வறண்ட கரிசலில் வாழ்க்கையே பெரும் போராட்டமாகிப் போன சூழலில் பிறந்த பூமணி கல்வி கற்றது ஓர் ஆச்சரியம். இலக்கியக் கல்வி கற்றது இன்னும் பெரிய ஆச்சரியம். இரண்டுமே தற்செயல்கள் அல்ல என்றார் பூமணி. அவர் கல்வி கற்கச் சென்றது அம்மாவின் தளராத பிடிவாதம் காரணமாகத்தான். அவர் கல்விக்குள் செல்வது அம்மாவின் கனவாக இருந்தது. அவரைப் பட்டப்படிப்பு வரை கொண்டு வருவதற்காக அம்மா காடுகளில் ரத்தமும் வியர்வையும் சிந்தியிருக்கிறார். இலக்கிய அறிவு பெற்றதற்கும் அம்மாவே காரணம். பூமணியின் தொட்டில் பருவம் பத்துப் பன்னிரண்டு வயது வரைக்கும் கூட நீடித்த ஒன்று. அம்மாவிடம் கதை கேட்டபடி தொட்டிலில் கண்ணயர்ந்த நாட்களிலேயே பூமணி கதை சொல்லியாக உருவாகிவிட்டிருந்தார். நிலா முற்றங்களில் அம்மா அவரது தலையை இடைவிடாது வருடியபடி பாட்டாகவும் உரையாடலாகவும் வர்ணனைகளாகவும் சொன்ன நூற்றுக்கணக்கான மாய மந்திரக் கதைகள், அனுபவங்கள் அவரைப் பண்படுத்தின. அவரது கற்பனையை வளர்த்தன.
பள்ளிநாட்களிலேயே மேலும் கதை என அவரது பிரக்ஞை தேடியலைய ஆரம்பித்தது பள்ளிக்கூட ஆசிரியத் தம்பதிகள் அவரது ஊரில் குடியிருந்தார்கள். அவர்கள் வீட்டில் கல்கி வாங்குவார்கள். கல்கியின் கல்கி. அதில் வரும் படக்கதைகளில்தான் முதலில் ஈடுபாடு ஏற்பட்டது. பிறகு அந்த ஈடுபாடு வளர்ந்து குழந்தைக் கதைகளை நோக்கிச் சென்றது. பின்னர் கல்கியின் கதைகள். நா.பார்த்தசாரதியின் கதைகள். அகிலனின் கதைகள். அந்த வயதில் கதைகள் அவரை ஓர் அற்புத உலகில் வைத்திருந்தன. கதைகளின் உலகிலேயே அவர் சாதாரணமாக வாழ்ந்தார் என்று கூற வேண்டும். கரிசல் நிலம் ஒரு பெரிய கனவுப்பரப்பாக மாறியது. சொற்களாலான மரங்களும் காடும் வயலும் மலைகளும் வானமும் உருவாகி அவரைச் சூழ்ந்தன. பூமணியின் இளமையைக் கட்டமைத்ததில் அந்த சிற்றூரில் கிடைத்த கல்கி வார இதழ் பெரும்பங்கு வகித்திருக்கிறது.
அம்மா ஒரு தேர்ந்த கதை சொல்லி என்றார் பூமணி. கதையை எப்போதுமே மிகவும் விரிவாக ஆரம்பித்துத் தொடர்ச்சியை விடாமல் சொல்லக்கூடியவர். நிகழ்ச்சிகளை சிறிய சிறிய தகவல்களைக் கோர்த்துக் கண்ணெதிரே காட்ட முடியும். அதுவே பூமணியின் அழகியலாக விரிந்தது. இன்று வரையில் நீடிக்கிறது. எது சாராம்சமானதோ அதை மட்டுமே சொல்ல வேண்டும். எது சுவாரசியமானதோ அதை மட்டுமே சொல்லவேண்டும் என்று பூமணி அம்மாவிடமிருந்து கற்றார். கரிசலில் எத்தனையோ கதை சொல்லிகள் உண்டு. கரிசல் வெளியில் ஆடுகளை மேயவிட்டுக் கருவேல மரத்தடியில் குந்தி அமர்ந்து கதை சொல்லுவார்கள். சாவடியில் கல்திருணையில் படுத்துக்கொண்டு கதை சொல்வார்கள். தூக்கம் வராத இருளில் விழித்துக்கிடந்து கதை சொல்வார்கள்.
