பூமணியின் நிலம்

பூமணியும் அவருக்கு முன் கி.ராஜநாராயணனும் எழுதி உருவாக்கிய கரிசல் நிலத்தை நான் முதன்முதலாகப் பார்த்தது ஒன்பதாம் வகுப்பு மாணவனாக எட்டயபுரத்தில் பாரதி விழாவுக்குச் செல்லும்போதுதான். பாரதியார் பற்றிய பேச்சுப் போட்டியில் பரிசு பெற்றிருந்தேன். அதுவரை நான் தமிழ்மைய நிலத்திற்குள் வந்ததில்லை. நான் பார்த்திருந்த இரு பெரு நகரங்கள்’ திருவனந்தபுரமும் நாகர்கோயிலும்தான். அதாவது நான் அறிந்ததெல்லாம் நீர்வளம் மிக்க நிலம் மட்டுமே.

ஆரல்வாய் மொழி தாண்டிப் பணகுடியை அடைந்தபோது நான் ஆழமானதோர் மன எழுச்சிக்கு ஆளானேன். நிலம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், முதலில் பார்க்கும்போது அது மன எழுச்சியையே உருவாக்கும் என்று நான் பின்னர் வாழ்வின் பல்வேறு தருணங்களில் அறிந்திருக்கிறேன். முதல்முறையாகப் பார்த்தபோது ராஜஸ்தானின் பிரம்மாண்டமான தார் பாலைநிலமும் எனக்குப் பெரும் மனவிரிவையே அளித்தது. நிலம் எதுவானாலும் அது மனிதனுக்கு அன்னை என்று அப்போது என் பயணக்கடிதம் ஒன்றில் எழுதினேன். அதைப் பெற்ற சுந்தரராமசாமி ’ஆம் எந்த நிலத்திலும் அங்கு வாழும் மனிதர்களுக்கான உணவும் நீரும் இருக்கும்’ என்று எனக்கு பதில் எழுதினார்.

இருமருங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்து கிடந்த மேடுபள்ளம் அற்ற விரிந்த பொட்டல் அது. தேவதச்சனின் கவிதைபோலக் குனிந்து நாற்று நடும் பெண்ணுடன் தானும் குனிந்திருக்கும் பிரம்மாண்டமான வானம். உண்மையில் நிலத்தை மட்டுமல்ல, வானத்தையும் அன்று நான் புத்தம் புதியதாகக் கண்டுகொண்டேன் அன்றுவரை நானறிந்திருந்த வானம் எப்போதும் பச்சை மரக்கூட்டங்களின் வழியாகவே காணக்கிடைப்பது. செறிந்த மேகங்கள் கரை கண்டு நகர்வது. இந்த வானம் ஒளிக்கடலாக இருந்தது. வானம் அத்தனை துல்லியமாக நீலம் கொண்டிருக்கும் என்று அப்போதுதான் அறிந்தேன். கீழே பசுமையே இல்லாத செம்மண் நிலம். தொலைவில் அது சிறிய மேடுகளாக எழுந்து வானில் இணைந்தது. உடைமுள் பரப்புகள் வெயிலில் உலர்ந்து கிளைபின்னிக் கிடந்தன. பனைமரக் கூட்டங்கள் வானத்தின் தூண்கள் போல, யானைக்கால்கள் போல, பொட்டலில் முளைத்த மயிர்கற்றைகள் போல நின்றன.

