பூமணி- உறவுகள்

பூமணி அவரது அம்மாவிடம் எட்டுவயதுவரை பால்குடித்தவர். தமிழ் எழுத்தாளர்களில் இந்த தனித்தன்மை வேறு எவருக்காவது இருக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒரு நல்வாய்ப்புதான் அது . ‘அம்மா பாடும் தாலாட்டுகளை கேட்டுக்கொண்டிருப்பேன். அவற்றின் பொருள் முழுக்க புரிகிற வயது வந்தபிறகும்கூட அம்மா என்னை தொட்டிலில் போட்டு ஆட்டி தாலாட்டு பாடுவதுண்டு’ என்று பூமணி சொன்னார். நடந்து திரியும் வயதில் அவர் அம்மாவிடம் பால்குடித்தார். பூமணி மேலூர் பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்தில்கூட அம்மாவிடம் பால்குடிப்பார். அம்மாவை உறிஞ்சி உரித்தெடுப்பார். பள்ளிக்கூடம் விட்டுவந்ததும் அம்மாவின் மடியில் படுத்து அவள் உள்மூச்சை கேட்டுக்கொண்டே வாய்வலிக்க பால்குடித்தாகவேண்டும். முற்றம்பெருக்கினாலும் காடுகழனியில் வேலைசெய்துகொண்டிருந்தாலும் அந்த இடத்திலேயே முந்தானையை அவிழ்த்தாகவேண்டும். இல்லையேல் புத்தகப்பையை தூக்கி வீசிவிட்டு அழுகை ஆர்ப்பாட்டம். கோழிப்பீ என்று ஊரில் பெண்கள் கிண்டல்செய்வார்கள்.

வளர்ந்தபின் பால்குடித்தால் பையனுக்கு சோறு இறங்காது என்று ஊரிலே சொல்கிறார்கள். ஒருநாள் முலைக்கண்ணில் கரியபவளத்தை தடவி வைத்தாள். ஆசையாக பால்குடிக்க வந்த பூமணி அந்த கசப்பில் குமட்டி குமட்டி வாந்தி எடுத்ததைக் கண்டு அவள் கண்கள் கசிந்த்துவிட்டன. அதற்குப்பின் முடிவுசெய்து விட்டாள். ’குடிக்கட்டும் குடிக்கட்டும் இனிமே எந்தப்புள்ளைக்கு குடுக்கப்போறம்’ என்று சொல்லிவிட்டாள்.

பாச்சக்கயறுகளாம்- என் கண்ணே
பலநாயும் சங்கிலியாம்
வேட்டைக்கோ போறாங்க- என் கண்ணே
வீரப்புலி ஒம்மாங்க

என்ற அம்மாவின் குரலை எந்த வயதிலும் கண்மூடினால் கேட்கக்கூடியவராகவே பூமணி இருந்திருக்கிறார். ‘இவனுக்கு புள்ள பெறக்கிறவரை ஆட்டீட்டே இரு தாயீ’ என்று சொன்ன ஊர்ப்பெண்டுகளுக்கு அம்மா பதில் சொன்னாள். ‘தகப்பனத்தான் அநியாயமா தூக்கிக்குடுத்தாச்சு. புள்ளிகளாச்சும் சொகமா பெழச்சு கெடக்கட்டுமே..நமக்கு அதுகள வச்சு தெம்புதானே?’ அம்மா பூமணியை தன் வாழ்க்கையின் முக்கியமான பற்றுக்கோடாகக் கொண்டிருக்கவேண்டும். ஆறுகுழந்தைகளைப் பெற்றவள் இனிமேல் திரும்பிவராது என உணர்ந்துகொண்ட தாய்மைக்காலகட்டத்தை தாண்டிச்செல்லவே விரும்பியிருக்கமாட்டாள் போலும்.

பூமணி நினைவில் அம்மா ஒரு முழுமையான ஆளுமையாக, கிட்டத்தட்ட தெய்வ உருவமாக இருந்து வருகிறார். ஆனால் ஆசசரியமாக அவரது புனைவுலகில் அவரது அம்மாவைப்போன்ற வலிமையான தீவிரமான பெண் கதாபாத்திரங்கள் இல்லை. அழகிரி போன்ற ஆண்களே அவரது கதைமாந்தர்களில் தலைசிறந்தவர்களாக இருக்கிறார்கள். படைப்பாக்கத்தின் புரிந்துகொள்ளமுடியாத புதிர்களில் ஒன்றுதான் இது.

