குடும்ப எழுத்தாளர்

சென்னையில் இருந்து இளம்பரிதி என்ற வாசகர் எனக்கு அடிக்கடி எழுதிக்கொண்டிருந்தார். ஜெயகாந்தனின் நல்ல வாசகராக இருந்து பிறகு நடுவே வாசிப்பை விட்டுவிட்டு இப்போது மீண்டும் என் வழியாக இலக்கியம் வாசிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். ஜெயகாந்தனை தெரியும் என்றார். அப்போதே ஊகித்திருக்கலாம்.

 

அதன்பின் என் நண்பர் அன்பு சென்னையில் என்னுடன் ஓட்டலில் தங்கியிருந்தபோது [நான் சென்னையில் இருந்தால் அன்பு என்னுடன் ஓட்டலில் இரவு தங்குவார். அவருக்கு அலுவலகத்தில் இரவு ஒன்பது முதல் காலை ஏழுமணிநேரம் வரை நேரம் மட்டுமே இடைவெளி. நள்ளிரவில்தான் இருவரும் இலக்கியம்பேசிக் கொண்டிருப்போம்.]  ஜெயன் இளம்பரிதிங்கிரவர் உங்க கிட்ட தொடர்பிலே இருக்காரா?’ என்றார். ஆமா அன்பு ரொம்ப நல்ல வாசகர்,நண்பர்என்றேன். அவர் எங்க அண்ணாதான் ஜெயன். பெரியம்மா மகன். தீனதயாளன் அண்ணாவுக்கு தம்பிஎன்றார்

 

அன்புவின் அண்ணா தீனதயாளன் கூட எனக்கு இதேபோல வேடிக்கையாகத்தான் அறிமுகமானார். பத்துவருடம் முன்பு நான் சென்னையில் ஹிக்கிம்பாதம்ஸில் புத்தகம் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆசையாக எடுத்துப் பார்த்துவிட்டு விலையை நோக்கி நூல்களை திரும்ப வைத்துவிட்டு மெல்ல கவுண்டருக்கு வந்து ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் வாங்கினேன். பின்னால் நான் எடுத்து வைத்த புத்தகங்களை எல்லாம் ஒருவர் வாங்கிக் கொண்டுவந்து கவுண்டரில் கொடுத்து தன் கார்டைக் கொடுத்து பில்போடச்சொன்னார்

 

நான் கிளம்பும்போது அவர் என்னிடம் சார்என்றார். புத்தகங்களை நீட்டியபடி உங்களுக்காகத்தான் சார் வாங்கினேன். நீங்க எழுத்தாளர் ஜெயமோகன்தானே…நான் உங்க ரைட்டிங்ஸ் படிச்சிருக்கேன்என்றார். மிதமான புன்னகையுடன் மிதமாகப் பேசும் தீனதயாளன் அப்படித்தான் அறிமுகமானார். அமெரிக்கன் கான்ஸ¤லேட்டில் வேலைபார்க்கிறேன் என்றார். அதற்கு முன்பு தினமணியில் வேலைபார்த்தாராம்

 

அவரது அழைப்பின் பேரில் அமெரிக்கன் கான்ஸ¤லேட் அலுவகலம்சென்றேன். அவர் பணம் கட்ட நான் அங்கிருந்த பெரிய நூலகத்தில் உறுப்பினரானேன். நான் அமெரிக்க இலக்கியங்களைப் பொருட்படுத்தி வாசிக்க ஆரம்பித்ததே அதற்குப்பின்னர்தான். குறிப்பாக ஐசக் பாஷவிஸ் ஸிங்கர் எனக்கு மிகமிக நெருக்கமான கலைஞராக ஆனார்.

 

அப்போதும் அன்பு என் நெருக்கமான நண்பர்தான். ஒருநாள் அன்புவிடம் இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். அன்பு சிரித்துக்கொண்டே ஜெயன், அது எங்க அண்ணாதான்…என்றார். நான் அதிர்ச்சியுடன் சொந்த அண்ணாவா?” என்றேன் பெரியம்மா மகன். எனக்கு சீனியர். அவங்க குடும்பத்துக்கு நான் ரொம்ப ரொம்ப நெருக்கம்…இப்ப கூட அவங்க வீட்டிலே இருந்துதான் வரேன்…ஆச்சரியங்கள் எனக்கு அடிக்கடி நிகழும். என் ராசி அப்படி.

 

2001ல் எனக்கு அமெரிக்கா செல்ல அழைப்பு வந்தது. அன்று நெருக்கமாக இருந்த காஞ்சனா தாமோதரன் மூலம். கனடா சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதாகத் திட்டம். விஸாவுக்காக கான்ஸ¤லேட் சென்றேன். தீனதயாளன் என்னை கான்ஸ¤லேட் ஜெனரலிடம் ஓர் மதிய உணவு உண்ண ஏற்பாடு செய்தார். முப்பது வயதான இளைஞர்  ஓர் ஓட்டலில் சந்தித்தோம். நான் ஐசக் பாஷவிஸ் ஸிங்கரைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தேன்.