நெடுநாட்களுக்குப் பின்னர் கி.ராஜநாராயணனின் கதைகள் வழியாக அந்த நிலத்தை நான் மீண்டும் கண்டடைந்தேன். இம்முறை பேரழகு மிக்க உயிர்வெளியாக. மனிதர்கள் வாழ்ந்து வாழ்ந்து அந்த நிலத்தை ஒரு உயிர்ப்படலமாக ஆக்கிவிட்டிருந்தார்கள். அதன்பின் கரிசலை எப்போது கடந்து சென்றாலும் அதன் கதாபாத்திரங்களை நினைவு கூர்ந்துதான் செல்ல முடிந்தது. உண்மையில், கரிசலில் மழை பெய்யும் அழகை நான் கி.ராஜநாராயணனின் சொற்கள் வழியாகவே அறிந்தேன். கரியமண் முதலில் ஆவி உமிழ்ந்து புகைகிறது. பின் அதன் உயிர்மணம் வெளிவருகிறது. ஒரு கடிதத்தில் கி.ரா அது விந்துவின் வாசனை போன்றது என்று கூறியிருப்பார். பிறகு கரிய, கன்னங்கரிய சேறாக இருக்கிறது அந்த மண். எள்ளுப் புண்ணாக்கு போல என்று என்று அதை வர்ணிக்கிறார் கி.ராஜநாராயணன். அதன்பின் அங்கே மானுட உழைப்பு நிகழ்கிறது. கரிசல் இளகி நெகிழ்ந்து வயல்பரப்பாகிறது. கம்பும் கேழ்வரகும் பருத்தியும் முளைத்தெழுகின்றன. சில பருவங்களில் கரிசல் நிலம் பசுமையன்றி வேறு நிறமே இல்லாததாக விரிந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன்.

பின்னர் நான்கு வருடம் கழித்துதான் நான் பூமணியின் நாவலை வாசித்தேன். 1988ல் நண்பர் யுவன் சந்திரசேகர் பூமணியின் ‘பிறகு’ நாவலை நான் வாசிக்கும்படி சொல்லி அவரே காக்கி நிற அட்டை போட்டுப் பெயர் எழுதிப் பாதுகாப்பாக வைத்திருந்த பிரதியைக் கொண்டுவந்து தந்தார். நான் அந்நாவலை ஒரு ஐம்பது பக்கம்தான் வாசித்தேன். என்னால் அதை மேலே வாசிக்க முடியவில்லை. மிக ஆழமான ஒரு தடையை அந்நாவல் எனக்கு அளித்தது. திருப்பிக் கொடுத்தபோது யுவன் ஏமாற்றத்துடன் ‘இல்லைடா நீ இன்னும் கொஞ்சம் பொறுமையா வாசிக்கலாம். ரொம்ப முக்கியமான ஆதர்டா’ என்றார். நான் ‘என்னால முடியல. இது என்னை ரொம்பத் தடுக்குது’ என்றேன். ‘என்ன பிரச்சினை?’ என்றார். ‘கரிசல் வயலில் கம்புப்பயிர் நடுவே வரப்பில வர்ற மாதிரி இருக்கு கி.ராவோட கதைகளைப் படிக்கிறப்ப. இந்தக் கதைகளைப் படிக்கிறப்ப சட்டுன்னு உடைமுள் பரப்பில மாட்டிக்கிட்ட மாதிரி இருக்கு. உள்ளங்கால் சுட்டு வேகிறது மாதிரி இருக்கு’ என்றேன்.

யுவன் ‘அதான் அதோட அழகியலே. நீ கி.ராவ ரொம்ப சிலாகிச்சு சொல்றே அது கி.ராவோட உலகம். நைனா அறிஞ்ச யதார்த்ததுக்கு நேர் எதிரான யதார்த்தம் பூமணி காட்டுகிறது. கம்பு மட்டுமில்ல கூட முள்ளும் கரிசலோட பயிர்தான்’ என்றார்.எனக்குப் பூமணியின் வட்டார வழக்கும் தடையாக இருந்ததைச் சொன்னேன். ’எனக்கும் அப்படி இருந்தது. கோயில்பட்டியில் ஒரு வாரம் வாழ்ந்தா அந்த பாஷை நம்மோடது ஆயிடுதுல்ல, அதே மாதிரித்தான். கொஞ்சம் கவனமா அம்பது பக்கம் தாண்டி அழகிரிப் பகடை நம்மகிட்ட பேச ஆரம்பிச்சிருவார். அவரு பேசறதப் புரிஞ்சுக்கிட பாஷையே தேவையில்லை’ என்றார்.