பூமணி அவரது அம்மாவுக்கு ஆறாவது குழந்தை. அவருக்கு நான்கு அக்காக்கள் ஒரு அண்ணா. அண்ணா காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்று கோயில்பட்டியில் வாழ்கிறார். பூமணி கடைக்குட்டி. பூமணியின் இயற்பெயர் பூ.மாணிக்கவாசகம். பூமணி முழுக்கமுழுக்க அம்மாவால் வளர்க்கப்பட்ட பிள்ளை. அப்பா பூலித்துரை அவர் சிறுவனாக இருக்கும்போதே மறைந்துவிட்டார். ஊரில் அவர் ஒரு சண்டியராக இருந்தார். கணக்குவழக்குகளை பேசிமுடித்துவைப்பது பஞ்சாயத்துக்களை சரிசெய்வது என்று எந்நேரமும் அவருக்கு அடிதடி வேலைகள் இருந்தன. கம்புசுற்றுவதில் தேர்ந்தவர் என்று ஊருக்குள் அவருக்கு ஒரு அடையாளம் இருந்தது. ஆனால் அநியாயக்காரர் அல்ல. களவு திருட்டு வேலைகளுக்கும் அவருக்கும் வெகுதூரம்.

பூமணியின் அப்பா குடும்பத்திலேயே அடிதடிப் பின்னணி உண்டு. அவரது மூத்த அப்பச்சி, அவரை ஆட்டுக்காரப்பச்சி என்று சொல்கிறார், ஊரில் புகழ்பெற்ற அடிதடிவீரர். அவர்காலகட்டத்தில் ஊரில் தீவட்டிக்கொள்ளையர்களை நுழைய விட்டதில்லை. நகைகளையும் பணத்தையும் ஒளித்துவைத்துக்கொள்ள நேரிட்டதில்லை. ஆனால் நாளடைவில் எதிரிகள் அதிகரித்தார்கள். உள்ளூரிலேயே சிலர் அவர் தூங்கும்போது வெட்டிப்போட்டார்கள். துண்டு துண்டாக பொட்டணம் கட்டிவிட்டார்கள். ஆட்டுக்காரப்பச்சியின் பட்டத்தைத்தான் பூலித்துரை வரித்துக்கொண்டார். மலையோரம் கள்ளுக்கடையில் நடந்த சண்டையில் மண்டை உடைந்து கட்டிலில் கொண்டுவந்து கிடத்தப்பட்ட சம்பவத்தை அம்மா சொல்லி பூமணி கேட்டிருக்கிறார்.

கம்புக்காரருக்கு வாழ்க்கைப்பட்டவர் அம்மா தேனம்மாள். ஆனால் தாய்மாமன் மகன். சொந்தம் விட்டுப்போய்விடக்கூடாதென கொடுத்தது. ஆனால் அப்பாவின் நேர்மையும் தைரியமும் அம்மாவுக்குப் பிடித்துதான் இருந்தது. பூமணிக்கு ஐந்து அப்பச்சிகள். ஐந்து அப்பச்சிமாருடன் பிறந்த ஒரே தங்கைதான் அம்மாவைப்பெற்ற பேத்தி. பேத்தியைப்போலவே அம்மாவும் பேத்திக்கு ஒரேமகள். பேத்தி மிக வெள்ளந்தியானவள். ‘ஆட்டுக்கு அஞ்சுகால்’ என்றால் அப்படியா என்று கேட்பவள். அவளுக்கு மகளாக வளர்ந்தமையால் அம்மா கைக்குழந்தையாக இருக்கும்போதே சூட்டிகையாக இருந்தாள். தன் காரியங்களை தானே கணக்கு பார்த்துசெய்பவளாக இருந்தாள். பேத்தியின் காரியங்களைக்கூட அம்மாவிடம் கேட்டுத்தான் முடிவெடுப்பார்கள்

