பூமணி- சொல்லின் தனிமை

பூமணி, தமிழக அரசின் கூட்டுறவுத்துறையில் தணிக்கையாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தணிக்கையாளராக, அதுவும் ஊழலுக்கு உருவமாகச் சுட்டிக்காட்டப்படும் தணிக்கைத் துறையில் செயல்படுவதென்பது மிகமிக அபாயகரமான ஒன்று – நேர்மையைத் தன்னுடைய அடையாளமாகக் கொண்ட ஒருவருக்கு. ‘என்னோட சர்விஸில் ஆரம்பம் முதல் கடைசி வரை நான் நேர்மையில் எந்த சமரசமும் இல்லாதவனாக இருந்தேன். என்னோட வாழ்க்கை இந்த அளவுக்குக் கொந்தளிப்போடு இருந்ததுக்கு அதுதான் காரணம். இந்தமாதிரி ஒரு வேலையில் இந்தமாதிரி ஒரு உறுதியோட நான் இல்லாம இருந்திருந்தா ஒருவேளை இன்னும்கூட நெறையவே எழுதியிருப்பேன்னு நினைக்கிறேன்’ என்று பூமணி கூறினார். தொடர்ந்த இடமாற்றங்கள், அலுவலக விசாரணைகள் என்றே அவரது பணிக்காலம் நகர்ந்திருக்கிறது.

அவரது படைப்பியக்கத்துக்கு அலுவலக வேலை தடையாக இருந்ததா என்று கேட்டேன். “கண்டிப்பா. நான் நெறைய பயணம் பண்ணணும், பெரும்பாலான வேலைகளை நானே உக்காந்து முழுசா செய்யணும்.நெறைய வேலைகளை ரகசியமாகக்கூடச் செய்ய வேண்டியிருந்தது. பல நாட்கள் ராத்திரிதான் வீட்டுக்கு வருவேன். வேலை சார்ந்த அழுத்தங்கள் நடுவேதான் எழுதினேன்” என்றார் பூமணி. நாவல் போன்ற நீடித்த உழைப்பைக் கோரும் வடிவங்களைக் கையில் எடுப்பதற்குத் தயங்கச் செய்யும் வாழ்க்கைச் சூழலே அவருக்கிருந்தது. அதையும் மீறி எழுத முடிந்ததையே குறிப்பாகச் சொல்லவேண்டும்.

‘பிறகு’ நாவல் எழுத நேர்ந்ததைப் பற்றி சொன்னார். கேசவ்தேவின் ’அண்டை வீட்டார்’ அவருக்கு ஒரு முக்கியமான நாவலாகப்பட்டது. எழுதுவதென்றால் அதைப்போல ஒரு நாவலை எழுதவேண்டுமென முடிவு செய்தார். ஆனால் அதற்காக உழைக்கவேண்டும். விரிவான சமூகத்தகவல்களை சேர்த்துத் தொகுக்க வேண்டும். அது நாவலை வெறும் மூளை விளையாட்டாக ஆக்கிவிடுமோ என்ற ஐயமும் இருந்தது. ஒரு நாவல் என்னென்ன தகவல்களைச் சொன்னாலும், எவ்வளவு நுட்பங்களைக் காட்டினாலும், உருப்படியாகச் சொல்வதற்கு ஒரு கதை அதில் எங்கோ இருந்து கொண்டிருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதை உருவாக்கியவை ருஷ்ய நாவல்கள். ‘தெளிவான அறிவு நிலையில் இருந்து கொண்டு நாவல்களை எழுதக்கூடாது. அந்த நிலையில் வாழ்க்கையை உணர்ந்து எழுதுவது சாத்தியமே அல்ல. வாழ்க்கை என்பது எந்தவிதமான முடிவான கருத்துக்களுக்கும் இடம் இல்லாத ஒரு பெரிய பிரவாகமாக உள்ளது. அதன் முழுஉருவத்தையும் நாவல் காட்டவேண்டும் என்றால் அதை எழுத்தாளன் தனக்கேற்ற வகையில் மாற்றியமைக்கக் கூடாது. எழுத்து அவன் வழியாக நிற்க வேண்டுமே ஒழிய அவன் அதை நிகழ்த்தக்கூடாது.’