அதன்பின் ஒருமுறை, 1989 வாக்கில் எஸ்.ராமகிருஷ்ணன் கோணங்கி இருவரையும் திருவண்ணாமலையில் பவா செல்லத்துரை வீட்டில் சந்தித்தேன். கி.ராஜநாராயணின் அறுபதாவது வயது நிறைவை ஒட்டி அகரம்(அன்னம்) பதிப்பகம் வெளியிட்ட ராஜநாராயணியம் என்ற நூல் அப்போது வந்திருந்தது. அதில்தான் பூமணி கி.ராஜநாராயணனை முன்னத்தி ஏர் என்று கூறியிருந்தார். கோணங்கி வேடிக்கையாகச் சொன்னார், ‘நைனா முன்னத்தி ஏரை தளுக்கா கொண்டு போயிட்டார். ஏரு புடிக்கற சம்சாரி நாயக்கருங்க அப்பிடித்தான் செய்வாங்க. பின்னால் வர்ற ஆள்காரங்களுக்குத்தான் பெரியபெரிய தூரெல்லாம் சிக்கிக்கும். நாமதான் ஒவ்வொண்ணா எடுத்து மறிச்சுப் போட்டு உழணும்’ . அவருடைய தன்னம்பிக்கையை நான் எப்போதும் மிகவும் ரசிப்பவன். கோணங்கி கரிசல் பின்னணியில் எழுதிய கம்மங்கதிரு, கருப்பு ரயில் போன்ற கதைகள் வெளிவந்திருந்த காலம் அது. எஸ்.ராமகிருஷ்ணன் பூமணியின் பிறகு நாவலைப் பற்றிச் சொன்னார். பூமணி கரிசல் மண்ணின் வெக்கையை எழுத முடிந்த படைப்பாளி என்றார். பிறகு வாசித்தபோது அதற்கு வெக்கை என்று பெயர் வைத்திருக்கலாம் என்று நினைத்ததாகவும் அதேபோலப் பூமணி அவரது அடுத்த நாவலுக்கு வெக்கை என்றே தலைப்பு வைத்ததாகவும் சொன்னார்.

உண்மையில் அதன்பிறகுதான் நான் பூமணியின் பிறகு நாவலை வாசித்தேன். இப்போது அந்த மண்ணும் மொழியும் கூறுமுறையும் எனக்கு அன்னியமானதாக இருக்கவில்லை கி.ராஜநாராயணன்,கோணங்கி இருவராலும் பூமணி எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டது போலிருந்தது. கி.ராவும் கோணங்கியும் அடிப்படையான ஒரு கவித்துவம் கொண்டவர்கள். மண்ணையும் மானுட நிகழ்வுகளையும் அவற்றுக்கு அப்பாற்பட்ட ஏதோ சிலவற்றின் குறியீடுகளாக ஆக்கும் திறன் கொண்டவர்கள். அவர்களின் உலகில் வருவது அவர்களின் கரிசல், அவர்களின் மனிதர்கள். அவர்களின் கனவுலகிலிருந்து எழும் பிம்பங்கள். அவற்றில் ஊறித்திளைத்து அறிந்த பிறகு நான் ‘வெறும்’ கரிசலை அறிய விரும்பியிருக்கலாம் எவரும் ஊடாடாத கரிசலில் தனியாக ஒரு நடை சென்றுவர, அந்த மக்களுடன் சிலநாட்கள் இருந்துவர விரும்பியிருக்கலாம் அவ்வாறுதான் எனக்குப் பூமணி பிடித்தமானவராக ஆனார். பிறகு எனக்குத் திறந்து கொண்டது.

பூமணியின் படைப்புலகு வழியாகவே எனக்கு இயல்புவாதமும் உகந்த அழகியலானது என்று நினைக்கிறேன். அதற்கு முன்னரே நான் நீல பத்மநாபனை வாசித்திருந்தாலும் எந்த வண்ணங்களும் இல்லாத அவரது உலகுக்குள் முழுக்க நுழைந்திருக்கவில்லை. ஆ.மாதவனை அப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். வாசித்து நிராகரித்திருந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தைப் புதிய வெளிச்சத்தில் திரும்பவும் கண்டடைந்தேன். இல்லாமலிருக்கும் ஆசிரியன் இருப்பவனை விட வல்லமை கொள்ள முடியும் என்று கண்டுகொண்டேன். கூறப்பட்டவற்றை விடக் கூறப்படாதவைக்கு அழகும் வீச்சும் அதிகம் என்று புரிந்துகொண்டேன்.