அம்மாபிறந்த வீடு சொத்துக்கு குறைவற்றதாக இருந்தது. எப்போதும் தானியக்குலுக்கைகள் நிறைந்திருக்கும் கிராமத்து வீடுகளில் ஒன்று அது. நூறுவருடம் முன்பு அது சாதாரண விஷயமில்லை. பூமணியின் முன்னோர்களின் கிராமங்களில் அனேகமாக அவரது சமூகம் மட்டும்தான் இருக்கும். ஆகையால் அவர்களுக்குமேலே அதிகாரம்செலுத்த அங்கே எவருமில்லை. ஆனால் கம்புக்காரனுக்கு வாழ்க்கைப்பட்ட மகளுக்கு வறுமை வருவதை அம்மா பார்க்க நேர்ந்தது. எந்நேரமும் கம்புடன் சுற்றிய மருமகனால் மகள் சுகப்படவில்லை. ஆனால் மருமகனை சண்டியரான மூத்த அண்ணனின் வடிவில்தான் மாமியாரால் பார்க்கமுடிந்தது. தானியங்களும் காய்கறிகளும் கொண்டுவந்து மருமகனுக்குக் கொடுத்துவிட்டு போவாள்.

மெல்ல மெல்ல அப்பா நடைமுறைச் சிக்கல்களை உணர்ந்துகொண்டார். அதிக நிலம் கைவசம் இல்லை. மண்வெட்டி தூக்கி கூலிவேலைக்குச் செல்லக்கூடியவரும் அல்ல. ஒருகட்டத்தில் அம்மாவும் அப்பாவும் கலந்துபேசி ஒரு கடைவைக்க முடிவெடுத்தார்கள். அப்பா அடிதடிகளில் இருந்து சட்டென்று ஒதுங்கிக்கொண்டார். கோயில்பட்டிக்கு அதிகாலையில் நடந்துசென்று சாக்குநிறைய சாமான்களை வாங்கி தலையில் சுமந்துகொண்டு திரும்பி வந்தார். கடை மெல்ல சூடுபிடித்தது. அம்மா செட்டாக குடும்பம் நடத்தி சேமித்துக்கொண்டிருந்தாள். மேலக்காட்டில் ஏழுகுறுக்கம் கரிசல் நிலம் வாங்கினார்கள். கீழூர் முதலாளியிடம் கொஞ்சம் தோட்டம் வாங்கினார்கள். அப்பா கோபத்தைக் குறைத்து நிதானமானார். வம்புச்சண்டைகளை வீட்டில் வைத்து பேசியே முடித்தார். வீட்டில் பணப்புழக்கம் குடியேறியது.

அந்நிலையில்தான் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. ஊரெல்லாம் ராணுவத்துக்குப் போவதைப்பற்றியே பேச்சு எழுந்தது. சட்டென்று அப்பா கிளம்பிப் போய் ராணுவத்தில் சேர்ந்துகொண்டார். ஆச்சரியமான நிகழ்வு அது. பூமணியால் அதற்கான காரணத்தைச் சொல்ல முடியவில்லை. அன்று ராணுவத்தில் சேர்ந்தவர்கள் உள்ளூரில் பிழைப்பு இல்லாமல் அல்லது உள்ளூர் சாதியாதிக்கத்தில் இருந்து தப்ப அதைத் தேர்ந்தெடுத்தார்கள். ஆனால் பூலித்துரைக்கு இரண்டுமே கிடையாது. அவருக்கு எப்போதுமே வீரம் என்பதைப்பற்றி ஒரு மயக்கம் உண்டு, ராணுவத்தில் வீரசாகசங்கள் செய்யலாமென நினைத்திருக்கலாம் என்றார் பூமணி. ஆனால் அதை விட நுட்பமான ஒன்று அது என எனக்குப்பட்டது. ஒரு மனிதனுக்குள் இன்னும் இன்னும் என்றும் இங்கிருந்து அப்பால் இங்கிருந்து அப்பால் என்றும் துடித்துக்கொண்டிருக்கும் மன வேகத்துக்கு பெரிய காரணம் எதுவும் தேவையில்லை. பூலித்துரை அந்த ஊரின் சிறிய வட்டத்தை தாண்ட நினைத்திருக்கலாம்