தன் மக்களையும் மனிதர்களையும் சேர்த்து ஒரு நாவல் எழுதவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்து கொண்டே இருந்தது. அப்போதுதான் ஒரு நாள் கேப்பைக்களத்தில் சுடலைப்பயலைப் பார்த்தார். தாத்தா பாட்டியுடன் களத்து மேட்டில் வேலைக்கு வந்திருந்தான்.அவனுடைய துயரம்மிக்க கதையைக் கேட்டார். தாய் பட்டாளத்தானுக்கு வாழ்க்கைப்பட்டு அவனைப் பெற்றாள். தகப்பன் அவளைக் கைவிட்டான். அவள் இன்னொருத்தனுக்கு மனைவியானாள். அவனாலும் கை விடப்பட்டபோது தங்கச்சிப்பாப்பாவுடன் கிணற்றில் குதித்து இறந்தாள். அவன் தாத்தா பாட்டியுடன் உழைத்து வாழ்கிறான். அத்தனை இழப்புகளுக்கு நடுவிலும் உழைப்பைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையை சமன்குலையாது நடத்திச் செல்லும் அந்த வயதான பகடைத்தம்பதிகளே பூமணியின் ‘பிறகு’ நாவலை எழுதச் செய்தன. “பிணையில் மாடுகள் மிதித்து மிச்சம் வைத்த கேப்பைக் கருதுக் கொலுக்குகளை அவர்கள் மாறிமாறி அடித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு அடியும் களத்தில் விழவில்லை” என்றார் பூமணி,அதைப்பற்றி எழுதுகையில். அந்த அடிகளே ‘பிறகு’ நாவலை உருவாக்கின.

அறுப்பு எழுதும் அனுபவத்தையும் பூமணி இவ்வாறுதான் கூறியிருந்தார். அந்த முதல் தாண்டுதலில் இருந்து அவர் பெற்ற உணர்வுகளைப் புரிந்துகொள்ள அவரது வாழ்க்கைப் புலத்திற்கும் செல்லவேண்டுமா என்ன? அறுதலியாகக் கண்ட அந்தக் கருது அறுக்கும் பெண் பூமணியின் அம்மாவை எங்கோ நினைவுறுத்தினாளா? அம்மாவின் ஒப்பாரியும் அழுகையும்தான் அந்த அகமன அலைகளைக் கிளப்பியதா? தாய்தந்தையற்றுத் தாத்தாவின் கண்காணிப்பில் வாழும் சுடலையின் வாழ்க்கை,தகப்பன் இல்லாதவராகத் தாயினால் வளர்க்கப்பட்ட அவருடைய இளமைப்பருவத்தை நினைவூட்டியதா என்ன? பட்டாளத்தானின் மகனும்கூட இல்லையா? எங்கோ அனுபவங்களும் உணர்ச்சிகளும் சேகரமாகியிருக்கும் ஒரு வெளியில் உடனடித் தூண்டுதலின் விரல் சென்று உசுப்பி உலுப்ப வேண்டியிருக்கிறதா?

ஆச்சரியமென்னவென்றால் பூமணி அவரது கதைகளையும் நாவல்களையும் எழுதிய விதம் பற்றிக் கூறும் போதெல்லாம் உணர்ச்சிக் கொந்தளிப்புடன்தான் கூறியிருக்கிறார். பன்னரிவாளால் கரகரவென்று கழுத்து அறுபடும் அனுபவம் அது. செத்து மீளும் தருணம். தடியால் குலைகுலையாக அடிபட்டு நொறுங்கும் அனுபவம். ஆனால் கதைகளில் அந்த உணர்ச்சிக் கொந்தளிப்பின் தடயங்களை, வாழ்க்கையை நோக்கி வைக்கப்பட்ட ஒரு காமிரா அனைத்தையும் பதிவு செய்வது போலத்தான் பூமணி எழுதியிருக்கிறார். உணர்வெழுச்சிகளுக்கும் வெளிப்பாட்டுக்கும் நடுவே பூமணிக்குத் துல்லியமான இயல்புவாத அழகியல் நோக்கு முக்கியமான கட்டுப்பாட்டு விசையாக இருந்து வந்திருக்கிறது. அது அவரது கலை தன்னடக்கத்தின் எல்லையை மீறாமலிருக்கத் துணைபுரிந்திருக்கிறது.

பூமணியிடம் அவரது திரைப்பட அனுபவத்தைப் பற்றிக் கேட்டேன். அதற்கு உணர்ச்சி பூர்வமான தூண்டுதலையே அவர் காரணமாகச் சொன்னார். கரிசல் நிலத்தில் தீப்பெட்டி ஆலைகளின் வருகை பற்றி ஆழமான விமரிசனம் அவருக்குள் இருந்தது. அதைப்பற்றி முதலில் கேட்டேன். அது வெறும் ஒரு கடந்தகால ஏக்கம் மட்டும்தானா? வேளாண்மை கை கொடுக்காத இந்தக் கரிசல் நிலத்தில் கடுமையான பட்டினியை இல்லாமலாக்கியவை தீப்பெட்டி ஆலைகள்தானே? இன்று இங்கே தெரியும் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் அவை காரணம் அல்லவா?

