ஆசிரியருக்கு,
நேற்று பாரதி புத்தகாலயத்தில் நண்பர்களுக்கு இடையே ஒரு உரையாடல் நடந்ததது, அதில் சில ஐயங்கள் எங்களுக்கு :
1. செவ்வியல் காலகட்டம் முதல் பின் நவீனத்துவ காலகட்டம் வரை உலகெங்கும் ஒரே நேரத்தில் ஒரே போக்கு நிகழ்ந்ததா? உலகின் நவீன காலகட்டத்தின் முடிவில்தான் நாம் (தமிழர்கள் ) அதற்கு வந்து சேர்ந்தோமா?குறைந்தபட்சம் இந்தியாவெங்கிலும் ஒரே போக்கு எல்லா சம காலத்திலும் நிகழ்ந்து வந்ததா? நிகழ்கிறதா ?
2. இது போன்ற சிந்தனைகள், அரசியல் அல்லது சமூக மாற்றத்தின் விளைவாக எழுத்தில் பிரதிபலிக்கிறதா, அதை விரைவு படுத்திப் பரப்புகிறதா ? (உதாரணமாக ருஷ்யப் புரட்சி, சேவின் வெற்றி போன்றவை, புரட்சி இலக்கியம் பெருமளவில் எழுதப்பட்டது மற்றும் மொழிபெயர்க்கப் பட்டது) அல்லது மாறாகவா, இரண்டும் என்றால் விகிதம் என்ன, வகை என்ன?
இந்த 50 ஆண்டுகளில் உலகில் எழுத்தால் சிந்தித்துப் புகுத்தப்பட்ட சமூகப் போக்கு ஏதேனும் உண்டா? அமர்வு நாற்காலி எழுத்தின், வாசிப்பின், சிந்திப்பின் பெறுமதிப்பு என்ன, பாதிப்பு மற்றும் விளைவுதான் என்ன?
கிருஷ்ணன்,
ஈரோடு
[விஜயராகவன், கிருஷ்ணனுடன் நான்]
அன்புள்ள கிருஷ்ணன்,
புத்தகாலயத்துக்கு வருபவர்களை பயமுறுத்துகிறீர்கள்.
இலக்கியப்போக்கு வாழ்க்கை போல வரலாறு போல அதன் இயல்பான விசைகளால் தன்னிச்சையாகப் பெருக்கெடுக்கிறது. அதன் இயல்புகளை எவரும் முழுமையாகவும் அறுதியாகவும் வகுத்துரைத்துவிட முடியாது. உலகமெங்கும் என்றல்ல நம் சூழலில் கூட இலக்கியத்தின் பிரவாகத்துக்கு நம்முடைய கணக்குகளுக்குள் அடைபடும் எந்த விதமான ஒழுங்கும் இல்லை.
செவ்வியல், கற்பனாவாதம், நவீனத்துவம், பின்நவீனத்துவம் என்றெல்லாம் நாம் வகுத்துக்கொள்ளும் இந்த இலக்கணங்களும் அதனடிப்படையிலான காலகட்டப்பிரிவினைகளும் எல்லாம் நாம் இந்தப் பெருக்கை நம்முடைய சமகாலத் தேவைக்கு ஏற்ப, நம்முடைய வாசிப்புக்கு உகந்த முறையில் பகுத்துக்கொள்வதேயாகும். இந்த வகையான பகுப்புகள் எல்லாம் பிரிட்டிஷ் இலக்கியவிமர்சன மரபில் பதினெட்டாம் நூற்றாண்டுகளில்தான் உருவாயின. இவ்வகையான இலக்கணங்கள் வகுக்கப்பட்டன. அவை முழுக்க முழுக்க ஐரோப்பிய இலக்கியத்தை மட்டுமே ஆய்வுப்பரப்பாக எடுத்துக்கொண்டு செய்யப்பட்டவையே.