அம்மாவுக்கு அது பெரிய அடி. ஆனால் மனம்தளரக்கூடியவரல்ல அவர். பிடிவாதமாக கடையை நடத்தி பிள்ளைகளை பார்த்துக்கொண்டாள். அப்பா பட்டாளத்துக்குச் சென்றதும் அந்தச் சீருடையை அணிந்துகொண்டு புகைப்படமெடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார். அவரது அந்தரங்கத்தைக் காட்டும் நிகழ்ச்சி இது. அந்தச்சீருடை அவருக்கு அளித்த தன்னம்பிக்கையை அடையாளத்தை அந்த நிகழ்ச்சியில் இருந்து ஊகிக்க முடிகிறது. அம்மாவுக்கு அது ஆம்புளையின் கோட்டிக்காரத்தனமாகவே தெரிந்திருக்கும். ஆணும் பெண்ணும் வாழ்வது இருவேறு உலகங்களில் அல்லவா? ஆனால் அவர் எங்கோ உயிருடன் இருப்பதன் சான்றாக இருந்தது அந்த புகைப்படம்.

வெளியே முரடர்கள் உள்ளே விசித்திரமான முறையில் மென்மையானவர்களாக இருப்பது அன்றாடம் நாம் காண்பது. பூலித்துரையும் அப்படித்தான். உண்மையில் ராணுவத்தின் கடுமை அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. இரவுபகலாக தன் குழந்தைகளை நினைத்துக்கொண்டிருந்தார். ஒருமுறை எங்கோ காட்டுக்குள் காவலிருந்தபோது குழந்தை ஒன்று ஓடிவந்து கழுத்தைக் கட்டிக்கொள்வதுபோல பிரமை ஏற்பட்டது. அப்படியே கிளம்பி ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டார். அவரைத்தேடி ராணுவம் வந்தது. அவர் அவர்களிடமிருந்து ஒளிந்து தப்பினார். நிரந்தரமாக தப்ப ஒருவழி இருந்தது. அப்பாவுக்கு ஒரு கிறித்தவப்பெயர் இருந்தது. அவர் ராணுவத்தில் சேர்ந்தபோது அந்தப் பெயரையே கொடுத்திருந்தார். அந்தப்பேரில் ஊரில் எவரும் இல்லை என ஊர்த்தலைவர் சாட்சி சொன்னபிறகுதான் ராணுவத்தேடல் இல்லாமலாயிற்று

ஆனால் வெளியுலகம் பூலித்துரைக்கு காசநோயை அளித்தது. சண்டியராக கம்புசுழற்றி திரிந்தவர் இருமி இளைத்து ஓய்ந்து திண்ணையில் அமர்ந்தார். அன்று காசநோய்க்கு சரியான மருந்து இருக்கவில்லை. மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்குக் கொண்டுச்சென்று வைத்திருந்தார்கள். அங்கே வேலைசெய்த பெருமாள் பகடை உதவிசெய்தார். அப்பாவால் ஆஸ்பத்திரியிலும் இருக்க முடியவில்லை. எந்நேரமும் பிள்ளைகள் நினைப்பாகவே இருந்தார். அங்கிருந்தும் திரும்பிவிட்டார்கள். மெல்லமெல்ல அப்பா கண்ணெதிரே வற்றி உலர்ந்து இல்லாமலானார். பூமணியின் நினைவில் மெல்லிய சித்திரமாக அப்பாவின் கடைசிநாட்கள் இருந்தன. நோய் காரணமாக அப்பாவை அவர் அண்டியதில்லை என்பதனால் தொடுகையும் சிரிப்பும் எதுவும் எஞ்சவில்லை.