பூமணியின் புனைவுலகம் விமர்சனங்கள் அற்றது அல்ல. மிக வீச்சுள்ள சமூக விமரிசனப் படைப்புகள் என்றே ‘பிறகு’, ‘வெக்கை’ இரண்டையும் கூறிவிடமுடியும். அந்த விமரிசனத்தின் முனை அவற்றின் தலைப்பிலேயே உள்ளது. ’பிறகு’ மிக விரிவான ஒரு தொகுப்புத்தன்மை கொண்ட ஆக்கம். சுதந்திரத்திற்குப் பிந்தைய அரை நூற்றாண்டுக்காலத்தை அது ஒட்டுமொத்தமாக அழகிரிப் பகடையின் வாழ்க்கை மூலம் காட்டுகிறது. இந்திய சுதந்திரம் இங்குள்ள அடித்தளத்துக் குடிமகன் ஒருவனுக்கு உண்மையில் என்னதான் அளித்தது என்று அழகிரிப் பகடை மூலம் அந்நாவல் விசாரணை செய்கிறது. மாற்றங்கள் நிகழ்கின்றன. மண்ணும் மனிதர்களும் மாறுகிறார்கள். பழையன கழிகிறது. பிறகு? நாவலின் அழுத்தம் அங்குதான் ஆழமாகப் பதிகிறது.

’பிறகு’ வெளிவந்த முப்பதாண்டுக் காலத்துக்குப்பிறகு வெளிவந்த இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ அதே வினாவை இன்னொரு சூழலில் இன்னொரு கோணத்தில் மீண்டும் எழுப்பிக்கொள்கிறது. அழகிரிப் பகடைக்கும் ஆரோக்கியத்துக்குமான ஓர் ஒப்புநோக்கு ஆய்வு தமிழிலக்கியத்தின் பரிணாமத்தை மட்டுமல்லாது கடந்த ஐம்பதாண்டுக்காலத் தமிழ் வாழ்க்கையின் பரிமாணத்தையும் நுட்பமாகப் பரிசீலிப்பதற்கான ஒரு வாய்ப்பாகும். இவ்விரு நாவல்களுடனும் இணையக் கூடிய இன்னொரு முக்கியமான படைப்பு கண்மணி குணசேகரன் எழுதிய அஞ்சலை. ஒர் எல்லை வரை சிவகாமியின் ‘ஆனந்தாயி’யையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனந்தாயி பிற மூன்று நாவல்களைப் போலன்றி இன்றும் வெளிப்படையான அரசியல் உரையாடல் கொண்டது.

ஆர்வமூட்டும் ஒரு வினா. தமிழில் ‘பிறகு?’ என்ற வினாவுடன் ஆரம்பித்த முதல் நாவல் ஒரு அடித்தட்டு ஆண்மகனைக் கதாநாயகனாக ஆக்கியது. அனால் அதற்குப் பின் வெளிவந்து அதே வினாவை எழுப்பிய எல்லா நாவல்களும் பெண்ணையே கதை மையமாகக் கொண்டவை. ஏன்? அடித்தளமக்களிலும் அடித்தளத்தினர் அவர்களுக்குள் உள்ள பெண்கள்தான் என்று புரிதலா அது? அழகிரிப்பகடையின் வாழ்வில் என்ன நடந்தது என்பதை விட அவர் மனைவியின் வாழ்வில் என்ன நடந்தது என்பதைத்தான் பிற்காலத்துப் புனைவிலக்கியவாதிகள் முக்கியமானதாகக் கருதுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? சமூகவியலா இல்லை நம் அடித்தள வாழ்வின் உளவியலா அதற்கான பதில் உள்ளது?

