பூமணியின் அழகியல்

பூமணியின் எழுத்து இன்றைய வாசகனுக்கு என்ன உணர்வை உடனடியாக உருவாக்குகிறது? அவர் பிரபலமான இதழ்களில் எழுதியவரல்ல. நெடுங்காலமாகவே அவரது எழுத்து சிற்றிதழ்வட்டத்து வாசகர்களுக்காகவே பிரசுரிக்கப்பட்டது. அவர்கள் ஏற்கனவே இலக்கியங்களை வாசிக்கும் பயிற்சி பெற்றவர்கள். இயல்புவாத எழுத்தின் அலைகளற்ற நேரடித்தன்மையை அவர்களால் எளிதில் உள்வாங்கமுடியும். மேலும் உலகளாவிய தளத்தில் இயல்புவாதம் ஓர் அழகியல்முறைமையாகப் பெரிதும் பின்னகர்ந்துவிட்டது என்றே நினைக்கிறேன். இயல்புவாத எழுத்துக்களை மையப் போக்காகக் கொண்டிருந்த சீன எழுத்துக்களிலேயே இன்று அந்த அழகியல் இல்லை. ஆகவே நவீன உலக இலக்கியத்தில் அறிமுகத்துடன் இன்றைய தமிழிலக்கிய உலகில் நுழையும் புதுவாசகன் பூமணியைப்பற்றி என்ன நினைப்பான்?

இன்றைய வாசிப்பின் முக்கியமான ஊடகமாக இணையமே உள்ளது. சிற்றிதழ்கள் பெரும்பாலும் பழைய சிற்றிதழ்சார் எழுத்துக்களில் எஞ்சியவர்களின் களமாக மட்டுமே இன்றும் உள்ளன. பூமணியை இணையம் எப்படிப் பார்க்கிறது என்று தேடினேன்.’பூமணி எழுதிய ’பிறகு’ நாவல் உண்மையிலேயே ஒரு சாதனை என்பதில் ஐயமில்லை. எத்தனை யதார்த்தமான கதை. கொஞ்சம் கூட ஜோடனைகளோ தேவையற்ற வர்ணனைகளோ இல்லாத அருமையான படைப்பு. நாமும் அந்த கிராமத்தில் உலவுவது போன்ற ஒரு இயல்பு நடை. கதாநாயகியின் தந்தை முத்து முருங்கன் செத்துப்போனதை எவ்வளவு அழகாக நம் கண்முன்னே கொண்டு வருவார். கதையின் முக்கிய பாத்திரங்களில் ஒருவராக உலவும் கந்தையாவின் மரணத்தைப்பற்றியும் கூட சொல்லாமல், ஒரு அத்தியாயத்தின் துவக்கத்தில் ‘கந்தையா சிதையில் எரிந்துகொண்டிருந்தார்’ என்று திடீரென்று ஆரம்பிப்பார். நமக்குத் தூக்கி வாரிப்போடும்.வெற்று ஆர்ப்பாட்டங்கள் இல்லாததால், இலக்கிய வட்டம் தவிர வெளியில் அவ்வளவு சிலாகிக்கப்படாத ஒரு நல்ல எழுத்தாளர் பூமணி’ [சாரதா, சிலிகான் ஷெல்ஃப் இணையதளம்] என்ற வாசக அபிப்பிராயம் மிக இயல்பாகவும் துல்லியமாகவும் ’பிறகு’ நாவலை வகுத்துரைக்கிறது. பூமணி, யார் என்பதைச் சுட்டிச் செல்கிறது.

’வெக்கை’ பற்றி இன்னொரு வாசகக் கருத்து ‘கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என்று எங்கெல்லாம் அப்பாவும் மகனும் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்மையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஒளிந்து வாழும் இடத்தில் கிடைத்ததை சமைத்து சாப்பிடுகிறார்கள். இருவரும் தனிமையில் பேசும் சின்னச் சின்ன உரையாடல்களிலும், அளவான வாக்கியத்தாலும் கதை அழகாக நகர்கிறது. “அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணன், தங்கை, தம்பி, சித்தி, சித்தப்பா, நாய், ஆடு” என்று நாவலே அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது’ [கிருஷ்ணப்பிரபு] என்ற வாசகக் கருத்து வெக்கைநாவலின் சாராம்சத்தை மிக இயல்பாகத் தொட்டுக்காட்டுகிறது.

தமிழில் பூமணியின் நான்கு நாவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் அவரது முதலிரு நாவல்களே சாதனையாகக் கொள்ளப்படுகின்றன. பிறகு,வெக்கை இருநாவல்களையும் அவ்வாறு முன்னிறுத்தியவர்கள் சிற்றிதழ் விமர்சனமரபைச் சார்ந்தவர்கள். ஆனால் இந்த விமர்சனமரபுடன் தொடர்பே இல்லாத பொதுவாசகர்களும் கச்சிதமாக அதே முடிவுக்கு வந்திருப்பது வியப்பாக இருந்தது. இலக்கியம் வாசகனைத் தொடும் விதம் என்றுமே ஒன்றுதான், அதுவே உண்மையில் படைப்புகளை நிலைநாட்டும் பொது அளவுகோலாக ஆகிறது என்ற எண்ணம் ஏற்படுகிறது. வெற்றுக்கோட்பாடுகள் மூலம் பொய்யான மதிப்பீடுகளைச் சமைக்க முடியும், நிலைநாட்டமுடியாது என்று எண்ணிக்கொண்டேன்.