அப்படிப்பட்ட கதைகள் வழியாகவே அவர் வளர்ந்தார். அந்தக் கதைகள் அவருக்கு ஒன்றைச் சொல்லின. எளிய சாமானிய மக்களுக்கும் கூடக் கதைகள் உள்ளன. ஒவ்வொரு வாழ்க்கையிலும் கதை உள்ளது. எல்லாமே கதைதான். வாழ்க்கை என்பது எடுத்துச் சொல்லப்பட்டால் கதைதான். அழகிரிப்பகடை ஊருக்கு வந்த காட்சியை சக்கணன் சொல்கிறான். அது கதைதானே? கதைநாயகன் ஒரு எளிய செருப்புத் தைக்கும்தொழிலாளி என்பதனால் அதில் கதை இல்லாமல் போய்விடுமா என்ன?
கதை சொல்லிகளைப் பூமணி நினைவு கூர்கிறார் “சகலமும் தெரிந்தாற் போல சவடால் அடிக்கும் ஆட்டுக்காரக் கோனார். எதுப்புக் கதை போடும் வைத்தியப் பண்டுவர். ஊர்ப்பட்ட வக்கணை பேசும் தொங்குமீசை நாயக்கர். எகடாசி எக்கண்டத்தையே தொழிலாகக் கொண்ட வழுக்கை மண்டை நாயக்கர். இன்றும் யார் யாரோ கதைசொல்லிகள் பூமணியின் நினைவில் எழுந்து வந்து கொண்டே இருக்கிறார்கள். ‘கீழ்ப்புற புளியமர நிழலில் சுப்பையனாசாரி சில்லானாக ஓடித்திரிந்து லாடம் கட்டுவார். அவருக்கு வாயும் கையும் ஓயாது. ஊர்க்கதை அத்தனையும் அவருக்கு அற்றுபடி. கெட்டவார்த்தை பூசிக் கிளுகிளுப்பாகச் சொல்லுவார். சுத்தியலடிதான் கதைக்குத் தாளம் குபீர் குபீரெனக் கிளம்பும் சிரிப்பில் மரத்துக்குள் தொணதொணக்கும் குருவிகள் கூட அடங்கிவிடும். நாலு மரம் தள்ளி சவரவேலை நடக்கும். அங்கே இன்னொரு மாதிரியான கதை ஓடும்.”
கல்கியும் நா.பார்த்தசாரதியும் எழுதும் கதைகளில் இந்த மனிதர்களின் கதைகள் இல்லை. அவை வேறு உலகத்தைச் சார்ந்தவையாக இருந்தன. கதாநாயகர்களும் கதாநாயகிகளும் கொண்ட உலகம். பூமணியின் அகம் எழுத்தை ஒரு கேளிக்கையாகவே நெடுநாள் நினைத்திருந்தது. அதற்கும் வாழ்வுக்கும் சம்பந்தம் உண்டு என்று தோன்றவேயில்லை. அது உண்மை என்ற நினைப்பே இல்லை. கல்லூரிக்குச் சென்றபோது மு.வரதராசனார் அறிமுகமானார். சி.என். அண்ணாத்துரையை ஒரு உடற்கல்வி ஆசிரியர் அறிமுகம் செய்துவைத்தார். மரபுக் கவிதையில் ஈடுபாடு வந்தது. நீண்ட கவிதைகள் எழுத ஆரம்பித்தார். நூலகர்கள் பரிச்சயமானார்கள். பூமணி எழுதிய நீளமான மரபுக்கவிதை ஒன்று தீபம் இதழில் வெளிவந்தது. அத்துடன் கவிஞர் என்று அடைமொழி சேர்ந்து கொண்டது.