இயல்பாக இப்படி ஒரு வரிசை உருவாகி வந்திருப்பதைப் பார்க்கும்போது ஒன்று தெரிகிறது. பூமணி தமிழுக்கு மிகமிக முக்கியமான ஒரு முன்னோடியாக இருந்திருக்கிறார். காய்ந்து காத்திருந்த காட்டில் தீப்பொறி விழுந்ததைப்போல அவரது அழகியல் மிக விரைவாகத் தமிழில் பற்றிக்கொண்டுவிட்டது. பூமணியின் இயல்புவாத அழகியல் நோக்கில் நேர் வாரிசுகள் எனத் தமிழில் ஒரு பெரிய இலக்கிய வரிசையே இன்று உள்ளது. முக்கியமாகத் தமிழில் பின்னர் எழுதவந்த அடித்தள வர்க்கத்துப் படைப்பாளிகள், தளத்தியர்கள் பூமணியின் மொழியையும் பாஷையையுமே தங்களுக்குரிய வழியாகக் கொண்டிருக்கிறார்கள் என்றுபடுகிறது. இமையம், சொ.தருமன், கண்மணிகுணசேகரன், சிவகாமி என அந்தப் பட்டியல் நீள்கிறது. தமிழுக்குப் பூமணியின் பங்களிப்பை விட இந்த ஒட்டுமொத்த பாதிப்பை வைத்தே மதிப்பிட வேண்டுமென்று படுகிறது.

இயல்புவாதத்தை ஒருவகையில் புகைப்படக் கலையுடன் ஒப்பிடலாம். பற்றற்ற ஆவணப்படுத்தலையே தன் அழகியலாக அது கொண்டுள்ளது.ஆனால் அப்படி முழுமையான ‘பற்றற்ற’ நிலை அதற்கு இல்லை. எதைக் காட்டவேண்டும், எந்தச் சட்டகத்திற்குள் நிறுத்தவேண்டும் என்று தீர்மானிக்கும் புகைப்படக்கலைஞன் ஒருவன் அதன்பின் இருக்கிறான். அது ஆவணம்தான், செயற்கையானது அல்ல, ஆனால் உருவாக்கப்பட்டதும்கூட. இந்தியாவில் புகைப்படம் வந்தபோது என்ன நிகழ்ந்ததோ அதுவே இயல்புவாதம் வந்தபோதும் நிகழ்ந்தது. இந்திய வாழ்க்கை ஒரு மாபெரும் நிலைக்கண்ணாடியில் பதிவாவதுபோல அதில் பதிவாக ஆரம்பித்தது. அதன் அவலங்கள் துயரங்கள். ஆம், அவையே அதிகமும் பதிவாயின. ஏனென்றால் அவைதான் அன்றுவரை அதிகமும் மூடி வைக்கப்பட்டிருந்தன. அலங்காரம் மூலம் மறைக்கப்பட்டிருந்தன. இன்றுவரை உலகின் வேறெங்குமில்லாத அளவுக்கு இயல்புவாதம் இந்தியாவில் வலுவாக இருப்பதும் இதனால்தான். இன்றும் நம்மை நாம் பாசாங்குகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள ஆரம்பிக்கவில்லை.

இந்தியா ஒரு பிரம்மாண்டமான தொகைச்சமூகம். பல்லாயிரம் இனக்குழுக்கள் மொழிக்குழுக்கள் இங்கே அருகருகே வாழ்கின்றன. ஒரு பொதுச் சமூகப்புரிதலால் அவை தொகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் அதற்குரிய இடத்தை வரலாற்றுப் போக்கில் உருவாக்கிக் கொண்டுள்ளது. அதே சமயம் ஒரே குழு பெரும்பாலும் இன்னொன்றை அறியாமல் தங்கள் வட்டத்திற்குள் சுருண்டு சுருங்கி வாழ்ந்து கொண்டுமிருக்கிறது. வியப்பான ஒரு விஷயம் இது. நூற்றாண்டுகளாக ஒரு ஊரில் சேர்ந்து வாழும் சாதிகளில் ஒரு சாதிக்கு இன்னொரு சாதியின் வாழ்க்கையின் உள்ள்ளூர உறையும் நுட்பங்கள் எவையுமே தெரிந்திருக்காது. அவர்களுக்கிடையேயான பொதுவான தளத்தில் ஒரு சாதி எப்படித் தன்னை முன்வைக்கிறதோ அதுவே பிற சாதிக்குத் தெரிந்திருக்கும். ஒரு சாதியினரிடம் அவரது சக ஜாதியினரின் உணவுப்பழக்கம், சாவுச்சடங்குகள், திருமணச்சடங்குகள் என்ன என்று கேட்டால் பெரும்பாலும் சரியானபதிலை அவர்களால் கூறமுடியாது.

