ஆதிச்சநல்லூர்:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

ஆதிச்சநல்லூர் சிதம்பரம் அவர்கள் ஆதிச்சநல்லூர் ஆதி எச்ச நல்லூர் என்று சொல்வதை நீங்கள் சரி என்று ஏற்றுக்கொள்கிறீர்களா? மொழியியல் அடிப்படையில் அந்தப் பகுப்பு சரிதானா?

ஸ்ரீதர்

அன்புள்ள ஸ்ரீதர்,

இந்தமாதிரி ஊர்ப்பெயர்களை இன்றைய நோக்கில் பகுப்புசெய்வது தமிழியக்கத்தின் அரசியல்தேவை சார்ந்து உருவான ஒன்றே ஒழிய அதற்கு வரலாற்று ஆய்வின் முறைமைப்படி எந்த மதிப்பும் கிடையாது. சொல்பவரின் பற்றும் ஈடுபாடும் மட்டுமே அதில் தெரிகிறது. பொதுவாக தமிழியக்கவாதிகள் தங்கள் கற்பனையின்படி ஊர்களையும் பெயர்களையும் சொற்பகுப்புசெய்வதும் அதையே அடிப்படை ஆதாரமாகக் கோண்டு வரலாற்று ஊகங்களை நிகழ்த்துவதும் சாதாரணமாக நடப்பதே.

ஆதிச்சன் என்றால் ஆதித்யன் என்ற பெயரின் திரிபா என்ற ஐயம் எனக்கு உண்டு. ஆதித்தன் என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். தித்தன் ஒரு பழந்தமிழ்ப் பெயர். அல்லது ஆதிச்சன் என்றே ஒரு பழைய பெயர் இருந்திருக்கலாம். ஆதிச்சன் என்ற பெயர் திருநெல்வேலி, குமரிமாவட்ட கல்வெட்டுகளில் ஏராளமாகக் காணப்படுகிறது. குறிப்பாக தென்குமரி ஆவணங்களில் பிரபலமான பெயர் அது.

அ.கா.பெருமாள் தொகுத்த ‘முதலியார் ஆவணங்கள்’ என்ற நூல் [தமிழினி பிரசுரம்] அழகியபண்டியபுரம் முதலியார் என்ற புராதன நிலப்பிரபுவின் வீட்டில் கிடைத்த ஓலைச்சுவடிகளின் தொகுப்பு. அது கவிமணியால் கண்டெடுக்கப்பட்டது. பெரும்பாலும் நில உடைமை-சொத்துரிமைமை ஆவணங்கள். அதில் 15 ஆம் நூற்றாண்டு முதல் பலர் அனுப்பிய கடிதங்களும் நீட்டுகளும்  உள்ளன. அவற்றில் ஆதிச்சன் என்னும் பெயருள்ளவர்கள் பலர் வருகிறார்கள்.

ஆதிச்சநல்லூரின் அப்பெயர் அப்பகுதி சேரர் ஆட்சியில் இருந்த காலகட்டத்தில் உருவானதாக இருக்கலாம். அதற்கும் முன்பே கற்பனைக்குஎட்டாத பழங்காலத்தைச் சேர்ந்தவை அங்கே கிடைக்கும் அந்தத்தாழிகள். ஆதிச்சநல்லூர் என்ற ஊருக்கும் அந்த மேட்டுக்கும் பெரிய தொடர்பும் இல்லை. அந்த ஊரின் பெயரென்ன என்பதை அந்த தொல் எழுத்துக்களை வாசித்தால்தான் சொல்லமுடியும்.

ஜெ

அன்புள்ள ஜெ

ஆதிச்சநல்லூர் பற்றிய கட்டுரையும் இணைப்புகளும் மிகவும் நன்றாக இருந்தன. நான் பலமுறை அவ்வழியே சென்றதுண்டு. இறங்கிப் பார்க்கவேண்டும் என்று தோன்றியதில்லை. ஆதிச்சநல்லூரின் தாழிகளில் நம் பண்பாட்டின் வேர் இருக்கிறது. அந்த மனிதர்கள் என்ன சாப்பிட்டார்கள் எந்த தெய்வத்தை வணங்கினார்கள் ? பலரும் சொல்வதுபோல சைவ மதத்தின் ஏதாவது அம்சங்கள் அந்த தாழிகளில் இருந்தனவா? சைவ மதம் தமிழர்களின் புராதனமான மதம் என்று சொல்கிறார்களே. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எஸ்.சுகுமாரன்.
அன்புள்ள சுகுமாரன்

ஆதிச்சநல்லூர் சான்றுகள் இன்னமும் ஆய்வுநிலையிலேயே உள்ளன. அவற்றைப்பற்றிய முழுத்தகவல்கள் இல்லை. ஆனால் தெரிந்தவரையில் இன்றைய பெருமதங்களின் அடையாளங்களேதும் அவற்றில் இல்லை

ஜெ.

