எரிக் ஹாப்ஸ்பாம்-கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

எரிக் ஹாப்ஸ்பாம் குறித்த கட்டுரைகள் ஒரு நல்ல அறிமுகத்தை அளித்தன. ஆனால் அவரின் இலட்சியவாத அழிவு குறித்த கருத்துக்களை அப்படியே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘வெர்செயில்ஸ் முதல் ஹிரோஷிமா வரை’ நடந்த அந்நிகழ்வுகள் அரசியல் உள்விளையாட்டுகளின் விளைவுகளை அப்பட்டமாக்கின என்றுதான் தோன்றுகிறது. அதாவது, ஒரு நல்ல நோக்கமுள்ள தொடக்கத்திற்குப் பிறகு சுய நலமிகள் தங்களின் சுயலாபத்திற்காக ‘வரலாறு’ என்னும் அதிகாரபூர்வ பொய்யைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுவது. மாபெரும் ஃபிரெஞ்சு புரட்சி மிக விரைவில் நெப்போலியனிடம் சரணடைந்தது அல்லவா? ஜெர்மன் மக்கள் யூதர்களைப் பொய்ப்பிரசாரத்தினால் உந்தப்பட்டுக் கொன்றொழித்தனர் அல்லவா? இந்நிகழ்வுகளை முதலாளித்துவ முற்போக்கு முகமூடியணிந்த நிலப்பிரபுத்துவ அதிகாரத்தின் சரிவு எனக் கொள்ளலாம் என நினைக்கிறேன். இலட்சியவாதக் கருத்துக்கள் வலிமையான தீயவர்கள் , அதிகாரத்தை அடையும் வரை கடைபிடிக்கப்பட்டு, அதிகாரத்தில் இருக்கும் போது கைவிடப்படுவதால் மதிப்பிழந்து போகின்றன.

ஆனால் எரிக் காந்தி யுகம் குறித்து என்ன கருத்து கொண்டிருந்தார் எனத் தெரியவில்லை. நூற்றாண்டு கால லட்சியவாதத்தின் வெற்றி என கருதக்கூடிய இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பற்றி அவர் என்ன நினைத்தார் என்றும் தெரியவில்லை.

Shankaran E R

அன்புள்ள சங்கரன்

எரிக் ஹாப்ஸ்பாம் பழைய யுகத்தைச்சேர்ந்த ஒரு மார்க்ஸியர். பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் அவர் காலாவதியானவர் என்ற எண்ணம் எனக்கிருந்தது. இப்போது இலட்சியவாதம் அப்படிக் காலாவதியாக முடியாதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஆகவேதான் நீண்ட இடைவெளிக்குப்பின் அவரைப்பற்றி எழுதினேன்.

எரிக் ஹாப்ஸ்பாம் சொல்வதுபோல இலட்சியவாதம் காலாவதியாகவில்லை என்றே நான் நினைக்கிறேன். கிறுக்கர்களான இலட்சியவாதிகளுக்கு இருக்கும் மதிப்பு என்றுமே நடைமுறைவெற்றியாளர்களுக்கு இருப்பதில்லை. ஜூலியன் அசாஞ்சே எந்த சர்வதேச தொழிலதிபர்களைவிடவும் மக்கள் மனதுக்கு நெருக்கமானவராகவே இன்றிருக்கிறார் என்றே நினைக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெ

எரிக் ஹாப்ஸ்பாம் பற்றிய கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருந்தது. அடிக்கடி அந்த பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போதுதான் அவரைப்பற்றிய நீண்ட கட்டுரை ஒன்றை முதல்முறையாகத் தமிழில் வாசிக்கிறேன். அவர் அரைநூற்றாண்டாக எழுதிவருகிறார் என்ற நிலையில் அவரைப்பற்றித் தமிழில் எதுவுமே எழுதப்படவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது.

அவர் இலட்சிவாதம் பற்றி சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. எல்லாக் காலத்திலும் இலட்சியவாதம் சிறுபான்மையினரிடம்தான் இருக்கும். ஆனால் அவர்கள்தான் உலகத்தை உருவாக்குகிறார்கள். தொழில்நுட்பவாதிகள் அல்ல

சாரங்கன்
சென்னை

அன்புள்ள சாரங்கன்

உண்மைதான். எரிக் ஹாப்ஸ்பாமின் குரலில் ஒலிப்பது மார்க்ஸிய இலட்சியவாதம் பற்றிய ஏமாற்றம் மட்டுமே. சூழியல் சார்ந்த, உலக அமைதிசார்ந்த இலட்சியவாதம் முன்பை விட இன்று மேலோங்கித்தான் ஒலிக்கிறது. மார்க்ஸை விட காந்தி அதிகம் பேசப்படுகிறார் – வால்ஸ்ட்ரீட் போராட்டங்கள் அதையே காட்டுகின்றன

ஜெ

முந்தைய கட்டுரைபூமணியின் அழகியல்
அடுத்த கட்டுரைவண்ணதாசனின் சினேகிதிகள்