பூமணியின் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாவது வழிகாட்டி எனக் கல்லூரியில் அவருக்கு ஆசிரியராக வந்த சி.கனகசபாபதியைச் சொல்லலாம். “அவர் ரொம்பப் பிரமாதமான பேச்சாளர். அப்ப எழுத்து இதழ் வந்திட்டிருந்தது. சி. கனகசபாபதி அதிலே நெறைய எழுதியிருந்தார். அவருக்கு சி.சு. செல்லப்பா, க.நா.சு. எல்லார் மேலயும் ஈடுபாடு இருந்தது. நா.வானமாமலை, கைலாசபதி மேலேயும் மதிப்பிருந்தது. எல்லாக் கருத்துக்களையும் வாங்கி சிந்திக்கக் கூடியவர். அவர்கிட்ட பேசிப்பேசித்தான் இலக்கியத்தோட அடிநாதம் என்னன்னு எனக்குப் புரிஞ்சது. யதார்த்தம்னு ஒரு வார்த்தையை அவர்தான் சொன்னார். இலக்கியத்தையும் யதார்த்தத்தையும் பிரிக்க முடியாதுன்னு எங்கிட்ட அவர்தான் நிறுவினார். அதோட எனக்குள்ள அட்டைக்கத்தி வீசிட்டிருந்த கல்கி அகிலன் நா.பா. எல்லாரும் காணாமப் போயிட்டாங்க. இலக்கியம்னா என்னைச் சுத்தி உள்ள வாழ்க்கையோட மொழிப்பதிவுதான்னு புரிஞ்சுக்கிட்டேன்.’’ என்றார் பூமணி
சிற்றிதழ்களை அவர் வாசிக்க ஆரம்பித்தார் ‘அப்பக் கூடத் தமிழ்நாட்டில எவ்வளவோ பேரு யதார்த்தம்னா என்னன்னு சண்டை போட்டுக்கிட்டிருந்தாங்க. அப்ப அகிலனுக்கும் க.நா.சுவுக்கும் எது யதார்த்தம்னு பெரிய சண்டை. சி.கனகசபாபதி அதைப்பத்தி சொன்னார். எந்த விளக்கமும் இல்லாமலேயே எனக்கு யதார்த்தம்னா என்னன்னு புரிஞ்சது. எங்க அம்மா எனக்குச் சொன்ன வாழ்க்கை நிகழ்ச்சிகள்தான் யதார்த்தம். எங்க ஊர்ல நான் கேட்டு வளர்ந்த மனுஷங்களோட கதைகள்தான் யதார்த்தம்.” பூமணி சொன்னார். அந்த வகையான எழுத்துக்களை சி.கனகசபாபதி அறிமுகம் செய்தார். ரகுநாதனின் எழுத்துக்கள் பூமணியைக் கவரவில்லை. அவை வெட்டி வெட்டி அடுக்கி வைக்கப்பட்ட கருத்துக்களாக இருந்தன. பஞ்சாலைத் தொழில் சூழலைப்பற்றிப் ’பஞ்சும் பசியும்’ நாவலின் களம் கோயில்பட்டியாகவே இருந்தும்கூட அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. ஆனால் புதுமைப்பித்தன் வெகுவாகக் கவர்ந்தது. துன்பக்கேணி மனதைக் கொள்ளை கொண்டது. தி.ஜானகிராமனும் கு.அழகிரிசாமியும் வெகுவாக ஈர்த்தார்கள். அப்போதுதான் ஒரு நாள் சி.கனகசபாபதிக்கு கி.ராஜநாராயணனின் கடிதம் வந்திருந்தது. கி.ரா. பற்றி சி.க. மிகமிக உற்சாகமாகப் பேசினார். பேசப் பேச கி.ராவின் ஆளுமை பூமணியின் உள்ளத்தில் பதிந்தது.
பூமணியின் இலக்கிய வாழ்க்கையில் கி.ரா மூன்றாவது பெரிய ஆளுமை. தன்னுடைய கட்டுரை ஒன்றில் கி.ரா.வை ’முன்னத்தி ஏர்’ என்று பூமணி குறிப்பிடுகிறார். கி.ராஜநாராயணனின் கதைகள் அளித்த கொந்தளிப்பையும் எக்களிப்பையும் பலமுறை பலவகைகளில் பூமணி பதிவு செய்திருக்கிறார். பூமணி அறிந்த வாழ்க்கை. பூமணி வாழ்ந்த நிலம். இப்படிக்கூட இந்த வாழ்க்கையை எழுத முடியுமா என்ற பெரும் வியப்பு. இதுதான் இலக்கியம் என்ற பரவசம். கி.ராஜநாராயணனின் கதாபாத்திரங்கள் பலவற்றைப் பூமணி உண்மை மனிதர்களுக்கும் மேலாகவே உண்மையானவர்களாக உணர்ந்திருக்கிறார்.