மேலே சொல்லப்பட்ட விமர்சனக்குறிப்புகளில் பூமணியின் எழுத்தின் அழகியலைப் பற்றிய மிகக்கச்சிதமான வரையறை தன்னியல்பாக அமைந்து வந்திருப்பதைக் காணலாம். பூமணி தமிழின் இயல்பு வாத [naturalist] இலக்கியத்துக்குப் பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர். அவரது ‘பிறகு’, ‘வெக்கை’ ஆகிய இரு நாவல்களும் ‘ ரீதி ‘ என்ற சிறுகதைத் தொகுப்பும் அவ்வகையில் முக்கியமானவை , முன்னோடியானவை.இன்றைய தலித் இலக்கியங்கள் பலவற்றிலும் உள்ள ஓங்கிய பிரச்சாரக் குரலோ, பிரச்சினைகளை எளிமைப் படுத்தும் போக்கோ இல்லாத சமநிலை கொண்ட கலைப் படைப்புகள் அவை. அவரது நாவல்கள் ஒரு வகையில் இயல்பு வாதத்தின் உச்சங்களைத் தொட்டமையினால்தான் தமிழில் தொடர்ந்து அடுத்த கட்ட எழுத்துக்கள் [யதார்த்தத்தையும் மீமெய்மையையும் பிணைக்கும் படைப்புகள் என்று இவற்றைத் தொகுத்துக் கூறலாம்]பிறக்க முடிந்தது.

இலக்கிய எழுத்துக்குப் பல அழகியல் வகைமாதிரிகள் உண்டு. பொதுவாக நாமெல்லாம் வாசிப்பது யதார்த்தவாதத்தைத்தான்[ரியலிசம்] என்ன நடந்ததோ அதை நடந்தது மாதிரியே சொல்வதே யதார்த்தவாதம். ஆனால் அதில் கதையை ஆர்வமூட்டும்படி சொல்லக்கூடிய, கதையின் மையத்தை உருவாக்கக் கூடிய, கதையைத் தொகுத்துத் தரக்கூடிய ஆசிரியன் இருந்துகொண்டே இருப்பான். நம்முடைய பொழுதுபோக்குக் கதைகள் பெரும்பாலும் யதார்த்தவாதம் சார்ந்தவை. ஆகவே இந்தவகை எழுத்தை நாம் சிரமம் இல்லாமல் புரிந்துகொள்கிறோம். இந்த இணையதளத்தில் உள்ள அனல்காற்று, ஊமைச்செந்நாய் ,மத்தகம் போன்ற கதைகள் யதார்த்தவாதக் கதைகள். தல்ஸ்தோய், அசோகமித்திரன் போன்றவர்கள் யதார்த்தவாத எழுத்தாளர்கள்.

யதார்த்தவாதத்தில் உள்ள ஆசிரியனின் பங்கேற்பைத் தவிர்த்துவிட்டால் அதுவே இயல்புவாதம் [நாச்சுரலிசம்] . இதில் கதை ‘அதன்போக்கில்’ விடப்படுகிரது. புறவுலகம் ஒரு புகைப்படக்கருவியில் தெரிவதுபோலப் பதிவாக்கப்படுகிறது. அக ஓட்டங்கள் அப்படியே சொல்லப்படுகின்றன. எதுவும் விளக்கப்படுவதில்லை. மையப்படுத்தப்படுவதில்லை. சுருக்கப்படுவதில்லை. [ அதாவது இப்படி ஒரு பாவனை இந்தவகை எழுத்தில் உண்டு. உண்மையில் சுருக்காமல் மையப்படுத்தாமல் எதையுமே எழுதமுடியாது] இயல்புவாதம் ஆசிரியன் இல்லாமல் இயங்கும் புனைவுலகம் எனலாம்

இயல்புவாத எழுத்து, பண்பாட்டு நுட்பங்களை மிகச்சிறப்பாகக் காட்டக்கூடியது. சிந்தனைகளை முன்வைப்பதற்கு உதவுவது அல்ல. இதற்கு ஒரு முக்கியமான இலக்கிய இடம் உண்டு. தமிழில் எம்.கோபாலகிருஷ்ணன்[ மணற்கடிகை] கண்மணி குணசேகரன் [ அஞ்சலை] .வேணுகோபால் [ வெண்ணிலை- சிறுகதைகள்] போன்றவர்கள் இயல்புவாத எழுத்தின் சிறந்த உதாரணங்கள். பூமணியே அதன் தமிழ் முன்னோடி.

இயல்புவாத எழுத்தைக் கதையோட்டத்தின் சுவாரசியத்துக்காக வாசிக்க முடியாது. அன்றாட வாழ்க்கையில் எப்படி நிகழ்ச்சிகள் செல்கின்றனவோ அதேபோல இயல்பாகத்தான் கதை ‘நகரும்’. நிகழ்ச்சிகள் உத்வேகமாக இருக்காது. அன்றாடவாழ்க்கையில் உள்ள வேகமே அதற்கு இருக்கும். ஆனால் அது அன்றாட வாழ்க்கையில் நாம் காணத்தவறும் சிறு சிறு நுட்பங்களைத் தொட்டுச்செல்லும். பூதக்கண்ணாடி வைத்து அன்றாட வாழ்க்கையைப் பார்ப்பது போல என்று வைத்துக்கொள்ளுங்கள். நுட்பங்களை மட்டுமே கவனித்து வாசிப்பவர்களுக்கு உரிய இலக்கிய அழகியல் இது

இத்தகைய எந்த கோட்பாட்டுப்புரிதல்களும் இல்லாத நேரடிவாசகர்கள் புனைவின்மூலமே அழகியலைத் துல்லியமாக வந்தடைந்திருப்பதையே மேலே சுட்டிக்காட்டிய இரு கருத்துக்களும் காட்டுகின்றன. அதுவும் நெடுநாட்கள் முன்வாசித்ததை நினைவுகூர்ந்து சொல்லும்போது இன்னும் முக்கியமானதாகிறது. படைப்பில் எது காலப்போக்கில் நம் மனதில் நீடிக்கிறதோ அதுவே நம்மைப்பொறுத்தவரை அதன் சாராம்சம் என்று சொல்லமுடியும்.
சாரதாவின் பார்வையில் 1. யதார்த்தமான கதையோட்டம் 2. ஜோடனைகளோ வர்ணனைகளோ இல்லாத தன்மை. உண்மையான வாழ்க்கையனுபவத்தை அளிக்கும் இயல்பு 4. சாதாரணமாகவும் குறைத்தும் சொல்லும் முறை ஆகியவை பூமணியின் இயல்புகள். அதற்கு உதாரணமாகக் கந்தையாவின் மரணம் அவரால் சுட்டப்படுகிறது.

