். எனக்கும் சில சந்தேகங்கள் … தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன்.
சிறு வயது முதலே கோயில் ஆன்மீக நம்பிக்கைகள் என வளர்ந்து வந்தவன் நான் – விவரமேதுமறியாமலேயே.தேவாரம் திருவாசகம் ஓதுவது எங்கள் வீட்டில் வழக்கமான ஒன்று. கல்லூரிக் காலத்தில் ஆசனங்கள், யோக முறைகள், பிராணாயாமம் முதலியவை பற்றித் தெரிந்து கொள்ள விரும்பினேன். வேலைக்குச் சேர்ந்த பிறகு நண்பர் மூலம் வாழும் கலை இயக்கத்தையும் அதன் முறைகளையும் கண்டு பிராணாயாமம் கற்றுக் கொள்ளும் பொருட்டுப் பயிற்சி வகுப்பில் சேர்ந்தேன்.
யோக முறைகளும் பிராணாயாமம் போன்றவைகளும் பல நூற்றாண்டுகளாக நமது நாட்டில் இருந்துள்ளன – முனிவர்கள் பலரும் இதைக் கடைபிடித்துள்ளனர் என்பவை எனது நம்பிக்கைகள். இருந்தாலும் இப்போதைய கால நிலையில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் போன்றோர் மூலமே அவற்றில் சிலவற்றைக் கற்க இயல்கிறது என்பதால் அந்த சாமியார்கள் மேல் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. என்னைப் பொறுத்த வரை அவர்கள் யோகக் கலை கற்றுக் கொடுக்கும் ஒரு குரு,
இது வரையில் எனக்குப் பிரச்சனை இல்லை.
ஆனால், எனது நண்பரும், அந்த இயக்கத்தைச் சார்ந்த சிலரும் நடந்து கொள்ளும் முறை எனக்கு எரிச்சலூட்டியது. அடுத்தடுத்து மேலும் பல பயிற்சி வகுப்புகளில் சேரும்படி வற்புறுத்துதல் – தெரு முனை, பிரபலமான கடைப் பகுதிகளில் நின்று கொண்டு போவோர் வருவோரிடம் துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தல் – இயக்கத்திலிருந்து குருமார்கள் வந்தால் வேலைக்கு விடுமுறை எடுத்து விட்டுப் பார்க்கச் செல்வது – ரவிசங்கரையே தெய்வமாகத் தொழுவது – இந்த விஷயங்கள் எனக்குப் பிடிக்கவில்லை,
முக்கிய காரணங்களில் ஒன்று – பயிற்சி வகுப்புகளுக்கான கட்டணம். தாங்கள் கூறியது போலக் குறைந்த கட்டணம் இதன் மதிப்பைக் குறைத்து விடும் என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஒரு முறை அதை அடிப்படை வகுப்பில் கற்றுக் கொண்ட பிறகும் பல்வேறு வகுப்புகளில் சேரச் சொல்லி வற்புறுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை. அனைத்து வகுப்புகளிலும் பிரதானமான விஷயம் – சுதர்சன கிரியா மட்டுமே. சமீபத்திய மேல்நிலை (advanced) வகுப்பு ஒன்றுக்குக் கட்டணம் $450. சம்பாதிக்கும் ஒவ்வொரு டாலரையும் முடிந்தவரை சிக்கனமாகச் சேமித்து இந்தியாவில் இருக்கும் குடும்பத்தைக் காப்பாற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எனக்கு அது ஒரு பெரிய தொகையே. இது மட்டுமில்லாது ஆசிரியர் பயிற்சி வகுப்பில் சேரவும் வற்புறுத்தினர். அதன் கட்டணம் $5500 – கிட்டத்தட்ட எனது இரண்டு மாத வருமானம்.
எனது நண்பர்களில் யாருக்கு விருப்பமோ அவர்களிடம் இதைப் பற்றி எடுத்துக் கூறி அவர்கள் விரும்பினால் அடிப்படை வகுப்புகளில் சேரச் சொல்வேன் – ஒரு நல்ல விஷயம் நண்பர்களுக்கும் (அதனருமை தெரிந்தவர்களுக்கு) பயன்படட்டுமே. ஆனால் தெரு முனையில் நின்று கொண்டு அனைவரிடமும் பிரசுரங்கள் விநியோகிப்பது எனக்குச் சரியாகப் படவில்லை,
அடுத்த சில காரணங்கள் – அவரைத் தெய்வமாகத் தொழுவது – அவர் பற்றிப் பல கதைகளைப் பரப்புவது ( நேற்று இரவு எனது கனவில் வந்தார் – வாகனத்தில் போகும்போது விபத்து ஏற்படும் தருவாயில் அவரை நினைத்தேன் உடனே விபத்திலிருந்து காப்பாற்றப்பட்டேன் – நான் நினைத்ததைச் சரியாகக் கண்டுபிடித்து பதில் சொல்லிவிட்டார்… இப்படிப் பல)
அவ்வப்போது நடத்தும் பஜனைகளில் (சத்சங்) கலந்து கொள்வேன் – இசையின் மீது எனக்கிருக்கும் ஈடுபாட்டின் காரணமாக. ஆனால் ஒவ்வொரு முறையும் அடுத்து வரும் வகுப்புகளைப் பற்றியோ அல்லது பல ஊர்களுக்குச் சென்று அங்கு வருகை தரும் குருமார்களைப் பார்ப்பதைப் பற்றியோ பேச ஆரம்பிப்பார்கள். இதனால் அங்கு செல்வதையே தவிர்க்க நினைக்கிறேன்.