’ராஜநாராயணனை நினைக்கையில் சொந்தக் கதையில் இருந்து சொன்ன கதை வளரக் கிண்டிக் கிளறி வெளியேறுகிறது. அப்படியானால் என் வாழ்க்கைப் போக்கில் அவர் ரொம்பவே பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறார் என்பது வாஸ்தவம்தான். பலரைப்போல சண்டித்தனம் பண்ணாமல் எனக்கு சகஜமாகத் தெரியவந்த மனுஷன் அவர். அந்த சகஜம் இன்றைக்கும் என்னைத் திகைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் திகைப்பு ஒன்றே அவர் இன்னும் எனக்குள் இருந்து குடிபெயரவில்லை என்பதற்கான சான்று. அவரை அறிவுக்கோல் கொண்டு அறிந்த சந்தர்ப்பங்களைவிட உணர்ந்த அனுபவங்களே அதிகம்’ என்று பூமணி ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் (முன்னத்தி ஏர்) கி.ராஜநாராயணனின் ‘மனிதம்’ போல, ‘கரு’ போல சிந்தனைகளைப் பிடித்து வசக்கி வசப்படுத்தும் விஷயங்கள் தனக்கும் கைகூட வேண்டும் என்று பூமணி விரும்பினார்.
ஒருநாள் கி.ராஜநாராயணனுக்குத் துணிந்து ஒரு கடிதத்தைப் போட்டார். அது விதைப்புக் காலம். ‘மேகங்கள் மறுத்து ஓடி மழையையும் வெயிலையும் விதைக்கும் காலம்’ என்று கூறும் பூமணி அந்தப் பருவநிலையையே கி.ராஜநாராயணன் அளித்த அனுபவத்திற்கும் படிமமாக ஆக்குகிறார். ’சோளத்தட்டையைக் கடித்துக் கொண்டு கிடந்த மாட்டுக்கு நாத்துக்கூளம் கிடைத்தது மாதிரி எனக்கு உங்கள் கதைகள் கிடைத்தன’ என்று கி.ராஜநாராயணனுக்கு ஒரு கடிதம் எழுதினார். கி.ராஜநாராயணன் உடனே பதில் எழுதியிருந்தார், அந்த வரிகளைப் பாராட்டியிருந்தார் பெரிதாகப் பக்கம் பக்கமாக எழுதித்தான் எழுத்தாளன் ஆகவேண்டும் என்பதில்லை. விஷயங்களை சுகமாக வெளியிடத் தெரிந்தாலே அவன் எழுத்தாளன்தான் என்று உற்சாகப்படுத்தியிருந்தார். அன்றுமுதல் தன்னையும் ஓர் எழுத்தாளனாக உணர ஆரம்பித்தேன் என்றார் பூமணி.
ஆனால் கி.ராஜநாராயணன் அவருக்கு ஆழமான அவநம்பிக்கையையும் அளித்தார். தொடுவது தெரியாமல் எத்தனை பெரிய விஷயங்களை இந்த மனிதர் எடுத்து வைத்துவிடுகிறார் என்ற வியப்பிலிருந்து எழுதினால் அவரைப் போல எழுதவேண்டும் என்ற வீராப்பும் முடியுமா என்ற சோர்வும் உருவாகி வந்தன. அந்தச் சோர்வுடன் நெடுநாள் போராடினார் பூமணி. மனித உறவுகளை கி.ரா. பின்னியிருக்கும் விதம், சிக்கலான சாதியச் சிடுக்குகளைக்கூட நளினமாகக் கையாண்டிருக்கும் நேர்த்தி, இயற்கையைக் காட்சிப்படுத்துவதில் உள்ள கவித்துவம். ஆனாலும் எழுதியாக வேண்டும். கவிதைகள் எழுதி எழுதித் தள்ளினாலும் தீராத ஏதோ ஒன்று உள்ளே இருந்து கொண்டு கதைகளை எழுதச் சொன்னது.