கிருஷ்ணப்பிரபு வெக்கைநாவலின் சாராம்சமாக சுருக்கி அளிப்பது மூன்று அம்சங்களை. .1.கதை மாந்தருடனேயே செல்லும் அனுபவத்தை அளித்தல் 2. சின்னச்சின்ன இயல்பான உரையாடல்கள் 3. அன்பால் பிணைக்கப்பட்ட ஓர் உலகத்தை சாதாரணமாக உணர்த்திச்செல்லுதல்.

இரு விமர்சனங்களும் வாசகர்கருத்தாக சுருக்கமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் துல்லியமாகப் பூமணியின் அழகியலைத் தொட்டுவிட்டிருக்கின்றன. இயல்புவாதத்தின் அழகியலே இதுதான் என ஒரு விமர்சகன் சொல்லிவிட முடியும். இயல்பான,மிகையற்ற, தகவல் சார்ந்த ஓர் உலகத்தை உருவாக்கிக்காட்டுவது அது. ‘இது உண்மை, அவ்வளவுதான்’ என்று சொல்லிச் செல்லக்கூடியது. அதில் வாசகன் நிகழ்ச்சிகளின் வேகத்தையோ,உணர்வெழுச்சிகளையோ,கவித்துவத்தையோ எதிர்பார்க்கமுடியாது. அவற்றை உருவாக்கும்போதுகூட ஆசிரியரல்ல அந்த வாழ்க்கைதான் அவ்வுணர்ச்சிகளை அளிக்கிறது என அது வாசகர்களை நம்பச்செய்தாகவேண்டும்.

தமிழின் முதல் இயல்பு வாதப் படைப்பு எது? இதற்கு பதில் பல வகைப் படலாம் என்றாலும் முக்கியமான, இலக்கண சுத்தமான, முன்னோடியான, இயல்பு வாதப் படைப்பு ஆர்.ஷண்முக சுந்தரத்தின் ’நாகம்மாள்’தான் என்பது வெளிப்படை. இயல்பு வாதத்தின் இலக்கணம் என்ன? துல்லியமான தகவல்கள், விமரிசனப் பாங்கற்ற சித்தரிப்பு நடை, முற்றிலும் நம்பகமான [அதாவது செய்திச் சித்தரிப்புத் தன்மை கொண்ட] கதையாடல் என்று சிலவற்றைக் கூறலாம். மேற்கே இயல்பு வாதம் இந்த அம்சங்களுடன் அப்பட்டமான அழுக்கு மற்றும் கொடுமைச் சித்தரிப்புகள் முதலியவற்றையும் சேர்த்துக் கொண்டது. அதாவது சித்தரிப்பாளனின் குரல் ஒழுக்க நெறிகளையோ, அழகியல் நெறிகளையோ கூடக் கணக்கில் கொள்ளாத அளவுக்கு நேரடியானதாக மாறியது.

எனினும் தமிழில் அப்படி நடக்கவில்லை. அதே சமயம் நாகம்மாள் கதையில் வரும் பேச்சுகள் அந்தக் காலத்தை வைத்துப் பார்க்கும் போது அப்பட்டமானவையேயாகும். கொங்கு வட்டார வாழ்க்கையின் அறிக்கையாகவும், அப்பட்டமான சித்தரிப்பாகவும் தன்னை பாவனை செய்து கொண்டது நாகம்மாள். [இலக்கியப் படைப்பு எந்நிலையிலும் முன்வைப்பது ஒரு புனைவுப் பாவனையையே, உண்மையை அல்ல. உண்மை அதை வாசிக்கும் வாசகனால் அவன் அந்தரங்கத்தில் உருவாக்கப்படுவது மட்டுமே]. ஆகவே அக்கால கட்ட வாசகனுக்கு அது சுவாரசியம் தரவில்லை,அத்துடன் சற்று அதிர்ச்சியையும் தந்தது. அதை ஒரு முக்கியமான இலக்கியப் படைப்பாக முன் வைத்ததும், விமரிசன பூர்வமாக நிறுவியதும் க.நா.சுப்ரமண்யமே. பிறகு வெங்கட் சாமிநாதன்.

நாகம்மாளுக்குப் பிறகு நீல.பத்மனாபனின் ‘தலைமுறைகள்’, ‘உறவுகள்’ இந்த வகை இலக்கியத்தின் முக்கியமான உதாரணங்கள் ஆகின. பிறகு ஹெப்ஸிபா ஜேசுதாசனின் ‘ புத்தம் வீடு’,அதன் பிறகு பூமணியின் வருகை நிகழ்ந்தது. க.நா.சுவைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து முன் வைத்த உதாரண இலக்கிய வடிவம் இதுவே. பிறகு வெங்கட் சாமிநாதனும் இப்பார்வையையே கொண்டிருந்தார். இரண்டு அம்சங்கள் இதில் கவனத்துக்கு உரியவை. ஒன்று அக்காலத்தில் சோஷலிச யதார்த்தவாதம் அசாதாரண முக்கியத்துவம் பெற்றிருந்தது. ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’ இதற்கு முன்னோடியாக இருந்தது. [கடைசியில் ரகுநாதனே இந்த அழகியல் வடிவம் பொருத்தமற்றதும், செயற்கையாக உண்டு பண்ணப் பட்டதுமான ஒன்று என்று கூற நேர்ந்தது, 1992 இல்]. செ.கணேசலிங்கனை மாபெரும் நாவலாசிரியராக முன்னிறுத்திக் கைலாசபதியும், சிவத்தம்பியும் இவ்வடிவத்தைப் பிரச்சாரம் செய்தனர். இதன் வெற்றி உச்சமாக ஜெயகாந்தனின் இலக்கிய திக் விஜயம் அமைந்தது. இவ்வடிவம் அடிப்படையில் எழுத்தாளனின் [சமூக சீர்திருத்த] நோக்கத்தையே தன் மையமாகக் கொண்டிருந்தது.

