ஜெ,
பற்றற்ற குருவைப் பற்றுதல், பற்றை அறுக்கும் வழி என்பதை நல்லாச் சொன்னீங்க. ரமணரும் , தனது நான் யார் treatise ல் இதை மிக அழகாச் சொல்லியிருக்கிறார்.
நான் யார் என்னும் எண்ணம், எட்டுக் கால் பூச்சியின் கூடு போல மனம் எண்ணங்களால் சிருஷ்டித்திருக்கும் உலகை அழித்து, எண்ணங்களற்ற பேரானந்த நிலையை அடைய உதவும். இவ்விடத்தில், “நான் யார்“ எண்ணம், பிணம் சுடும் தடி போல – பிணத்தைச் சுட உதவும் தடி பின் தானும் எரிந்து சாம்பலாகிவிடுகிறது என்று மிக அழகான உவமையோடு விளக்குகிறார் . “நான் யார்” என்னும் எண்ணம், எண்ணங்களை அறுக்க உதவிப் பின் தானும் அழிகிறது.புத்திக்கு இதெல்லாம் மிக எளிதாகத் தெரிகிறது. கொஞ்சம் பின்பற்ற நினைக்கும் போதுதான் நாக்குத் தள்ளி விடுகிறது
அன்புடன்
பாலா
அன்புள்ள பாலா
பின்பற்றுவதன் சிக்கல்கள் தனி. ஆனால் ஒன்றை நாம் தெரிந்துகொள்ளுவதே சிறந்தது தான். நாம் அறிந்த பாதையில் கால்கள் தயங்கினாலும் மனம் நூறாயிரம் தடவை சென்று வருகிரது. அதுவே ஒரு பயணம்தான், அந்த அளவுக்கு விடுதலையும்கூடத்தான்
ஜெ
அன்புள்ள ஜெ…சார்.,
ஏனென்று தெரியவில்லை. திருவண்ணாமலை சென்றாலே மனதிற்கு ஒரு ஆழ்ந்த அமைதி கிடைக்கிறது.
1980 களில் இரண்டு வருடங்கள் அங்கு சுற்றியிருக்கிறேன். நிறைய சித்தர்களை சந்தித்திருக்கிறேன்.நிறைய அனுபவங்கள். உங்கள் அனுபவங்கள் ஒன்றிரண்டு படித்தேன். வேறு ஏதும் விளக்கமாக எழுதியிருக்கிறீர்களா?
கோயில் பின்புற வாசலிலிருந்து மேலே ஸ்கந்தாஷ்ரமம் செல்லும் வழியில், முலைப்பால் தீர்த்தம் அருகே ஒரு குகையில் வாழ்ந்து வந்த ஆஸ்திரேலியர் ஒருவரை (நரிக்குட்டி சாமியார் என்று கூறுவார்கள்..நிச்சயம் நீங்கள் சந்தித்திருக்ககூடும்) ஒரு முறை சந்தித்து பேசிக்கொண்டுருந்தேன். செந்தமிழில் மட்டுமே உரையாடுவார். (கண் மருத்துவ நிபுணரிடம் செல்லலாமென்றிருந்தேன்….நீங்கள் வந்துவிட்டீர்கள்) தொல்காப்பியம் உள்பட அனைத்து சங்க இலக்கிய நூல்களையும் கரைத்து குடித்திருந்தார். பல்வேறு விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தோம். கடைசியில் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.
வெவ்வேறு மொழிகள், இனங்கள், சமயங்கள், பண்பாடுகள் நிறைந்திருந்தும், இந்தியா கட்டுகோப்பாக இருப்பது எதனால்? எனக்கு உடனடியாக பதில் சொல்லத் தெரியவில்லை.
பிளாக் டீ போட்டுக்கொடுத்தார். பின்னர் விடை பெறும்போது பதில் சொன்னார்.
இந்து சனா தன தர்மம்.
