அம்மா

என்மகள் கஸ்தூரி(வகுப்பு 9) கணினியில் ஒரு கவிதையை எழுதிவைத்திருந்தாள்.எனக்கு ஆங்கிலம் புரியவில்லை என என்நண்பர் மணி வேலுப்பிள்ளையைக் கொண்டு மொழிபெயர்த்தேன் தமிழிலும் புரியவில்லை இது கவிதையா

பிரியமுடன்
செல்வம்
கனடா

அம்மா

மென்மயிர்ச் சுருள்கள்
காற்றில் அலைமோதும்படி
அன்றாடம் அவள் கூந்தலை
வாரிப் பின்னிய அம்மா.
.

வானம் பொழிந்த வேளையில்,
அவள் அறியாததை எல்லாம்
இருள் மறைத்த வேளையில்,
அவளைக் கட்டிக்காத்த அம்மா.
.

அவளை அடைகாத்த சுவர்களை
மங்கல குங்கும மலர் கொண்டு,
இளமஞ்சள் ரோசா மலர் கொண்டு
ஒப்பனை செய்த அம்மா.

“கருமைநிற ரோசாப் பூ வேண்டும்!”
அடம்பிடிப்பாள் அவள்.
அவளுக்குச் சிறந்த பூ எது?
அதை அம்மாவே அறிவாளாம்!
ஆதலால்,
கிழமை தோறும் அம்மா
கொத்துக் கொத்தாய்க் கொண்டுவந்தாள்
இளமஞ்சள் ரோசாப் பூ!

“கேளடி, என் செல்லக் குஞ்சு!
இளமஞ்சளும் வெண்மையும் தூய்மையானவை,
ஒப்புரவானவை, பத்திரமானவை.
கருமையோ? ஐயோ! கருமையோ?
கருமையின் ஆபத்தை நீ அறியவில்லையே!
கேளடி, என் செல்லக் குஞ்சு!
கருமை அறிவை மறைக்குமடி!”

அம்மா அவளின் காவல் தேவதை,
காவல் கோபுரம், காக்கும் விழிகள்,
கேட்கும் செவிகள்.
அம்மா அவளின் தோழி,
ஒரேயொரு தோழி.
இருவரதும் இடை வெளியை
இட்டு நிரப்பியதும் அம்மாவே.

அவள் அறியாததை மறைத்து
அவளைக் காத்துநின்ற அம்மா,
வன்மையை,புறத்தை,ஆபத்தை,
கருமையை எல்லாம் மறைத்து,
அவளைக் காத்துநின்ற அம்மா.
பரந்துவிரிந்த ஆழிக்கே தெரியாமல்
தன் முத்தினைக் காக்கும் சிப்பியைப்போல்
அவளைக் காத்துநின்ற அம்மா.

அவள் மறைந்து வளர்ந்தாள்.
மறைவன போலவும், திரும்ப
மீள்வன போலவும் தென்படும்
இளமஞ்சள் ரோசாப் பூக்களை
பார்த்தபடியே
அவள் மறைந்து வளர்ந்து வந்தாள்.
தூய வாழ்வு துய்த்து வந்தாள்.
.

எனினும்,
பூக்கள் மறைவது எங்கே?
பூக்கள் எங்கே போயின?
ஒடியும் பூக்களா அவை?
அவை,
புதுப்பிக்க வேண்டிய பூக்களா?
அல்லது,
அவள் கனவிலும் கடக்காத ஒன்றுக்குள்,
அவள் என்றுமே அறியாத ஒன்றுக்குள்,
போக்கியடித்த பூக்களா? இருளுக்குள்,
போக்கியடித்த பூக்களா?

அம்மா அவளைக் காத்தாள்,
அம்மா அவளை மறைத்தாள்.
எதற்காக?
என்றோ ஒருநாள் பறிக்கப்படவா?
மீண்டும் ஒடியாத பூவாக,
அவள் மறுபடி பூப்பது எப்படி?

அனைத்திலும் ஐயம் எழுந்து,
அவள் அலறலும், கிளறலும்,
குளறலும், எறிதலும்
காதில் விழுந்து,
பாய்ந்து வந்தாள் அம்மா.
கதவில் மெதுவாய் தட்டினாள்.
அம்மாவின் அருமந்த குஞ்சு
அந்த அறியாத உலகிற்குள்
கால் வைக்க முயன்றாளா?
அந்த அறியாத அறிவு
அவளுக்கு ஆசை காட்டியதா?
வேட்கையின் கண்களை
அவள் பார்த்துவிட்டாளா?
அருமந்த குஞ்சு
அள்ளுண்டு போனாளா?
கதவுக் குமிழை,
மிருதுவாய் வருடினாள் அம்மா.
குமிழில் எத்துணை கடுகடுப்பு!
இற்றைவரை அம்மா உணர்ந்ததில்லை!

“குஞ்சு!”
குமிழை வருடியபடி
குழைந்தாள் அம்மா.
குஞ்சு முணுமுணுத்தாள், உன்னாமல்:
“திரும்பவும் யோசித்துப் பார்க்கிறேன், அம்மா!”

வயிற்றிலே பால் வார்த்தது போல
ஆறித் தேறினாள் அம்மா:
என் குஞ்சை
இருள் வாரிச் செல்லவில்லை.
என் தூய வெண்மகள்
என்றென்றும் பத்திரமாய்
என் அரவணைப்பில்!
என் குஞ்சு என்றென்றும் தூயது,
அறைச்சுவரை அணிசெய்த
இளமஞ்சள் ரோசா போல்
என் குஞ்சு என்றென்றும் மெதுமையானது,
என்றென்றும் மென்மையானது.