 

அமெரிகா மிடில்கிளாஸ் மக்களின் நாடு. அதை கோடீஸ்வர நாடு என்று இந்தியர்கள் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள் என்றார் அவர். ஜாக் லண்டன் பிடிக்குமா என்றார். ஜாக் லண்டன், ஹெமிங்வே போன்றவர்கள் முழு ஐரோப்பியர்கள். சிங்கரிடம் கொன்ச்ஜம் கீழைத்தேய அம்சம் உண்டு. எனக்கு அது தேவை என்றேன்.

 

திரும்பி கான்ஸ¤லேட் சென்றோம். நான் தீனதயாளனிடம் பேசிக்கொண்டிருந்தேன். விண்ணப்ப படிவத்தை அவரே பூர்த்தி செய்ய நான் கையெழுத்துக்களை மட்டும் போட்டேன். கான்சுலேட் ஜெனரல் அவரே வந்து என் விண்ணப்பத்தையும் பாஸ்போர்ட்டையும் வாங்கிச்சென்றார். அரைமணிநேரத்தில் விஸா வந்துவிட்டது. 10 வருட விஸா –பலமுறை நுழைவு அனுமதியுடன். நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன் வெல்கம் டு தி லேண்ட் ஆ·ப் ஸிங்கர்என்றார்

 

பத்துவருஷம் இருக்கே  என்றேன் பிரமிப்புடன். நான் விரும்பியது மூன்றுமாத விசா. அதற்கும் முறையான அழைப்பு எனக்கு இல்லை. அவர் மேலும் சிரித்தபடி அமெரிக்கக் குடிமகனாக ஆகுங்கள்.அமெரிக்காவில்  எழுதுவதற்கு  நிறைய விஷயம் இருக்கிறதுஎன்றார்.

 

ஆனால் நான் கனடாவில் இருந்து அமெரிக்கா செல்லவில்லை. 2001 செப்டெம்பரில் நான் கனடா கிளம்பினேன். பத்து நாள் முன்பு செப்டெம்பர் 11 அன்று அமெரிக்காவில் இரட்டைகோபுரம் இஸ்லாமிய தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது. கனடாவே ஆந்த்ராக்ஸ் என்று அலறிக்கொண்டிருந்தது. என்னை டொரண்டோ விமான நிலையத்தில் ஜெய மொகம்—என்று வாசித்து அந்தப்பக்கமாகப் போ என்று சொல்லிவிட்டார்கள். நான் பல்கலைகழக அழைப்பிதழைக் காட்டியபோது ஒருவர் மன்னிப்பு கோரி வெளியே கொண்டுவந்து வழியனுப்பினார்

 

அமெரிக்காவில் எல்லா தேசியநினைவகங்களும் மூடப்பட்டிருந்தன. விமானங்கள் திருப்பி விடப்பட்டன. நான் அமெரிக்கா செல்லவில்லை. கனடாவில் இருந்தே திரும்பிவிட்டேன். அமெரிக்கக் குடிமகனாக ஆக விரும்பவும் இல்லை. இன்னும் ஒருவருடம் எனக்கு விஸா செல்லுபடியாகும். இவ்வருடம் அமெரிக்கா செல்ல நண்பர்களின் அழைப்பு உள்ளது. ஆகஸ்டில் செல்லக்கூடும்.

 

தீனதயாளனுடன் என் உறவு இப்போது வரை நீடிக்கிறது. இதழியலில் சாதித்திருக்க வாய்ப்புள்ளவர் அமெரிக்கன் கவுன்ஸில் வேலைக்குள் சிறைப்பட்டார் என்றும் ஆனால் அவரது பொருளாதார நிலை ஒருவேளை இதழ்களில் இருந்திருந்தால் இந்த அளவுக்கு இருந்திருக்காது என்றும் தோன்றும். அவரை அவர் மகளின் திருமண விழாவில் சந்தித்தேன்.

 

அன்புவின் குடும்பத்தினருக்கே ஜெயகாந்தன் மேல் பெரும் பற்று உண்டு. குடும்ப டாக்டர் போல குடும்ப எழுத்தாளர். அன்புவும் ஜெயகாந்தனை அப்பா என்றுதான் அழைக்கிறார். ஆச்சரியம்தான், எழுத்தின் அபாரமான வல்லமைகளில் ஒன்று அது என்று என்ணிக்கோண்டேன்

 

 

முந்தைய கட்டுரைபேரா.நா.தர்மராஜன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைசஞ்சய், கடிதங்கள்