அம்மாவின் வாழ்க்கை எல்லாவகையிலும் ஏமாற்றங்களும் சோதனைகளும் நிறைந்த ஒன்றாக இருந்தது என்கிறார் பூமணி. ‘கட்டாந்தரிசில் கருகிப்போன புல்லைக்கரம்பி வயிறு நிரப்பும் பசுவின் பிழைப்புதான் அம்மாவுக்கு லபித்தது’ என்கிறார் பூமணி. அம்மா ஆறுபிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்குவதை ஓர் அறைகூவலாகவே எடுத்துக்கொண்டு போராட ஆரம்பித்தார். கொஞ்சம் நிலத்தையும் சில ஆடுமாடுகளையும் கொண்டு இரு பையன்களையும் பட்டப்படிப்புவரை படிக்க அம்மா என்னென்ன செய்திருப்பார் என்பதை எளிதில் ஊகிக்கமுடியும். வடக்கூர் பள்ளிக்கூடத்தில் பூமணி ஆரம்பப்பள்ளி படித்தார்.

‘அம்மாவுக்கு சிரிப்பதைப்போலவே அழவும் பிடிக்கும்.. யார் வீட்டில் சாவு விழுந்தாலும் முதல் ஆளாகப்போய் உடகார்ந்து அழுகை தொடுப்பாள். அய்யாவை நினைத்து நினைத்து ஒப்பாரி மழைவெள்ளமாக வந்துகொண்டே இருக்கும்’ என்கிறார் பூமணி. அது ஒரு வெளிப்பாடு.

பட்டுத்துணியுடுத்தி – நான்
பாதவழி போனாலும்
எனக்குவாச்ச மந்திரியே -நீ
இல்லாத நாளையிலே
பட்ட வெலமதிப்பார்-என்
பாதரவ யாரறிவார்?

ஈனாத எருமையிட்ட- நான்
என்சோகம் சொன்னமின்னா
எஞ்சாமி எந்தொரையே
எனக்கு வாச்ச மந்திரியே
ஈனாத எருமைகூட
எடுத்த புல்லை கீழ போடும்

அம்மாவின் வரிகளில் வெளிப்படும் அந்தக்குரல், என் பாதரவ யாரறிவார் என்ற ஏக்கம், ஒரு நுட்பமான பாவனையும்கூட. அவள் வாழ்க்கையில் ஒவ்வொன்றாக வென்று சென்றுகொண்டிருப்பதை, பிள்ளைகளை ஆளாக்கி எடுத்துக்கொண்டிருப்பதை, அம்மாவின் ஆழ்மனம் அறியாமலா இருக்கும்? அதை எங்கோ எப்போதோ அந்த ஒப்பாரியில் அவள் தன் கணவனிடம் சொல்லிக்காட்டாமலா இருந்திருப்பாள்?

அம்மாவை ஊருக்கெல்லாம் அம்மாவாகத்தான் பூமணி அவரது ஏலேய் என்ற கட்டுரையில் சித்தரிக்கிறார். எந்நேரமும் ஏதேனும் குழந்தைக்குச் சோறூட்டிக்கொண்டிருப்பவளாக ‘அடி என் கள்ளச்சிறுக்கி, சிரிச்சு சிரிச்சு மயக்காம தின்னு…மாராயம் பண்ணினே கொமட்டுல குத்தீருவேன். கண்ண சிமிட்டுறத பாரு..எந்தப்புருசங்கிட்ட போயி இழுபடப்போறியோ’ என்ற வரியில் அம்மாவின் ஆழம் நுட்பமாக வெளிப்பட்டுக்கொண்டேதான் இருக்கும். ‘அம்மா கடனுக்காக போட்ட ரேகைகள் ஏராளம். பேனா மையென்றால் அழுத்தமாக விழாதென்று வண்டிமையை ஓலையில் எடுத்து வந்து கொடுக்கவேண்டும். அவள் அழுத்திப் போட்டுவிட்டு கேட்பாள். நல்லா விழுந்திருக்கா, இல்ல இன்னியும் அமுக்கிப்போடணுமா?’