காலனியாதிக்கம் மூலம் ஐரோப்பிய இலக்கியமும் ஐரோப்பிய இலக்கிய விமர்சனமும் உலகம் முழுக்க சென்று சேர்ந்த காரணத்தால் உலகம் முழுக்க இந்த இலக்கணங்களும் காலகட்டப்பிரிவினைகளும் பரவலாகக் கையாளப்படுகின்றன. கல்வித்துறையால் கற்பிக்கப்படுகின்றன. மேலும் பதினெட்டாம் நூற்றாண்டுக்குப்பின்னர் உலகத்தில் பெரும்பாலான மொழிகளின் இலக்கியங்கள் ஐரோப்பாவை முன்மாதிரியாகக் கொண்டு உருவாகி வளர்ந்து வருகின்றன. ஆகவே இந்த இலக்கணங்களும் அளவுகோல்களும் பெருமளவுக்குப் பொருந்திப்போகின்றவையாக உள்ளன. ஆகவே எல்லைக்குட்பட்டு இவற்றைப் பயன்படுத்துவதில் பிழை இல்லை.
ஆனால் பண்டைய இலக்கியங்களை இந்த அளவுகோல்களைக் கொண்டு நம்மால் வகுத்துவிட முடியாது. அப்படி இயந்திரத்தனமாகச் செய்யும்போது பெரும் பிழைகள் உருவாகும். உதாரணமாக பிரிட்டிஷ் இலக்கியவிமர்சனக் கொள்கையின்படி செவ்வியல் [கிளாசிசம்] என்பது மிகையின்மை, சமநிலை, நுட்பம் போன்ற பண்புகளைக் கொண்டது. கற்பனாவாதம் [ரொமாண்டிசிசம்] என்பது எழுச்சி, ஒற்றைப்படைத்தன்மை, வேகத்தின் அழகு ஆகியவற்றைக் கொண்டது. தமிழில் அவ்வகையில் பார்த்தால் கம்பராமாயணத்தை அல்லது நம்மாழ்வாரின் பாடல்களைக் கற்பனாவாதப் பண்புள்ளவை என்றே சொல்லவேண்டும். ஆனால் அவை நமக்குச் செவ்வியல் ஆக்கங்கள்.
ஐரோப்பாவின் விதிகள் எவையும் சீனா போன்ற முற்றிலும் வேறான இலக்கிய உலகுக்குப் பொருந்தாது. ஐரோப்பா நவீன இலக்கியப் பண்புகள் என எதையெல்லாம் சொல்கிறதோ அவை எல்லாம் சிறப்பாகக் கைகூடிய ஆக்கங்களை சீனாவில் ஆயிரம் வருடம் முன்னரே எழுதியிருக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பை ஜூயி என்ற சீனக்கவிஞரின் கவிதைகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஐரோப்பியக் கவிதைகளை விட நவீனமானவை.
ஐரோப்பா பதினெட்டாம் நூற்றாண்டில் உருவாக்கிய நாவல்களை விட மகத்தான நாவல்களை சீனா பன்னிரண்டாம் நூற்றாண்டிலேயே உருவாக்கியிருக்கிறது. அவற்றில் இன்று கிடைக்கும் நான்கு பிரம்மாண்டமான நாவல்கள் நவீன நாவல்வகையின் முதல் வடிவங்கள் என இன்று கருதப்படுகின்றன. சீனப் பெருநாவல்மரபு என இலக்கியத்தில் அவை குறிப்பிடப்படுகின்றன.
நீர்க்கோடு [ஆங்கிலத்தில்-Water Margin] ஷி நைஆன் எழுதிய மாபெரும் சீனநாவல். மூன்று அரசுகளின் கதை [ஆங்கிலத்தில்-Romance of the Three Kingdoms] லுஓ குவான்ஷாங் பதினாலாம் நூற்றாண்டில் எழுதிய நாவல். மேற்குநோக்கியபயணம். [ஆங்கிலத்தில்-Journey to the West] வு செங் கென் எழுதிய நாவல். சிவப்பு அறை கனவு [ஆங்கிலத்தில்-Dream of the Red Chamber] சியாவோ ச்யுகின் எழுதியது. இந்நான்கு நாவல்களையும் இன்று உலக உரைநடை இலக்கியத்தின் சிகரங்கள் என்கிறார்கள். இவை எழுதப்பட்டு ஐநூறாண்டுகள் கழித்துத்தான் ஐரோப்பா உரைநடை புனைகதைகளை உருவாக்கியது. நவீன இலக்கியத்திற்கு வந்துசேர்ந்தது.