.

அன்று,
குஞ்சின் கோலத்தைக் கண்டு, தன்
இதயத்தைப் பற்றிப் பிடித்து,
வாய் திக்கினாள் அம்மா.
குஞ்சின் தூய்மையும் உறுதியும்
தன் கண்களில் படாத நிலையில்
அலறித் தள்ளினாள் அம்மா.
மாபெரும் உலகுடன் தன்னைப்
பிணித்து நின்ற எதையோ
தளர்த்தி அலறினாள் அம்மா.

அம்மா அடைகாத்த குஞ்சு
குதறித் தகர்த்த அறை.
அறையின் நட்ட நடுவே
அம்மாவின் குங்கும உள்ளங்கைக்கு
அகப்பட்டது ஒரேயொரு பூ,
ஒரேயொரு கருப்பு ரோசாப் பூ!

அதைப் பற்றிக்கொண்டாள் அம்மா!
நேர்த்தி வாய்ந்த மணிக்கட்டில்
குருதி பீறிடும் வண்ணம்,
இறுகப் பற்றிக்கொண்டாள் அம்மா!

*

மூலம்


HER MOTHER

‘Her mother braided her hair, everyday, and let strands of soft curls sway.

‘Her mother protected her from the storms that strike, and the darkness that held the unknowing.

‘Her mother decorated her walls with pale pink flowers, and cream coloured roses.

‘She would insist in black roses, but her mother seemed to know better, and every week would buy a dozen cream coloured roses.

‘Her mother would say “Little one, cream and white are pure, are balanced, are secure. But black? Oh, little one if you only knew what black held! It holds the risk, the knowledge.”

‘Her mother was her guardian angel, her watch tower, her eyes, her ears, her friend, her only friend and everything that ever could exists between two.

‘Her mother hid the unknowing, the violence, the outside, the risk, the blackness.

‘Like a pearl that was kept a secret from the everlasting ocean, she was hidden away.

‘She grew hidden, and lived pure. Looking at the aging cream coloured roses that seemed to disappear, and return anew.

‘But where would they disappear to? Where did they go? Were they brittle and nursed to become anew? Or were they sent to the unknowing, darkness, that she never once dreamt of passing through.

‘Her mother, kept her, hid her, but why? So that one day she might be swept away, how would she learn to turn anew, without becoming brittle?

‘Her mother heard the screams, the rummaging, the crying, the throwing; she felt the unsureness of it all. Her mother rushed, knocking slowing on her door. Her mother felt the rush, had her precious one tried to walk into the unknowing, had she been tempted by the knowledge? Had she looked into the eyes of lust, and been swept away? Never had her Mother realized the coldness of the brass doorknob as she held it softly into her hand.

‘ “My dear” She said turning the brass knob.

‘ She whispered, effortless “Mother, I reconsider”

‘ A great rush went through her mother. Her mother knew now, that the darkness had not swept her daughter away, that her pure white daughter was safe between her arms, like always. That her daughter, her daughter, would always remain as pure, as soft, as delicate, as the cream coloured roses, that ornamented her room ever so nicely.

‘But what her mother saw that day, made her mother stutter, made her mother clutch onto her very heart.

‘It made her mother lose sight of the pureness, the steadiness of it all. She screamed letting go of what held her on to this vast, land.

‘She held onto it! She held onto it, so firmly, that blood trickled down her elegant wrist. Because in the mist of her room, that had once held her daughter, was destroyed and torned, and wrecked, and in her soft palms, that turned to pink, ..now held a single black rose.

8

அன்புள்ள செல்வம்

கண்டிப்பாக இது கவிதை

பொதுவாகப் பதின்பருவத்துப்பிள்ளைகளுக்குக் கவிதை இயல்பான வெளிப்பாட்டு ஊடகமாக இருக்கிறது. அவர்களுக்கு அதிக அனுபவம் இல்லை, அதிக அவதானிப்புகள் இல்லை. ஆனால் கற்பனையும் உணர்ச்சிகளும் அதிகமாக இருக்கின்றன. ஆகவே கவிதை இயல்பான வடிவமாக இருக்கிறது.

அதிலும் இந்தக்கவிதை தீவிரமான உணர்ச்சிகரமும் அதற்கேற்ற குறியீடுகளும் கொண்ட முக்கியமான கவிதையாக இருக்கிறது. கவிதைக்குரிய சமகால மொழியில் சொல்மிகையில்லாமல் அமைந்திருக்கிறது. இந்தக்கவிதையின் தீவிரத்தை உணர்ந்து ஆச்சரியப்பட்டேன். கஸ்தூரியை நான் ஒருவயதுக்குழந்தையாகவே பார்த்திருக்கிறேன் என்பதனால். அவளிடம் என்னுடைய வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்.

தாய்க்கும் மகளுக்குமான உறவு பதின்பருவத்தில் மாறுபடுவதை நானும் கண்டுகொண்டிருக்கிறேன். தாயின் சிறகுகளின் பாதுகாப்புக்கான ஏக்கமும் மீறிசெல்வதற்கான துடிப்பும் ஒன்றை ஒன்று வெல்ல முயலும் தருணங்களாலானது அது

ஜெ

முந்தைய கட்டுரைபூமணியின் நாவல்கள்
அடுத்த கட்டுரைபூக்கும் கருவேலம் – பூமணியின் படைப்புலகம்