நூற்றாண்டுகளாக வேரோடிப்போன இந்த சமூக அமைப்பில் நவீன வாழ்வு மிகப்பெரிய சவால்களை உருவாக்கியது. நவீனத்துவம் கொண்டு வந்த ஒவ்வொன்றம் அனைவருக்குமான பொது வெளியை உருவாக்க முயன்றது. சாலைகள், பள்ளிக்கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், உணவுவிடுதிகள், அரசியல் கூட்டங்கள். இந்தப் பொதுக்களம் விரிவடைய விரிவடைய ஒவ்வொரு சாதியும் இன்னொன்றைப் புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒவ்வொன்றும் அந்தப் புரிதலுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அதைத் தொடர்ந்து வந்தது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்த இந்த பரிணாம மாற்றம் இன்றும் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்காகவே இங்கே இயல்புவாதம் இன்று பயன்படுகிறது. இதனால் இன்றும் அது இத்தனை பெரும் முக்கியத்துவத்துடன் உள்ளது.

தன்னுடைய உடம்பில் முதுகைப்பார்ப்பதற்கு ஒருவன் கண்ணாடியைப் பயன்படுத்துவதைப் போலத்தான் இந்திய சமூகம் இயல்புவாதத்தைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம். இன்னமும் இதன் கண்களில் பார்க்கப்படாத பல பகுதிகள் இதன் உடலில் உள்ளன. ஆகவேதான் கேரள இலக்கியத்தில் அல்லது வங்க இலக்கியத்தில் உள்ளதை விடவும் தமிழிலக்கியத்திலும் கன்னட இலக்கியத்திலும் இயல்புவாதம் இன்றும் பெரிய முக்கியத்துவத்துடன் உள்ளது. காரணம் கேரளமும் வங்கமும் சிறிய சமூகங்கள். மொழியாலும் சாதிகளாலும் பெரிய உள்வேறுபாடுகள் இல்லாதவை. இதற்குக் காரணம் அவை பெரும்பாலும் வெளியே இருந்து வந்து குடியேற்றங்கள் நிகழாத வனபூமிகளாக அல்லது சதுப்புகளாக சமீபகாலம் வரை இருந்தன. தமிழகமும் கர்நாடகமும் அப்படி அல்ல. அவற்றில் பல நூற்றாண்டுகளாகப் படையெடுப்பும் குடியேற்றமும் மக்கள் பெயர்வும் நிகழ்ந்தபடியே இருந்தது. ஆகவே பல்வேறு மொழிகள் பேசும் பல்வேறு வகையான சாதி சமூகங்களின் தொகையாக அவை உருவாயின. அச்சமூகங்களுக்கு ஒன்றை ஒன்று தெரியாது. ஆகவே அவை ஒன்றை ஒன்று காட்டிக் கொள்வது என்பது இலக்கியத்தின் முக்கியமான பணிகளில் ஒன்றாக ஆகியது.

பிறகு நாவலின் முதல் வரியே பல வாசகர்களுக்கு ஆழமான அதிர்ச்சியை ஊட்டியது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அந்நாவல் தன் கைக்குக் கிடைத்தபோது அதைப் பிரித்துப் படித்ததுமே மின்னதிர்ச்சி போல அந்த வரி தன்னைத் தாக்கியது என்று சுந்தர ராமசாமி சொன்னார். ‘ஏலேய் சக்கிலித் தாயாளி மாடுபாருடா படப்புல மேயிறத பாரு, கண்ணைவிஞ்சா போச்சு’ என்ற வரி. அதற்கடுத்த வரி இன்னும் அதிர்ச்சி அளிப்பது. அது ஒரு வசையாக, கோபத்துடனும் வெறுப்புடனும் முன்வைக்கப்படவில்லை. மிக இயல்பாக ஒரு விளிப்பாக மட்டுமே கூறப்படுகிறது. அந்த வரியில் இப்போது மேலும் முன்னகர்பவர் இன்றும் அதிகமான அதிர்ச்சியை அல்லது ஆயாசத்தை அடையக்கூடும். அவ்வாறு விளிக்கப்பட்டவர் அதை மிக இயல்பாக, சொல்லப்போனால் நட்பாகக்கூட, எடுத்துக் கொள்கிறார். அவமதிக்கப்படுதல் என்பதே அன்றாட வாழ்வாக ஆகிப்போன ஒரு சமூகச் சூழலை நோக்கிச் சரேலென்று திறந்து கொள்கிறது பூமணியின் பிறகு.