ஆகவே உலக இலக்கியத்தை ஐரோப்பா உருவாக்கிய அளவுகோல்களைக் கொண்டு மதிப்பிட முடியாது. நவீன காலகட்டத்திலும் கூட சீன இலக்கியம் சீன திரைப்படம் போன்றவை ஐரோப்பாவின் பொதுப்போக்குகளுக்குக் கட்டுப்பட்டவையாக இல்லை. அவை இன்றும் உணர்ச்சிகரமான யதார்த்தவாதத்தன்மை கொண்டவையாகவே உள்ளன. அவை பெரும்படைப்புகளாக அங்கீகரிக்கவும்படுகின்றன.
இந்தியாவில்கூட மரபிலக்கியத்தில் அப்படி ஒரு பொதுப்போக்கு காணக்கிடைப்பதில்லை. சம்ஸ்கிருதம், பாலி ,பிராகிருதம், தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளின் இலக்கியப்போக்குகளுக்குள் எந்தப் பொதுவான அம்சமும் இல்லை. கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற வழிமொழிகள் [அபபிரஹ்ம்ஸ மொழிகள்] ஒவ்வொன்றும் ஒவ்வொரு காலகட்டத்தில் தோன்றி வளர்ச்சி கண்டுள்ளன. இலக்கிய வரலாற்று நோக்கில் சில பொதுக்கூறுகளைக் கண்டுகொள்ளலாம். மற்றபடி அவற்றின் போக்கில் எந்தப் பொதுவான முறைமையும் இருப்பதாகச் சொல்லமுடியாது.
ஐரோப்பிய பாதிப்பு உருவான பின்னர் பொதுவான வளர்ச்சிப்போக்கு காணக்கிடைப்பது உண்மை. எல்லா இந்திய மொழிகளிலும் 1880 களில் உரைநடை இலக்கியம், நவீன இலக்கியம் தோன்றியது. அவை சமூகசீர்திருத்த நோக்கம் கொண்டவையாக இருந்தன. அரசசபை, சான்றோர் ஆகியோரிடமிருந்து மக்களை நோக்கி இலக்கியம் வந்து சேர்ந்தது. 1920 கள் முதல் எல்லா மொழிகளிலும் யதார்த்தவாத இலக்கியம் உருவாகியது. 1960 களில் நவீனத்துவம். 1970 களில் தலித்தியம். 1990 களில் நவீனத்துவத்தை நிராகரித்தெழும் எழுத்துக்கள். காலம் கொஞ்சம் முன்னுக்குப்பின் இருக்கலாம்.
தமிழ் போன்ற கீழை மொழிகள் எல்லாமே ஐரோப்பிய நவீன இலக்கியத்தின் பாதிப்புக்கு உட்பட்டது 1800களில்தான். நவீனத்துவம் [மாடர்னிசம்] தமிழில் புதுமைப்பித்தன் வழியாக முப்பதுகளிலேயே, ஐரோப்பாவுக்குச் சமகாலத்திலேயே வந்து சேர்ந்தது. பிற இந்திய மொழிகளில் அது அறுபதுகளில்தான் நிகழ்ந்தது.
பொதுவாக இலக்கிய சிந்தனைகள் சமூக மாற்றங்களை ஒட்டியே நிகழ்கின்றன என்று சொல்வதே வழக்கம். நவீன முதலாளித்துவ சமூக அமைப்புதான் நவீன இலக்கியத்தை உருவாக்கியது. முதலாளித்துவம் ஒருங்கிணைந்த உற்பத்தியை உருவாக்கியது. அதற்கு ஒரேமாதிரியான திறன் கொண்ட உழைப்பாளர் தேவைப்பட்டனர். ஆகவே ஒட்டுமொத்த சமூகத்திற்கும் ஒரே வகையான கல்விமுறை உருவாகி வந்தது. இவ்வாறான கல்விமுறை மூலம் உருவாகி வந்தவர்கள் வாசிக்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்காக நேரடியாகப் படைப்பாளிகள் எழுத ஆரம்பித்தபோது நவீன இலக்கியம் உருவாகி வந்தது.