பூமணி உடனடியாக பதில் கூறவில்லை. இருக்கலாம் என்று பொதுவாகக் கூறினார். ஓய்வு பெற்றபிறகு ஊருக்குத் திரும்பிய அவர் கண்டது பெரிய ஏமாற்றத்தைத்தான். நிலம் கைவிடப்பட்டுக் கிடந்தது. சாலையோர நிலங்கள் முழுக்க வீடுமனைகளாகப் பாத்தி கட்டப்பட்டு வெயில் காய்ந்து கிடந்தன. பிற நிலங்கள் உடைமுள் மண்டிக் கிடந்தன. விவசாயத்திற்கு ஆள் கிடைக்கவில்லை.கிடைத்தாலும் கூடக் கூலி கொடுத்து விவசாயம் செய்து கட்டுப்படியாகவில்லை. கம்பு கேழ்வரகுக்கு எந்தவிதமான சந்தை மதிப்பும் இல்லை. பருத்தியில் விவசாயம் பெரும்பாலும் நஷ்டம். விவசாயிகள் அதிகமும் மக்காச்சோளம் பயிரிட்டார்கள். அதுகூட மனிதர் உண்ணும் வெள்ளை மக்காச் சோளம் அல்ல, கோழிகளின் உணவாகிய சிவப்பு மக்காச்சோளம்.  “ஆனால் கூலி கூடுவது நல்ல விஷயம் தானே? உங்கள் கதைகளில் நாளெல்லாம் வேலை செய்துவிட்டுக் கூலிக்கு நடையாக நடக்கிறார்கள். கிடைக்கும் கூலி கூடப் புழுத்துப்போன கம்பும் கேழ்வரகுமாக இருக்கிறது. அந்த நிலை மாறியதில் என்ன பிழை?” என்றேன்.

’உண்மைதான்’ என்றார் பூமணி. ஆனால் மெல்ல மெல்ல விவசாயம் கைவிடப்படுவது நல்ல விஷயம் அல்ல. விவசாயத்தை ஒரு தலைமுறை கைவிட்டது என்றால் பிறகு திரும்பிச் செல்ல முடியாது. அதற்குரிய மனநிலையும் உடல்நிலையும் அமையாது. செட்டாக சலிக்காமல் செய்ய வேண்டியது விவசாயம். அதற்குரிய ருசி ஒருவருக்கு இயல்பிலேயே தேவை. அந்த மனநிலை இல்லாமல் ஆவது பெரிய இழப்பு என்றார். குழந்தைகளுக்கு இன்று உழைப்புக்கான வாய்ப்பும் கூலியும் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் இயற்கையில் இருந்து அன்னியப்பட்டுவிட்டார்கள். ஆடுமேய்த்த காலத்தில் பசி இருந்தாலும் இயற்கையில் இருந்தார்கள். ஓயாது விளையாடிக் கொண்டிருந்தார்கள். ‘ரீதி’ போன்ற கதைகள் காட்டுவது குழந்தையின் பசியைப்பற்றி மட்டுமல்ல, கொண்டாட்டத்தையும் கூடத்தான். அந்தக் கொண்டாட்டம் இன்றில்லை. நிழலில் இருந்து வெறுத்த குழந்தைகள். வெயிலில் பட்டால் மயக்கம் அடையும் குழந்தைகள். ‘எங்கியோ ஆர்டிக் பகுதியில இருக்கிற தாவரங்களை மாதிரி குழந்தைகளை மாத்திட்டுது தீப்பெட்டி கம்பெனி’ என்றார் பூமணி.

மேலும் ஒன்று. குழந்தைகளுக்காகப் பெற்றோர் உழைப்பதில் அர்த்தம் உள்ளது. பெற்றோரை உண்டு பிள்ளைகள் வளர்வது இயற்கையின் விதி. ஆனால் தீப்பெட்டி ஆலைகளில் நிகழ்வது நேர்மாறாக. அங்கே பிள்ளைகளைப் பெற்றோர் உண்கிறார்கள். குழந்தையின் உழைப்பு சுரண்டப்படுகிறது. அவர்கள் வெறும் இயந்திரங்களாக ஆக்கப்படுகின்றார்கள். சூரியன் உதிப்பதற்கு முன்னரே தீப்பெட்டிக் கம்பெனிகளின் வண்டிகள் கிராமம் கிராமமாகச் சென்று குழந்தைகளை அள்ளி வருகின்றன. ஆலைகளின் உள்ளறைகளில் நிரப்புகின்றன. இருட்டியபின் களைத்துத் தூங்கும் குழந்தைகளைக் கொண்டு சென்று திரும்பி ஊர்களில் விடுகின்றன. ஒருமுறை அந்த யதார்த்தத்தை உணர்ந்தபோது ஆழமான மன எழுச்சிக்கு ஆளானார் பூமணி. அதை ஒரு படமாக எடுத்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் சின்னத்திரைக்காக சில நிகழ்ச்சிகளைப் பூமணி இயக்கியிருந்தார். அந்த அனுபவம் கை கொடுத்தது.