சோஷலிச யதார்த்தவாதம் என்பது இன்று பொருத்தமில்லாத சொல்லாட்சி. ஆகவே இதை விமரிசன யதார்த்தவாதம் என்று சொல்லலாம். இந்த அழகியல் வடிவம் மீது க.நா.சு மரபுக்குக் கடுமையான அவநம்பிக்கை இருந்தது. ஆசிரியன் குரலை அவர்கள் வடிவத்தில் உட்புகும் புற அம்சமாகவே கண்டனர். படைப்பு என்பது வாசகக் கற்பனையில் உருவாவது என்று நம்பிய அவர்களுக்கு ஆசிரியனின் குரலை மையமாகக் கொண்ட விமரிசன யதார்த்த வாதம் ஒரு வகைத் திரிபு நிலையாக, கலையில் அரசியலின் அத்து மீறலாகப் பட்டது. அந்நிலையில் இயல்பு வாதத்தின் துல்லியமான மெளனம் அவர்கள் விரும்பி ஏற்கும் அழகியல் வடிவமாக இருந்ததைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நாகம்மாள், தலைமுறைகள், பிறகு ஆகிய நூல்கள் தமிழ் அழகியல் [வடிவ வாத] விமரிசகர்களால் போற்றப் பட்டமைக்கு முக்கியமான காரணம் அவை அவர்களின் தரப்பை விளக்கும் முன்னுதாரணங்களாக அமைந்தன என்பதே. அழகியல் குறித்த பேச்சு இலக்கியத்தில் ஜனநாயகத் தன்மை உருவாவதற்கோ, எளிய மக்களின் வாழ்க்கை இலக்கியத்தின் கருப் பொருள் ஆவதற்கோ எதிரான ஒன்றல்ல என்று காட்ட இவர்கள் விரும்பினார்கள். முற்போக்கு என்பது பிரச்சாரம் மட்டுமல்ல என்று சொல்லவும் இவை பயன்பட்டன. மேலும் அன்று பிரபல இதழ்கள் மூலம் பரவலாக ரசிக்கப்பட்ட ஆர்வி, எல்லார்வி, சாண்டில்யன், பி.வி.ஆர் ரக ‘அதி சுவாரசியக்’ கதைகளுக்கு மாற்றாக இக்கதைகளை முன் வைக்க இவ்விமரிசகர்கள் முயன்றனர்.

க.நா.சுவுக்கும்,வெங்கட் சாமிநாதனுக்கும் அடிமனதில் இவ்வகைப் படைப்புகள் மீது தான் உண்மையான ரசனை இருந்ததோ என்று இன்று படுகிறது. குறிப்பாக வெங்கட் சாமிநாதனின் இன்றைய விமரிசனங்களைப் பார்க்கும் போது. ‘பிறகு’ விற்குப் பிறகு நம் இயல்புவாத மரபில் பல முக்கியமான எழுத்துக்கள் உருவாகியுள்ளன. இன்னும் சொல்லப் போனால் விமரிசன யதார்த்தம் எழுபதுகளில் முக்கியத்துவம் இழந்த பின்பு வந்த பெரும்பாலான படைப்பாளிகள் இயல்பு வாத எழுத்தையே தங்கள் பாணியாகக் கொண்டனர். மேலாண்மை பொன்னுசாமி, கந்தர்வன் போன்று சில விதி விலக்குகளே உள்ளன. முதல் தலைமுறையில் பாவண்ணன் [சிதைவுகள், பாய்மரக்கப்பல்] சுப்ர பாரதி மணியன் [மற்றும் சிலர், சுடுமணல், சாயத்திரை] சி.ஆர்.ரவீந்திரன் [ஈரம் கசிந்த நிலம்] சூரிய காந்தன் [மானாவாரி மனிதர்கள்] ஆகியவர்களையும்,அடுத்த தலைமுறையில் பெருமாள் முருகன் [ஏறு வெயில், நிழல் முற்றம், கூளமாதாரி] இமையம் [கோவேறு கழுதைகள், ஆறுமுகம்] சோ.தருமன் [தூர்வை] ஸ்ரீதர கணேசன் [உப்பு வயல், வாங்கல்,சந்தி] தங்கர் பச்சான் [ஒன்பது ரூபாய் நோட்டு] போன்றவர்களையும் முக்கியமாகச் சொல்லலாம். இவை அனைத்துமே வெங்கட் சாமிநாதனின் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளன என்பது விமரிசன ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. அவ்வகையில் பார்த்தால் ஆர். சண்முக சுந்தரம் முதல் பூமணி ஈறாக உள்ள படைப்பாளிகளின் மூலம் இயல்பு வாதத்தை இவ்விமரிசகர்கள் தமிழில் ஆழமாக நட்டு விட்டார்கள் என்பதைக் காணலாம். இன்று வெங்கட் சாமிநாதன் கொண்டாடுவது இவ்வெற்றியைத்தான்.