—
இளம்பரிதி
அன்புள்ள இளம்பரிதி
சனாதன தர்மம் என்ர பெயர் மிகப்பொதுவானது. புராதனமான அறம் என்றே அதற்கான பொருள். ஆனால் நாம் அதை சில சிந்தனையாளர்களின் திரிபு காரணமாக வேத நெறி என்று புரிந்துகொன்டிருக்கிறோம். திருவண்னாமலையில் நான் பிச்சைக்காரனாக இருந்திருக்கிரேன் — சகபிச்சைக்காரராக யோகி ராம் சுரத் குமார் இருந்தார். எப்போதும் சில ஆயிரம் பிச்சைக்காரர்கள் அங்கே உண்டு. அவர்கள் ஏன் எல்லாவற்றையும் துறந்து அங்கே வந்துகொன்டே இருக்கிறார்கள். நித்யா அங்கே இருந்திருக்கிறார்.நடராஜ குரு அங்கே பிச்சை எடுத்திருக்கிறார்– சார்போன் பல்கலையில் முனைவர் ஆய்வேடு வாங்கிய கையோடு. எது அவர்களை ஈர்க்கிறது என்ற கேல்வியில் உள்ளது தொன்மையான அறம் எது என்பது.
ஜெ
நீங்கள் சொன்ன அந்த சுவாமிஜியை நான் பலமுறை சந்தித்திருக்கிறேன்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன்
குரு என்னும் உறவு கட்டுரையை கூர்ந்து படித்தேன். அக்கட்டுரைக்குக் கீழே இருந்த பழையகட்டுரையின் இணைப்புகளும் மிகவும் உதவியாக இருந்தன. குரு என்ற உறவில் நீங்கள் சொல்லாத ஓர் அம்சமும் உள்ளது. குரு ஓரு குறியீடு அல்லது ஒரு icon. இது மிகவும் முக்கியமானது. நாம் ஒருவரை அவர் என்ன சொல்லித்தருவது என்ன என்பதை வைத்து மட்டும் குருவாக ஏற்பது இல்லை. பெரும்பாலான சமயங்களில் அவர் யார் என்பதே நமக்கு முக்கியமானதாக ஆகிறது இல்லையா? ரமணர் யாருக்கு என்ன சொல்லிக்கொடுத்திருக்க முடியும்? ரமணர் கற்றுத்தந்ததே இல்லை என்று சொல்கிறார்கள். அவர் குருவாக இருந்தார்.
நம்முடைய ஞான மரபிலே தட்சிணாமூர்த்திதான் குரு. கல்லாலமரத்தின் அடியில் மௌனகுருவாக அமர்ந்தவர் அவர். நீங்கள் ஒரு கட்டுரையில் தமிழ்மரபின் முதல் கடவுளே ஞானாசிரியனாகிய தட்சிணாமூர்த்திதான் என்று சொல்லியிருக்கிறீர்கள். குருதான் முதல் தெய்வம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
நான் வகுப்பு நடத்தும்போது ஒருமுறை இதைச்சொன்னேன்.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று
ஐம்புலத்தார் ஓம்பல் தலை
என்று வள்ளுவர் சொல்கிறார். தென்புலத்தார் என்றால் பெற்றோரும் மூதாதையரும். தெய்வம் அதன் பின். விருந்து, சுற்றம், தான் என ஐது தரப்பையும் பேண வேண்டும். சரி, மாதாபிதாகுருதெய்வம் என்னும் கணக்கில் குரு வரவேண்டுமே எங்கே? என்று கேட்டேன். ஒரு நல்ல மாணவர் உடனே பதில் சொன்னார். குருவை நம் ஓம்பவேண்டியதில்லை, குருதான் நம்மை ஓம்புகிறார் என்றார்.
உங்கள் குறிப்பு மிகமிகச் சிறப்பானது. ஏன் குரு உறவு முக்கியமானது? அம்மா நம் உடலை நினைக்கிறாள். அப்பா நம் மரபை நினைக்கிறார். தெய்வம் நம் ஆத்மாவை நினைக்கிறது. நம் ஞானத்தை நினைப்பவர் குரு மட்டும்தான்
ஜெயமோகன், உங்கள் இணையதளத்தை ஆறுமாதமாக வாசிக்கிறேன். நானறிந்தவரை இந்த அளவுக்கு வாசிப்புக்கு விஷயம் கொடுக்கும் ஒரு பத்திரிகை கூட தமிழிலே வந்தது கிடையாது. அத்தனை விஷயங்கள். ஓமியோபதிபற்றி கூட நான் ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அத்தனையும் ஒருவரே எழுதுவது பெரிய அற்புதம். உங்களுக்கு குருவருள் இருக்கிறது. மனமார வாழ்த்துகிறேன்
சங்கர நாராயணன்
சென்னை