 

 

ஆதிச்ச நல்லூர் பதிவுசிறப்பாகசெய்துள்ளீர்கள்……அதற்காக தங்களுக்குநன்றிகள்பல……..நான்திருநெல்வேலிதான் இருந்தாலும்அதிச்சநல்லுர் சென்றுபார்த்ததில்லைஅந்த குறையைதாங்கள்போக்கிவிட்டீர்கள்


நினா.கண்ணன்

அன்புள்ள ஐயா,
வணக்கம்

ஆதிச்சநல்லூரைப்பற்றிய உங்கல் கட்டுரையை வாசித்தேன் . பாராட்டுக்கள். நன்றி

நான் மதுரையைச்செர்ந்த ஒரு கத்தோலிக்க துறவி, இப்போது ரோமில் பி.எச்.டி செய்கிறேன். நான் பைபிள் மற்றும் ஐரோப்பிய மொழிகளின் தொடர்புடைய விஷயங்களையும் தமிழின் தொன்மை சார்ந்த விஷயங்களையும் வாசிக்க ஆசைப்படுகிறேன். தமிழகர்கள் இந்தியப்பெருங்கடலில் மூழ்கிய பல தீவுகலில் பரவி வாழ்ந்திருக்கலாம் என்னும் எண்ணம் எனக்கு உண்டு. இன்றுள்ள பல தீவுகள் — மாலி மினிக்காய் லட்சதீவுகள் செஷல்ஸ் மொரீஷியஸ்- — அவற்றின் நுனிகளே. உரியமுறையில் ஆழ்கடல் ஆய்வுகளைச் செய்ய யாராவது முன்வந்தார்களென்றால் பல விஷயங்கள் வெளிவரும்

பிரிட்டிஷ் ஆய்வாலரான ஹான்காக் அவர்கள் இந்தியக்கடலில் ஆராய்ச்சி செய்து பூம்புகரின் அடியில் மிகத்  தொன்மையான வாழ்விடங்கலைக் கண்டடைந்திருக்கிறார். இவ்விஷயத்தில் நீங்கள் ஆர்வம் காட்டவேண்டும். நான் திரும்பி வரும்போது உங்களுடன் தொடர்புகொள்கிறேன்

செல்வராஜ்
(Fr. John selvaraj) 

வணக்கம் ·பாதர்,

ஹான்காக் குறித்து ஒரு பரபரப்பு 1997 வாக்கில் ஏற்பட்டது. அப்போது நான் நடத்திவந்த சொல்புதிது இதழில் சில கட்டுரைகளை போட்டோம்.  கிரகாம் ஹான்காக் ஒரு பயில்முறை ஆழ்கடல் ஆய்வாளர். அவரை மற்ற ஆய்வாளர்கள் முழுமையாக ஒத்துக்கொள்வதில்லை. சில சமயம் அதிகப்படியான ஊகங்களுக்குச் சென்றுவிடுகிறார் என்கிறார்கள். பூம்புகாரில் 25 கிமீ தொலைவில் அவர் நடத்திய ஆய்வுகளில் மூழ்கிய ஒரு நகரத்தின் வடிவம் கண்டடையப்பட்டதாக அவர் சொல்கிறார். அதில்  லாடவடிவமான நடுச்சதுக்கமும் சுற்றிலும் சதுர வழடிவமான கட்டிட அமைப்புகளும் இருந்தன என்கிறார். புகைப்படங்கள் வெளியிட்டிருக்கிறார். கடல் அடியில் வண்டலும் பாசியும் பவழப்பாறைகளும் மூடி அவை உள்ளன. முறையான விரிவான ஆய்வுகளுக்குப்பின்னரே ஏதும் சொல்ல முடியும். ஆனால் இப்போதைக்கு அந்த ஊகத்தை சில மேலை ஆய்வளர் பூ என்று ஊதிவிடுவதைப்போல செய்ய நான் தயாராக இல்லை.  ஏனென்றால் எல்லா தொல்லியல் ஆய்வுகளும் பழங்காலத்தை இன்றைய தேவைக்கு ஏற்ப உருவாக்கிக்கொள்ளும் ஆவலினால்தான் செய்யபப்டுகின்றன. தமிழின் தொல்பழங்காலம் குறித்த ஆர்வம் உலகளாவிய தளத்தில் இல்லை. ஆர்வத்தை உருவாக்கும் சக்தியுடன் தமிழ்ச்சமூகமும் இல்லை. ஆய்வுகள் வரும்காலத்தில் நடக்கும் என்றும் உண்மைகள் தெரியும் என்றும் எதிர்பார்க்கலாம். அதுவரை மிகையான தாவல்கள் இல்லாமல் முழுநிராகரிப்புகள் இல்லாமல் நிதானமாக இருக்கலாம்

ஜெ

ஆதிச்சநல்லூர் சிதம்பரம்

முந்தைய கட்டுரைஉடல்மனம்
அடுத்த கட்டுரைகவிஞர் சி.மணி :அஞ்சலி