பூமணியின் நிலம் கி.ராஜநாராயணனின் நிலமேதான். அதுவும் சுவைகளால்தான் அடையாளப்படுத்தப்படுகிறது. ஆனால் இன்னும் குறைவாகச்சொல்லப்பட்ட சுவைகளால் ஆனது அது. பூமணி அவரது நிலத்தை இரண்டு நுட்பமான தளங்கள் வழியாக நமக்கு அனுபவமாக ஆக்குகிறார். ஒன்று, மொழி. அறிவார்ந்த அம்சமே இல்லாமல் அந்த நிலத்து மக்களின் மொழியாகவே அது வெளிப்படவேண்டும் என்பதில் அவர் ஆரம்பம் முதலே கவனம் கொண்டிருந்தார். பூமணியின் நிலத்தை நமக்கு அனுபவமாக ஆக்குவது வாயிலிருந்து நேராக வருவது போன்ற அந்த மொழி. ஆசிரியரின் வர்ணனையாக வரும்போது ‘கிழக்காமல் பார்த்தால் அடித்துப் போட்ட பாம்பாய் சக்கிலியத்தெரு கோணிக் கிடந்தது. பெரும்பாலும் ஒற்றை முகடு போட்ட வீடுகள் கட்டையாக இருபது தேறும். வீட்டுக் கொட்டாரங்களில் குளம்புத் தடம்பட்டு, உளம்பட்டு உளம்பலாடிய எருமைச் சாணி நசநசப்பு’ [பிறகு] என இயல்பான பேச்சுமொழியாகவே அது ஒலிக்கிறது.

பூமணியின் உலகில் உரையாடலுக்கும் ஆசிரியர் கூற்றுக்கும் இடையே வேறுபாடே இல்லையென்பதைக் கவனிக்கலாம். ‘விடியக்காலையில் சக்கிலியக்குடியிலும் மம்பட்டி தட்டும் சத்தங்கள் கேட்டன. சம்சாரிகளிடத்தில் பகடைகள் தண்ணீர் பங்கு சேர்த்தார்கள், ஆணும் பெண்ணும் நிலங்களில் கிடந்ததைப் பார்க்க நேரும் போது அழகிரி வேம்படியில் முனங்கிக் கொள்வான்! ‘`என்னத்த கெட்டி அள்ளப் போறாங்களோ’ [பிறகு] ஆசிரியரின் மொழியே சற்றே ஒலிவேறுபாடுடன் கதைமாந்தரின் மொழியாகவும் ஆகிறது. கரிசலுக்கே உரிய பேச்சுவழக்குகளைக் கதாபாத்திரங்கள் பேசிக்கொள்கிறார்கள் ‘ஒறக்கச் சடவுல புளியங்கொப்புன்னு நெனைச்சு முருங்கக் கொம்பப் புடிச்சிட்டேன்.’ ’மேயிற கழுதையைக் கெடுக்குமாம் மெனக்கிட்ட கழுத’ ‘வண்ணாக்குடிநாயி வெள்ளாவிமேலே கெம்பிரியம் பண்ணுது’ ஆனால் ஆசிரியரின் சித்தரிப்புமொழியிலும் அவை இயல்பாகவே வந்துகொண்டிருக்கின்றன என்பதுதான் பூமணியின் தனித்தன்மை. ‘முத்துமாரி சொடித்துப்போய் அமர்ந்திருந்தாள்’ போல சாதாரணமாகவே ஆசிரியரும் சொலவடைகளையும் சொல்லாட்சிகளையும் கையாள்கிறார்.