அந்நாட்களில்தான் பூமணி அவரது முதல் கதையை எழுதினார். சில சில்லறை பரிட்சார்த்த முயற்சிகளுக்குப் பிறகு அவர் எழுதிய ‘முதல்’ சிறுகதை அது. ஒருநாள் அறுவடை நடந்து கொண்டிருந்த வரப்பு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அறுவடை செய்து கொண்டிருந்த பெண்களைப் பார்த்துக் கொண்டு சென்றபோது கவனித்தார்-அதில் ஒரு பெண்ணின் கழுத்தில் மட்டும் தாலியில்லை. அவள் அறுத்தவள். அக்கணத்தில் என்னென்னவோ நிகழ்ந்தது என்கிறார் பூமணி. அதைப்பற்றிய கட்டுரை ஒன்று- இடியும் மின்னலுமாக அவளுக்குள் எத்தனையோ நினைவுகள் இறங்கின. உள்ளே அதிர அதிர சாவதற்குத் தயாராகினாள். இப்போது வரிசையாகப் பெண்கள் தாலியறுத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் வரிசையாக நாக்கு தொங்கும் பிணங்களை சுமந்து சென்றார்கள். எல்லாம் அவன் மனசை அறுக்க அவன் அந்த அறுதலியின் புருஷன் ஆனான்’ என்று குறிப்பிடுகிறார்.
அபூர்வமான ஒரு தருணம் அது. ‘புதுமைப்பித்தன், மௌனி, ராஜநாராயணன், மாதவன், எலியட் எல்லாரும் அவனைக் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்’ என்று கூறும் பூமணி அதை ஒரு ‘சுகமான சாவு’ என்று நிர்ணயிக்கிறார். அந்தக் கதையை அவர் தாமரைக்கு அனுப்பினார். அப்போது தி.க. சிவசங்கரன் தாமரை இதழின் ஆசிரியராக இருந்தார். தமிழில் பிற்காலத்தில் அறியப்பட்ட பல முற்போக்கு எழுத்தாளர்கள் அதில் எழுதிக் கொண்டிருந்தார்கள். ‘அறுப்பு’ தாமரையில் வெளிவந்தது. கி.ராஜநாராயணன் அந்தக்கதையைப் பராட்டி எழுதினார். அதன்பின் கி.ரா. ஆசிரியராக இருந்து வெளிவந்த கரிசல் சிறப்பிதழில் அவரே கேட்டு வாங்கி ஒரு கதையைப் பிரசுரித்தார். அந்தக் கதை பிரேம்சந்த் கதை போல இருக்கிறது என்று கி.ராஜநாராயணன் எழுதிய வரியைப் பூமணி எப்போதும் நினைவில் வைத்திருந்தார் – அது பாராட்டுதான் என்று அறிந்திருந்தும் கூட.
ஆனால் பூமணி கி.ராஜநாராயணனைச் சந்திக்கவில்லை. அரைமணிநேரப் பயணத் தொலைவில்தான் அவர் இருந்தார். ஒரு தயக்கம். புகைப்படத்தில் பார்த்திருந்த பெரிய கண்களும் கூரிய நாசியும் சற்றே கோணலான பிரியம் நிறைந்த சிரிப்பும் கொண்ட அந்த முகத்தை இழக்க விரும்பவில்லை. ஆனால் பார்க்க வேண்டும் என்ற ஆவலும் இருந்தது. எவர் முந்துகிறார்கள் பார்ப்போம் என்று கி.ராஜநாராயணன் கடிதம் எழுதினார். பூமணி தயங்கிக் கொண்டிருக்க ஒருநாள் அவரே பூமணியின் அலுவலகத்திற்கு வந்து நின்றார்.