இவர்களில் பூமணி மேலும் அழுத்தம் பெற்ற /பெற்றாக வேண்டிய படைப்பாளி. நீல. பத்மநாபன் உயர் சாதியை சேர்ந்த வாழ்க்கையை அதன் மதிப்பீடுகளை முன் வைத்த நாவலாசிரியர். அவரது படைப்புலகம் படிப்படியான சரிவையே எப்போதும் சித்தரிக்கிறது. பூமணி தாழ்த்தப் பட்ட ஜாதியில் இருந்து வந்த, அச்சாதியைப் பற்றி எழுதிய படைப்பாளி [அருந்ததியர் அல்லது சக்கிலியர்]. ஆனால் படைப்புக்கு வெளியே இருந்து பெறப்பட்ட எந்தப் புரட்சிகர யதார்த்தங்களையும் அவர் முன் வைக்கவில்லை. கூட்டு அரசியல் குரல்களின் எதிரொலியாகவுமில்லை. இது தமிழில் மட்டுமல்ல இந்திய மொழிகளில் கூட ஒரு ஆச்சரியம்தான். கன்னட மொழியிலும், மராட்டி மொழியிலும் தலித் இலக்கிய இயக்கம் பிறந்து ஒரு தலைமுறை தாண்டிய பிறகு தான் அப்படைப்பாளிகள் கூட்டு அரசியல் குரலுக்கு இலக்கியத்தில் பெரிய இடமில்லை என்று புரிந்து கொள்ள ஆரம்பித்தனர். [சமீபத்தில் தான் தயா பவார், தேவனூரு மகாதேவ ஆகியோர் அப்படி சொல்லியிருக்கின்றனர்]. மாறாக எழுதத் தொடங்கிய காலத்திலேயே தான் எழுதுவது தன்னால் உருவாக்கப்படும் ஒரு புனைவு யதார்த்தமே என்றும், அதற்குப் படைப்பின் அந்தரங்கத் தளத்திலேயே மதிப்பு என்றும் உணர்ந்து கொண்ட படைப்பாளி பூமணி. இலக்கியம் ஒருபோதும் அரசியல் செயல்பாடுகளின் நிழலாக இருக்காது என்று உணர்ந்தவர். தலைமைப் பொறுப்பை எந்நிலையிலும் அரசியல்வாதியிடம், அது எத்தனை புரட்சிகர அரசியலாக இருந்தாலும் கூடத் தந்து விட முன் வராதவர்.

அவரது படைப்புகள் எந்தப் புறக் குரலையும் பிரதிபலிக்கும் வேலையைச் செய்யவில்லை. ஆகவேதான் தமிழில் தலித் இலக்கிய மரபு ஒன்றை உருவாக்க முயன்றவர்கள் பூமணி போன்ற ஒரு பெரும் படைப்பாளி முன்னரே இருந்த போது கூட அவரைப் பொருட்படுத்தவில்லை. அவர்கள் ஒருவேளை அளித்திருக்கக் கூடிய கெளரவங்களை ஏற்கப் பூமணி முன் வரவுமில்லை. முதலும் முடிவுமாக அவர் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே முன் வைத்தார். அதற்கு மேல் விழும் எந்த அடையாளமும் தன் படைப்பைக் குறுக்கும் என்று அவர் உணர்ந்திருந்தார். “அழகியலுக்குப் பதிலாக அரசியலை” முன் வைக்கும் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் இலக்கிய அழகியலின் அடிப்படையான வலிமையைக் காட்டும் முன்னுதாரணமாகப் பூமணி இருந்தார். தமிழில் அந்த ‘அரசியல்’ இலக்கிய வெற்றி பெறவில்லை; பூமணியின் முன்னுதாரணம்தான் வென்றது என்பது சமீப கால வரலாறு.

இயல்புவாதத்தின் நடை மண்ணாலும் இரும்பாலும் ஆக்கப்பட்டது என்று சொல்லப்படுவதுண்டு. பிரபலமான பல ருஷ்யநாவல்களை, குறிப்பாக அலெக்ஸி தல்ஸ்தோயின் சக்ரவர்த்தி பீட்டர் போன்ற நாவல்களை, இரும்பால் உருவாக்கப்பட்ட நாவல் என்று சொல்லலாம். பூமணியின் நாவல் மண்ணால் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு கணத்திலும் மண்ணை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும் நடை அது. மண்ணின் காட்சிகள், மண் சார்ந்த தகவல்கள், மண் சார்ந்த படிமங்கள். கரிசலில் சென்றுகொண்டிருக்கும்போது சிலசமயம் கரிய மண்ணில் நிற்கும் கரிய மரங்களும் வாழும் கரிய மக்களும் மண்ணைக்குழைத்துக்கட்டிய வீடுகளுமாக அங்கே எல்லாமே அந்தக்கரிய மண்ணால் ஆனவையோ என்ற பிரமையை உருவாக்கும். அந்த அனுபவத்தைப் பூமணியின் நடை எப்போதும் அளித்துக்கொண்டிருக்கிறது.

தமிழில் அப்படி மண்ணால் ஆன நடை கொண்ட முதல் படைப்பாளிகள் என ஆர்.ஷண்முகசுந்தரம் , கி.ராஜநாராயணன் இருவரையும் சொல்லலாம். கரிசல் மண்ணில் இருந்து கி.ராவையும் கொங்குமண்ணில் இருந்து ஷண்முகசுந்தரத்தையும் பிரித்துப்பார்க்கமுடியாது. ஷண்முகசுந்தரத்தின் ’சட்டிசுட்டது’ தமிழில் வேளாண்மை வாழ்க்கை பற்றி எழுதப்பட்ட முதல் பெரும்படைப்பு என்று சொல்ல முடியும். மண்ணைக் கிண்டி மண்ணில் வாழ்ந்து மறையும் பெரிய பண்ணாடி மண்ணின் ஒரு பகுதியாகவே தோன்றும் அந்த மகத்தான பிரமையே அந்நாவலை இலக்கியமாக ஆக்குகிறது. அதன்பின் மண்ணின் சுவையை ஒவ்வொரு வரியிலும் தேக்கிக்காட்டிய கி.ராஜநாராயணனின் ஆக்கங்கள்.

கி.ராஜநாராயணனுக்குப் பின் பூமணியையே சொல்லவேண்டும். ஆனால் ஒரே ஒரு தனிப்படைப்பை நடுவே வைக்கலாம். கு.சின்னப்பபாரதியின் தாகம். அந்நாவலின் பிற்பகுதி கட்சிப்பிரச்சாரத்தன்மை கொண்டதாகச் சுவைகெட்டாலும் கூட அதன் முதல்பகுதியில் மண் ஒரு தனிமனித ஆன்மாவுடன் கொண்டுள்ள உறவின் அற்புதமான சித்திரம் உள்ளது. சந்தைக்குப் போயிருந்த கதாநாயகன் மண்மணத்தை முகர்ந்ததும் தன் ஊரில் மழை பெய்திருக்கிறதென உணர்ந்து ஓடிவரும் காட்சி சட்டென்று மனதில் தோன்றுகிறது. மழை ஊறிய மண்ணின் மணத்தை அடைந்து அவன் குதூகலிப்பது அந்நாவலின் சாராம்சத்தைக் காட்டும் காட்சி.