கரிசலின் ருசி பூமணியின் படைப்புகளிலும்தான் ஊறிக்கொண்டே இருக்கிறது. ஆனால் இது வேறு ருசி. செத்தமாட்டைக் கால்கள்கட்டி மூங்கில் நுழைத்துத் தூக்கிக் கொண்டு வந்து வகுந்து தோலை எடுத்துப்பரப்பி அதில் கறியை வெட்டி வெட்டி வைத்து மொத்தக்குடிசனமும் பகிர்ந்து உண்கிற கொண்டாட்டமும் கரிசலின் வாழ்க்கைதானே.

’காத்துட்டுக்குக் கறியெடுத்து
காலநீட்டித் திங்கயிலே
துண்டு வுழுகலன்னு
துக்கிப் போட்டு ஒதச்சானே’

என்ற கருப்பனின் கொண்டாட்டமான பாடலில் ஒலிப்பதும் கரிசலின் குரல் அல்லவா? அதுதான் பூமணி அவருக்கென உருவாக்கிக்கொண்ட உலகம். மிக எளிய உணர்வுகளால், சுவைகளாலானதாகப் பூமணியின் புனைவுலகம் விரிந்துகொண்டே இருக்கிறது. கம்பங்கூழ்மீது படரும் ஆடை, கலத்தில் இருந்து கையால் அள்ளி வைக்கும் புளித்த கஞ்சியின் வாடை, பலவகையான சிறு பறவைகள், அணில்கள் கறிச்சுவைகள். ’சக்கணன் கோவைக் கொடியிலிருந்து இலைகளை ஆய்ந்து கொண்டிருந்தான்.கல்லை வாங்கி அவக்கென்று இழுத்தரைத்து இலை நசுக்கலை விரலால் வழித்தான் கருப்பன்… அதைப் புழிஞ்சு உப்புல ஒரு செரங்க குடிச்சா தாவல’ என வரும் மருத்துவச்சுவைகள்.

இதற்கும் அப்பால் துல்லியமான காட்சிச் சித்தரிப்பால் கரிசல், காட்சிவெளியாக வந்தபடியே இருக்கிறது. ’பொழுதடைய இன்னும் கொஞ்சநேரந்தான் இருந்தது. எலுமிச்சம்பழத்தை மெல்லமெல்ல விழுங்கியமாதிரி மலைமுகடுகளுக்கிடையில் பொழுது நழுவிக்கொண்டிருந்தது’ எனக் கரிசலில் அந்தி பொன்னிறம் கொள்வதைக்கூட சர்வசாதாரணமான அழகியலுடன் சொல்லிச்செல்கிறது பூமணியின் பார்வை.’தண்ணீர் வாய்க்கால் வழியாகக் கிழக்காமல் அலுப்புத் தீர ஓடி தெற்கே அடர்ந்து வளர்ந்த மிளகாய்ச்செடித் தோட்டத்துக்குள் நுழைந்தது. பூவும் பிஞ்சுமாகப் பூரித்து நிற்கும் செடிகளூடே தண்ணீர் ஓடுவதைப்பார்த்தால் ஒரு கானகத்துக்குள் ஆறு ஓடுவது போல பிரமை’ எனக் குழந்தைத்தனமான விவரணை சட்டென்று ‘காய்ந்து சிறுவிருவோடிய நிலத்தில் நீர் நனைக்கவும் ஆவிவிட்டு நீர்த்து பொருமிப்பூரிக்கும் கண்ணிலிருந்து குளுமையான மணம் கிளம்பியது’ என நுண்ணிய அனுபவப்பதிவாகவும் ஆகிறது.

’இயற்கை’ என்ற புகழ்பெற்ற பேருரையில் எமர்சன் நிலமே மொழியாகிறது என்று சொல்லியிருக்கிறார். பூமணியின் கரிசலே அவரது மொழியாக இலக்கியமாக ஆகியிருக்கிறது. அவரது படைப்புலகின் எல்லாச் சுவைகளும் அந்நிலத்தின் சுவைகளே.

முந்தைய கட்டுரைரவிசங்கர்,ஜக்கி-கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது பற்றி…