யார் தரும் பணம்?

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம்விழா மற்றும் விருதுக்கான செலவை எப்படி ஈடு செய்கிறீர்கள்? உங்களுக்கு கார்ப்பரேட் ஸ்பான்சர்ஷிப் இருப்பதாக என் நண்பர்கள் சொல்கிறார்கள். தனி ஒருவராக இவ்வளவுபெரிய விழாக்களை எப்படி நடத்தமுடிகிறது?

கோவிந்த்

அன்புள்ள கோவிந்த்,

உங்கள் மின்னஞ்சல் முகவரியில் இருந்து வேறு பெயரில் கடிதம் அனுப்பியிருக்கிறீர்கள் ஒருமுறை. பரவாயில்லை.

நாங்கள் ஒரு நண்பர்குழு மட்டுமே. பொதுவாக நான் நண்பர்களுடனிருப்பதை, விவாதிப்பதை விரும்பக்கூடியவன். அனேகமாக எல்லா ஊர்களிலும் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னிடமிருந்து ஒரு நண்பர் விலகிச்செல்வதென்பது என் இதுநாள்வரையிலான வாழ்க்கையில் மிகமிக அபூர்வமாகவே நிகழ்ந்துள்ளது. ஆகவே நான் எப்போதுமே தனிநபர் அல்ல.

இருபதாண்டுகளுக்கும் மேலாக நான் இலக்கியச் சந்திப்புகளை, விவாத அரங்குகளை, கூட்டங்களை நடத்திவருகிறேன். இதுவரை முப்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள். எல்லாவற்றையும் எனக்காக நண்பர்களே ஏற்பாடு செய்தார்கள் என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும், நான் கடைசி நிமிடத்தில் சென்று சேர்வதுடன் சரி. எழுதிப்பெறும் பணம் இப்படி செலவழிக்கப்படவேண்டுமென்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தேன். மிகச்சமீபகாலம் வரை நிகழ்ச்சிகள் முழுக்கமுழுக்க என் செலவிலேயே நிகழ்ந்தன. எந்தக் கூட்டமும், எந்த சந்திப்பும் எனக்காகவோ என் நூல்களுக்காகவோ ஏற்பாடு செய்ததில்லை. என் நூல்களுக்கான விழாக்கள் எல்லாமே பதிப்பாளர்கள் ஏற்பாடுசெய்தவைதான். நான் ஏற்பாடு செய்த எல்லா நிகழ்ச்சிகளும் பிற இலக்கியவாதிகளுக்காகவே.

இவ்வாறு ஒத்த கருத்துடைய நண்பர்கள் படிப்படியாக ஒன்று சேர்ந்தோம். ஒவ்வாத மனிதர்களை நண்பர் வட்டத்துக்குள் விடுவதில்லை. தனிப்பட்ட தாக்குதல்களை மனக்கசப்புகளை அனுமதிப்பதில்லை. ஆகவே எல்லா சந்திப்புகளும் நிறைவும் களிப்பும் ஊட்டும் நிகழ்ச்சிகளாகவே நடக்க நடக்க நண்பர்கள் அதிகரித்தார்கள். மூத்த எழுத்தாளர்களை கௌரவிப்பதற்காக முறையான ஓர் அமைப்பை உருவாக்கலாமென நினைத்தோம். அவ்வாறுதான் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவானது. மூத்த படைப்பாளிகளை கௌரவிப்பதே முதல் நோக்கம். கூடவே இலக்கியக்கொண்டாட்டங்களாக சந்திப்புகளை நிகழ்த்திக்கொள்வது.

நான் மிக சிக்கனமானவன். என் நண்பர்கள் அதைவிட. ’வக்கீல்’ கிருஷ்ணனும் ’கெமிக்கல்’ விஜயராகவனும் கஞ்சர்கள் என்றே பெருமையாகச் சொல்லலாம்.ஆகவே நாங்கள் மிகமிகக் குறைந்த செலவிலேயே எல்லாப் பயணங்களையும், நிகழ்ச்சிகளையும் செய்துகொள்கிறோம். குடி முதலிய கேளிக்கைகள், உயர்தர தங்குமிடம் உணவு போன்ற வசதிகள் கிடையாது. பெரும்பாலும் சாதாரண விடுதியறைகள் அல்லது வீடுகளில் எல்லாருமாகச் சேர்ந்து தங்குவதுதான் வழக்கம். விழாக்களும்கூடக் குறைவான செலவில்தான்.

நாங்கள் நிறுவனங்களிடமிருந்து எவ்வித உதவியும் பெற்றுக்கொண்டதில்லை. அப்படிப் பெறுவதொன்றும் பெரியவிஷயம் அல்ல. நிகழ்ச்சியை ஏற்று உதவிசெய்ய சில அமைப்புகள் தயாராக உள்ளன. ஆனால் அவ்வாறு பெறும்போது விருது அவர்கள் கொடுப்பதாகப் பொருள்படக்கூடும். கடப்பாடுகள் உருவாகலாம். வெறும்வாயையே உங்கள் நண்பர்கள் மென்று ருசிக்கிறீர்கள். ஆகவே இப்போதைக்கு அவற்றைத் தவிர்க்கிறோம்.

விஷ்ணுபுரம் விருதுத்தொகை, நண்பர்கள் இரண்டுநாள் தங்கி சாப்பிடும் செலவு, விழாச்செலவு எல்லாம் சேர்த்தே அதிகபட்சம் ஒன்றேகால் லட்சம்தான். அதில் ஒரு பகுதி என்னுடைய சொந்தப்பணம் – பெரிய தொகை அல்ல, ஆனால் எனக்கு ஒரு வருடம் வரும் மொத்த ராயல்டி தொகையைவிட அதிகம்.

எஞ்சியதை நண்பர்க்ள் பகிர்ந்துகொள்கிறார்கள். எவரிடமும் நன்கொடைகள் கேட்பதோ பெறுவதோ இல்லை. தனிப்பட்ட முறையில் மிக நெருக்கமான நண்பர்களிடமிருந்து மட்டுமே பணம் ஒப்புக்கொள்கிறோம். பொதுவாகப் பணம்பெற்றுக்கொள்வது ஒரு மிகப்பெரிய பொறுப்பு. மிக முக்கியமான பொதுநல காரியங்களுக்கு மட்டுமே அப்படிப் பெற்றுக்கொள்ளவேண்டும் என நான் நினைக்கிறேன். அப்படிப் பெற்றுக்கொள்வதாக இருந்தால் சொந்தப்பொறுப்பில் பெறவேண்டும், கடைசிக்காசுக்கும் கணக்குவைத்திருக்கவேண்டும் என்பதுதான் தாத்தாவழி. அத்தகைய செயல்களேதும் இப்போது எங்கள் திட்டத்தில் இல்லை.

வரும் டிசம்பர் 18 அன்று கோவையில் பூமணிக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நிகழ்கிறது. வாருங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா 2011 -டிச 18-கோவையில்
அடுத்த கட்டுரைராஜராஜனின் பள்ளிப்படைக்கோயில் உண்மையா?