மேலே சொல்லப்பட்ட படைப்பாளிகளின் நடையில் இருந்து பெரிதும் வேறுபட்டது பூமணியின் நடை. ஆர்.ஷண்முகசுந்தரம் இயல்புவாத அழகியல் கொண்டவர் என்றாலும் அவரது மொழிநடை,கதைசொல்லிக்குரிய சுருக்கம் கொண்டதுதான். கி.ராஜநாராயணன் மகத்தான கதைசொல்லி. ஒரு நவீன குலக்கதைப்பாடகன் அவர். அந்தக்கதைசொல்லியின் வித்தாரமும் தளுக்கும் தரிசனமும் இழைந்தோடும் நடை அவருடையது. அவரது புனைவுலகில் இருந்தே ஊக்கம் கொண்டு எழுதவந்ததாகப் பூமணி சொன்னாலும்கூட அவரது நடை முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. அது கி.ராஜநாராயணன் நடைபோலவே நேரடியான உரையாடல்தன்மை கொண்டது. ஆனால் எந்தவித அலங்காரமும் இல்லாமல் யதார்த்தமாகப் பேசுவது போலத் தெரிகிறது.

கி.ராஜநாராயணனின் மொழிநடைக்கும் பூமணியின் மொழிநடைக்கும் முதல்பார்வையில் பெரிய வேறுபாடேதும் இல்லை. கி.ராவின் மொழிநடை ‘நடக்கும்போது’ பூமணிபோலவே இருக்கிறது. ஆனால் சட்டென்று அது பறக்க ஆரம்பித்துவிடுகிறது. பூமணியின் நடை நடக்கும், பின் கண்ணுக்குத்தெரியாமல் மண்ணுக்கு அடியில் ஊர்ந்துசெல்ல ஆரம்பித்துவிடும். கரிசலின் இந்த இரு பெரும் ஆசிரியர்களின் நடையை ஒப்பிட்டுப்பார்ப்பதும் அந்த இலக்கியத்தையும் மண்ணையும் அறிந்துகொள்வதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக அமையக்கூடும்.

கி.ராஜநாராயணன் மிக சகஜமாக பேச்சுப்பாவனையில் கதையைச் சித்தரித்துச்செல்லக்கூடியவர். ‘ பெண்கள் இருக்கும் இடங்களில்தான் சதா அவனைப் பார்க்கலாம். ஏதாவது அதிசயமான சங்கதியைக் கேள்விப்பட்டால் பட்டென்று கையைத்தட்டி இடதுகை மணிக் கட்டின் மேல் வலது முழங்கையை ஊன்றி ஆள்காட்டி விரலைக் கொக்கிபோல் வளைத்துத் தன் மூக்கின்மேல்ஒட்டவைத்துக் கொள்வான். அகலமான கருஞ்சாந்துப் பொட்டை வைத்து வெற்றிலை போட்டுக்கொண்டு கீழ் உதட்டைத் துருத்தியும், நாக்கை நாக்கை நீட்டியபடியும் சிகப்பாகப் பிடித்திருக்கிறதா என்று அடிக்கடி பார்த்துக்கொள்வான். தலைமுடியை அள்ளிச் சொருகிக் ‘கொப்பு’ வைத்துப் பூவைத்துக்கொள்ளுவான். அவன் அணிந்திருக்கும் பாடி பெண்கள் அணிந்துகொள்ளும் ஜம்பரின் மாடலில் அமைந்திருக்கும். மேலே போட்டுக்கொள்ளும் துண்டை அடிக்கடி மாராப்பை சரி பண்ணுவதுபோல் இழுத்து இழுத்து
விட்டுக்கொண்டு இடுப்பை இடதும் வலதும் ஆட்டி அசல் பெண்களைப்போல் கையை ஒய்யாரமாக வீசி நடப்பான். எவ்வன புருஷர்களைக் கண்டுவிட்டால் கோமதிக்கு எங்கோ இல்லாத வெட்கம் வந்துவிடும்.’ [கோமதி] என சாதாரணமாக ஒரு கதைமனிதரைக் காட்சிப்படுத்துவார்.

மன ஓட்டங்களை அல்லது மனநிலைகளைக்கூட கி.ரா நிகழ்ச்சிகளாகவும் காட்சிகளாகவும்தான் சொல்கிறார். ‘ஒருநாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில்ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பித் தன்பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும்பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி, படம் சுத்தமாகிவிட்டதென்று.
படத்தை முகத்துக்கு நேராகப் பிடித்துத் தலையைக் கொஞ்சம் சாய்த்துக் கொண்டு பார்த்தாள். அப்புறம் இந்தப் பக்கமாகச் சாய்த்துக் கொண்டு பார்த்தாள்.சிரித்துக் கொண்டாள். காண்பிக்கப் பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்றும் சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒருவரும் இல்லை. வீட்டை நோக்கி வேகமாக நொண்டிஅடித்துக் கொண்டே போனாள், சந்தோஷம் தாங்க முடியாமல்.’[கதவு] அந்தக்குழந்தையின் உள்ளம்தான் இந்தக்கதையில் காட்சியாக்கப்பட்டிருக்கிறது