அந்தச் சந்திப்பைப் பூமணி என்றும் நினைவில் வைத்திருந்தார். வாழ்நாள் முழுக்க நீடிக்கக்கூடிய ஓர் உறவு அது. அதன் பின்னர் பூமணியின் வீட்டுக்கு அடிக்கடி வர ஆரம்பித்தார் கி.ரா. சட்டையைக் கழற்றிப் போட்டுவிட்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்து சரிந்து பார்த்து சிரித்தபடி பேசும் கி.ராவின் முகம் என்றும் நினைவில் உள்ளது என்றார் பூமணி. சாப்பாட்டின் நுட்பமான ருசிபேதங்களை அவர்தான் அறிமுகம் செய்தார். சங்கீதத்தை ருசிப்படுத்தினார். பூமணியின் பெண்களுக்கு அவர்தான் பெயர் சூட்டினார். கீரைக்கு உப்பு குறைவாகப் போடவேண்டுமென்பதை, தயிர்சாதத்துக்கும் எலுமிச்சை ஊறுகாய்க்குமுள்ள பொருத்தத்தைப் பேசக்கூடியவராகப் பூமணியின் மனதில் பதிந்தார்.
பூமணியைப்பற்றி ராஜநாராயணனிடம் பேசினேன். ‘ரொம்ப சூட்சுமமான ஆளு. எங்கியோ ஒரு கண்ணு எல்லாத்தையும் எப்பவும் கவனிச்சிட்டிருக்கணும் எழுத்தாளனுக்கு. அது அவர்ட்ட உண்டு. எழுதவேண்டியதை எழுதத் தெரிஞ்சிருக்கு’ என்று சொன்னார். பூமணி ‘கி.ராஜநாராயணனுக்கு உடல் உபாதைகள் ஒரு பொருட்டே அல்ல. அது பாட்டுக்கு ஒருபுறம் இருந்தால் அவர் பாட்டுக்குக் காரியங்களைச் செய்து கொண்டிருப்பார். உபாதைகளைத் துச்சமாக்கி மனச்சோர்வற்றிருக்கும் அவரது இயக்கம் மலைப்பைத் தருகிறது” என்று எழுதுகிறார்.
சமீபத்தில் சந்தித்தபோது பூமணி கி.ராவிடமிருந்து இதை மட்டும் கற்றுக்கொள்ளவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது. உடல்நலக்குறைவு அவரது உற்சாகத்தைப் பெரிதும் வடியச் செய்திருப்பதைக் காணமுடிந்தது. எழுத்தில் வெளிப்படும் பூமணி அவநம்பிக்கைவாதியே அல்ல. மனிதர்களின் உள்ளார்ந்த ஆற்றல் மீது அபாரமான நம்பிக்கை உடையவர். கானல் பறக்கும் கரிசலில் அன்பைப் பரிமாறிக்கொண்டு உறவை மட்டுமே நம்பி வாழும் மனிதர்களைத்தான் அவர் ‘பிறகு’, ‘வெக்கை’ இரு நாவல்களிலும் படைத்திருக்கிறார். ஆனால் நோய் அவரது பேச்சில் அவநம்பிக்கையை, விரக்தியைக் கொஞ்சம் கலந்துவிட்டிருப்பதைக் காணமுடிந்தது. அதையும் கி.ராவிடம் சொன்னேன். ‘நல்ல பையன்…உடம்பு சரியில்லேன்னா என்ன பண்ண?’ என்றார் அன்புடன்.
தன்னுடைய புனைவிலக்கியப் பயணத்தை ஆரம்பித்த பிறகுதான் பூமணிக்குக் கோயில்பட்டியின் இலக்கிய நண்பர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. கோயில்பட்டி தமிழ் இலக்கியத்தில் ஒரு அழகிய மையமாக அமைந்தது வியப்புக்குரியது. எப்படி சின்னஞ்சிறு இடைச்செவல் இரு பெரும் படைப்பாளிகளை உருவாக்கியதோ அதைப்போல. தேவதச்சன் கோயில்பட்டியின் ஒரு முக்கியமான மையமாக இருந்து வந்திருக்கிறார். எப்போதும் ஒரு சிறந்த உரையாடல்காரரை மையம் கொண்டே இலக்கியக் குழுமங்கள் அமைகின்றன. திருவனந்தபுரத்தில் நகுலன், நாகர்கோயிலில் சுந்தரராமசாமி, கோவையில் ஞானி, சென்னையில் ஞானக்கூத்தன், தஞ்சையில் தஞ்சை பிரகாஷ் என்று இலக்கியக் குழுவின் மையங்கள் வேறு உண்டு. இந்தச் சபைகளில் இருந்து நல்ல எழுத்தாளர்கள் உருவாகி வந்திருக்கிறார்கள்.