அம்மாவுக்கு வீரம்மாள் என்று இன்னொரு பெயரும் உண்டு என்றார் பூமணி. தேனம்மாள் வீரம்மாள் என்ற இரு பெயர்களும் அவளுக்குப் பொருத்தம்தான். அவளுடைய இரு முகங்களுக்கும் பொருந்தும் பெயர்கள் அவை. பூமணி படித்து வேலைக்குச் சென்று கோயில்பட்டியில் குடியேறின பிறகு அம்மாவுக்காக அந்த வீட்டை இடித்து மீண்டும் கட்ட ஏற்பாடு செய்தார். நெடுங்காலம் முன்பு ஓலைக்கூரையுடன் இருந்தது. ஓலை வேயமுடியாமலானபோது அம்மா கூரையை தகரமாக ஆக்கிவிட்டாள். பூமணிக்கு அந்த தகரக்கூரை வந்தபின்னர் வீடே அன்னியமாக, இரைச்சலிட்டுக்கொண்டே இருக்கும் ஒவ்வாத இடமாக, ஆகிவிட்டது. வீட்டை கொத்தனார் இடித்தார். தலைமுறையின் விரிசல்கள் பசைவைத்து ஒட்டி பூசி பூசி பாதுகாத்த வீடு மண்மேடாகியது. அம்மாவுக்குள் ஏதோ ஒன்று இடிந்துவிட்டிருக்கவேண்டும். அவள் பேச்சு கூட திக்கியது.

அடுத்தவாரம் இரவு பூமணி சலூனில் முடிவெட்டிக்கொண்டிருந்தபோது ஊர்க்காரர்கள் காத்திருந்தார்கள். அம்மா இறந்துவிட்ட செய்தி வந்திருந்தது. அம்மாவின் மரணத்தை வீட்டின் இடிப்புடன் நுட்பமாக பூமணி சம்பந்தப்படுத்திக்கூறுகிறார். அது ஒரு விடைகொடுத்தல். அவளுடைய கர்மகாண்டம் முடிந்தது என அவளுக்குள் ஏதோ உள்ளுணர்வு சொல்லியிருக்குமோ? அப்பாவைப்போல கம்பை கீழேபோட்டு ஓய்ந்தமர்ந்து சாகும் நிலை அவளுக்கு ஏற்படவில்லை. 1947ல் பிறந்த பூமணிக்கு இன்று அறுபத்து ஐந்துவயது. இன்றும் கண்மூடினால் பூமணி அம்மாவின்குரலை கேட்க முடியும் ‘ஏலேய்’.

பூமணியின் புனைவுலகுக்குள் செல்லும் வாசகன் அங்கே அவன் எதிர்பார்த்த தீண்டாமை அல்லது சாதிக்கொடுமைகளின் சித்திரத்தை காணமுடியாமல் ஏமாற்றமடைவான். தீண்டாமைக் கொடுமைகளைச் சொல்வதற்கு ஒரு நிரந்தரமான கதைவடிவத்தை நம்முடைய பிரச்சார எழுத்தாளர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவற்றை அவன் வாசித்துப் பழகிவிட்டிருப்பதுதான் காரணம். பூமணியின் நினவுகளில் எப்போதுமே சாதி சார்ந்த ஏற்றத்தாழ்வுகளைப்பற்றிய அனுபவங்கள் உள்ளன. ஆனால் நேரடியான அப்பட்டமான சாதி இழிவுகளை அவர் அனுபவித்ததில்லை. அவர்களின் கிராமமே தேவேந்திரர்களுடையது என்பதனாலாக இருக்கலாம். அத்துடன் அவர்களின் குடும்பம் பாரம்பரிய பெருமையும் நிலபுலன்களும் கொண்டதாக இருந்திருக்கிறது. பூமணி சொல்வதை வைத்துப்பார்த்தால் அவர்களின் எல்லைக்குள் ஒரு வகையில் கிராமநிலக்கிழார்களாகவே இருந்திருக்கிறார்கள்

ஆனாலும் சாதி இருந்தது. சில நிகழ்வுகளை பூமணி பகிர்ந்துகொண்டார். பள்ளிப்பருவத்தில் ஒரு பிராமணத்தோழியின் வீட்டுக்குச்சென்று அவளுடன் அவள் வீட்டு கூடத்தில் தூணைச்சுற்றி விளையாடிவிட்டு வீட்டுக்குவந்து அம்மாவிடம் அதைச் சொல்லும்போது அம்மா பரிதவித்துப்போகிறாள். தீட்டு பார்ப்பவர்களாயிற்றே, பாவம் நடந்துவிட்டதே என்று வருந்துகிறாள். ஆனால் தீட்டு பிராமணர்களுக்கு மட்டும் அல்ல. வயலுக்கு வரும்வழியில் சேற்றில் தொடைவரை மூழ்கி தத்தளித்த ஓர் அய்யரை அம்மா இழுத்துவிட்டு காப்பாற்றுகிறாள். அய்யர் ஓடைநீரில் தீட்டை கழுவிக்கொள்ளும்போது அம்மா வீட்டுக்குவந்து குளித்து தன் தீட்டை கழுவிக்கொள்கிறாள்!