எப்போதுமே இந்தியத் திரையுலகின் முக்கியமான கலைப்படங்கள் மீது பூமணிக்குக் காதல் இருந்தது. சத்யஜித்ரே, மிருணாள் சென், எம்.டி வாசுதேவன் நாயர், கிரீஷ்கர்னாடு, சியாம் பெனகல் என அவருக்குப் பிடித்தமான இயக்குநர்கள் பலர். எம்.டியின் நிர்மால்யம், ரேயின் பதேர் பாஞ்சாலி போன்றவை அவரைப் பெரிதும் கவர்ந்த படங்கள். அப்படி ஒரு படத்தைத் தமிழில் எடுத்தாலென்ன என்ற எண்ணம். மழைவராமலா போகும் என்ற எண்ணத்தில் விதைகளை சேமித்து வைக்கும் கரிசல்காட்டு விவசாயி போல அந்த மனஎழுச்சியைப் படத்துக்கான முன்வரைவாகக் குறித்துவைத்தார்.

ஆனால் ஆச்சரியமாகப் பூமணி அவரது முதல் குறிப்புகளைக் கதையாகவோ காட்சியாகவோ குறித்து வைக்கவில்லை. ஒரு கவிதையாகத்தான் எழுதி வைத்தார்.

திக்கெட்டும் முளைத்த
தீப்பெட்டி ஆலைகள்
கக்கும் நெடிமூச்சில்
சிக்கி தினம் கருகும்
கருவேலம் பூக்கள்
சருகாகும் கதையிது

களிப்புத் தெம்மாங்கில்
கரிசல் நிலமெங்கும்
உழைப்புத்தடம் பதித்து
பிழைக்கும் பெண்குயில்கள்
ஆலைக்கூடு தேடி
அலையும் சோகமிது

என்று ஆரம்பிக்கும் அந்தக் கவிதை இப்படி முடிகிறது

அரங்கேறி முடித்து
அடுத்தநாள் விடியும்போது
பொழுதேறும் வானத்தில்
விழுதுகளை வெறித்தபடி
கரையேறக் காத்திருக்கும்
கருவேல மொட்டுக்கள்

பூமணியின் மரபுக்கவிதைப் பயிற்சி தெரியும் வரிகள் இவை.

அதன்பிறகு நிகழ்ச்சிகளாகத் தொகுத்து மொத்தக்கதையையும் எழுதி முடித்தார். ‘நீருக்குள் மீன்களாக மங்கலாக நீந்தித்திரியும் மனிதர்களை வெளியே கொண்டு வந்து பெயர் வைத்து நடமாடவிட்டேன்’ என்கிறார் பூமணி. அதைப் படமாக எடுப்பதற்கான வாய்ப்புக்களைத் தேட ஆரம்பித்தார். அப்போதுதான் தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நினைவு வந்தது. அதன் நிதியுதவியுடன் பிற மொழிகளில் எடுக்கப்பட்ட படங்களைக்கண்டு அவர் மனம் கிளர்ந்ததுண்டு. திரைப்பட வளர்ச்சிக் கழகத்தை அணுகி நிதி உதவி கோரினார். அதன் அதிகாரி பரமேஸ்வரன் பூமணியைப் புரிந்து கொண்டார். வாசல்கள் திறந்தன. அடுத்தடுத்த சந்திப்புகளில் அவரிடம் விவாதித்துக் கதையைச் செப்பனிட்டுக் கொண்டார்கள்.

