«

»


Print this Post

உறைகாலம்


1973ல் அச்சாணி என்ற மலையாளப்படம் வெளிவந்தது. மேலும் மூன்றுவருடம் கழித்து நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அந்தப்படத்தை அருமனை திரையரங்கில் பார்த்தேன். பிரேம் நசீரும் ,சுதீரும், சுஜாதாவும் நடித்தபடம். ஏ.வின்செண்ட் இயக்கியது. மலையாளத்தின் செவ்வியல் திரைப்படங்களில் ஒன்று.

அச்சாணிபடத்தின் பாடல்கள் எல்லாமே அந்தக்காலத்தில் மிக மிகப்பிரபலம். ‘ மல்லிகா பாணன் தன்றே வில்லொடிச்சு, மந்தார மலர்கொண்டு சரம் தொடுத்து’ ’சமயமாம் நதி’ போன்ற பாடல்கள். ஆனால் அன்றும் இத்தனை வருடங்கள் கழித்து இன்றும் மலையாள திரையிசையில் ஒரு முக்கியமான அடையாளமாக இருப்பது இந்தப்பாடல்

என்றெ ஸ்வப்னத்தின் தாமர பொய்கயில்
வந்நிறங்ஙிய ரூபவதி
நீல தாமர மிழிகள் துறந்நு
நின்னே நோக்கி நிந்நு
சைத்ரம்
நின்றெ நீராட்டு கண்டு நிந்நு

என்றே ஃபாவன ரஸனவனத்தில்
வந்நு சேர்ந்நொரு வன மோகினி
வர்ண சுந்தரமாம் தாலங்ஙளேந்தி
வன்ய புஷ்ப கணம் நிரயாய் நின்னெ
வரவேல்குவானாய் ஒருங்ஙி நிந்நு

பிரேம சிந்த தன் தேவ நந்தனததிலே
பூமரங்ஙள் பூத்த ராவில்
நின்றே நர்த்தனம் காணான் ஒருங்ஙி
நின்னே காத்து நிந்நு சாரே
நீலாகசவும் தாரகளும்


[என் கனவின் தாமரைப்பொய்கையில்
வந்திறங்கிய அழகி
நீலத்தாமரை கண்களை திறந்து
உன்னைப் பார்த்து நின்றது
சித்திரை மாதம்
உனது நீராடலைக் கண்டு நின்றது

என் கற்பனையின் அழகியகாட்டில்
வந்து சேர்ந்தாள் ஒரு வனமோகினி
வண்ணம் பொலிந்த தட்டுகளேந்தி
வனமலர்க் கூட்டம் வரிசையாக நின்றது
உன்னை வரவேற்கக் காத்து நின்றது

காதல் எண்ணங்களின் தேவ நந்தவனத்தில்
பூமரங்கள் பூத்த இரவில்
உனது நடனத்தைப்பார்ப்பதற்காக
உன்னைக்காத்து நின்றன தூரத்தில்
நீலவானமும் தாரகைகளும் ]

http://www.youtube.com/watch?v=sHZoCgK71yE&feature=related

நெடுநாட்களுக்குப்பின் இந்த பாடலைப்பார்த்தேன். நினைவுகள் இலையை மழைத்துளி போல மனதைக் கனத்துச் சொட்டவைத்தன. கற்பனாவாதம் கனிந்த பாடல்களில் ஒன்று. பெண் ஒரு கனவு மட்டுமாக மனதில் நிறைந்திருந்த நாட்களின் நினைவு.

ஆனால் இப்போது இன்னும் பல சுவாரசியங்கள். எழுபதுகளின் ஹிப்பி அலையை இந்தப் பாடல் சுட்டிக்காட்டுகிறது. பாடல் நடக்குமிடம் ஹிப்பிகளின் ஒரு ‘குகை’. ஆனால் அதை மிகவும் படைப்பூக்கம் கொண்ட ஓர் இடமாகக் காட்டுகிறார் இயக்குநர். இசை, ஓவியம்,புகை, போதை என ஒரு விசித்திரமான இனிமை கனிந்த சூழல். ஏ.வின்செண்டின் அற்புதமான ஒளிப்பதிவு விசித்திரமான கோணங்கள் மற்றும் நகர்வுகள் வழியாகக் குறைந்த செலவில் ஒரே இடத்தில் எடுக்கப்பட்ட காட்சியிலேயே ஒரு மனப்பிறழ்வுநிலையைக் கொண்டுவர முயல்கிறது.

ஆச்சரியம், பாடிக்கொண்டிருப்பவர் ஜேசுதாஸ். அதைவிட ஆச்சரியமொன்றுண்டு, ஒரு முதிரா இளைஞர் பின்னணியில் முகம் காட்டுகிறார். பின்னாளில் பெரிய நடிகர்.ஒரு காலத்தில் மலையாளத்தின் தரமான படங்களின் ஓரத்தில் எங்கோ இருந்துகொண்டிருந்தார். உண்மையில் அவர் அந்த இயக்கத்தால் உருவாக்கப்பட்டவர்.

இலக்கியம் காலத்தை நிகழ்வாகவே எப்போதும் காட்டுகிறது. சினிமா காலத்தைக் கற்சிற்பம் போல அப்படியே உறையச்செய்துவிடுகிறது

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/22809