அன்றுவரை கற்றறிந்தோருக்காக எழுதப்பட்ட இலக்கியம் வாசகர்களுக்காக எழுதப்பட்டது. நவீன எழுத்து நேரடியாக வாசகர்களுக்காக எழுதப்பட்டு அவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டடது . கூடவே ஜனநாயகமும் உருவாகி வந்தபோது கருத்து என்பது நேரடியான அதிகாரவிசையாக ஆகியது. ஆகவே இலக்கியம் என்பது அரசியல்செயல்பாடாகவும் ஆகியது. பாரதிக்கும் அவருக்கு முன்னால் இருந்த கவிஞர்களுக்கும் உள்ள வேறுபாடு இதுவே. பாரதி மக்களுக்காக எழுதினார். அச்சு ஊடகம், போக்குவரத்து வசதி போன்றவை அதற்கு உதவிசெய்தன.
ஆனால் இலக்கியப்போக்குகள் அனைத்துக்கும் அப்படி சமானமான சமூக-பொருளியல் காரணங்களைக் கண்டுபிடிக்கமுடியும் என நான் நினைக்கவில்லை. அது குறுக்கல்வாதமாகவே முடியும். இலக்கியத்தின் பொதுவான வடிவம் மற்றும் போக்குகளை சமூக-பொருளியல் கூறுகள் மாற்றியமைக்கின்றன என்று கூறலாம்.
அதேபோல இன்னின்ன இலக்கியப்போக்குகளால், இன்னின்ன நூல்களால் இன்னவகையான சமூக மாறுதல்கள் உருவாயின என்று சொல்வது அபத்தமான குறுக்கல்வாதமாகவே இருக்கும். சமூகமாறுதல்களில் மக்களிடமிருக்கும் கருத்தியலுக்கு முக்கியமான இடம் உண்டு. அந்தக்கருத்தியலை உருவாக்குவதில், வளர்ப்பதில் இலக்கியத்துக்கு ஒட்டுமொத்தமான ஒரு பங்களிப்பு உண்டு. அதில் ஒவ்வொரு இலக்கிய ஆக்கமும் தன் பணியை ஆற்றத்தான் செய்கிறது.
உலக அளவில் பார்த்தால் ஜனநாயகம் பற்றிய, மனித உரிமைகள் பற்றிய, சூழியல் பற்றிய இன்றைய சமூகமனநிலை இலக்கிய ஆக்கங்களாலும் பிற கருத்தியல் செயல்பாடுகளாலும் உருவாக்கப்பட்டது என்று சொல்லமுடியும். அவ்வாறு சமூக மனதில் மாற்றத்தை உருவாக்குவதில் பங்குவகித்த நூல்களின் பட்டியலைக் கூட நாம் உருவாக்கமுடியும்.
தமிழ்நாட்டிலேயே இரு உதாரணங்களைக் காண்போம். 1880களில் பெண்கல்வி, பெண்சமத்துவம் பற்றிய சிந்தனைகள் முழுக்கமுழுக்க இலக்கியத் தளத்திலேயே உருவாகி வந்தன. இலக்கியம் மட்டுமே அதை முன்வைத்துப் பேசியது. அ.மாதவையா, பாரதி ,வை.மு.கோதைநாயகி அம்மாள், மூவலூர் ராமாமிருதம் அம்மையார் போன்றவர்கள் அதைப்பற்றிப் பேசி எழுதி முன்னெடுத்தனர். அடுத்தடுத்த தலைமுறையில் அந்தக் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டது. ராஜம் கிருஷ்ணன், அம்பை போன்ற இலக்கியவாதிகளும் லட்சுமி, சிவசங்கரி போன்ற வணிகப்பிரபல எழுத்தாளர்களும் அதில் பங்களிப்பாற்றினர். இன்று இவ்விஷயத்தில் தமிழக மக்களிடம் உள்ள மனநிலை மாற்றம் இலக்கியத்தால் உருவாக்கப்பட்டதே.
இன்னொரு சமகால உதாரணம் என்றால் திருநங்கைகள் பற்றிய சமூகக் கண்ணோட்டம் மாறியதை சுட்டிக்காட்டவேண்டும். எழுபதுகளில் ஒருதலைராகம் போன்ற படங்களில் திருநங்கைகள் கிண்டலடிக்கப்பட்டபோது அதில் எந்தப் பிழையையும் நாம் காணவில்லை. சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவல் முதல் பிரியா பாபுவின் ‘மூன்றாம் பாலின் முகம்’ வரை பல படைப்புகள் அந்தக் கருத்துநிலைகளை மெல்லமெல்ல மாற்றிக்கொண்டிருக்கின்றன.
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 6, 2012