பூமணி கரிசல் நிலத்திற்கு வந்து தங்கி கதையை விரிவான திரைக்கதையாக மாற்றினார். அவர் திரைத்துறைக்குப் புதியவர் என்பதனால் அனுபவம் வாய்ந்த நடிகர்களை அணுகலாம் என்ற எண்ணம் வந்தது. ஆகவே நாசரையும் ராதிகாவையும் அழைத்தார். அவர்களும் படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டார்கள். இசைக்கு இளையராஜாவும் படத்தொகுப்புக்கு லெனினும் ஒளிப்பதிவுக்கு தங்கர்பச்சானும் வந்தார்கள். பூமணிக்கு இன்று திரைத்துறை பற்றிய கசப்பான நினைவுகள் உள்ளன. நல்ல திரைப்படங்கள் மீது பொதுவாக ஆர்வமில்லை என்ற எண்ணம் உள்ளது. ஆனால் ’கருவேலம் பூக்கள்’ அந்த எண்ணத்தைக் காட்டவில்லை என்றே நினைக்கிறேன். சரியான நோக்கம் இருந்தால் இயல்பாகவே ஆட்களைத் திரட்ட முடிகிறது. இளையராஜாவும் நாசரும் ராதிகாவும் நல்லபடம் மீதான ஆர்வம் காரணமாகவே அப்படத்தில் பணியாற்றியிருக்கிறார்கள். ‘நம்ம உண்மையான ஊதியத்தைச் சொன்னால் பூமணி பின்வாசல் வழியா ஓடிருவார்’ என்று ராதிகா கூறியதாகப் பூமணி கூறினார்.

வெறும் இருபத்து மூன்றே நாட்களில் கருவேலம் பூக்கள் படத்தைக் கரிசலிலேயே எடுத்து முடித்தார் பூமணி. மிஞ்சிய பணத்தைக் கொண்டு சென்று தேசிய திரைப்படக் கழகத்திடம் திருப்பி ஒப்படைத்தார். அப்படிச் செய்த முதல் படத்தயாரிப்பாளர், தான்தான் என்றார் பூமணி. படம் வெளிவந்து விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றது. சுஜாதா அதைப்பற்றி ஒரு கட்டுரையில் தமிழிலேயே ‘யோக்கியமான’ படம் என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.

தன்னுடைய கலையைப்பற்றி எப்போதும் ஒரு தெளிவு பூமணியிடம் உண்டு. “எதையும் அழகாகச் சொல்லுவதில் அவனுக்கு ஈடுபாடு அதிகம். யோசித்துப்பார்த்தால் எல்லாமே அழகாகத்தான் தெரிந்தது. அழகில்லாத பொருள் என்று எதையும் ஒதுக்க முடியவில்லை. அவனுக்கு அழகு என்பது கண்களைத் தாண்டியதாக இருந்தது. அதனால் அசிங்கம் சுத்தம் என்ற வித்தியாசமில்லாமல் சகலத்தையும் அந்தந்த சூழ்நிலையில் உணர்வுமட்டத்திற்கு ஏற்ப இயல்புக்கு உகந்தபடி முடிந்தவரை அழகாகச் சொல்ல முயற்சித்தான். அதுக்காகத் தொலைவில் இருந்து மூளைமொழியை ஓசி வாங்கி வரவில்லை. சாதாரண வாய்களில் இருந்து வார்த்தைகளை எடுத்துக்கொண்டான். இதனால் மனுசர்களுக்கும் பேனாவுக்கும் நெருங்கிய சொந்தம் இருந்தது” என்று தன்னுடைய கலைநோக்கைப் பூமணி குறிப்பிடுகிறார்.

பூமணியின் வாழ்நாள் சாதனை என்பது வரவிருக்கும் அவரது நாவலான ‘அஞ்ஞாடி’ . அம்மாடி என்ற சொல்லின் பிராந்திய மரூஉ அது. இது நூறாண்டுக்காலத்தில் கரிசல் நிலத்தில் நிகழ்ந்த சமூக மாற்றங்களை சாதிய உறவுகளைக் கூறும் நாவல் . அதேசமயம் அவருக்கு உரித்தான முறையில் பூமணி அதை மனித உறவுகளின் கதையாகவே கூறியிருக்கிறார். ‘’அவனுக்கிருக்கும் கொஞ்சநஞ்ச அறிவும் ரெட்டக்கலப்பையில் பின்கலப்பையாக இருந்து துணை செய்யப்போய்ப் பருவத்தில் உழுது விதைத்து வெள்ளாமை விளைச்சலைப் பார்க்க முடிந்தது. நல்ல மகசூலா இல்லையா என்பது வேறு சமாச்சாரம். பயிர் செய்யவில்லை என்றால் அவனது நிலம் தரிசாகக் கிடக்குமே” என்றார் பூமணி.

முந்தைய கட்டுரைஅறம்-எஸ்.கெ.பி.கருணா
அடுத்த கட்டுரையானைடாக்டர்-குழந்தைகளின் படங்கள்