கோயில்பட்டிக் குழுமத்தில் இருந்தே அதிகமானபேர் வந்திருக்கிறார்கள் என்று படுகிறது. கௌரிஷங்கர், உதயஷங்கர், அப்பாஸ், சமயவேல், கோணங்கி, தமிழ்ச்செல்வன் என்று கோயில்பட்டியின் படைப்பாளிகள் பலர் உண்டு மதுரையைச் சேர்ந்தவர் என்றாலும் யுவன் சந்திரசேகர் ஞானஸ்நானம் பெற்றது தேவதச்சனிடம்தான். விருதுபட்டி அருகே மல்லாங்கிணறைச் சேர்ந்தவர் என்றாலும்கூட எஸ். ராமகிருஷ்ணனையும் தேவதச்சனின் கோயில்பட்டி மையத்தின் உறுப்பினர் என்று கூறமுடியும்.
குறுகியகாலமே பூமணி கோயில்பட்டியில் இருந்திருக்கிறார் என்றாலும் இந்த இலக்கிய நண்பர்களுடனான உறவு எப்போதும் நீடித்திருக்கிறது. தேவதச்சன் எப்போதும் அவருக்கு மறுமுனையாக நின்று உரையாடும் தரப்பாக இருந்துவந்திருக்கிறார். இலக்கிய ரசனையில் தேவதச்சனிடமிருந்து பூமணி வேறுபடும் இடங்கள் பல உண்டு. பூமணியின் மனம் யதார்த்ததில் வேரூன்றியது. அவருக்கு மீபொருண்மை சார்ந்த அக்கறைகள் ஏதும் இல்லை. நேர்மாறாக தேவதச்சன் மீபொருண்மைச் சிந்தனையில் ஆழ ஊறியவர்.
பூமணி ஒரு வாசகராக மலையாள நாவல்களை விரும்பி வாசித்தவர். செம்மீன் அவருக்கு உயர்வான படைப்பாகப் படவில்லை, ஆனால் பி.கேசவதேவ் மீது அவருக்குப் பெரும் பிரியம் உண்டு. நீலபத்மநாபனின் தலைமுறைகளை மலையாள நாவல்களின் அழகியல் கொண்ட ஆக்கம் என்றுதான் பூமணி அடையாளம் கண்டார். ஒரு வகையில் அந்த அழகியலைத் தானும் அடைய வேண்டுமென்றே அவர் விரும்பினார். ருஷ்ய நாவல்களின் அழகியல் பூமணியைப் பெரிதும் கவர்ந்தது. குறிப்பாக சொக்கலிங்கம் மொழியாக்கத்தில் வந்த தல்ஸ்தோயின் போரும் அமைதியும், எஸ்.ராமகிருஷ்ணன் மொழியாக்கத்தில் வெளிவந்த அலெக்ஸி தல்ஸ்தோயின் சக்ரவர்த்தி பீட்டர் முதலிய நாவல்கள். சிங்கிஸ் ஐத்மாத்தவ் பூமணிக்குப் பிரியமான நாவலாசிரியர். பூமணியின் ‘பிறகு’ நாவலில் சிங்கிஸ் ஐத்மாத்தவின் அன்னைவயல் போன்ற நாவல்களின் அழகியல் பாதிப்பினைக் காணமுடியும். இன்று தல்ஸ்தோயின் விரிவும் வீச்சும் கூடிய நாவல் ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற விருப்பமே அவரை ஆயிரத்தி ஐநூறு பக்கங்கள் கொண்ட ‘அஞ்ஞாடி’ என்ற நாவலை நோக்கிக் கொண்டு சென்றிருக்கிறது. பன்னிரண்டு ஆண்டுகளாகப் பூமணி அந்தப் பெரும் நாவலுக்கான உழைப்பில் இருந்தார் ‘தமிழில் எழுதப்பட்ட முதல்நாவல்’ என்று அதைக் கண்கள் மின்ன அவர் குறிப்பிட்டார்.