இன்னொரு நுட்பமான நிகழ்வில் சாதியின் இன்னொரு முகத்தைப் பார்க்கிறோம். அப்பா உடல்நலமில்லாமலிருக்கையில் பூமணியின் அம்மா அவரை மதுரை ஆஸ்பத்திரியில்சேர்க்கிறாள். அதற்கு ஒரு அருந்ததியர் உதவுகிறார். அந்த அருந்ததியர் வீட்டிலேயே அம்மா பிள்ளையுடன் தங்குகிறாள். அதற்கெல்லாம் சாதி தடையாக இல்லை. தீட்டும் இல்லை. ஆனால் அன்று அங்கே மாட்டுக்கறி சமைத்திருக்கிறார்கள். அதை தன்பிள்ளை சாப்பிட்டுவிடுமோ என்ற எச்சரிக்கை மட்டுமே அம்மாவுக்கு இருக்கிறது, அதுமட்டும்தான் அவளுக்கு தீட்டு. இந்த இரு எல்லைகளுக்கு நடுவே இருந்தது அவரது சாதியின் வரையறுக்கப்பட்ட புழங்குதளம். பூமணியின் கிராமத்தில் சில நாயக்கர் நிலக்கிழார்கள் இருந்திருக்கலாம். சிறிய சாதிய அவமதிப்புகளை அவர் அடைந்துமிருக்கலாம். அவற்றை அனேகமாக எல்லா சாதியினரும் ஏதேனும் வடிவில் அவர்களை விட மேலான சாதியினரிடமிருந்து பெற்றிருப்பார்கள். அதற்கு அப்பால் அந்த கிராமிய வாழ்க்கை சாதியடுக்கத்தின் எடை எதையும் அறியாத ஒன்றாகவே இருந்தது என்கிறார் பூமணி

பூமணியின் புனைவுலகில் உள்ள சகஜமான சாதிய சித்தரிப்பை அவர் இந்த யதார்த்தத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அன்றைய முற்போக்கு இலக்கியம் அத்தகைய சமூக முரண்பாடுகளை பெரிதுபடுத்தி மோதல்களாகச் சித்தரிக்கும் வழிமுறையை வலியுறுத்தியது. நிலக்கிழார்- கூலித்தொழிலாளி மோதலையே வர்க்கப்போராட்டம் என்ற அளவுக்குக் கொண்டுசென்றது அது. பூமணி அதிகமாக எழுதிய தாமரை போன்ற இதழ்களில் அத்தகைய கதைகள் வெளிவந்துகொண்டே இருந்தன. தி.க.சிவசங்கரன் அந்தவகையான எழுத்தை வலியுறுத்தக்கூடியவரும்கூட. ஆனால் பூமணி முற்போக்கு முகாமுக்குள் செல்லவில்லை. ஆகவே அவரது ஆக்கங்களில் செயற்கையான மோதல்களும் இல்லை. சாதியும் சுரண்டலும் மோதல்களும் உள்ளனதான், ஆனால் அவர் அவற்றை எல்லாம் மானுட உறவுகளுக்குள் பொருத்தித்தான் எப்போதுமே ஆராய்கிறார். ஆகவே அவை நம்பகமான வாழ்க்கைச் சித்திரங்களாகவே இருக்கின்றன. அவற்றை வாசிப்பவன் அவற்றை சமூகச்சித்திரங்களாக விரித்தெடுத்துக்கொள்ளமுடியும், அவ்வளவுதான்.

முந்தைய கட்டுரைநாதஸ்வரம் தவில்-கடிதம்
அடுத்த கட்டுரைகாந்தி ஒரு கட்டுரைப்போட்டி