இவ்விரு அம்சங்களையும் நாம் பூமணியின் நடையில் ஏறத்தாழ இப்படியே காணமுடியும். ‘நேற்றுப் போலிருக்கிறது. இடுப்புத்துணியோடு சின்னப்பயலாக வந்தான். பம்பைத்தலையும் சொறட்டை உடம்பும். பேச்சுத்தானெ பேசுவானே. அந்தக் குறும்பு இன்றைக்கு கழுமொரடு மாதிரி வளர்ந்துவிட்டபிறகும் போகவில்லை. கலியாணம் முடித்திருந்தாலும் ரெண்டு பிள்ளைக்குத் தகப்பனாகியிருப்பான்’ [பிறகு] ஒரு கதைமனிதனின் தோற்றத்தையும் இயல்பையும் சாதாரணமான பேச்சுப் போல இயல்பாக அறிமுகம் செய்கிறார் பூமணி. பெரும்பாலும் கிராமங்களில் செய்வதுபோல ஒருவரின் தோற்றத்தையும் இயல்பையும் இணைத்துக் காட்டுகிறார். நுண்ணிய அவதானிப்பு என அப்போது எதுவும் தோன்றுவதில்லை. ஆனால் கச்சிதமாக இருக்கும். கருப்பனின் இயல்பில் எப்போதுமுள்ள குறும்பு அந்த முதல் விவரணையிலேயே வந்து விடுகிறது. அவனுடைய உடல்மொழியும்.

ஒரு சிறுவனின் மன ஓட்டத்தைப் புறக்காட்சிகள் வழியாகச் சித்தரிக்கிறார் பூமணி. ’மைதானத்தைச் சுற்றி ஏகக் கூட்டம். நடுவில் விளையாட்டுக்காரர்கள் சிதறிக் கிடந்தார்கள். எல்லாரும் பெரிய பெரிய ஆட்கள். சிலருக்கு மண்டை வழுக்கை சாயங்கால வெயிலுக்கு மின்னியது. வற்றிய குளத்து அயிரை மீன்களாக அவர்கள் துள்ளி விளையாடும்போது பையன்களாகிவிட்டார்கள். அவன் விளையாட்டைச் சொகமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்கு வந்தான். மேச் காய்ச்சல் சின்னப்பையன்களைப் பிடித்துக் கொண்டது. வாழைத்தார்க் காம்பு வைத்து ரோட்டில் ஹாக்கி விளையாடினார்கள். கல்லு கூட பந்துதான். அப்படி விளையாடணும் போல் எச்சூறும். அம்மா விடணுமே. சே இந்த அம்மா ரொம்ப மோசம்’ [நிலை] இந்த வரியை எந்த கி.ராஜநாராயணன் ஆக்கங்களுக்குள்ளும் கலந்து விடலாம். தீப்பெட்டியைக் கண்டடைந்த கிராவின் கதாபாத்திரத்துக்கும் கால்பந்தை முதலில் பார்க்கும் பூமணியின் கதாபாத்திரத்துக்கும் பெரிய வேறுபாடு ஏதுமில்லை.

அதே சமயம் மிகநுணுக்கமான பல வேறுபாடுகளை இருவர் நடையிலும் காணலாம். அந்த வேறுபாடுகளே பூமணியை இயல்புவாத அழகியல்காரராக நமக்குக் காட்டுகின்றன. கி.ரா. அபூர்வமாக நேரடியான பேச்சுவழக்கிலும் கதை சொல்வதுண்டு. ’அவருக்கு இருப்பு வாசத் திண்ணெதான். எப்படிக் கூடியும், ஓராளாவது நெல்யம் , பாக்க வந்துரும், கொஞ்சம் , வெத்திலைப் பாக்கு, ஒரு பொடிப்பட்டை, கால்ரூவா தெச்சணை. கால்ரூவாதான் .. ண்ணாலும் சும்மாப்போகுதா ? கறிக்குத் தேங்கா வாங்கிக்கிடலாமில்லெ. அந்தப் பொடிப் பட்டை தான் உசிரு’ [தாச்சணியம்] பூமணியின் கதைகளில் இந்த அம்சத்தை அனேகமாகக் காணமுடியாது. ஏனென்றால் அந்தக்கதைசொல்லியின் தனியாளுமை கதைமொழியில் குடியேறிவிடுகிறது. அவரது விமர்சனமும் தரிசனமும் கதைக்குள் நிறைகிறது. இயல்புவாத அழகியலுக்குரிய உள்ளது உள்ளபடி என்ற அம்சம் பலவீனப்படுகிறது. பூமணி கதையை எப்போதும் ‘பற்றற்ற’ புறவயத்தன்மையுடன் காட்டவே விரும்புகிறார்.

இன்னொரு அம்சம் கி.ராஜநாராயணனின் வர்ணனைகள். ’ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ளக் கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின் காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும். அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது, கஞ்சியைக் ‘கொண்டாகொண்டா’ என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாய்ப் பருப்புக்கறி விட்டு நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய் வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.’ [கன்னிமை]

மிகுந்த ரசனையோடு சொல்லிச்செல்லப்படும் சுவையனுபவங்கள் கி.ராஜநாராயணனின் கதைகளின் அழகியலைத் தீர்மானிக்கின்றன. அந்தக்கதைகளின் மையத்துடன் நேரடியாக அவை சம்பந்தப்பட்டிருக்குமென ஒரு உறுதியுமில்லை. ஆனால் அவை இல்லையென்றால் அந்தக்கதை மிகப்பலவீனமாகிவிடுவதையும் காணலாம். பூமணி அந்த வரிகளை எழுதியிருந்தால் ஒருகதாபாத்திரம் என்ன சாப்பிட்டது என்ற ’தகவல்’ மட்டுமே அக்கதையில் இருக்கும். ஒருபோதும் அந்த சுவையைச் சொல்ல, அந்த நேரத்து மன எழுச்சியை விவரிக்க, ஆசிரியர் முயலமாட்டார். ஆனால் ‘தேவையற்ற ஒரு வர்ணனையும் இல்லை’ என்று பூமணியின் கதையுலகை ரசித்துக்கூறும் அதே வாசகப்பிரக்ஞை ‘தேவையற்ற’ கி.ராஜநாராயணனின் வர்ணனைகளை ‘அனுபவத்தை அப்படியே பகிர்ந்துகொள்ளும் வர்ணனைகள்’ என்று விதந்தோதக்கூடும்.