இவர்களிடம் எப்படி நடந்து கொள்வது?
சுந்தரம் சுந்தரம்
அன்புள்ள சுந்தரம்,
அதற்குப்பெயர்தான் ‘மிஷனரி’ தன்மை.
ஏதோ நாளைக்கே உலகம் அழிந்துவிடப்போவதுபோல — பலசமயம் அப்படி உண்மையாகவே நம்பி- உடல்பொருள்ஆவி மூன்றாலும் உச்சகட்ட பிரச்சாரத்தில் ஈடுபடுவதைத்தான் நாம் மிஷனரித்தன்மை என்கிறோம். சமணம் முதல் மிஷனரி மதம். பின் பௌத்தம். கிறித்தவ,இஸ்லாமிய மதங்கள்.
பிரச்சாரம் என்ற அம்சத்தில் கிறித்தவம் பெற்ற வெற்றி உலக வரலாற்றில் பிற எங்கும் நிகழ்ந்ததில்லை. இன்று அனைவருமே அந்த வழிகளைத்தான் அப்படியே பின்பற்றுகிறார்கள். நீங்கள் சொல்லியிருக்கும் எல்லாமே கிறித்தவ வழிமுறைகள்தான்.
மிஷனரி மதங்களுக்கெல்லாம் ஒரு பொது அம்சம் உண்டு. அவை ஒரு தீர்க்கதரிசி அல்லது குருவின் உபதேசங்களில் இருந்து ஆரம்பிக்கின்றன. அந்தத் தரப்பு என்பது எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் மானுடசிந்தனையின் முடிவிலா சாத்தியக்கூறுகளில் ஒன்றே. ஆனால் அதை மானுட சிந்தனைக்கே சாரம் என்றும் மானுட சிந்தனையின் ஒட்டுமொத்தம் என்றும் அந்த மதம் நம்பும். அந்த நம்பிக்கையைப் பரப்ப முயலும். அவ்வாறு பரவும்தோறும்தான் அது நிலைநிற்கமுடியும். ஆகவே அந்த உச்சகட்டப் பிரச்சாரம் தேவையாகிறது.
ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் கிறித்தவ வழிமுறைகளை அப்படியே திருப்பிச்செய்து மாபெரும் வெற்றி கண்டது. பரம்பொருள்- அதன் அவதாரம்- அவரது மூலநூல்- அதைப் பிரச்சாரம்செய்யும் அமைப்பு- அந்த அமைப்புக்கு ஒரு நிறுவனர் என்று அப்படியே கிறிஸ்தவ மதத்தின் கட்டமைப்புதான் அதற்கும் . அதைத்தொடர்ந்து மகரிஷி மகேஷ் யோகி உருவானார்.
மகரிஷி மகேஷ் யோகியிடமிருந்து உருவானவர்களே ஜக்கியும் ரவிசங்கரும். அவர்களுடைய அமைப்பும் மனநிலையும் எல்லாம் தீர்க்கதரிசன மதங்களுக்குரியவை. அந்த வேகம் அவ்வாறு வருவதே. ஒரு மனிதரின் அமைப்பு உலகளாவிய இயக்கமாக ஆவதற்குக் காரணம் அதிலிருக்கும் அந்த பிரச்சார வேகம்தான்
எனக்கு என்னை ‘மதம் மாற்ற’ச் செய்யப்படும் எந்த முயற்சியிலும் எதிர்ப்பு உண்டு. வேடிக்கையாக ஏதாவது சொல்லி விலகிவிடுவேன். இங்கே குமரிமாவட்டத்தில் எங்களுக்கெல்லாம் தினம் நாலைந்து பெந்தேகொஸ்தே, சிஎஸ்ஸை,யெகோவா சாட்சிகளைப் பார்த்துப்பார்த்து இதில் நல்ல பயிற்சியும் உள்ளது.
ஒருவிஷயத்துக்காக எனக்கு இதில் ஈடுபாடு. சமீபகாலமாக ஜக்கி-ரவிசங்கர் ஆட்களும் வெள்ளை ஆடை கட்டிப் படங்களுடன் கூட்டமாக வீடு வீடாகச் செல்கிறார்கள். போனமாதம் அவர்கள் இங்கே ஒரு பக்கா பெந்தேகொஸ்தே மனிதரின் வீட்டு கேட்டைத் திறந்து உள்ளே செல்வதைப்பார்த்தேன். அவர் என்னை என்ன பாடு படுத்தினவர். நன்றாக வேண்டுமெனக் கறுவினாலும் அங்கே நிற்கத் துணியவில்லை.
ஆனால் கற்பனையில் ஜுராசிக் பார்க் படத்தில் ராப்டரை டி-ரெக்ஸ் கவ்விக் குதறியதைக் கண்ட சந்தோஷத்தை மீண்டும் அடைந்தேன்
ஜெ
கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?