வறண்ட கரிசலில் பசித்தலையும் சிறுவர்கள் அணில் பிடித்துச் சுட்டுத்தின்கிறார்கள். ’சுட்டெடுத்த அணில்களை சப்பையும் சதையுமாப் பிய்த்து சூடேறப் போட்ட கற்களில் ஒற்றி நீருறிஞ்ச வைத்தார்கள். பிறகு மூன்று பங்காய் வைத்துக் கல்லாங்கூறு போட்டுப் பகிர்ந்து தின்றார்கள். கையைப் புழுதியில் துடைத்துவிட்டு அவர்கள் எழுந்து பார்த்தபோது ஆடுகள் அனேகமாய்த் தென்னமரத்துக் கிணற்றை எட்டியிருந்தன’ என மூன்றே வரிகளில் அந்த அனுபவத்தைப் பூமணி கறாராகக் கடந்துசெல்கிறார். கி.ராஜநாராயணன் இந்த இடத்தை எப்படி எழுதியிருப்பார் என ஒரு வாசகன் ஊகிக்கமுடிந்தால் பூமணியின் அழகியலை எளிதில் அவனால் வகுத்துக்கொள்ளமுடியும்.

காட்சியை மிகக்குறைவான தகவல்களுடன் சொல்லவே பூமணி எப்போதும் முயல்கிறார். ‘கரிசல் புழுதியை முகர்ந்த வெள்ளாடுகள் விதறுபட்டு ஓங்கரித்தன. பட்டுக்கிடந்த இலந்தைச்செடியையும், கொம்பட்டி நெற்றையும் கொறிப்பதுடன் அவை அடங்குவதாயில்லை. ரோட்டோரம் சில தோட்டப் பசப்புக்களைத் தவிர எட்டாக் கை வரையில் ஒரே கரிசல் விரிப்புத்தான் கருகிக் கிடந்தது.’ என்றோ ‘ கமலை மாடுகள் கக்கிய நுரைக்குமிழ்கள் பறந்தவண்ணமிருந்தன. கமலையடித்த கிழவர் கூனைக்கொருக்க கிணற்றுக்குள் எட்டிப் பார்த்துக்கொண்டார். ஒரு கூனை தண்ணீர் ஊற்ற மாட்டு வாலைப் பிடித்துக்கொண்டு ரொம்ப தூரம் வடத்தில் உட்கார வேண்டியிருந்தது’ என்றோதான் பூமணி காட்சிகளைச் சொல்கிறார். இந்த சிறிய வரிகளுக்குள் கரிசலின் வறட்சியும் வெறுமையும் துல்லியமாகவே பதிவாகின்றன. பட்டுக்கிடந்த செடிகளின் நெற்றுக்களைக் கொறிக்கும் ஆடுகளும், கமலையில் நெடுநேரம் சோர்ந்து அமர்ந்து நீர் இறைக்கும் கிழவரும் இரு திரைப்படக் காட்சித்துணுக்குகள் போலக் கரிசலின் மொத்த விரிவையும் நமக்குக் காட்டிவிடுகின்றன.

கரிசலின் இரு கதைசொல்லிகள் கி.ராஜநாராயணனும் பூமணியும். மிக நெருக்கமானவர்கள், மிக தூரமானவர்கள். ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்ளும் இரு கலைஞர்கள். அவர்களால் கரிசல் தமிழிலக்கியத்தில் அழியாத இடம் பெற்றது. ’முள்வேலிக்குள் சிக்கிக் கொண்ட கிழிந்த துணியெனப் படபடத்தபடியே ஆகாசத்தில் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் சூரியனும், ஆட்டுஉரல்களில்கூட நிரம்பி வழியும் வெயிலும், குடிநீருக்காக அலைந்து திரியும் பெண்களும், கசப்பேறிய வேம்பும், கானலைத் துரத்தியலையும் ஆடுகளும், தாகமும் பசியும் அடங்காத காட்டு தெய்வங்களும் கொண்டதுதான் கரிசல் வெளி.

’கரிசலில் பிறப்பவர்கள் இயல்பிலே வெக்கை குடித்தவர்கள். வாழ்க்கை இவர்களுக்கு எவ்விதமான சுகபோகத்தையும் தந்துவிடவில்லை. தினப்பாடுகளைக் கடந்து போவதற்கே சமர் செய்து பழகிய மனிதர்கள். குறிப்பாக இங்குள்ள விவசாயிகள் வானத்தோடு பேசிப் பழகிப்போனவர்கள். மழையைக் கொண்டு செல்லும் மேகம் வேறு ஊரை நோக்கிப் போகிறதே என்று ஆத்திரப்பட்டு மேகங்களை விரட்டி மடக்கி இழுத்துவரப் பின் தொடர்பவர்கள்’ என எஸ்.ராமகிருஷ்ணன் கரிசலை ஒரு கட்டுரையில் விவரிக்கிறார்.

ஊரைக் கைவிட்டுச்செல்லும் மேகங்களும் காலியிடங்களிலெல்லாம் நிறைந்திருக்கும் ஒளிவிடும் வெயிலும் கொண்ட கரிசல்வெளியைச் சித்தரித்த பூமணி, அந்த மண்ணைத் தமிழிலக்கியத்தில் ஓர் உயிர்ப்படலமாகப் பரப்புவதில் வெற்றிகொண்ட கலைஞர். அவரது நடையும் கூறுமுறையும் அதை வெயிலில் எரிந்து எரிந்து மௌனம் கொண்ட மண்ணாக மாற்றிவிட்டிருக்கின்றன. அதுவே அவரது அழகியல்.

முந்தைய கட்டுரையோகமும் பித்தும்
அடுத்த கட்டுரைஎரிக் ஹாப்ஸ்பாம்-கடிதங்கள்